இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Thursday, 10 May 2007

தில்லுமுள்ளுகளும்? தள்ளுமுள்ளுகளும்?-2

ஏதாவது ஒரு காரணத்தை கண்டுபிடித்து விழா எடுத்து புகழ்? சேர்க்கும் குள்ளநரிக் கூட்டம் ஒரு புறம். தமிழ் மொழிக்கு எதாவது செய்ய வெண்டும் என்று ஏதாவது ஒரு வாய்ப்பினை தேடும் பொழைக்கத்தெறியாத மற்றோருகூட்டம். எதுவாக இருந்தாலும் தனக்கு தனியாக என்ன இலாபம் கிடைக்குமுன்னு அலையும் வேறொரு ஈனக்கூட்டம். இவர்கள் எல்லோருக்கும் நல்ல புள்ளையா ஜால்ரா பொட்டு துண்டு போத்திக்க துடிக்கும் ஒரு பெரும் கூட்டம். இப்படி பிரான்ஸில் வாழும் தமிழ் பேசும் இந்தியப் பொருளாதார அகதிகளை பிரித்து விடமுடியும். இதில் தமிழ் பேசுவதையே கேவலமாக எண்ணும் பெரியோர்களை நான் சேர்க்கவில்லை.
தமிழர்களின் சங்கங்கள் என்று பார்த்தால் இன்னும் பல சுவாரசியமான விவரங்கள் தெறியவரும். கணவன் மற்றும் மனைவி மட்டும் சேர்ந்து உருவாக்கி உள்ள சங்கங்கள் உள்ளன. வெரும் மூன்று பேர் மட்டும் சேர்ந்து ஒரு சங்கம் உருவாக்கி வெற்றிகரமாக வேறு உருப்பினர்களைக் கூட சேர்க்காமல் நடக்கின்ற கொடுமையும் உள்ளது. மற்றபடி பல "அவார்டு" மற்றும் "ஷீல்டு" கொடுக்கும் சங்கங்கள் உள்ளன. அப்படியான சங்கங்களில் தலைவரைத் தவிர மற்றவர்கள் அவ்வளவு பேரும் டம்மிகள். டம்மிகள் வாயைத் திறந்தால் உடனே சங்கத்திலிருந்து நீக்கப்படுவர். பல பஜனைப் பாடும் சங்கங்கள் ஆன்மீகத்திற்கும் பக்திக்கும் வித்தியாசம் தெறியாத தலைவர்களால் நடத்தப் படுவதும் உண்டு. சாமியார்களை வைத்து காசு பண்ண பார்க்கும் சங்கங்கள், இலைமறைவு காய்மறைவாக நடத்தப்படும் சாதி சங்கங்களும் உண்டு (முதலியார் மற்றும் வன்னியர்). கோவில் பெயர் சொல்லி அர்ச்சனை தட்டு விற்று தமிழ் வளர்க்கும் சங்கங்களும் உண்டு. இருபத்தைந்து வருடங்கள் தமிழ் பள்ளிகூடம் நடத்தி காணாமல் போனவர்களும் உண்டு. பிரான்ஸில் வாழும் புதுவை தலித்துக்களுகென்று ஒரு கூட்டமைப்பு இல்லாதது போலவே தோன்றுகிறது. சரி இவ்வளவு பேரும் சேர்ந்து பாரதிக்கு ஒரு விழா எடுக்க முற்பட்டால் விளைவு எப்படி இருக்கும் என்று நினைக்கவே பயமாக இருக்கும் போது அதனை செய்து முடிக்க தைரியாமாக முற்பட்டது பிரான்ஸ் தமிழ் சங்கம்.
தொடரும்

Wednesday, 9 May 2007

தில்லுமுள்ளுகளும் தள்ளுமுள்ளுகளும்-1

எல்லோருக்கும் வணக்கமுங்க, பாரதி பாரதி பாரதி... அப்படின்னு என்ன திடீர்ன்னு பாரதி புராணம் பாட வந்துட்டானுங்க இவனுங்கன்னு நீங்களெல்லாம் கேட்கிறது எங்கள் காதுகளுக்கு கேட்காமல் இல்லிங்க. அதை பற்றித்தான் இப்போ இங்க பேச வந்திருக்குறோமுங்க. இந்த வருஷம் நம்ம பாரதியின் 125வது பிறந்த ஆண்டானபடியால், அவருக்கு அவங்கவுங்களுக்கு தகுந்த மாதிரி பல மாதிரி விழாக்கள் எடுத்துக்கிட்டு இருக்காங்க. அதுல பாருங்க நாங்களும் பிரான்சில பாரதிக்கு ஒரு விழா எடுத்துப் புடனமுன்னு பிரான்ஸ் தமிழ் சங்கம் முதல்ல ஒரு விளம்பரம் செய்தாங்க. பிரான்ஸ் தமிழ் சங்கம் அப்படின்னா என்னமோ எதோன்னு பயிந்து புடாதிங்க. அதைப் பற்றி பின்னர் ஒருக்கா தெளிவா பேசுவோம்- என்னா நான் சொல்றது சர்தானே?
விளம்பரம் வந்தவுடன் உழுந்தடிச்சி எல்லோரும் ஓடி பாரதிக்கு விழா எடுக்க தங்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டோம் - நூறு ஈரோ மொய் வைத்துன்னு இங்க தேவையில்லாம எதுக்கு சொல்வானேன் - என்ன நான் சொல்றது சர்தானே? இணையத் தொழில்நுட்பத்தில் புலி ன்னு சொல்லிக்கிட்டு திரிகிற எனக்கு பாரதி125பிரான்ஸ் விழாவைப் பற்றி இணையத்தில் ஆத்துவதற்கான பாக்கியம் கிட்டியது என்றால் அது மிகையாகாது. எனக்கு இந்த ஜென்மமே சாபல்லியம் அடைந்துவிடும் இந்த மாபெரும் பாக்கியத்தை விழாக் குழுத் தலைமையிடமிருந்து போராடிப் பெற்றுத் தந்தது திருவள்ளுவர் புகழ் பாடும் திருக்குறள் அய்யா திருஅண்ணாமலை பாஸ்கர் எனும் பெருந்தகையால் என்பதை கண்டிப்பாக இங்கு பதிவு செய்வது கடமையாகும். நிற்க.
விழாக்குழு கூட்டத்துல முந்திரிக்கொட்டை மாதிரி பெரிய லார்டு லபர்தாசு போல எந்திருச்சி தலீவர பாத்து அய்யா நான் ஒன்னு சொல்லிக்க ஆசைப்படுரங்கோன்னு சொல்லிப்புட்டு பேச ஆரம்பிச்சேங்க. என்ன பேசனேன்னு உங்களுக்கு கேட்கிற ஆசை இல்லாட்டியும் சொல்ர மூட்ல நான் இருக்கிறதனால நான் சொல்லத்தான் போறேனுங்க. "ஐயா தலீவர் அவர்களே இது வரைக்கும் பிரான்ஸ்ல நடக்கிற தமிழ் சங்கங்கள் விழாவெல்லாத்திலேயும் வாடிக்கியா துண்டு போத்துறதும் துதிபாடரதும்மா தான் இருக்குதுங்க, விழா முடிந்த பிறகு இந்தியாவில் இருந்து வருகை தரும் சீ சிறப்பு விருந்தினர்களுக்கு டூரிஸ்ட் கைடாக சங்கத்தலவர்கள் அலைவதும் அதற்கும் மேல் ஒரு படி சென்று என்ன நடக்கும் என்பதை நீங்கள் கேட்க ஆசையாக இருந்தாலும் நான் சொல்ற முடியாத அளவிற்கு உள்ளபடியிருப்பதால், இந்த பாரதியின்125பிரான்ஸ் விழாவை சற்று வித்யாசமாக ஒரு மாபெரும் இலக்கிய விழாவாக அமைய வழி செய்யும் வகையில் தமிழகத்திலிருந்து தமிழ்க்கு அணிசெய்யும் தமிழார்வலர்களை அழைக்கவேண்டும் என்று சொன்னேன். இதை ஆமோதிக்கும் விதமாக திருக்குறள் பாஸ்கர் அவர்கள் தலீவ்ரைப் பார்த்து திரு.தமிழருவி மணியனை நாம் இம் முறை அழைக்க வேண்டும் என்று சொன்னதுதானே தாமதம் - உடனே தலீவர் குறுக்கிட்டு தமிழருவிய? கூட்டா யாருய்யா டிக்கெட் செலவு செவ்வது? அரசியல்வாதியை கூட்டா கவுர்மென்ட் செலவுலேயே வருவாங்க போவங்க. அவுங்களுக்கு பாரீசில் பாதுகாப்பு தங்கறதுக்கு எல்லாத்தையும் இந்தியன் ஏம்பசியே பாத்துக்கும், அப்படின்னு ஒரு போடு போட்டாரே... அப்ப பாக்கனுமே எல்லார் மூஞ்சியையும். எல்லாருடைய மூஞ்சியும் கோனிக்கிச்சின்னு தானே நினைச்சீங்க - அதான் இல்லே. ஒரு ரியாக்ஷ்னும் இல்லே. அல்லாரும் கோரசா ஜால்ரா அடிச்சாங்கன்னா அது தப்பாப் போயிடும் அதனால அப்படி சொல்லாம ஒத்துகிட்டாங்கன்னு சொன்னா எவ்வளவு நல்லா இருக்கு பாருங்க. எனக்கு அந்த நிமிடத்திலிருந்து விழாவிற்கும் தமிழுக்கும் பாரதிக்கும் சம்மந்தமில்லை என்ற எண்ணம் வலுக்கத் துவங்கியது.
சரி மீண்டும் வேதாளமாகிய நான் மரத்திலிருந்து இறங்கி விக்ரமாதித்த தலீவரின் கவனத்தை திருப்பும் முகமாக வேறொரு வேண்டுகோளை வைத்தேன். அதாவது பாரதியின் மேல் பல காலமாக உள்ள சில குற்றசாட்டுகள் மற்றும் கறைகளை அலசி ஆராய்ந்து ஒரு ஆய்வறிக்கை ஒன்றை பிரான்ஸில் உள்ள தமிழ் கவிஞர்களை கொண்டு செய்து விழா மலரிலோ அல்லது விழாமேடையிலேயே ஒரு விளக்க அறிக்கையாக வெளியிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். தலீவர் உட்பட அனைவரும் கைத்தட்டி இந்த யோசனையை வரவேற்றார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை என்றால் நீங்கள் உண்மையிலேயே அறிவாளிதான் என்று ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
அய்யய்யோ அதெல்லாம் வீண் பிரச்சனை. அதெல்லாம் வேண்டாம் என்று தலீவர் மறுத்த பின்னர் கண்டிப்பாக இது பாரதிக்கான தமிழ் விழா அல்ல என்ற சந்தேகம் மேலும் வலுத்தது. அதற்கு பின்னர் தலீவர் அவர்கள் தான் புதுவை மாநிலத்தின் முன்னாள் முதல்வர் MOH என்று அன்போடு அழைக்கபெற்ற புதுவையின் தந்தையும் இப்பொது சவுதி அரேபியாவில் தமிழுக்காக போறாடும் இந்தியத்தூதுவர் திரு. M.O.H. பாருக்கையும், அவரைப்போலவே புதுவையில் தமிழ் பாதுகாவலராக இருக்கும் திரு.பாருக்கின் மகனாகிய மான்புமிகு அமைச்சர் திரு ஷாஜஹானையும் அழைத்துள்ளதாக சொன்ன மாத்திரத்தில் விழாக்குழுவினர் முகத்தில் பட்டொலிவீசியதின் ஆச்சரியம் தான் என்னவோ?
விழாக்குழுக் கூட்டத்திற்கு அழையா விருந்தாளியாக வந்திருந்தும் அவரை உள்ளே வரக்கூடாது என்று மறியாதை செய்தும் கடைசி வரை அவரிடன் ஒரு சிறு யோசனையோ அல்லது ஒரு சிறு கொவுரவ பதவிகூட குடுக்காமல் அவருக்கு புகழ் சேர்த்தும் பேராசிரியர் திரு. லெபோ பெஞ்சமினே வெறுத்துப்போய் ஓடச்செய்த பெருமை யாரைச் செறும் என்பதனை நீங்கள் SMS செய்தால் உங்களுக்கு பாரதியின் முண்டாசு பரிசாக அனுப்பி வைக்கப்படும். அதற்கு மேலும் அங்கு அமர்ந்திருக்கும் அருகதை எமக்கு இல்லை என்பதால், பாரதியின் 125வது வருடத்தை நான் எனது பாணியில் தனியே இணையத்தில் ஒரு மணிமண்டபமாக கட்ட முடிவுசெய்துள்ளேன்.
இந்த விழாக் குழுவினரிடையே நடந்த பதவிச் சண்டையைப் பற்றியும், 25 வருடத்திற்கு முன் பாரீசில் நடந்த பாரதி நூற்றாண்டு விழாவில் நடைப்பெற்ற அவலங்களையும் ஒரு தனியான பதிவில் இடவுள்ளேன். இப்படியான வெளிநாடுகளில் நடக்கும் விழாக்ககளில் என்ன நடக்கிறது, யார் இலாபம் அடைகிறார்கள், எவ்வளவு, எப்படி என்பதனை இப்ப நீங்க கேட்கிற மூட்ல இருந்தாலும் எனக்கு சொல்ல நேரம் இல்லாததுனால ஒரு தனி பதிவா பின்னர் போடுகிறேன்.
பாரதியை பற்றி எனக்கு எந்த அளவுக்குத் தெறியும் என்று இணையத்தில் தேடியதில் பாரதியின் பல புதிய பரிமானங்கள் தெளியத் துவங்கியது. நல்லதோ கெட்டதோ அனைத்தையும் இங்கு கொண்டுவந்து இட்டுள்ளேன். அவரவர்கள் பாரதியின் மேல் உள்ள பக்தியின் அளவிற்கேற்றார் போல் தேவையானவற்றை எடுத்துக் கொள்ளலாம். பக்தியை நீக்கி புத்தியை தீட்டுவோர் பாரதியை அறிந்துகொள்ளலாம். நன்றி

Tuesday, 8 May 2007

பாரதி 125 - ஞாநி

‘கனக்குஞ் செல்வம் நூறு வயது இரண்டையும் எனக்குத் தா’ என்று தான் தொழுத கடவுளிடம் ஓயாமல் கேட்டவன் பாரதி. இரண்டும் அவனுக்குக் கிட்டவில்லை. கிட்டியது வெறும் 39 வயதும், கடைசி வரை தீராத வறுமையும்தான்!ஆனால், பாரதிக்கு வேறொரு செல்வம் கிட்டியது. கனக்குஞ் செல்வத்தை விடப் பெருஞ்செல்வம்... காலத்தால் அழியாத, காலந்தோறும் வளர்கின்ற புகழ்ச் செல்வம்! பாரதியின் படைப்புகள், பல நூறு வருடங்கள் உயிரோடு வாழ்ந்து, அவன் புகழ்ச் செல்வத்தை பெருக்கிக்கொண்டே இருக்கும் தன்மை கொண்டவை!படைப்பின் எந்தப் பிரிவானாலும் செய்யுள், வசன கவிதை, பாட்டு, குட்டிக் கதை, நீண்ட கதை, உருவகக் கதை, கருத்துக் கட்டுரை, பத்திரிகைச் செய்திக் கட்டுரை, விமர்சனக் கட்டுரை, நாடகம் எனப் பல வகைகளையும் செய்துபார்த்து, முன்னேர் உழுதவன் பாரதி. எனவே, இன்றும் என்றும் படைப்பாளியாக விரும்பும் எவரும் பாரதியைப் பயிலாமல் தன்னைக் கூர்மைப்படுத்திக்கொள்ள முடியாது.எப்படி எழுத வேண்டும் என்பதற்கு பாரதி சொன்ன இலக்கணத்தைப் பின்பற்றினால், எளிதில் கருத்தை வெல்லும் எழுத்தாக நம் எழுத்து மலரும். ‘நீ எழுதியதைத் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத ஒருவனுக்கு வாசித்துக் காட்டு. அவனுக்கு விளங்கினதென்றால், நீ சரியாக எழுதியதாக அர்த்தம்’ என்கிறான் பாரதி. எழுதும் முறையையும், எழுத்தின் நோக்கத்தையும் ஒரே சமயத்தில் இது விளக்குகிறது. யாருக்காக எழுதுகிறாய், எப்படி எழுதுகிறாய் என்று வரையறுக்கச் சொல்லும் இன்றைய நவீன தகவல் தொடர்பியலின் சாரத்தையே இந்த அறிவுரையில் காணலாம்.கடந்த 30 ஆண்டுகளில், சோர்வு வரும் தருணங்களில் எல்லாம், பாரதியின் கவிதையையோ கட்டுரையையோதான் நான் எடுத்து வைத்துக்கொள்கிறேன். சிறிது நேரம் பாரதியில் தோய்ந்ததும்,சோர்வுகள் நீங்கி மீண்டும் உற்சாகம் என்னைப் பற்றிக்கொள்ளும்.ஓவியனாக வேண்டும் என்பது என் இளம் பருவக் கனவுகளில் ஒன்று. எல்லா பிரபல ஓவியர்களின் படங்களையும் பார்த்து அதுபோல வரைந்து முயற்சித்துப் பழகியதில், சொந்தமாக வரையும் கற்பனைத் திறன் முடங்கிவிட்டது. ஆனால், இன்றும் ஓவிய னாக நான் என்னைப் பற்றிப் பெருமைப்படும் ஒரே ஓவியம், 1982 ல் பாரதி நூற்றாண்டுக்குப் பின் சொந்தமாக பத்திரிகை தொடங்க முயற்சித்தபோது, அதன் சின்னமாக நான் வரைந்த பாரதி ஓவியம் தான்.எங்கள் வீட்டுப் பிள்ளையார் பூஜைகளில், பாரதியின் ‘விநாயகர் நான்மணி மாலை’யைத்தான் நான் சிறுவனாக இருந்தபோது படித்து, மலர் தூவுவேன். அதுதான் என்னை நாத்திகத்தை நோக்கி நகர்த்தியது. காரணம், ஆன்மிகவாதியான பாரதியின் கடவுள், மத குருமார்கள் சொல்லும் கடவுளிலிருந்து வேறாக இருந்தார். கடவுளைத் தன் நண்பனாக்கி, கடவுளுக்கு உத்தரவுகள் போடுபவராக இருந்தார். பாரதியின் ஆன்மிகமும், வள்ளலாரின் ஆன்மிகமும், நாத்திகர்களின் மனித நேயமும் ஒன்றேதான் என்று உணர்த்தியது பாரதியின் ‘சரஸ்வதி வணக்கம்’.உலகத்தில் வேறு எந்தச் சமுதாயத்திலும், பாரதி வாழ்ந்த காலத்தில் அவனுக்கு நிகரான ஆளுமை இருந்ததாகத் தெரியவில்லை. அப்படிப்பட்ட பாரதியின் 125 ம் ஆண்டை நாம் எப்படிக் கொண்டாட வேண்டும்?இன்று நம் சமூகத்தில் மூன்று முக்கிய எழுச்சிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. ஒன்று, மகளிர் எழுச்சி. அடுத்தது, தலித் எழுச்சி. மூன்றாவது, மத அடிப்படைவாத எழுச்சி. முதல் இரண்டும் காலத்தின் கட்டாயம். மூன்றாவது, கடிகாரத்தைத் திருப்பிவைக்கும் முயற்சி.இந்த மூன்று எழுச்சிகள் தொடர்பாகவும் பாரதியிடமிருந்து நாம் அறிய ஏராளமாக உள்ளன. சக ஆண்களிடம் உறவு காரணமாக அன்பு காட்டவேண்டிய நிலையில் இருக்கும் பெண், அதே ஆண்களிடம் தனக்கான நீதியைப் பெறுவது எப்படி என்பதுதான் இன்றும் தொடரும் மயக்கம். பாரதி இந்த மயக்கத்துக்கு மருந்துகள் சொல்லி இருக்கிறான்.தலித் எழுச்சி என்பது, சாதி அமைப்பை ஒழிப்பதற்கான நீண்ட நெடிய போராட் டத்தின் இன்னொரு கட்டம். எல்லாச் சாதிகளும் சம அந்தஸ்தைப் பெறுவது என்பது இதில் ஒரு படி. அதை அடைந்த பின், சாதிகள் இல்லாமல் ஆக்குவது அடுத்த படி. எல்லாரும் பூணூல் அணிந்து சமமான உயரத்தை அடையட்டும் என்று ஒரு தலித் இளைஞருக்குப் பூணூல் அணி விக்கிறான் பாரதி. நோக்கம், சமத்துவம் தானேயன்றி பூணூல் அல்ல! எல்லாருக் கும் பூணூல் அணிவிப்பது என்பது நூறாண்டுகளுக்கு முந்தைய சமூகத்தின் மறுமலர்ச்சியாளர்களுக்குத் தோன்றிய தீர்வு. யாருமே அணிய வேண்டாமே என்ற மறுபக்க சிந்தனை, அடுத்த தலைமுறை மறுமலர்ச்சியாளர்களின் தீர்வு. இரண்டிலும் நோக்கம், சாதிகளின் சமத்துவம்தான்!சாதி ஒழிய சமத்துவம் மட்டுமல்ல, அக மண முறை சாதிக்குள்ளேயே திருமணம் செய்யும் முறை அகற்றப்பட வேண்டும் என்று அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். அதே கருத்தை பாரதி பல இடங்களில், சாதிகள் தமக்குள் வேறுபாடுகளை மறந்து கலத்தல் வேண்டும் என்று வலியுறுத்து கிறான்.பாரதி வாழ்ந்த காலத்திலேயே நாற்று நடப்பட்டு, இன்று விஷ விருட்சமாக வளர்ந்திருப்பது மத அடிப் படைவாதம். அதற்கு எதிரானவன் பாரதி என்பதற்கு அவனுடைய ஏராளமான கட்டுரைகளில் ஆதாரங்கள் உண்டு. குறிப்பாக, இஸ்லாம் பற்றிய பாரதியின் நேசக் கருத்துக்கள், மதம் என் பதைக் கடந்து மானுடம் என்ற வள்ளலார் பார்வையின் தொடர்ச்சியாக ஒலிக்கின்றன.மனித மனங்களை அன்பால் தான் வெல்லவேண்டும், அன்பால்தான் சமத்துவம் வரும் என்பதில் ஆழமான நம்பிக்கை பாரதிக்கு இருக்கிறது. இந்த அன்பை வளர்க்கும் அறிவை வளர்ப்பதுதான் பாரதியின் சாரம்.இதையெல்லாம் குழந்தைப் பருவத்திலேயே தொடங்க வேண்டும். வயது முதிர்ந்த மனங்களை மாற்ற முடியாது. இதுவும் பாரதியின் நம்பிக்கை. அதனால்தான் புதிய ஆத்திசூடி முதல் ஆரம்பக் கல்விக்கான சிலபஸ் வரை பாரதியின் மூளையும் பேனாவும் இயங்கியிருக்கின்றன.பாரதியை தமிழ்ச் சமூகம் இன்னமும் முழுமையாக உணரவில்லை. யானையைக் கண்ட குருடர்கள் போலத்தான் இருக்கிறது. எனவே, நமது கொண்டாட்டங்களும் அப்படிப் பட்டவை ஆகிவிடுகின்றன. ‘பாரதி 125’ ஐ எப்படிக் கொண்டாடுவது? இன்னமும் பரவலாக அறியப்படாத பாரதியின் உரைநடைகளை பள்ளிக் கூடங்கள், கல்லூரிகளில் எல்லாம் இளைய தலை முறைக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கவிஞன், பத்திரிகையாளன் என்று மட்டும் பாரதி அறிமுகம் செய்யப்படலாகாது. காந்தியைப் போல, நேருவைப் போல, பெரியாரைப் போல, அம்பேத் கரைப் போல சமூக மாற்றத்துக்காக, மனித சமத்துவத்துக்காக முயற் சித்த சிந்தனையாளன் பாரதி. மற்றவர்கள் இயக்கம் கட்டினார்கள். பாரதியின் சூழலில், அவனே ஒரு நபர் இயக்க மாக இயங்கினான்.இந்தி ‘முன்னாபாய்’ சினிமா, காந்தியை இளம் ஜீன்ஸ் தலைமுறைக்கு நெருக்கமானவராக ஆக்கியது போல, எல்லாத் தளைகளிலிருந்தும் விட்டு விடுதலையாகி நிற்க மானு டத்தைக் கூவி அழைக்கும் பாரதியை ‘நம்ம ஆளு’ என்று இன்றைய இளை ஞர்களை உணரச் செய்யும் முயற்சிகளில் சக படைப்பாளிகள், கலை ஞர்கள், ஆசிரியர்கள் எல்லாரும் இறங்க வேண்டும்!