இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Tuesday 24 July, 2007

பாரதிப் பெண்ணின் பெருமைதனைப் ...

நூறு கோடியைத் தாண்டுகிற மக்கள் வெள்ளத்தில்
வீறு கொண்ட ஆடவர் எண்ணிக்கை சரி பாதியாகும்!

சீறுகின்ற பாம்புகள் முன்னே சிறு தவளைக் கூட்டம் போல்-
ஆறுவது சினம் படித்து அடங்கிடும் பெண் குலமோ மறு பாதியாகும்

நாறுகின்ற மட நம்பிக்கைக் குட்டையில் ஊறுகின்ற மட்டையாகி;
நானம், அச்சம், மடம், பயிர்ப்பு என நாலு வேத வழி நடக்கும் பெட்டையாகி;

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பதெற்கு என்பதுடன் நிறுத்தாமல்
அவள் ஆளன் மறைந்த பின்னர் அவளுக்கு வாழ்வுதான் எதற்கு -என்று

அனலிடை அவளைக் கருக்கி ஆர்த்தெழும் கொடிய சாத்திரப்
புனலிடை அவள் உடலைக் கழுவி

அந்த உயிரிலா சிலைக்குப் பொட்டிட்டு பூ முடித்து
அம்மன் அவள்தான் என்று பூசை புனஸ்காரம் செய்து

ஆண் வர்க்கம் புரிகின்ற தந்திரங்களைத் தோலுரித்து
அறியாமை நீக்கி ஆர்த்தெழுவீர் அரிவரையரே என

அய்யா பெரியாரும் அறிஞர் அண்ணாவும் ஒலித்திட்ட முழக்கத்தை
தமிழகம் மட்டுமின்றி தரணியே அறியும் வண்ணம்

பாரதிப் பெண்ணின் பெருமைதனைப் பாருக்குயர்த்த
பார் இதோ; பாரத தலைநகர் எடுத்த முடிவு -

இந்தியக் குடியரசுத் தலைவராக;
இதோ ஒரு பெண்மணி!

இனி பெண்ணுரிமை தலைவராக;
இதோ ஒரு பெண்மணி!

இனி பெண்ணுரிமை போற்றுவதே;
இனிய சுதந்திரத்தின் கண்மணி!


தமிழக முதலமைச்சரின் வாழ்த்துக் கவிதை

Tuesday 10 July, 2007

சென்னையில் மகாகவி பாரதியாரின் 125வது பிறந்த தினம்

கட்டுரை : மகாகவி பாரதியாரின் 125வது பிறந்த தினம்
- திருமலை கோளுந்து


மகாகவி பாரதியாரின் 125வது பிறந்த தினத்தை முன்னிட்டு பாரதி திருவிழா சென்னை பாரதியார் நினைவு .இல்லத்தில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவின் மூன்றாம் நாளில் பாரதி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி, கவிஞர் வைரமுத்து, நடிகை லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு பாரதி விருது பெற தேர்வு செய்யப்பட்டவர் இயக்குநர் பாலசந்தர். 1996ம் ஆண்டு இன்றைய ஜனாதிபதியான அப்துல்கலாமிற்கு இந்த விருது வழங்கப்ட்டது. அதே போல நீதியரசர் இ.ஆர்.கிருஷ்ணய்யர், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், சிற்பி கணபதி ஸ்பதி, எழுத்தாளர் சிவசங்கரி, தொல்பொருள் ஆய்வாளர் நா.கந்தசாமி ஆகியோர் இவ்விருதை பெற்றுள்ளனர்.


விருது வழங்குவதற்கு முன்னதாக நாட்டியப் பேரொளி அனிதா ரத்னம் நடனம் நடைபெற்றது. பாரதியின் வசன நடைக் கவிதைக்கு இவரும், இவரது குழுவினரும் ஆடிய நடனத்திற்கு பொது மக்களிடம் அப்படி ஒரு வரவேற்பு.


ஆசை முகம் மறந்து போச்சே.............. இதை யாரிடம் சொல்வேனடித் தோழி.............. என்ற பாரதியின் வசன நரடக் கவிதைக்கு அற்புதமான நடனமாடி அசத்தினார் அனிதா ரத்னம். இவ்விழாவில் சென்னை பார்த்தசாரதி திருக்கோவிலில் இருந்து பாரதியார் இல்லம் வரை பாரதியாரின் படத்தை ஜதிப் பல்லாக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.


இயக்குனர் சிகரம் பாலசந்தருக்கு பாரதி விருது வழங்கி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி பேசும் பொழுது...


பாரதியாரின் 125வது பிறந்த நாளில் இயக்குனர் பாலசந்தருக்கு பாரதி விருதை வழங்குவதில் பெருமை அடைகிறேன். இந்த விழாவில் பாரதி படத்தை தேரில் வைத்து ஜதி பல்லக்கில் கொண்டு வரப்பட்டதை பார்த்து நான் ஆனந்தம் அடைந்தேன். இந்த ஜதிப் பல்லக்கிற்கு ஒரு வரலாறே இருக்கிறது. பாரதியார் கவிதை எழுதிக் கொண்டிருந்த காலத்தில் எட்டையபுரத்து மன்னனிடம் சென்று தனது கவிதையை நாடு போற்றுகிறது. மக்கள் போற்றுகிறார்கள். அதனால் எட்டையபுரத்து அரசனாகிய நீங்களும் என்னை பாராட்ட வேண்டும். பாராட்டுவதோடு எனக்கு பரிசுகள், மரியாதைகள் வழங்க வேண்டும். அத்தோடு என்னை ஜதி பல்லக்கில் வைத்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இன்று எத்தனையோ பாரதி விழாக்கள் நடைபெறுகிறது. இங்கு நடந்தது போல் பாரதி படத்தை ஜதி பல்லக்கில் வைத்து பாரதி நாமம் பாடி யாரும் ஊர்வலம் சென்றதில்லை. இங்கு அது நடந்தது. அதற்காக விழா குழுவினரை பாராட்டுகிறேன் என சுருக்கமாக பேசினார்.




பாரதி விருது பெற்ற பாரதியை வாழ்த்திப் பேச வந்தார் நடிகையும், அச்சமில்லை அச்சமில்லை நிகழ்ச்சி நாயகியுமான திருமதி. லட்சுமி. அவர் பேசும் பொழுது...


இந்த விழாவில் மேடையில் அமர்ந்திருக்கும் எங்களை பாரதியின் வாரிசுகள் என்று சொன்னார்கள். எனக்கு அந்த வார்த்தை பெரிய வி~யம். கவிஞர் வைரமுத்துவுக்கு அது பெரிய விஷயம் இல்லை. விழாவின் கதாநாயகனான பாலச்சந்தருக்கும் அது பெரிய விஷயமில்லை. ஏனென்றால் அவரை பாரதியாரின் வாரிசாக நாம் ஏற்றுக் கொண்டு விட்டோம். என்னை எப்படி பாரதியின் வாரிசாக ஏற்றுக் கொண்டார்கள் என்பதை நான் யோசித்துப் பார்க்கிறேன். எந்த விதத்தில் பாரதியின் வாரிசாக நான் இருக்க முடியும்? பாரதியை உணரத் துடிப்பவர்கள், அவரை உணர முடியாது. அவரை அறியத் துடிப்பவர்கள் எல்லாருமே பாரதியின் வாரிசுகள் தான். உணர்வு என்பது பெரிய விஷயம். மகாகவி பாரதியை உணர முற்பட காரி, மஸ்தானா, தாரா போன்றவர்களை உணர வேண்டும். அவர்களை உணர்ந்தால் தான் பாரதியை பற்றி தெரிந்து கொள்ள நமக்கு கொஞ்சமாவது தகுதி வரும். எனக்கு பாரதியை எப்படி தெரியும்? பொதுவாக வீடுகளில் சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா....... என்ற பாடல்களைத் தான் போடுவோம்.அதவும் சிவராத்திரி அன்று மட்டும் தான் போடுவோம்.




எனக்கு 8 வயதாக இருக்கும் பொழுது கப்பலோட்டிய தமிழன் படம் பார்க்கும் பொழுது அதில் வந்த பாரதியைப் பார்த்து இவர் தான் பாரதி போல என நினைத்தேன். அப்ப ஒரு ஆர்வத்தில் படிக்க ஆரம்பித்த தமிழ் இன்றும் முழுமை அடையவில்லை. மனித வாழ்க்கை தேடல்களாகவே இருந்துக்கிட்டு இருக்கு. இந்தத் தேடல் இருந்துக்கிட்டே இருந்தால் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதற்கான அர்த்தம். தேடல்கள் இல்லை என்றால் சடம் தான். பாலச்சந்தரை இயக்குனர் சிகரம் என்று எல்லாம் சொல்லாதீர்கள். ஏன் என்றால் சிகரம் என்றால் ஒரு அளவில் முடிந்து விடுகிறது. ஆனால் பாலச்சந்தருக்கு எல்லைகளே கிடையாது. அவர் ஆகாசத்தில் பரந்து இருக்கிறார். ஆகாயம் ஒவ்வொரு நிமிடத்திற்கு நிமிடம் பல நிறங்களை, வண்ணங்களை காட்டுவதைப் போல திரைப்படங்கள் வாயிலாக காட்டி நம்மை கட்டிப் போட்டவர் பாலசந்தர்.




என்னை திரைப்படங்களில் அறிமுகப்படுத்தி நானும் இன்று மேடைகளில் பேசுகிறேன் என்றால் அதற்கு காரணம் பாலச்சந்தர். அவர் எனது குருநாதர். முதன் முதலில் என்னிடம் ஒன்றைச் சொன்னார், லட்சுமி நீ நடிக்காமல் போவது நல்லதல்ல. நடி எனறு சொல்லி என்னை அறிமுகப்படுத்தினார். அன்று நடிக்கத் தொடங்கிய நான் நடித்தேன், நடிக்கிறேன். நடிப்பேன். நான் ஒரு படம் டைரக்ட் பண்ணலாம் என்று விஷப் பரிட்சையில் இறங்கிய பொழுது, யாரை சிலுவையில் அறையலாம் என நான் யோசித்த பொழுது பாலச்சந்தர் தான் என் கண்ணில் பட்டார். நேர அவரிடம் போய் ஸார் நான் படம் டைரக்ட் பண்ணப் போறேன் என்றார். உடனே அவரும் பண்ணு என்றார். பாதி படம் எடுத்து விட்டேன். ஒரு நாள் போன் பண்ணி லட்சுமி, உன் படம் ஜெயித்தால் உனக்கு பெயர். படம் தோற்றால் எனக்கு ரிப்பேர் என்றார். ஆனால் அந்தப் படம் வெற்றி பெறவும் அவர் தான் உதவினார். அலைகடலுக்கு முடிவில்லை. வானத்திற்கு எல்லையில்லை. அதே போல பாலச்சந்தருக்கும் முற்றுப் புள்ளியில்லை என்று சொல்லி விடைபெறுகிறேன்.




அடுத்து பாரதி விருது பெற்ற பாலச்சந்தரை பாராட்டிப் பேச வந்தவர் கவிஞர் வைரமுத்து. தனது தடித்த குரலில் அவர் கலகலப்பாக பேசிய பொழுது...


பாரதி விருது பெறும் பாலச்சந்தரை நான் பாரட்ட வரவில்லை. நன்றி சொல்ல வந்திருக்கிறேன். பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் பாலச்சந்தர் என்ற பெயரை நெஞ்சில் மந்திரமாக எழுதிக் கொண்டிருந்தவன் நான். கல்லூரி நாட்களில் அவள் ஒரு தொடர்கதை படத்தைப் பார்த்து விட்டு இப்படி எல்லாம் சிந்திக்க முடியுமா? தமிழ் சினிமாவை இப்படி எல்லாம் ஒரு புதிய பரிணாமத்திற்கு கொண்ட செல்ல முடியுமா? என ஆச்சர்யப் பட்டிருக்கிறேன். பாரதிக்கு என்ன பெருமை தெரியுமா? அவருக்கு முன்பும் தமிழ் சொற்கள் இருந்தன. சிந்தனை இருந்தன.



தமிழ் என்ற பிரபஞ்சம் விரிந்தே கிடந்தன. தமிழ் புலவர்களின் வரிசை விரிந்து, வளர்ந்தே இருந்தது. ஆனால் மகாகவி பாரதிக்கு என்ன பெருமை. மொழி என்பது ஒரு பொழுது போக்கு கருவி, கற்பனையின் விலாசம் என்று இருந்தது. பாரதி வந்தார். அவர் வந்த பின்பு தான் கவிதை வானத்திலிருந்து பூமிக்கு கொண்டு வரப்பட்டது.




கவிதை பரணியில் இருந்து மக்களுக்கு கொண்டு வரப்பட்டது. பெண்களை எப்படி பார்க்கிறார் என்பதைப் பொறுத்துத் தான் ஒரு கவிஞரின் சிந்தனையின், சமூகத்தின் உயர்வை தீர்மானிக்கப்படுகிறது. பெண்ணை காலம் தோறும் உலகம் எப்படி பார்த்தது, சமூகம் எப்படி பார்த்தது, கலை எப்படி பார்த்தது, சினிமா எப்படி பார்த்தது, மனிதன் எப்படி பார்த்தான், பெண்ணை, ஒரு பெண் எப்படி பார்த்தாள் என்பதை வைத்துத் தான் ஒரு சமூகத்தின் நாகாPகம் எடை போடப் படுகிறது. பாரதிக்கு முன்னும் பெண்ணைப் பாடினார்கள். பெண்ணை ஒரு துய்க்கும் கருவியாய், அலங்காரப் பதுமையாய், பாடப்படும் கருவியாய் என 800 ஆண்டுகள் பெண்னை பாடினார்கள். மகாகவி பாரதி தான் பெண்ணை பிரபஞ்சம் என்றார். பெண்ணை பேச வைத்து, கவிதைகளில் தான் பெண்ணை பாரதி மாற்றி எழுதினார். பாலச்சந்தர் பெண்ணை திரையில் மாற்றிக் காட்டினார். அது தான் பாலசந்தருக்கும், பாரதிக்கும் உள்ள ஒற்றுமை. அவள் ஒரு தொடர்கதையில் வந்த பெண், அச்சமில்லை அச்சமில்லையில் வந்த பெண், தண்ணீர் தண்ணீரில் வந்த பெண் என இவர்கள் எல்லாம் பாரதி சொன்ன பெண்ணிண் நகல்கள் என்றால் அது மிகையல்ல.




அச்சுக்கு வந்த என் கவிதைகளை நான் படிப்பதில்லை. அதில் ஆன்மா குறைந்திருப்பதாக எனக்குத் தோன்றும். பாட்டு எழுதிய பிறகு படங்களையும் அதிகமாக நான் பார்ப்பதில்லை. என் கற்பனைக்கும், படத்தின் ஒளிப்பதிவிற்கும் இருக்கும் இடைவெளியை நினைத்து என் இதயம் வலிக்கும். அப்படிப்பட்டஉணர்வு கொண்ட நான் சொல்கிறேன். எனக்கு தெரிந்து நான் எழுதிய 6000 பாடல்களில் மூன்றே மூன்று பாடல்கள் தான் நான் நினைத்த இடத்தை விட உயரமாக படமாக்கப்பட்ட பாடல்கள். ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்ற பாடல், மணிரத்தினத்தின் பம்பாய் படத்தில் வரும் உயிரே உயிரே பாடல், புன்னகை மன்னனில் வரும் என்ன சத்தம் இந்த நேரம் என்ற பாடல்கள் தான் அவை. என்ன சத்தம் இந்த நேரம்...... என்ற பாடலை பார்த்து விட்டு இரண்டு இரவுகள் நான் தூங்காமல் இருந்திருக்கிறேன். தற்கொலை செய்து கொள்ளப்போகிற காதலன், காதலி. தற்கொலை செய்து கொள்ளப் போகிறார்கள் என்பதை பாடலில் சொல்லக் கூடாது என்பது பாலச்சந்தர் எனக்கு இட்ட கட்டளை. அந்தப் பாடலை பார்க்கும் பார்வையாளன் அவர்கள் எப்படி எல்லாம் வாழப் போகிறார்கள் என்று தான் தோன்றும்.




26 ஆண்டு காலம் எனக்கும், 40 ஆண்டுகாலம் பாலச்சந்தருக்கும் சினிமா துறையில் அனுபவம் உள்ளது. நான் தமிழ் சமூதாயத்திற்கு ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். இன்னொரு தலைமுறையில் 40 ஆண்டு காலம் திரைத் துறையில் வளர எவருக்கும் வாய்ப்புக் கிடைக்காது. அந்த வாய்ப்பு பாலசந்தருக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. இனிமேல் சினிமா எடுப்பது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. நாவல் எழுதி விடலாம். அது எழுதுபவனுக்கும், பேனாவுக்கும் மட்டுமே உள்ள உறவு. எழுது கோளுக்கும், தாளுக்கும் மட்டுமே உள்ள உறவு. ஆனால் சினிமா என்பது அப்படியல்ல. அது ஒரு கூட்டுத் தளம். நினைத்ததை கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல. ஒரு திரைப்படம் என்பது ஒரு இயக்குநர் தனது மனதில் ஓட்டிப் பார்த்த காட்சிகளின் மிச்சம் என்று தான் நான் சொல்வேன். பாலசந்தர் படங்கள் வெற்றிப் படங்கள், தோல்விப் படங்கள் என்று நான் சொல்ல மாட்டேன். புரிந்து கொள்ளப் பட்ட படங்கள், புரிந்து கொள்ளப் படாத படங்கள் என்று தான் சொல்வேன்.


கவிராஜன் கவிதைகள் என்று நான் எழுதி நூல் இன்று 20 பதிப்புகளை கடந்துள்ளது. அதற்கு ஊற்றாக இருந்தவர் பாலச்சந்தர். ஒரு நாள் என்னை அழைத்து மகாகவி பாரதியாரை பற்றி பட்டுக் கொரு புலவன் என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் எடுக்கப் போகிறேன். அதில் பாரதியாக கமலஹாசன் நடிக்கிறார். அதற்காக அவரை இளைக்கச் சொல்லி இருக்கிறேன். அவர் இளைப்பதற்குள் நீங்கள் பாடல்களை இழைக்க வேண்டும் என்றார். நானும் சரி என்று சொல்லி 200க்கும் மேற்பட்ட நூல்களை வாங்கி படித்து தயாரித்து வைத்திருந்தேன். இதற்கிடையே ஒரு அரசியல் குறிக்கீடு எங்களுக்கு வந்தது. அதனால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இந்தத் திட்டம் கை விடப்பட்ட பொழுது பாரதி இரண்டாவது முறையாக மரித்துப் போனதாக நான் நினைத்துக் கொண்டேன்.


பாலச்சந்தர் என்னை வளர்த்து விட்டார். என்னை விசாலப் படுத்தினார். அவர் ஒரு முற்போக்குச் சிந்தனையாளர். சிந்திப்பவர்களுக்கு, செயல்படுபவர்களுக்கு வயதாவது கிடையாது. அது பாலச்சந்தருக்கும் பொருந்தும். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற கருத்தை தமிழ் சமூகம் தவறாக புரிந்து கொண்டுள்ளது. உங்கள் வளர்ச்சிக்கு சக்திக்கு போதும் என்ற மனம் உண்டா? சிந்தனையுடைய வாழ்வுக்கு போதும் என்ற எல்லை உண்டா? இல்லையே. அந்த எல்லையை நாம் தாண்ட வேண்டும் என கவிஞர் வைரமுத்து பேசினார்.




பாரதி விருது பெற்ற இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இறுதியில் பேச வந்தார். அவர் பேசும் பொழுது..........


நான் முறையாக தமிழ் படித்தவன் இல்லை. பள்ளிகளில் முறையாக தமிழ் பயின்றவனும் இல்லை. பள்ளிகளில் வடமொழி படித்தேன். கல்லூரிகளில் பிரஞ்சு மொழி படித்தேன். நான் தமிழில் நாடகங்கள் எழுதத் தொடங்கிய பொழுது தான் தமிழை முறையாக கற்க வில்லையே என்று ஆதங்கப்பட்டேன். இந்த விழாவில் இதற்கு முன்பு பாரதி விருது பெற்ற பெரியவர்களின் பெயர்களை கேட்டு நான் மெய்ச்சிலிர்த்துப் போனேன். அதுவும் பாரதியின் பேத்தி லலிதா பாரதியின் கைகளினால் விருது வாங்கியதை நினைத்து பெருமைப் படுகிறேன்.


என்னை மிகவும் பாதித்தவர் திருவள்ளுவர். திருக்குறள் மீது எனக்கு அப்படி ஒரு மோகம். அதனால் தான் எனது நாடகங்களிலும், திரைப்படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. என்ற குரலை கடவுள் வாழ்த்தாக வைத்திருக்கிறேன். திருவள்ளவருக்கு அடுத்ததாக என்னை ஆட்கொண்டவர் பாரதி. என்னை இயக்கியவர் என்று சொல்லலாம். சத்தியம், நேர்மை பெண் உரிமை, ஜாதி, மத, இனம் கடந்த மனித நேயம், நாட்டுப்பற்று, கலை இலக்கிய மோகம், விடுதலை உணர்வு போன்றவை மூலம் பாரதி என்னை வெகுவாக கவர்ந்தவர். அதனால் தான் எனது படங்களில் பாரதியாரின் கருத்துக்களை புகுத்தி வந்திருக்கிறேன்.


பல ஆண்டுகளுக்கு முன்பு பாரதியாரை பற்றி படம் எடுக்க திட்டமிட்டதையும் அது கைவிடப்பட்டதையும் கவிஞர் வைரமுத்து இங்கு சொன்னார். பாட்டுக்கொரு புலவன் என்ற பெயரில் நாங்கள் படம் எடுக்கப் போகிறோம் என்ற செய்தி வெளியே தெரிந்தவுடன் பொது மக்கள், திரைத் துறையினர், பத்திரிக்கைகளிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அன்றைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் அரசாங்கம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி அரசாங்கத்தின் சார்பில் பாரதியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கப்படும் என அறிவித்தனர். இது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. பிறகு நாங்கள் ஒன்று கூடிப் பேசி அரசாங்கத்தோடு நாம் போட்டி போட முடியாது என நினைத்து அந்த திட்டத்தை கை விட்டு விட்டோம். ஆனால் அரசாங்கத்தின் அன்றைய அறிவிப்பு இன்று வரை கிணற்றில் போட்ட கல் போல் கிடக்கிறது. பாரதியின் சிறப்பு என்னவென்று என்னிடம் கேட்டால், அவரது எழுத்திற்கும் வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் இருந்தது தான். பெண்களின் அங்கங்களை பார்த்து கவிதை எழுதிய கவிஞர்கள் தான் அதிகம். ஆனால் பாரதி பெண்களின் ஆன்மாவைப் பார்த்து கவிதை எழுதினார்.


பெண் விடுதலையைப் பற்றி பாரதி பாடுவதை விட்டலுக்குரிய கம்பீரம், கம்பனுக்குரிய மிடுக்கு, ஜெக்காவுக்குள்ள செரிவு என அனைத்தும் கை கோர்த்து கூத்தாடுகிறது என வலம்பூரி ஜான் ஒரு முறை சொல்லி இருக்கிறார். அதனை நானும் ஏற்றுக் கொள்கிறேன் எனச் சொல்லி தனது உரையை முடித்தார்.


Saturday 23 June, 2007

புதுச்சேரியின் கடைசிப் புலி - பாரதி வசந்தன்

புதுச்சேரியில் முதன் முதலாகத் தொழிலாளர் இயக்கத்தைத் தோற்றுவித்தவர், ஆசியாக் கண்டத்திலேயே 8 மணி நேர வேலை உரிமையைப் பெற்றுத் தந்தவர், புதுச்சேரியின் விடுதலைக்காகப் பாடுபட்டவர், இந்தியாவின் தலைசிறந்த விடுதலை வீரர்கள் 97 பேரில் ஒருவர் என இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டவர், தம் வாழ்நாளை பொதுமக்களின் நலனுக்கென்று அர்ப்பணித்தவர், சிறந்த மனிதாபி மானமிக்க கம்யூனிஸ்ட் தலைவர் என்று அழைக்கப் பட்டவர், அவர்தாம் 'புதுச்சேரியின் கடைசிப் புலி” என்று போற்றப்படும் மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்கள்.

புதுச்சேரியில் 'பாட்டுச் சாமிஃ என்றால் அது பாரதி; 'பாட்டு வாத்தியார்” என்றால் அது பாரதிதாசன். 'பப்பாஃ என்றால் அது எதுவார் குபேர். அதேபோன்று 'மக்கள் தலைவர்” என்றால் அது வ.சுப்பையா ஒருவரையே குறிக்கும்.

இன்றைக்கு அரசியலில் நிறைய பேர் தம்மை மக்களுக்காக உழைக்கின்ற தலைவர்களென்று பெருமையோடு பிரகடனப்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் மக்களுக்கு உழைத்த தலைவர் வ. சுப்பையா என்பது அவருக்குள்ள தனிச்சிறப்புகளுள் முதன்மையானது. அதனால்தான் மக்களே முன்வந்து இவரை 'மக்கள் தலைவர்” என்றழைத்து இன்றளவும் அதனைத் தங்கள் இதயங்களில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கவிஞர் பாரதிதாசன் 'புதுச்சேரியின் வரலாறு என்பது 'வி.எஸ்” என்கிற இரண்டு எழுத்தின் வரலாறு...” என்று பதிவு செய்துவிட்டுப் போயிருக்கிறார். அதுவே புதுச்சேரியின் எழுதப்படாத ஆவணமாக இன்றைக்கும் இருந்து வருகிறது.

அந்நாளில் புதுச்சேரியில் 'எண்: 7 வெள்ளாழர் வீதி’ என்றால் 'அது புதுச்சேரியின் முகவரி’ என்று முகம் நிமிர்த்திச் சொல்வார்கள். குறிப்பாக 50களில் எழுச்சிமிகு இளைஞர்களுக்கு, முற்போக்காளர்களுக்கு, கொள்கைப் பற்றாளர்களுக்கு இந்த வெள்ளாழர் வீதிதான் பாசறையாக விளங்கிவந்தது. அங்குபோய் வருவதென்றால் அது அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் ஓர் அணிவகுப்பில் கலந்து கொண்டு திரும்பி வருவதைப்போல. அங்குதான் 'புதுச்சேரியின் நிமிர்வு’ என்று வரலாற்றில் எழுதப்படும் வ. சுப்பையாவின் இல்லம் இருந்தது; இப்போதும் இருக்கிறது.

சுப்பையாவின் தந்தை வரதராஜுலு நாயுடு, தாயார் இராஜ பங்காரு அம்மாள். அவர்களுக்கு 07.02.1911 ஆம் நாள் மகனாகப் பிறந்தவர் அவர். சுப்பையாவின் தந்தையார் புதுவையின் புகழ் பெற்ற நவதானிய வியாபாரியாக வாழ்ந்தவர். அப்போது பிரெஞ்சிந்திய அரசில் மிகவும் செல்வாக்கோடு இருந்தவர் 'நாடு ஷண்முக வேலாயுதம் பிள்ளைஃ. அவர் பெயரில் புதுச்சேரியில் நீணடகாலமாக ஒரு தெரு இருந்தது. அதுதான் சுப்பையா இருந்த வெள்ளாழர் வீதி. சுப்பையா பிறந்த தினத்தன்று அதே தெருவில் வசித்து வந்த அந்த வேலாயுதம் பிள்ளை இறந்துவிட்டார். பெரும் புகழோடு இருந்த அவர் 'கைலாசம்” போன அன்று சுப்பையா பிறந்துவிட்டதால் அவருக்கு 'கைலாச சுப்பையா’ என்று பெயரிட்டுவிட்டார்கள். கொஞ்ச காலம் சுப்பையாவும் அந்தப் பெயரிலேயே அழைக்கப்பட்டார். பிறகு, அந்தக் கைலாசம் ஒரு வழியாய்க் 'கைலாசத்துக்குப்” போய்விட மக்கள் மன்றத்தில் அவர் 'வி.எஸ்” என்ற இரண்டு ஆங்கில எழுத்துக்களினால் உழைக்கும் மக்களின் அரிவாள் சுத்தியலைப் போன்று ஆகிப்போனார். பின்னாளில் கவியோகி சுத்தானந்த பாரதியார் தமிழிலும் தெலுங்கிலுமாக அவரைப் பற்றி எழுதிய கவிதை இது:

'கப்சுப் என்னக் கலதிகள் அடங்க

மெய்ப்பொருள் விரிக்கும் வீரச் செம்மல்

மக்கள் மதிக்கும் மாண்புறு தலைவன்

பக்குவ மன்றிலே பழுத்த சொல்லான்

சோர்வு படாத சொல்-எழுத் துரையான்

நேர்மை யுடைய நேயன்...

புதுவை அரசியல் புலி எனத் தக்கோன்

பொதுநல மேதன் பொழுதுபோக் கானோன்...


நாயுடு காரு நடதலோ மஞ்சி

சேயுடு வாரு சிரஞ் ஜீவிகா

ஜனுலந்த பொகட தனகன பாக்யமு

சனுவுகா கலிகி சக்ககா பெருக

ஆசீர் வதிஞ்சேனு அந்தரங்க முலோ...

பேச்சும் நடையும் வீச்சும் வீறும்

ஓச்சும் கையும் உறுதியும் உள்ளமும்

சோவியத் ரஷ்ஷியச் சுடர்பொது வுடைமை

மேவிய வீறுகொள் வீரனை விளக்கும்

மார்க்சும் லெனினும் மாண்புறு ட்ராஸ்கியும்

ஆக்கிய பொதுநல பாக்கிய உருவே

புதுவைத் 'தமிழ்நாயுடுஃ வின் பெரும் புகழாம்..”

வ.சுப்பையா என்னும் தனி மனிதர்- ஒரு தத்துவமாகவும், அந்தத் தத்துவத்தை நடைமுறைப் படுத்தி மக்களைத் தலைநிமிரச் செய்தவராகவும், புதுச்சேரி மண்ணை பொதுவுடைமை பூமியாக்கியவராகவும் ஒரே சமயத்தில் சர்வ வல்லமைபெற்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும், பெரெஞ்சு ஏகாதி பத்தியத்தையும் ஒரு சேர எதிர்த்துப் போராடி, அதில் வெற்றி பெற்றவராகவும் விளங்கியவர். இத்தகையவர்கள் வெகு சிலர்தாம் தேறுவார்கள்.

சுப்பையாவின் இளம் உள்ளத்தில் பாரதியும், அரவிந்தரும், வ.வே.சு ஐயரும் புதுச்சேரியில் தோற்றுவித்த தேசியப் புரட்சியும், ஏற்படுத்திய நாட்டுப்பற்றும், விடுதலை வேட்கையும் ஆழப் பதிந்தன. 1919ஆம் ஆண்டு இந்தியாவை உலுக்கிய 'ஜாலியன் வாலாபாக் படுகொலையும்”, 1920ஆம் ஆண்டு காந்தியாடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கமும், சுப்பையாவுக்குள் சுதந்திரக் கனலை மூட்டின. புதுச்சேரியில் கலவைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவர் சுப்பையா, 1927ஆம் ஆண்டு கடலூருக்கு வருகை தந்த காந்தியாரைத் தம் மாணவ நண்பர்களோடு சந்தித்ததோடு அதே ஆண்டில் சென்னையில் 'டாக்டர் அன்சாரி’ தலைமையில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்திலும் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு வயது பதினாறு.

அதனைத் தொடர்ந்து 1929ஆம் ஆண்டு 'நடபுறவுக் கழகம்” என்கிற இலக்கிய அமைப்பினையும் ஏறக்குறைய இதே காலக் கட்டத்தில் 'பரஸ்பர சகோதரத்துவ சங்கம்” மற்றும் 'பிரெஞ்சிந்திய வாலிபர் சங்கம்”, 'இராமகிருஷ்ணா வாசக சாலைஃ போன்ற அமைப்புகளையும் உருவாக்கி அவற்றின் தலைவராய்த் திகழ்ந்த சுப்ûபாய புதுச்சேரியின் தவிர்க்க முடியாத ஒரு தனிப்பெரும் சக்தியாக வளரத் தொடங்கினார். அதே சமயம் அவருக்கு தந்தை பெரியாரின் சுய மரியாதை இயக்கக் கூட்டங்களில் கலந்துகொள்வதிலும், அந்த இயக்கத்தின் 'குடியரசுஃ இதழைப் படிப்பதிலும் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து சுயமரியாதை நூல்களை வாங்குவதும் அதுகுறித்து விவாதிப்பதுமாக வளர்ந்தார்.

அதன் விளைவாக 1930ஆம் ஆண்டில் புதுவையிலிருந்து வெளிவந்த 'புதுவை முரசுஃ என்கிற சுயமரியாதை இதழுடனும் அதன் ஆசிரியர்கள் பொன்னம்பலனார், குத்தூசி குருசாமி ஆகியோருடனும் அவருக்கு நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டது. அதனால் 1931-32ஆம் ஆண்டுகளில் நடந்த பிரெஞ்சிந்திய வாலிபர் மாநாடுகளுக்கு வரதராஜுலு நாயுடு, தெ.பொ. மீனாட்சி சந்தரனார், வை.மு. கோதை நாயகி அம்மாள், டாக்டர் சி.நடேச முதலியார் போன்ற சுயமரியாதை இயக்கத் தலைவர்களையெல்லாம் அழைத்துவந்து புதுச்சேரியில் அந்த இயக்கத்தின் கொள்கைகள் பரவும்படிச் செய்தார். அதில் அநேக இளைஞர்கள் ஈர்க்கப்பட்டார்கள்.

1933ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் காந்தியால் தொடங்கப்பட்ட 'ஹரிஜன சேவா சங்கத்தின் கிளைஃ புதுச்சேரியிலும் சுப்பையாவால் தொடங்கப்பட்டது. அவரின் வாலிபர் இயக்கத்திலிருந்து வந்தவர்களே இச்சங்கத்திலும் முக்கிய பங்கு வகித்தார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளுக்கு இச்சங்க உறுப்பினர்கள் சென்று காந்தி வகுத்த திட்டப்படி சேரிகளைத் தூய்மைப்படுத்தியதோடு அங்கிருந்த குழந்தைகளையும் பராமரித்து அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்தார்கள். தீண்டாமையை ஒழிக்கும் முயற்சியாக புதுச்சேரியின் பல இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று இரவுப் பள்ளிகள் அமைத்து அவர்கள் கல்வியறிவு மேம்படுவதற்கு முயன்றார்கள்.

எல்லாவற்றையும் சுப்பையாவே செயலாளராக இருந்து தலைமையேற்று நடத்தி வந்தார். புதுச்சேரியில் தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்கென்று முதல் இயக்கம் தொடங்கிய சுப்பையா அந்த இயக்கத்தின் ஆணிவேராக நம்பப்பட்ட காந்தியாரை புதுச்சேரிக்கு அழைத்துவர விரும்பினார். முதலில் வருவதாக ஒப்புக்கொண்டவர் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக வர மறுத்துவிடவே, அப்போது இளைஞராய் இருந்த சுப்பையா நீலகிரியில் உள்ள குன்னூருக்குச் சென்று அங்கே தங்கியிருந்த காந்தியாரைச் சந்தித்து இரண்டு நாட்கள் அவரோடு கூடவே இருந்து போராடி அவரைப் புதுச்சேரிக்கு அழைத்து வந்தார்.

காந்தியார் 1934ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி புதுவைக்கு வந்து திரளான மக்கள் கூட்டத்தில் பேசினார். ஒதியன்சாலைத் திடலில் அவர் பேசிய பேச்சை அன்றைய தினம் ராஜகோபா லாச்சாரிதான் தமிழில் மொழி பெயர்த்தவர். அப்போதெல்லாம் பிரெஞ்சிந்திய அரசு நிர்வாகத்தில் இப்படிப்பட்ட அரசியல் பொதுக் கூட்டங்களுக்கெல்லாம் அனுமதி வழங்குவது என்பதே இல்லாதிருந்த சூழல். சுப்பையாவுக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கு கண்டு, அவர் ஏற்பாடு செய்த கூட்டம் என்பதால், அப்போதைய புதுவை ஆளுநர் 'ஜார்ஜ் பொர்ரேஃ என்பவர் அனுமதி வழங்கினார். அதோடு, யாருக்கும் தெரியாமல் ஒதியன்சாலை காவல் நிலையம் அருகே நின்றபடி காந்தியடிகளின் சொற்பொழிவையும் கேட்டார் என்பது புதுச்சேரி பிரெஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த ஒரு செய்தி.

புதுச்சேரிக்கு முதன்முதலில் காந்தியை அழைத்துவந்தவர் 1934ஆம் ஆண்டு பொதுவுடைமை இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் அந்த இயக்கத்தை நிறுவிய தலைவர்களுள் ஒருவராக உயர்ந்தது அவர் பெற்ற அரசியல் மாற்றம்.

'நாட்டின் புரட்சி இயக்கத் தலைவர்களோடு எனக்கு ஏற்பட்ட தொடர்பும், நான் படித்த அரசியல் நூல்களும், என்னுள் மார்க்சிய அரசியல் சித்தாத்தங்களை வடிவமைப்பதில் பெரிதும் துணைபுரிந்தன. இந்தக் காலகட்டம் என் வாழ்வில் முக்கியமான காலகட்டமாகும். காந்தியக் கோட்பாட்டிலிருந்து மார்க்சிய- லெனினியக் கோட்பாடுகளுக்கும், அரசியல் சித்தாந்தங்களுக்கும் திசை திருப்பிய திருப்பு முனையாகும்.

இந்த நாட்டில் தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக்கெட்டுப் பாழ்பட்டு நிற்கும் பல லட்சக்கணக்கான பாட்டாளி மக்கள் கடைத்தேற வேண்டுமென்றால் சுரண்டலையும், சமூகக் கொடுமைகளையும் எதிர்த்து நடத்தப்படும் வர்க்கப் போராட்டத்தினால் மட்டுமே அது கைகூடும் என்னும் ஆழ்ந்த உறுதியை என் மனதில் ஏற்படுத்தியது...” என்று மார்க்சிய சித்தாந்தத்தில் தம்மை இணைத்துக் கொண்டது பற்றி 'பிரெஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாறு’ எனும் தம் நூலில் அவரே குறிப்பிடுகிறார்.

இதே ஆண்டு ஜூன் மாதத்தில் சுப்பையா 'சுதந்திரம்” என்கிற வார இதழைத் தொடங்கினார். அதன் முதல் இதழின் அட்டைப் படம் 'சுதந்திர தேவி’ கோட்டை வாயிலின் முகப்பில் தன் கையில் 'சுதந்திரம்” என்கிற பதாகை தாங்கிய சுதந்திரக் கொடியுடன் சங்கொலி எழுப்பிக்கொண்டு எக்காளமிட்டபடி குதிரையில் வருவது போன்ற தோற்றம். பின்னணியில் சுதந்திர இந்தியாவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும்படியாக இந்து இஸ்லாமிய கிறிஸ்துவக் கோயில்கள். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அணா விலையுள்ள அந்த முதல் இதழ்:

'பொன்னையும் வேண்டேன்

பொருளையும் வேண்டேன்

போற்றுமா மதிமுகத்தினராம்

கன்னியர் வேண்டேன்

ககனமும் வேண்டேன்

கடவுளே இவையெலாம் வேண்டேன்;

என்னிலும் இனிதாம்

எதனிலும் இனிதாம்

யாவரும் விரும்பிடும் 'சுயேட்சை’

தன்னையே வேண்டி

நின்றேன் தமியேன்

தானருள் புரிகுவாயே’

என்கிற விடுதலை உணர்வைத் தூண்டும் கவிதையோடு வெளிவந்தது. 'அன்றைய பிரெஞ்சிந்திய மக்கள், தொழிலாளர்கள், கிராமப்புற ஏழை விவசாயிகள், கிராமியப் பெருந்தனக்காரர்கள் முதல், நகரத்தில் மிகப்படித்த வழக்கறிஞர்கள், தேசபக்த வாணிபர்கள் வரை இப்பத்திரிகை வருகைக்காக ஒவ்வொரு வாரமும் ஆவலுடன் காத்திருப்பார்கள்...” என்று வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படும் 'சுதந்திரம்” பிரெஞ்சு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளிவந்தது. சுப்பையா ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியின் புதுவை மாநில ஏஜெண்டாகப் பணிசெய்து அதன் மூலமாய்க் கிடைத்த சில நூறு ரூபாய்களை மூலதனமாக வைத்தே 'சுதந்திரம்” பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்தார்.

1934ஆம் ஆண்டில் பேச்சுரிமை, எழுத்துரிமை போலும் ஜனநாயக உரிமைகள் யாவும் மறுக்கப்பட்ட புதுச்சேரியில் சுப்பையாவின் 'சுதந்திரம்” ஆளும் வர்க்கத்தினருக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது. ஒரே சமயத்தில் தேசிய எழுச்சியையும், பொது வுடைமைப் புரிதலையும் ஏற்படுத்திய 'சுதந்திரத்தைஃ பிரிட்டிஷ் அரசாங்கம் தடைசெய்தது. பலமுறை 'சுதந்திரம்” அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. அதனை அச்சடித்த அச்சகங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகின. விற்பனை செய்த தோழர்கள் வன்முறைக்கு ஆளாகினர். ஒரு தோழர் கொலை செய்யப்பட்டார். இத்தகைய தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில் ஒருமுறை 'சுதந்திரம்” அச்சகத்தின் இயந்திரங்கள் மற்றும் பொருட்களை பிரெஞ்சிந்திய அரசாங்கத்திற்குத் தெரியாமல் இரவோடு இரவாக லாரியில் ஏற்றி விழுப்புரத்துக்குக் கொண்டுபோய் அங்கே அச்சகத்தை நிறுவி 'சுதந்திரம்” இதழ் மக்களுக்குத் தடையில்லாமல் கிடைக்கச் செய்தவர் சுப்பையா. நெஞ்சுரமும், கொள்கைப் பிடிப்பும், விடா முயற்சியும் கொண்ட வீரம் மிகுந்த தோழராக அவர் பலரையும் வியக்க வைத்தார்.

சுப்பையாவின் 'சுதந்திரம்” இதழ் குறித்து இன்னொரு முக்கியமான செய்தி, அக்காலத்தில் நூல் வடிவம் பெற்றிராத தடை செய்யப்பட்ட பல பாரதி கதைகளையும், பாடல்களையும், கட்டுரைகளையும் புதுவையில் முதன் முதலில் அச்சமின்றி வெளியிட்டது என்பதாகும். பாரதியின் 'பஞ்ச கோணக்கோட்டைக் கதைஃ மற்றும் 'சிவாஜிஃ போன்றவை அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை. அது மட்டுமல்ல, தமிழில் முதன் முதலில் மார்க்கியப் பார்வையில் கட்டுரைகளை வெளியிட்ட முதல் இதழ் என்று சொன்னால் அது சுப்பையாவின் 'சுதந்திரம்” இதழ்தான். பொதுவுடைமை இயக்கத்தின் 'ஜனசக்திஃகூட 'சுதந்திரம்” இதழுக்குப் பிறகுதான், அதாவது 1937ஆம் ஆண்டில்தான் தொடங்கப்பட்டது. 'சுதந்திரம்” இதழ் 50 ஆண்டுகால நீண்ட வரலாறு கொண்டது. புதுச்சேரியின் கலை இலக்கியம் மற்றும் அரசியல் துறை சார்ந்த பத்திரிகைகளின் வரலாற்றில் வேறெந்தப் பத்திரிகையும் இவ்வளவு காலம் வந்ததில்லை.

தொழிலாளர்களின் நலன்களைக் காக்கவும், அவர்கள் மேம்பாட்டிற்காகவும் எதையும் செய்யத் துணிந்தவர் தோழர் சுப்பையா. அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, அச்சமற்ற தன்மை ஆகியவை அவரின் போராயுதங்களாய்த் திகழ்ந்தன. சுப்பையா என்று சொன்னால் அது 'தொழிலாளர்களின் தோழன்” என்று பொருள் சொல்லும்படியாகத்தான் அவரின் அணுகுமுறையும், வாழ்க்கை நெறியும் இருந்தன.

1935ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புதுச்சேரியில் 'சவானா மில்” தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமைச் சட்டம் கேட்டு முதல் வேலை நிறுத்தத்தை மேற்கொண் டார்கள். அதுதான் முதலாளித்துவத்தின் மீது புதுச்சேரித் தொழிலாளர்கள் வைத்த முதல் நெருப்பு. அப்போதெல்லாம் பிரெஞ்சிந்தியத் தொழிலாளர்கள் காலம் நேரம் என்று கணக்கில்லாதபடிக்கு வேலையில் பிழிந்தெடுக்கப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்.

காலையில் வேலைக்குப் போனால் இரவுதான் திரும்ப முடியும். பிள்ளைகள், மனைவியர் முகம் பார்த்துப் பேச முடியாத பெரும் கொடுமை. கொத்தடிமைகளாய்க் கேவலப்படுத்தப்பட்ட வேதனை. எதிர்த்துக் கேள்விகள் கேட்கமுடியாத நிலைமை. அவர்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டன; பறிக்கப்பட்டன. சவானா மில் தொழிலாளர்களோடு புதுச்சேரியின் மற்ற இரண்டு மில்களான ரோடியர் மில், கெப்ளெ மில் தொழிலாளர்களும் சேர்ந்து கொண்டு ஒருமித்து நடத்திய போராட்டத்தினால் ஓரளவுக்குத்தான் நியாயம் கிடைத்தது. தொழிலாளர்களின் வேலைநேரம் 12 மணியிலிருந்து 10 மணியாகக் குறைக்கப்பட்டது. ஆயினும், தொழிலாளர் நலன்களும், தொழிற்சங்க உரிமைகளும் மறுக்கப்பட்டன. எனவே போராட்டம் மேலும் தீவிரம் பெற்றது.

1936ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் நாள் வெறி பிடித்த பிரெஞ்சு ஏகாதிபத்தியம் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை முறியடிக்கும் வகையில் தமது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது. அந்த நேரத்தில் தலைமறைவாயிருந்து போராட்டங்களை வழி நடத்திய சுப்பையா தொழிலாளர்களோடு ஏதோ ஒரு மில்லில் இருக்கக்கூடும் என்று கருதிய பிரெஞ்சு அரசாங்கம் அவரைச் சுட்டு வீழ்த்தத் திட்டமிட்டிருந்தது. ஆயுதம் தாங்கிய பிரெஞ்சுக் காவல் படையும், அதிகாரிகளும், சுழல் பீரங்கிகளோடு அணிவகுத்து தொழிலாளர்கள் மீது படுபயங்கரமான வன்முறையை ஏவிவிட்டனர். மனித உரிமைக்கு எதிரான அந்தக் கொடூரமான பீரங்கி குண்டுகளின் தாக்குதலினால் 12 தொழிலாளத் தோழர்கள் களப் பலி ஆனார்கள். நூற்றுக் கணக்கானோர் குண்டடிபட்டு முடமானார்கள். எங்கும் இரத்தக் களறியாய் இருந்தது. தொழிலாளர் சமூகத்திற்கு எதிரான அந்தக் கொடுங்கோன்மை குறித்து சுப்பையா 'புதுவையின் விடுதலையை வென்றெடுத்த தொழிலாளர்களின் வீர வரலாறு’ எனும் சிறு நூலில்:

''1936 ஜூலை 30ஆம் நாள், பிரெஞ்சிந்திய அரசு அதன் இராணுவ பலத்தைத் திரட்டி முதலில் ரோடியர் மில்லுக்குள் புகுந்தது. அப்போது மில் முதலாளி 'மார்சலேண்டின்” கைத்துப்பாக்கிக் குண்டிற்கு ஒரு தொழிலாளி பலியானார்.

பின்பு பிரெஞ்சு இராணுவ அணி வகுப்பு சவானா மில்லுக்கு (சுதேசி மில்) எதிரில், கடலூர் நெடுஞ்சாலையில் அணிவகுத்து நின்று சுழல் பீரங்கிகளைக் கொண்டு, தொழிலாளர்கள் மீது குண்டுகளைப் பாய்த்திட்டது. மில் கட்டிடத்தின் மாடிகளில் இருந்து தொழிலாளர்கள் இயந்திரப் பற்சக்கரங்கள் போன்ற சிறு ஆயுதங்களைக் கொண்டு இராணுவ அணியை எதிர்த்துத் தாக்கினார்கள். போராடிய 12 தொழிலாளர்கள் சுழல் பீரங்கிக் குண்டுகளுக்கு இரையானார்கள். தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டம் இராணுவத்தை உடனே பின்னடையச் செய்தது. தொழிலாளர்கள் மில்லுக்கு வெளியே வந்து இராணுவத்தைத் தொடர்ந்து விரட்டியடித் தார்கள்.

பிரெஞ்சு ஏகாதிபத்திய இராணுவ அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் நடத்திய வரலாறு கண்டிராத வீரச் சமர், புதுவை மாநிலத்தில் இருந்து அனைத்து மக்களின் உள்ளத்தில் ஒரு பேரெழுச்சியை உண்டாக்கியது. அன்னிய ஏகாதிபத்திய அடிமை ஆட்சியை எதிர்த்து மக்கள் ஒன்றுபட்டு போராடி முடியடிக்க முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றார்கள். அத்தகைய முறையில் அரசியல் போராட்டத்தை நடத்தி நாட்டை விடுதலை செய்ய வேண்டியது மக்களின் இன்றியமையாத கடமை என்ற முடிவுக்கு அனைத்துப் பிரிவு மக்களும் வரத் தொடங்கினார்கள். அதனால் நாளுக்கு நாள், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட்டம் புதிய வடிவத்தையும், வேகத்தையும், வீச்சையும் பெறத் தொடங்கியது...
என்று எழுதியிருக்கிறார்.

புதுச்சேரியின் தனித்தன்மைமிக்க கவிஞரும், பொது வுடைமை இயக்கத்தின் மக்கள் இயக்கக் கவிஞருமான தமிழ் ஒளி 1949, ஜனவரி 2 தேதியிட்ட 'முன்னணி’ எனும் இதழில், 'புதுவைத் தொழிலாளிக்கு கோவைத் தொழிலாளியின் கடிதம்” எனும் ஒரு கவிதையை எழுதியிருந்தார். அக்கவிதை 'ஜூலை 30 ஐ நினைவு கூர்கிறது.

'தோழனே, 1936 ஜூலையில்-

கார் கடலும் வாயடங்க, காற்றும் விசை குறைய

ஊர் முழுதும் உன்னுடைய உத்வேகப் போராட்டம்

அன்று,

'சங்காரம் செய்திடுவேன்” என்றெழுந்த சர்க்காரை

சிங்கப் படைபோலே சீறி யெதிர்த்தடித்து

இரத்தப் புனல்சிந்தி நாளெல்லாம் போர் செய்தாய்

யுத்தக் கடைசியிலே உன்னுடைய வெற்றியொலி

உனது தியாகத்தால்,

பெற்ற உரிமையின்று பேடிகளின் சூழ்ச்சியினால்

குற்றுயிராய்ப் போகும் கொடிய நிலைகண்டு

நெஞ்சு கொதித்து நிலைகுலைந்து சோகித்தாய்

அஞ்சாத உள்ளம் அயர்வில் விழலாமோ
..............................................................................

புதுவைப் பாட்டாளி வர்க்கமே,

உன்னுடைய கைகளிலே எ*கின் உரமுண்டு

மன்னர்களை ஓட்டும் மகத்தான சக்தி உண்டு

சோசலிசம் பேசிச் சுரண்டலுக்குக் கால் பிடிப்போர்

வேஷங் கிழித்தெறியும் வீரமுண்டு; வன்மையுண்டு

அன்று புரிந்த சமர் ஆற்றல் உணர்ந்திடுக

இன்றைக்கே போர் முரசம் எண்டிசையும் கேட்கட்டும்

............................................................................................

ஆகையால் நீ தளர்வுறாதே,

முன்கை எடுத்திடுவாய்; முன்னேறித் தாக்கிடுவாய்

நின்பெருமை வாழ்க; நிலைபெறுக சோஷலிசம்!”

'இந்தியாவின் இரண்டாவது ஜாலியன் வாலாபாக் படுகொலை’ என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படும் இந்தத் தொழிலாளர் போராட்டத்தின் துயரம் ஜவகர்லால் நேருவின் இதயத்தை உலுக்கியது. சுப்பையா வேதனையின் விளிம்பில் இருந்தபடி நேருவுக்கு இது குறித்து விரிவாக ஒரு கடிதம் எழுதினார். அவரைப் புதுச்சேரிக்கு வரும்படி கண்ணீரோடு அழைத்தார். அழைப்பை ஏற்ற நேரு உடனடியாகப் புதுச்சேரிக்கு வந்தார்.

1936ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் நாள் வருகை தந்த நேரு, புதுவையில் பல்வேறு தொழிலாளர் கூட்டத்திலும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்திலுமாகப் பங்கேற்று மக்களிடத்திலே மாபெரும் எழுச்சி ஏற்படுவதற்குத் துணைபுரிந்தார். நேருவோடுகூட அக்கூட்டங்களில் கலந்துகொண்ட சுப்பையா, மேலும் சத்தியமூர்த்தி, காமராஜர் ஆகியோரோடும் பல இடங்களுக்குச் சுற்றுப் பயணம் செய்து தொழிலாளர்கள் நிலை குறித்து எல்லோரும் உணரும்படியாகக் களப்பணியாற்றியது சுப்பையாவின் அரசியல் அத்தியாத்தில் முக்கிய புள்ளி.

ஜூலை 30 தொழிலாளர்கள் போராட்டம் உச்சத்தில் இருந்த நேரம். புதுச்சேரி மக்களின் அரசியல் பிரச்சனையை எடுத்துப் பேசும் வகையில் பிரான்சுக்குச் சென்று அங்குள்ள பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த 'மக்கள் முன்னணிக் கட்சிஃ அமைச்சர்களோடு சுப்பையா கலந்து பேசுவது நன்மை பயக்கும் என்று கருதினார் நெரு. அவரின் ஆலோசனையை ஏற்று நேருவின் அறிமுகக் கடிதத்தோடு பிரான்சு நாட்டுக்குப் பயணமானார் சுப்பையா. அங்கே 1937ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் நாளில் பிரெஞ்சு அரசோடு தொழிலாளர் உரிமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய சுப்பையாவுக்கு மகத்தான வெற்றி கிடைத்தது.

தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, 8 மணிநேர வேலை, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, அதிகப்படியாய் இரவு நேரங்களில் வேலை செய்யத் தடை, பெண் தொழிலாளர்களுக்குப் பேறுகால உதவியாக சம்பளத்துடன் விடுமுறை என்று பல்வேறு தொழிலாளர் நல உரிமைகள் ஒரு சேர ஒப்புக் கொள்ளப்பட்டன. இதன்மூலம் ஆசியக் கண்டத்தி லேயே 8 மணிநேர வேலை என்பது புதுச்சேரியில்தான் முதன்முதலில் அமுலாக்கப்பட்டது. இது மகத்தான சாதனை. இன்றைக்கு ஒரு தொழிலாளி 8 மணிநேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேரத் தூக்கம் என்று அடிப்படை உரிமைகளோடு அமைதியான வாழ்க்கை நடத்துகிறான் என்று சொன்னால் அதற்குக் காரணம் சுப்பையா.

காந்தியை போன்றே, நேருவையும் முதன் முதலில் புதுச்சேரிக்கு அழைத்து வந்தவர் சுப்பையா. அதேபோன்று புதுச்சேரி மாநிலத்தின் முதல் சட்டமன்றத் தேர்தலில் பாவேந்தர் பாரதிதாசனை நிறுத்தி வெற்றிபெறச் செய்தவரும் சுப்பையாதான். புதுச்சேரியின் கவிதை அடையாளமாகத் திகழ்ந்த, 'பொதுவுடைமை’ என்னும் புதிய விடியலுக்கான சொல்லைத் தமிழுக்குத் தந்த பாரதிதாசன், 'புதிய உலகின் உன்னதம்” என்று போற்றப்படும் பொதுவுடைமைச் சிந்தனைகளைத் தன்னுடைய பல படைப்புகளில் பாடியவர். தமிழகத்தில் 'ஜனசக்தி’ தொடங்கப்பட்டபோது அதன் முதல் இதழில் அவர் எழுதிய 'புதியதோர் உலகம் செய்வோம்...” என்று தொடங்கும் பாடலில் 'பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்/ புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்...” என்று கவிதை முழக்கம் செய்தவர். அவரை பற்றி:

'1936ஆம் ஆண்டில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் நடத்திய உரிமைப் போராட்டத்தை ஒடுக்கிடப் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மேற்கொண்ட அடக்குமுறையை எதிர்த்து நடந்த தொழிலாளர் வர்க்கத்தின் பேரெழுச்சிக்குக் கவிஞர் பாரதிதாசன் பல வகைகளில் ஆதரவு காட்டினார். தொழிலாளர் இயக்கத்தைப் பாராட்டி பல தொழிற்சங்க வியாபாரிகள் சங்கங்கள் இவரை அணுகி கவிதைகள் எழுதித் தரும்படி கேட்டுப் பெற்று வெளியிட்டன...”

என்று சுப்பையா, தாம் எழுதிய 'நான் அறிந்த பாவேந்தர் பாரதிதாசன்” என்னும் கட்டுரையில் குறிப்பிடுகின்றார். அதனை மெய்ப்பிப்பது போலவே அந்நாளில் ஜூலை 30 தொழிலாளர் படுகொலை குறித்து:,

'பார்க்கப் பரிதாபமே - மில்லில்

பாடுபட்டோர் தேசமே - உளம்

வேர்க்கும் அநியாயமே - மக்கள்

வீணில் மாண்ட கோரமே...”

என்று தொடங்கும் அவரின் பாடல் அப்போதைய இயக்க மேடைகள் தோறும் எதிரொலித்தது. தலைவர் சுப்பையா மீதும், அவரின் தொண்டின் மீதும் பாரதிதாசன் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர் உரிமைகள் யாவற்றையும் பெற்று பிரான்சிலிருந்து புதுவைக் கடற்கரையில் அவர் வந்திறங்கியபோது இலட்சக் கணக்கான மக்கள் அணிதிரண்டு வந்து அவரை அன்போடு வரவேற்றார்கள். அந்த நிகழ்ச்சியில் பாரதிதாசனும் கலந்துகொண்டார். அப்போது அவர், எழுதிய வரவேற்புக் கவிதை இது:

'வருக வருக வளர்புதுவை தன்னில்

பெருகு தொழிலாளர் பெற்ற பெரும் பேரே

பொய்யை அநீதியைப் போக்கப் பணிசெய்

'சுப்பையா’ பேர்கொள் சுகிர்தரே

மக்கள் இதம்பெறுதல் வேண்டுமென

'சுதந்திரம்” ஆம் பத்திரிகையைத்

தோற்றுவித்தும் தொண்டும் செய்தும்

சிங்கமென வாலிபர்கள் தீவிரம் கொண்டேற

சங்கம் அமைத்தும் தலைமை நின் றுழைத்தும்

அழிவார்கள் என்றிருந்த அவலநிலை நீக்கி

தொழிலாளர் என்ற நிலைக்குக் கொண்டு வந்தீர்

பத்தும் புரிந்தீர் பாரீசுக்கும் சென்றீர்

இந்நாள் தொழிலாளர் நலம் காண...”

1937ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுப்பையா தொழிலாளர் உரிமைக்காகப் பிரெஞ்சு தேசத்திற்குப் போய் போராடிய பிறகுதான் தொழிலாளர்களின் முதல் தொழிற்சங்க சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதன் நகலை புதுச்சேரிக்கு அனுப்பிவைத்தார் சுப்பையா. பிரெஞ்சு மொழியிலிருந்த அதனை அப்போது தமிழாக்கம் செய்து புதுவைத் தொழிலாளர் வர்க்கத்திற்குத் தந்தவர் பாரதிதாசன்.

இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் காண முடியாதபடிக்கு ஒரே சமயத்தில் இரண்டு பெரிய அரசியல் பொறுப்புகளை ஏற்று சுப்பையா தம் வாழ்நாள் முழுவதும் சமரசமின்றிப் போராடிக் கொண்டிருந்தார். ஒன்று: புதுச்சேரியின் விடுதலை. மற்றது சுதந்திரம் அடைந்த புதுச்சேரியை இந்திய தேசத்துடன் இணைப்பது. இரண்டிலுமே வெற்றிபெற்றார் அவர்.

1939ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசானது புதுவையில் எழுந்த தேசிய விடுதலை இயக்கப் போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. அதன் நடவடிக்கையாக சுப்பையாவை பிரெஞ்சு எல்லையில் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதே சமயம் சென்னையில் பிரிட்டிஷ் எல்லையில் கைது செய்யும் ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. 1938ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் சுப்பையா தலைமறைவானார். ஆயினும் அவர் கைது செய்யப்பட்டு 1938ஆம் ஆண்டு டிசம்பரில் மூன்று வார காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் பிரிட்டிஷ் அரசானது சுப்பையாவை பிரெஞ்சு அரசாங்கத்திடம் ஒப்படைக, 1938ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 11 வரை புதுவைச் சிறையில் அடைக்கப் பட்டார். எனினும் அவர்மீது தொடுக்கப்பட்ட குற்றச் சாட்டுகள் அனைத்தும் பொய்யென்று ருசுவானதால் வேறுவழியின்றி பிரெஞ்சு நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் மூண்ட சமயம். செப்டம்பர் 1இல் பிரிட்டிஷ் அரசானது சுப்பையா எந்தப் பொதுக்கூட்டத்திலும் பேசக் கூடாது என்கிற கடுமையான ஒரு தடையை விதித்திருந்ததது. அந்தத் தடையை மீறி அரசியல் பொதுக்கூட்டங்களில் பேசியபோது 1941ஆம் ஆண்டு ஜனவரியில் பிரிட்டிஷ் அரசால் தஞ்சாவூரில் கைது செய்யப்பட்டார். 1942ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் வேலூர் மத்தியச் சிறையில் அரசியல் கைதியாக அடைக்கப்பட்டார். அங்கே அவர் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளானார்.

புதுச்சேரியில் 1944ஆம் ஆண்டு 'போன்வேன்” என்கிற பிரெஞ்சிந்திய ஆளுநர் இருந்தார். அவருக்கு சுப்பையாவின் மக்கள் இயக்கம் பெரும் எதிர்ப்பாக வெளிப்படவே அவருடைய பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் சுப்பையா புதுச்சேரியிலிருந்து நாடு கடத்தப்பட்டார். தமிழ் நாட்டின் தென்னாற்காடு பகுதிகளிலும், தஞ்சாவூர் பகுதிகளிலும், காக்கிநாடா மற்றும் கண்ணனூர் பகுதிகளிலும் அவர் நடமாடக் கூடாது என்று தடைச் சட்டம் விதிக்கப்பட்டது. அதற்காக பிரெஞ்சு ஆளுநரைக் கண்டித்து:

'என்னாங்க உங்களைத்தாங்க

ஏனோ நாடு கடத்தினீங்க

எங்களுக்குத் தலைவருங்க

இந்த நாட்டில் பிறந்தாருங்க

துங்கமொழி சுப்பையாங்க

சுத்த தேச பக்தருங்க...”

என்றும்

'வாய்ச்சானே நமக்கு கவர்னராய் சற்றும்

வளையாத செக்கு மரமதாய் போன்வேன் - அவன்

வாய்ச்சாúனெ...”

என்றும் சுப்பையாவின் 'சுதந்திரம்” இதழில் பாடல்கள் வெளியாகி அவை புதுச்சேரி கிராமப்புற மக்களால் நாட்டுப்புறப் பாடல்களைப்போலவே வெகுவாகப் பாடப்பட்டன. பிரென்சு தேசம் ஆட்சி மாற்றம் பெற்று பாரிசில் புதியதோர் ஆட்சி நிறுவப்பட்டதும் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் நாளில் சுப்பையா மீது விதித்திருந்த தடைச்சட்டங்கள் நீக்கப்பட்டன.

'வ.சுப்பையா அவர்கள் அரசியல் சிந்தனையில் தெளிவானவர்; மார்க்சிய தத்துவங்களுக்குத் தன்னை ஒப்படைத்துக்கொண்டவர்; எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்; வாழ்க்கையையே போர்க்களம் ஆக்கிக் கொண்டவர்...” என்று குன்றக் குடி அடிகளார் குறிப்பிடுவதைப்போல புதுச்சேரி வரலாற்றிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பிணைப்புண்டவர் சுப்பையா.

அவர் புதுச்சேரியில் தம்முடைய தலைமையில் 'தேசிய ஜனநாயக முன்னணிஃ ஒன்றை அமைத்து அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அனைத்து அரசியல் சக்திகளையும் ஒன்றிணைத்து புதுவையின் முழு அரசியல் தன்னாட்சி மாற்றத்திற்காக ஒரு பெரும் பேரியக்கத்தைத் தொடங்கினார். இந்தச் சூழலில்தான் 1946ஆம் ஆண்டின் இறுதியில் சுப்பையா பிரெஞ்சு பாராளுமன்றத்துக்கு மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அதற்காக அவர் பிரான்சு சென்றிருந்த போது 'இந்தியாவிற்கு முழுச் சுதந்திரம்” வேண்டும் என்கிற முறையில் 'புதுவைக்கும் முழுச் சுதந்திரம்” வேண்டும் என்று பிரான்சிலிருந்து அறிக்கை வெளியிட்டார்.

தன் கட்சித் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் போராட்ட அறைகூவல் விடுத்த சுப்பையா நேருவின் ஆலோசனையை ஏற்றவராய் 'புதுவை விடுதலை இயக்கச் செயல்திட்டம்” குறித்து விவாதிக்க இந்தியா வந்து, நேருவை புது தில்லியில் சந்தித்தார். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாளில் இந்தியா சுதந்திரம் அடைந்த அதே நாளில் புதுச்சேரியின் விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்டது. இதற்கிடையில் சுப்பையா பிரான்சுக்குச் சென்று இரண்டு ஆண்டுகள் நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கு பெற்றபோதும் 1948ஆம் ஆண்டு இறுதியில் பிரெஞ்சு அரசானது அவர் மீது பல தரப்பட்ட கொடிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கைது செய்யத் திட்டம் தீட்டியிருந்தது. அதை அறிந்த சுப்பையா கைதாகாமல் தப்பி இந்தியாவுக்குள்வந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டே புதுச்சேரி விடுதலை இயக்கத்தை வழிநடத்திக்கொண்டிருந்தார்.

1950ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் நாள் பிரெஞ்சு ஏகாதி பத்தியத்தின் கைக்கூலிகளாலும், போலீசாராலும், அரசியல் எதிரிகளாலும் புதுச்சேரி நகரத்தின் மையத்தில் இருந்த சுப்பையாவின் வீடும், அங்கே இயங்கிய பொதுவுடைமைக் கட்சி அலுவலகமும் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. வன்முறைக் கும்பல் சுப்பையாவைக் கொலை செய்யும் நோக்கத்தில் தேடியது. சுப்பையா கலங்கவில்லை. மறைவாக இருந்தே செயல்திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தார். பிரெஞ்சு அரசாங்கம் 'சுப்பையாவைப் பிடித்துத் தந்தால் ஆயிரம் ரூபாய்” பரிசு என்று அறிவித்தது:

'முன்னாள் பிரெஞ்சிந்திய மேலவை உறுப்பினரும், இந்நாள் புதுவை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமாகிய சுப்பையாவைத் துணிந்து பிடித்துத் தருபவருக்கு ரூபாய் 1000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். அவரது இருப்பிடம் பற்றி நம்பத் தகுந்த தகவல் தருபவருக்கு ரூபாய் 500 ரொக்கப் பரிசு அளிக்கப்படும். சுப்பையா என்னும் நபர், சென்னை அரசாங்கம் வலை வீசித் தேடிவரும் நபர்களில் ஒருவர் என்பதும் இங்கு நினைவுகூரத் தக்கது...” என்று 1950ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதியிட்ட 'இந்துஃ ஆங்கிலப் பத்திரிகையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள். சுப்பையா அப்போது பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவர். தமிழ்நாட்டிலும் அப்போதிருந்த அரசியல் சூழலில் அவரைக் கைது செய்யும் நிலைமை ஏற்பட்டிருந்தது. இப்படித் தொடர்ந்து போராட்டங்கள், அடக்குமுறைகள், தலைமறைவுகள், சிறைவாசங்கள் என்று வாழ்நாள் முழுதும் தம்மை வதைத்துக்கொண்டவரை, 1954ஆம் ஆண்டு நவம்பர் 1இல் புதுச்சேரி விடுதலை பெற்றபோது புதுச்சேரி மக்கள் வாழ்த்தி வரவேற்றனர்.

'புதுவைக்கு விலங்கிட்டுச் சிறையில் தள்ளிப்

பூட்டிவைத்த பரங்கியர்தம் ஆட்சி தன்னைக்

கதிகலங்கச் செய்திடவே மக்கள் என்னும்

காட்டாற்று வெள்ளத்தைக் கிளப்பி விட்டு

விதிதன்னை அடிமுதலாய் மாற்று தற்கு

வெகுண்டெழுந்த இயக்கத்தின் தலைவ னாகி

அதிசயங்கள் செய்தவொரு தொண்ட னானான்

அவன்வாழ்வு போர்க்களத்தின் பாட லாகும்

போர்முனையில் முன்நின்ற சிப்பாய்; அந்தப்

புதுவைநில விடுதலையாம் வேள்வித் தீயில்

சீர்குலுங்கப் பூத்தஒரு சிவப்பு ரோஜா

செங்கொடியைச் சுமந்தபடி திரிந்த சிங்கம்

தேரிழுக்க வடம்பிடித்தான்; வீடு வாசல்

தீக்கிரை யானதையும் பொருளாய்க் கொள்ளான்

காரிருளை வனவாசம் சிறையை யெல்லாம்

கண்டுமிந்த சுப்பையா கண்க லங்கான்...”

என்று பொதுவுடைமைக் கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் பாடியிருப்பது சுப்பையாவின் அரசியல் பொது வாழ்வுக்கும், அவரின் போராட்டத்துக்கும் ஓர் அடையாள சாசனம்.

பொதுவாகப் பொதுவுடைமை யாளர்கள் கலை இலக்கியங் களில் நாட்டமற்றவர்கள்; அழகியலின் மீது ஆர்வம் இல்லாதவர்கள் என்கிறதான ஒரு குற்றச்சாட்டு மிகுந்ததிருந்த அந்தக் காலக்கட்டத்தில் சுப்ûயா என்கிற இலக்கிய தாகம் கொண்ட ஓர் இயங்கியல் வாதி மகாகவி பாரதியின் புதுச்சேரிக் காலத் தொடர்பான பல அரிய தகவல்களையும், பாரதியின் 'இந்தியா’ முதலான இதழ்களையும் பாதுகாத்து வைத்திருந்து பாரதி ஆய்வாளர்களுக்குக் கொடுத்து பாரதியின் புகழ் மேலும் பரவும்படிச் செய்திருக்கிறார். அதில் குறிப்பாக ஒன்று: புதுச்சேரியில் இருந்த பாரதி, வ.வே.சு ஐயர், மண்டயம் சீனிவாசாச்சாரியார் போன்ற தேச பக்தர்களின் நடவடிக்கைகளை பிரிட்டிஷ் ஆட்சியின் உளவுத்துறை போலீசார் கடுமையாக வேவு பார்த்துத் தம் டைரியில் எழுதிவைத்துக்கொள்வர். அதனைப் 'போலீஸ்காரன் டைரிஃ என்று சொல்வார்கள். சுப்பையா அத்தகைய டைரி ஒன்றைப் பத்திரமாய்ப் பாதுகாத்து வைத்திருந்து பாரதி ஆய்வாளர்களிடம் தந்தார் என்பது இதுவரை பலரும் அறிந்திராத செய்தி.

அதற்கு சாட்சியமாகப் பாரதி ஆய்வாளரும், அன்பருமான ரா.அ. பத்மநாபன் 'திரு. சுப்பையாவின் பாரதித் தொண்டு’ எனும் தலைப்பிட்ட கட்டுரையில்:

'அன்பர் திரு. வ. சுப்பையாவை நான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன். எங்களைச் சேர்த்து வைத்ததே எங்களுடைய பாரதி பற்றேயாகும்.

பாரதி வாழ்க்கை அடிச்சுவடுகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் திரு. சுப்பையா பேருதவி செய்தார். பாரதி வீட்டுப் பணிப்பெண் அம்மாக்கண்ணுவின் தொடர்பை உண்டாக்கித் தந்தார். பலரிடம் என்னைச் சிபாரிசு செய்தார். பல தகவல்கள் தந்தார். பலவற்றைத் தேடிக் கண்டு பிடிக்க யார்யாரைப் பார்க்கவேண்டும், எங்கெங்கே போகவேண்டும் என்று வழிகாட்டினார். அம்மாக்கண்ணுவின் மூத்த புதல்வர் வேணுகோபால் (புலிப்பால் வேணு நாயக்கர்) வழித்துணை ஆனார். எதிர்பார்த்ததற்கு அதிகமாகவே பல அரிய விஷயங்களைச் சேகரித்தோம். 'இடிப்பள்ளிக்கூடம்” புரொபஸர் சுப்பிரமணிய ஐயர் (பிரம்மராய ஐயர்), 'தராசுக்கடைஃ ஆறுமுகம் செட்டியார், பொன்னு முருகேசம் பிள்ளை புதல்வர் ராஜா பாதர், பாரதிதாசன் முதலிய பலரை, பல அரிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

பழைய புஷ் வண்டிக்காரர்கள் உட்பட யாவரும் பரிவு காட்டினார்கள். திரு. சுப்பையாவின் பெயரைச் சொன்னாலே போதும், புஷ் வண்டிக்காரர்கள் எவ்வளவு நேரமானாலும், தூரமானாலும் கொடுத்ததை வாங்கிக் கொள்வார்கள்...” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சுப்பையா எழுதிய இன்னொரு கட்டுரை,யான 'புதுச்சேரியில் பாரதி- சில நினைவலைகள்” என்பது, பிரான்ஸ் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட 'பாரதி நூற்றாண்டு விழா மலரில்” இடம் பெற்றது. ஆங்கிலத்தில் எழுதிய இக்கட்டுரையில் பாரதி புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் படைப்பிலக்கியம் மற்றும் அவரின் பண்புகள் பற்றிய இதுவரை வெளிவராத பல அரிய தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றுள் மிகவும் குறிப்பிடத் தக்கது கட்டுரையின் கடைசிப் பகுதி:

'ஒருமுறை, பாரதி அரவிந்தரை சந்திக்கச் சென்றபோது அவரைப்போல அங்கு வந்திருந்த பலர் அரவிந்தரின் காலில் விழுந்து அவரின் காலைத் தொட்டு வணங்கியதைக் கண்டார். பாரதியால் அவ்விடத்தில் நிற்க முடியவில்லை. அரவிந்தரிடம் பாரதி, 'இது அடிமைத்தனத்தை அகற்றுகின்ற அடையாளமல்லஃ என்றும் 'இப்படியொரு வெறுப்பூட்டுகின்ற வழக்கத்தைச் செய்கின்ற ஒரு ஆளாக உங்களை நினைத்துப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது...” என்றும் படபடவென்று கேட்டார்.

அதற்கு அரவிந்தர் பாரதியிடம் 'அவர்கள் என் காலில் விழவில்லை; என்னுள்ளே இருக்கின்ற கடவுளின் காலில் விழுகின்றனர்” என்று பதிலளித்தார். இந்தப் பதிலில் பாரதிக்கு உடன்பாடில்லை. அவர் வெறுப்புடன் வெளியேறிவிட்டார். இதுதான் பாரதி அரவிந்தரைக் கடைசியாகச் சந்தித்தது என்று என் நண்பர்கள் என்னிடம் தெரிவித்தனர். பாரதியின் ஒவ்வொரு செயலும், மனித அடிமைத் தனத்தை இதயப் பூர்வமாகக் கண்டிக்கும் வகையில் இருந்தது என்ற உண்மையை இந்த நிகழ்ச்சி எடுத்தியம்புகிறது...” என்று சுப்பையா எழுதுவது பாரதியை இன்னும் துல்லியப்படுத்தும் சித்திரம்.

சுப்பையா தீவிர அரசியல்வாதியாகத் திகழ்ந்தாலும் கலை, இலக்கியங்களிலும், அதன் மீதான விமர்சனங்களிலும் மிகுதியான ஈடுபாடு கொண்டவர். தமிழ்மொழி மீது ஆழ்ந்த பற்றுடையவர். தமிழ்க் கவிஞர்களையும், புலவர் பெருமக்களையும் அவர் போற்றத் தவறாதவர். தமிழ் நாடக வளர்ச்சிக்கு வித்திட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவைத் தமிழ் நாடக உலகம் என்றென்றும் மறவாமல் இருக்கச் சுப்பையாதான் காரணமாயிருந்தார்.

சங்கரதாஸ் சுவாமிகள் மறைந்த புதுச்சேரி மண்ணிலேயே அவருக்கு நினைவுச் சின்னம் அமைக்கவேண்டும்; அவருடைய நினைவு விழாவை ஆண்டுதொறும் அங்கேயே நடத்த வேண்டும்; அந்த விழா தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பயன்படக் கூடியதாய் இருக்கவேண்டும் என்று தீர்மானித்து, அதற்கென்று பெரும் முயற்சி எடுத்து, புதுச்சேரி நகரப் பிரமுகர்களைக் கொண்ட கட்சி சார்பற்ற குழு ஒன்றை அமைத்து, சுவாமிகளின் சமாதியைக் கலைஞர்கள் நினைவு மண்டபமாகக் கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவர்.

அதற்காகக் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஒளவை தி.க. சண்முகம், தஞ்சை ராமையாதாஸ், டி.என். சிவதாணு போன்ற கலைஞர் களுக்கு ஊக்கம் கொடுத்து உதவிகள் செய்தவர். சுவாமிகளின் மண்டபத் திறப்பு விழாவுக்கு தமிழ் நாட்டிலிருந்த பல கலைஞர்களையும், பேரறிஞர்களையும் அழைத்து வந்து அதை நாடகக் கலைஞர்களின் விழாவாக நடத்திக் காட்டியவர். புதுச்சேரியில் பாரதி பாடிய 'குயில் தோப்புக்கு’ அருகில், சித்தானந்த சுவாமிகளின் திருக்கோயிலை ஒட்டிய கருவடிக்குப்பம் சுடுகாட்டில் அமைந்திருக்கும் சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு மணடபம் இன்றைக்கும் சுப்பையாவின் பெயரை நமக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறது.

சுப்பையா புதுச்சேரியின் மேலண்டை புல்வாரின் கடைசியில் 'வண்ணாரத் தெருஃ என்று இருந்த பெயரை மாற்றி அதற்கு 'சங்கரதாஸ் சுவாமிகள் தெரு’ என்று வைத்தவர். தியாகராஜருக்குத் திருவையாற்றில் ஆண்டுதோறும் இசைவிழா எடுப்பதுபோல புதுச்சேரியிலும் சங்கரதாஸ் சுவாமிகளுக்கென்று விழா எடுத்து அது தமிழ்நாடகக் கலை வளர்ச்சிக்கான விழாவாக இருக்கவேண்டும் என்று பெரிதும் ஆசைப்பட்டவர். இன்றைக்குப் புதுச்சேரி அரசு சங்கரதாஸ் சுவாமிகள் விழா நடத்துகிறது என்று சொன்னால் அதற்கு அடிப்படை காரணமாக இருந்தவர்; இருப்பவர் சுப்பையா.

சுப்பையாவின் பணி கலை இலக்கியம் சார்ந்த இத்தகைய முயற்சிகளோடு மட்டும் நின்றுவிடவில்லை, அந்நாளில் அவருடைய மேற்பார்வையில் 'வித்வன் மனோ ரஞ்சனி சபா’ எனும் நாடகக் குழு உருவாக்கப்பட்டது. அதில் வெள்ளாழர் வீதி, இரங்கப் பிள்ளை வீதி, பாப்பார வீதி ஆகிய மூன்று வீதிகளுக்குட்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற 'பக்த ராமதாஸ்”, 'உஷா பரிணயம்”, 'அமலாதித்யன்” (Hamlet) போன்ற நாடகங்கள் இன்று நேரு வீதி என்றழைக்கப்படும் 'துய்ப்ளேக்ஸ் வீதியில்” இருந்த 'கெப்ளே தியேட்டரில்” அன்று நடைபெற்றன. அவை புராண நாடகங்கள்தான் என்றாலும் அவற்றிலும்கூட சுப்பையா பாடலிலும், வசனங்களிலும் தேசிய விடுதலைப் போராட்ட உணர்வுகள் வெளிப்படும்படியான சூழல்களை அமைத்திருந்தது மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

சுப்பையா, தாம் ஆசிரியராய் இருந்த 'சுதந்திரம்” இதழில் தலையங்கங்கள் எழுதியது மட்டுமின்றி 'ஜனசக்தி போன்ற இடதுசாரி இயக்க ஏடுகளிலும் எண்ணற்ற அரசியல் சித்தாந்தக் கட்டுரைகளையும், இலக்கியக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அதோடு 'சுதந்திரம் பொன்விழா மலர்”, 'புதுவை மாநில தேசிய இயக்க வரலாறு, 'இலட்சியப் பயணம்” போன்ற சிறப்பு மலர்த் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கும் சுப்பையா 'சர்வதேச மகளிர் உரிமைகள்”, 'மக்கள் சீனம்”, 'தியாகிகளின் வாழ்க்கை வரலாறு, 'புதுவையின் விடுதலையை வென்றெடுத்த தொழிலாளர்களின் வீர வரலாறு, 'எட்டநில் கிட்ட வராதே, “Vision of Ambedkar.” “Saga of Freedom of Frenc India” போன்ற பல சிறந்த நூல்களை எழுதியிருக்கிறார்.

உலகின் எல்லா மொழிகளையும் நேசித்தவர் சுப்பையா. தமிழோடு, ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவராய் இருந்தார். அவருக்கு ரஷ்யமொழி, மலையாளம் போன்றவற்றிலும் நல்ல பரிச்சயம் இருந்தது. சுப்பையா பொதுவுடைமை இயக்கத்தவராய் இருந்தாலும் வாழ்க்கை நெறிமுறைகளில் காந்தியாரின் வழிமுறைகளையே பின்பற்றி வாழ்ந்தார். ஒருமுறை விருந்தொன்றில் கலந்து கொண்டபோது அவர் சாப்பிட்ட இலையைச் சுற்றி எதுவும் சிந்தப்படாமல் மிகவும் சுத்தமாய் இருந்திருக்கிறது. அருகில் அமர்ந்து சாப்பிட்டவர் அதைப் பார்த்து வியந்து பாராட்டியபோது 'இளமையிலிருந்தே நான் காந்தீய நெறியில் பழகி வந்தவன். அதனால் இலை எடுக்கும் தொழிலாளர்களுக்குக்கூட தொல்லை தராதபடி, சிந்தாமல் சாப்பிட்டும், அப்படியே சிந்தினாலும் சிந்தியதை கடைசியாய் இலையில் எடுத்துப்போட்டும் அந்த இடத்தை சுத்தமாக்கி வைத்துவிட்டு எழுந்திருப்பதுதான் என் வழக்கம்...” என்று சொல்லி யிருக்கின்றார். சுப்பையாவின் எளிமை நிறைந்த வாழ்க்கைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

சுப்பையா அரசியல் வாழ்வில் தூய்மையை விரும்பியவர். அந்த விதமாகவே தம் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார், தம் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி குறுகிய வழிகளில் சொத்துகள் சேர்க்காதவர். உழைக்கும் மக்களின் அன்பே அவரின் அசையாத சொத்தாக இருந்தது. புதுச்சேரியில் அந்நாளில் தனிநபர்களின் பெயர்களைத் தாங்கியே அரசியல் கட்சிகள் இயங்கின. கெப்ளே, மொம்பரேன், தாவீது, தோமாஸ், செல்லான், செல்வராஜ் செட்டியார், குபேர் போன்றவர்களின் பெயர்களில் கட்சிகள் இருந்தன. எல்லோருமே நபர்களின் பெயரைச் சொல்லித்தான் தங்கள் கட்சியைச் சொல்வார்கள்.

நானும் அந்த வண்ணமே சின்ன வயதில் யாராவது என்னிடத்தில் 'நீ எந்தக் கட்சி..? என்று’ கேட்டால் என் தந்தையாரைப் பின்பற்றி 'நான் சுப்பையா கட்சி...” என்று சொல்வதில் பெருமிதம் கொள்பவனாய் இருந்தேன். நாங்கள் வாழ்ந்த புதுச்சேரியின் நெல்லித்தோப்புப் பகுதியில் என் தந்தையார் இ. பழனியை அதுவும் 'பால்காரர் பழனி’ என்று சொன்னால் போதும், எளிதில் புரிந்துகொள்வார்கள். சாதிய அடக்குமுறைகளும், போராட்டங்களும், அவமானங்களும் நிரம்பிய வறுமை மிகுந்த எளிய வாழ்க்கை வாழ்ந்த அவர்தான் எனக்கு சுப்பையாவை பற்றியும் அவரின் கட்சியைப் பற்றியும் அடிக்கடி சொல்லிச் சொல்லி ஆழப் பதியவைத்தவர். அந்த அளவுக்கு என் தந்தையாருக்கு சுப்பையாவின் மீது அதிக ஈடுபாடு உண்டு.

அது எந்த ஆண்டு என்று நினைவில் இல்லை. நான் சிறுவனாக இருந்த சமயம். அப்போது புதுச்சேரியில் நடந்த தேர்தலில் 'மக்கள் முன்னணியைச்” சேர்ந்த சுப்பையா கட்சிக்கு 'யானை சின்னமும்’, அவரை எதிர்த்துப் போட்டியிடும் குபேர் கட்சிக்கு 'காளை மாடு’ சின்னமும் ஒதுக்கப்பட்டிருந்தன. அது நுகத்தடி பூட்டிய ரெட்டைக் காளைமாட்டுச் சின்னம். அந்தச் சமயங்களில் பெரும்பாலும் ஊர் ஊராகத், தெருத் தெருவாக ஒலி பெருக்கி கட்டிய மாட்டு வண்டிகளில்தான் தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டு போவார்கள். அப்படி வரும் வண்டிகளில் அநேகமாய் சுப்பையா கட்சியை ஆதரித்துத்தான் பிரச்சாரங்கள் நடக்கும். எந்தத் திசையில் திரும்பினாலும் சுப்பையாவைப் பற்றித்தான் பாடல்கள் கேட்ட வண்ணம் இருக்கும். ஒரு ஆண், ஒரு பெண்ணிடம் இலஞ்சம் கொடுத்து ஓட்டு கேட்பது போலவும், அதற்கு அந்தப் பெண் மறுப்புச் சொல்லி அந்த ஆண் சார்ந்த கட்சியை அம்பலப்படுத்துவது போலவும் அமைக்கப் பட்டிருக்கும் பாடல்கள்:

'ஆண்: ஒத்த ரூபா தாரேன் - நான்

உப்புமா காப்பியும் தாரேன்

ஓட்டுப் போடற பெண்ணே - நீ

மாட்டப் பாத்துக் குத்து


பெண்: ஒத்த ரூபாயும் வேணாம் - உன்

உப்புமா காப்பியும் வேணாம் - நீ

ஊரைக் கெடுத்த கூட்டம் - உங்கள

ஒழிச்சிக் கட்டப் போறோம்...”

என்று பாடுவதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரு விலையை தருவதாக அந்த ஆண் சொல்லி: 'ரெண்டு ரூபா தாரேன் - நான்/ ரெட்டப் பல்லாக்கும் தாரேன்/ மூணு ரூபா தாரேன் - நான் மூக்குத்திக் கல்லும் தாரேன்/ நாலு ரூபா தாரேன் - நான்/ நைலான் சிலுக்கு தாரேன்/ அஞ்சு ரூபா தாரேன் - நான்/ அட்டியலும் செஞ்சு தாரேன்/ ஆறு ரூபா தாரேன் - நான்/ ஐம்பொன் நகையும் தாரேன் ஏழு ரூபா தாரேன் - நீ/ என்னென்ன கேட்டாலும் தாரேன்...” என்று பசப்பு வார்த்தைகள் பேசியும், அந்தப் பெண் ஏமாறத் தயாராக இல்லை என்பதை ஒவ்வொரு ரூபாய் ஏற்றத்திற்கும் பதில் சொல்வதாய்ப் பாடலை அமைத்துக் கடைசியில் 'ஏழு ரூபாயும் தாரேன்...” என்று நீட்டி முழுக்கிச் சொன்னதற்குப் பிறகு:

'பெண்: ஏழு ரூபாயும் வேணாம் - நீங்க

என்னத்த தந்தாலும் வேணாம் - நீங்க

ஏய்ச்சிப் பிழைக்கும் கூட்டம் - உங்கள

எலும்பொடிக்கப் போறோம்...”

என்று பதிலடி கொடுத்ததும் தன் அரசியல் சுயரூப அடிவருடிப் பிழைப்பு வெளிப்பட்டுப் போய்விட்டதே என்கிற பயத்திலும் நடுக்கத்திலும் கடைசியாகப் பாடுவான்:

'ஆண்: ஐயய்யோ ஐயய்யோ போச்சே

அம்புட்டும் மண்ணாப் போச்சே

காஷாயத்தக் கட்டி இப்போ - நான்

காசிக்குப் போகப் போறேன்...”

நாட்டுப்புற இசைவடிவத்தில் மிகவும் அருமையாக புனையப்பட்ட இப்பாடல்கள் அந்நாளில் புதுவை எங்கும் எதிரொலித்தது. சுப்பையாவின் கட்சிக்காக தேர்தல் பிரச்சார உத்திகளோடு தயாரிக்கப்பட்ட இப்பாடலில் 'ஆண் “'குபேர்கட்சியைச்” சேர்ந்தவனாகவும், அவனை எதிர்த்துப்பாடுகிற 'பெண்” சுப்பையா கட்சியைச் சேர்ந்தவளாகவும் உருவகப்படுத்தி, இருவரின் தேர்தல் அணுகுமுறைகளிலும் உள்ள வர்க்க முரண்பாடுகளை வெளிப்படுத்தி, முடிவில் 'சுப்பையாவின் மக்கள் முன்னணிதான்” வெற்றிபெறும் என்பதை நுட்பமாகச் சொல்வது சுப்பையாவுக்கும், புதுச்சேரி பொதுவுடைமை இயக்கத்திற்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது.

இந்த 'ஒத்த ரூபா பாட்டு, புதுச்சேரிக்குப் பிறகு தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் பொதுவுடைமை இயக்கப் பிரச்சாரங்களிலும் மேடைகளிலும் ஒலித்த தென்றால் அதற்குக் காரணமாய் இருந்தவர்கள் பாவலர் வரதராஜன் - இளையராஜா சகோதரர்கள்தாம். பின்னாளில் இளையராஜா தமிழ் சினிமாவின் அதி பிரமாண்டமான, யாரும் எளிதில் நெருங்கமுடியாத 'இசைஞானியாக மாயத் தோற்றம் பெற்றதும் அந்த 'ஒத்த ரூபா பாட்டை அவரே ஒரு சினிமாவுக்காக 'ஒத்த ரூபா தாரேன்/ ஒரு ஒணப்புத் தட்டும் தாரேன்/ ஒத்துகிட்டு வாடி/ நாம ஓடப் பக்கம் போவோம்...” என்று மக்களின் ரசனையையும் சேர்த்து மலினப்படுத்தி சுப்பையாவின் கட்சிப் பாடலைக் காட்சிப் பாடலாக மாற்றிவிட்டார்.

'சுப்பையா கட்சி என்பது புதுச்சேரியின் வரலாறுகளில் இரண்டறக் கலந்த கட்சி. அது மற்றவர்களைப் போல வெறும் தனிநபர் சார்ந்த கட்சி அல்ல. மாறாக அது மக்கள் விடுதலைக்காகப் போராடிய பொதுவுடைமைக் கட்சி. சுப்பையா அதன் ஆளுமைமிக்க அரசியல் பின்புலமாய்த் திகழ்ந்தார்.

சுப்பையாவின் வரலாறு புதுவையின் விடுதலைப் போராட்ட வரலாறு என்பதாகவே விளங்கியது.

'பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்குண்டு கிடந்த புதுச்சேரியை, மக்களைத் திரட்டி விடுவித்து, இந்தியத் தாயகத்துடன் இணைத்த சிற்பி தோழர் வ. சுப்பையாதான் என்பதை அவருக்கு நேர் எதிரான கொள்கை நிலையில் நிற்பவர்களும் ஒப்புக் கொள்வார்கள்.

ஏனெனில், அது வரலாற்று உண்மை. அது என்றோ நடந்த, ஆய்வுக்குரிய சம்பவங்கள் அல்ல. நம் வாழ்நாளில் நடந்தது. உடன் இருந்தவர்கள், பங்கேற்றவர்கள், எதிர்த்தவர்கள், பார்த்தவர்கள் பலரில், சிலர் இன்றும் உயிரோடு உள்ளனர்.

எனவே இந்த மதிப்பீட்டை விவாதத்திற்குள்ளாக்க முடியாது. காந்தியடிகளும், பண்டித ஜவகர்லால் நேருவும், லால்பகதூர் சாஸ்திரியும் உயிருடன் இருந்திருந்தால் இதனைப் பிரகடனம் செய்திருப்பார்கள்...”

என்று பொதுவுடைமை இயக்கத் தலைவர் தா. பாண்டியன், சொல்லியிருக்கிறார்.

'சுப்பையாவை விலக்கிவைத்து இன்றைய புதுவை மாநிலத்தின் வரலாற்றை யாரும் எழுதிவிட முடியாது...” என்று ம.பொ.சி.யும் தெரியப்படுத்தி வைத்திருக்கின்றார்.

1954ஆம் ஆண்டு புதுவை சரித்திரத்தில் மறக்க முடியாத ஆண்டு. புதுச்சேரியின் பிரெஞ்சிந்திய ஆட்சி அதிகாரங்கள் யாவும் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்று இறுதி முடிவு செய்யப்பட்ட ஆண்டு. அதன் கருத்தை அறிவதற்கென்றே புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பகுதிகளிலிருந்தும் 'மக்கள் பிரதிநிதிகளைக்” கொண்ட ஒரு குழுவை அமைத்திருந்தார்கள். அவர்களைக் கொண்டு வில்லியனூருக்கு அடுத்த 'கீழூர்” பகுதியில் 1954ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் நாளன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 178 'மக்கள் பிரதிநிதிகளில்” 170 பேர் புதுச்சேரி இந்தியாவுடன் இணைய வேண்டுமென்று வாக்களித்ததின் பேரில் 'பிரெஞ்சிந்தியப் பகுதிகளின் ஆட்சி அதிகாரங்களை இந்தியாவுக்கு மாற்றிக் கொடுக்கும் ஒப்பந்தம்” 1954ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் நாள் டெல்லியில் கையொப்பம் ஆனது.

ஏற்னெவே அதே ஆண்டில் ஜீலை 16ஆம் நாள் மாஹே பகுதியும், ஜூலை முதல் நாள் ஏனாம் பகுதியும் புதுச்சேரி பிரெஞ்சு நிர்வாகத்திடம் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டிருந்தன. தொடர்ந்து 1954ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல்நாள் 'புதுச்சேரியின் விடுதலை ஒப்பந்தம்” அமலுக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தில் பிரெஞ்சு தேசத்தின் சார்பில் 'பியர் லாந்திஃயும் (Pierre Landy). இந்தியாவின் தூதர் கேவல்சிங்கும் கையொப்பமிட்டார்கள். அன்று புதுவை அரசினர் மாளிகையிலிருந்த பிரெஞ்சுக் கொடி இறக்கப்பட்டு இந்திய அரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, 1954ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் புதுச்சேரி விடுதலை பெற்ற அதிகாரப் பூர்வமான நாள் என்று அறிவிக்கப்பட்டது. ஏறக்குறைய 280 ஆண்டுகளாக அடிமைப்படுத்திக் கொண்டிருந்த பிரெஞ்சு ஆதிக்கம் ஒரு முடிவுக்கு வரக் காரணமாயிருந்த சுப்பையாவை புதுச்சேரி எப்போதும் நினைவு கூரும். '1954 நவம்பர் முதல் நாள் இந்திய அரசின் பிரதிநிதி திரு. ஆர். கே. நேரு தலைமையில் சுதந்திரக் கொடி ஏற்றி விழா கொண்டாடப் பட்டது. இப்போதுள்ள பாரதி பூங்காவில் இவ்விழாவிற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

"இந்திய அரசின் கமிஷனர் திரு. கேவல்சிங் அப்போது கோட்டக்குப்பத்தில் தங்கியிருந்த என்னை ஒரு சில நாட்களுக்கு முன் வந்து அழைத்தார். அதன்படி நவம்பர் 1ஆம் தேதி காலை கோட்டக்குப்பத்தில் வாழும் மக்கள் மகிழ்ச்சிப் பெருக்குடன் அங்கு எனக்கு வழியனுப்பும் விழாவை நடத்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அலங்கார வண்டியில் அமர்த்தி அனுப்பினார்கள். இயக்கத் தொண்டர்கள் பல ஆயிரக்கணக்கில் திரண்டு சுதந்திர முழக்கங்களை விண்ணதிர எழுப்பினார்கள்.

மேளவாத்தியத்துடன் ஆண்களும் பெண்களும் சேர்ந்து சுதந்திர பூமி எல்லைக்குள் நுழைந்தார்கள். இந்தியப் போலீஸ் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றது. ஆனால் காவல் துறையினரின் எண்ணிக்கை பெரியதாக இருந்தபோதிலும் மக்களின் எதிர்ப்பினைச் சமாளிக்க முடியவில்லை. ஏதோ குப்பையை ஒதுக்கித் தள்ளுவதைப்போன்று மக்கள் இந்தியக் காவலர்களை ஒதுக்கி மேலும் முன்னேறிச் சென்றனர். இந்தியக் காவலர்கள் பின்வாங்கி விட்டார்கள். அச்சுதந்திர விழாவிற்கு தலைமை தாங்கிய திரு. ஆர். கே. நேரு அவர்கள் உரையாற்றியதற்குப் பிறகு நான் உரையாற்றினேன்.

நான் உரையாற்றியபோது, 'புதுவை மாநிலம், இந்தியா 1947 ஆகஸ்ட் 15இல் சுதந்திரம் பெற்ற பின்னரும், பிரெஞ்சு ஏகாதிபத்திய காலனி ஆட்சியின் கீழ் இருந்ததால் பொருளாதாரத் துறையில் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்தியா வின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்காக வகுத்துச் செயல்படுத்தும் முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் நல்ல பயனை மக்களுக்கு அளித்து வருகின்றது. எனவே, முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தை இம் மாநிலத் திற்கும் விஸ்தரிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் தொழில்துறை, விவசாயம் இவைகளின் வளர்ச்சிக்கு விசேஷமான கவனத்தைச் செலுத்தி அதிக நிதி ஒதுக்கிச் செயலாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று கேட்டுக்கொண்டேன்...” என்று குறிப்பிட்டிருப்பதோடு சுதந்திரம் பெற்ற புதுச்சேரியின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து இந்திய அரசின் ஆண்டுத் திட்டங்களின் பயன் கிடைக்கப் பாடுபட்டதையும், அதனால் புதுச்சேரி பலன் பெற்றதையும் தன்னுடைய 'விடுதலை இயக்கத்தில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம்” எனும் கட்டுரையில் எளிமையான ஒரு தொண்டனைப்போல எழுதிவிட்டுப் போயிருக்கிறார்.

விடுதலையான புதுச்சேரியின் புதிய சட்டமன்றம் 1955ஆம் ஆண்டில் தொடங்கியது. முதன்முதலாகப் புதுச்சேரி மக்களால் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசியத் தலைவர் சுப்பையா அப்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டார். 1969 முதல் 1977 வரை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து மக்கள் உரிமைக்காகவும், மக்கள் ஜனநாயகத்திற்காகவும், மக்களின் முன்பாகக் குரல் கொடுத்த சுப்பையா தொடர்ந்து இருமுறை புதுவை அரசில் மந்திரி பதவி வகித்து அப்பதவிக்கு மதிப்பேற்படுத்தியவர்; அரசியலில் தம்மை நம்பிய மக்களின் நன்மைக்காக சோவியத் ரஷ்யா, பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கும் பயணம் செய்திருந்த சுப்பையா தம்முடைய 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அரசியல் பொதுவாழ்க்கையில் காந்தி, நேரு, போஸ், லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, சத்தியமூர்த்தி, டாக்டர் இராதாகிருஷ்ணன், வினோபாஜி, சரோஜினி நாயுடு, காமராஜ், எஸ்: துரைசாமி அய்யர், திரு.வி.க., சிங்கார வேலு சஞ்சீவ் ரெட்டி போன்ற தேசிய அரசியல் தலைவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு நாட்டுப் பணி ஆற்றி ஓர் முன்மாதிரியாய் இருந்துவிட்டுப் போயிருக்கிறார்.

சுப்பையா தேசத்தால் இந்தியனாகவும், மொழியால் தமிழனாகவும், பண்பால் மனிதனாகவும் தம்மைத் தகவமைத்துக்கொண்டவர். இனம், நிறம், மொழி, சாதி என்கிற எல்லைகளைக் கடந்து மனிதர்களை நடைபழகச் செய்தவர். ஜனநாயக மாண்புகளை கட்டிக்காத்தவர். எல்லாவற்றுக்கும் மேலாகத் தன் குடும்பம், தன்வீடு என்று வாழாத தகைமையாளர்:

'இந்த இந்தியப் பெருநாட்டில் நாட்டுப் பணிக்கு குடும்பத்தையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட குடும்பங்கள் இரண்டு. ஒன்று: நேருவின் குடும்பம். இன்னொன்று: புதுவைத் தோழர் வ. சுப்பையாவின் குடும்பம்...” என்றார் கவிஞர் கண்ணதாசன். சுப்பையா எப்போதும் வருகிற மனிதர் இல்லை; எப்போதாவது வருகிற யுகச் சிற்பி என்றால் மிகையில்லை.

நன்றி :

பாரதி வசந்தன்

கம்னியூஸ்ட் என்றால் இப்படி இருக்குனும்.

எப்படி இருக்கக் கூடாதுன்னு சொல்றவங்களுக்கு ஒரு கியூபா சுருட்டு இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.

Friday 15 June, 2007

பாரதி தற்கொலை செய்து கொண்டாரா?

இந்த நூற்றாண்டின் தமிழின் ஒரே மகா கவியான பாரதி 39 வயது முடிவடைவதற்குள் மரணம் அடைந்துவிட்டார்! இவ்வளவு இளம் வயதில் இவருக்கு ஏன் மரணம் நிகழந்தது..? பாரதி, மதம் பிடித்த யானையால் தாக்குண்டு அடிபட்டு இறந்தார் என்று பலர் பேசியும் எழுதியும் வருகின்றனர். யானை, துதிக்கையால் விசிறி எறிந்து, பின்னர் அவர் நலிவுற்று மாண்டார் என்றும் குறிப்பிடுகின்றனர். பாரதி மரணத்தோடு யானையைத் தொடர்பு படுத்திப் பார்ப்பது ஆர்வம் தரும் கர்பனையேயன்றி, இதில் துளியும் உண்மை இல்லை!யானை அவரை தாக்கியது ஜூன் 1919. அவர் மரணமடைந்தது 11-செப்டம்பர் 1921.யானையால் தாக்குண்ட நிகழ்ச்சிக்கு பின் பாரதி ஏறக்குறைய ஏழுமாதங்கள் தம் துணையாசிரியர் பதவியை 'சுதேசமித்திரன்' அலுவலகத்தில் சிறப்பாக ஆற்றியிருக்கிறார். பல சொற்பொழிவுகள் நிகழ்த்தி இருக்கிறார்.அவர் மரணம் ஏறத்தாழ ஒரு மெதுவான தற்கொலையாக இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது. அவரின் கடைசி கால வாழ்வை உன்னிப்பாக கவனித்ததில் இந்த எண்ணம் அழையா விருந்தாளியாக வருகிறது.கடைசி மூன்று ஆண்டுகள் அவர் கடும் மன உளைச்சலுக்கும், ஏமாற்ரங்களுக்கும் உள்ளாகி இருக்கிறார்.1918 நவம்பர் 20ம் தேதி பாரதி பிரஞ்சு புதுவையை விட்டு, பிரிட்டீஷ் இந்திய எல்லைக்குள் காலடி எடுத்து வைத்து, கடலூருக்கு வரும் தருவாயில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் 'குற்றவாளி'யாக அடைக்கப்படுகிறார். அப்போது, சுதேசமித்திரன் ரங்கசாமி அய்யங்கார், அன்னிபெசண்ட் அம்மையார், மணி அய்யர், சர்.சி.பி. ராமசாமி அய்யர் ஆகியோர் மிக முயன்றே அவரை சிறை மீட்க முடிந்தது.

இச்சூழலின் சிறையிலிருந்த பாரதி சென்னை மாகாண முதல்வருக்கு ஓரு கடிதம் எழுதும் நிர்பந்தம் ஏற்பட்டது. அதுவரை ஆங்கில ஏகாதிபத்தியத்தைத் தம் பேச்சாலும், எழுத்தாலும் கடுமையாக எதிர்த்த பாரதி, அக்கடிதத்தில், "...மேதகு தங்களுக்கு நான் மீண்டும் உறுதி கூறுகிரேன். நான் எல்லா அரசியல் ஈடுபாடுகளையும் துறந்து விட்டேன். நான் எப்போதும் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு விசுவாசமாகவும், சட்டத்திற்கு உட்பட்டு வாழ்பவனாகவும் என்றென்றும் இருப்பேன். ஆகையால், மேன்மைமிகு தாங்கள், என்னை உடனடியாக விடுதலை செய்யுமாறு உத்தரவிட வேண்டுகிறேன்." என்று தம் மனசாட்சிக்கு எதிராக எழுதிக்கொடுக்க வேண்டியதாயிற்று.தம்மைக் காப்பாற்ற முன்வந்தோரின் வேண்டுகோளின்படி இப்படி எழுதித்தர வேண்டிய தர்மசங்கட நிலை, பாரதியின் உள்ளத்தில் உளைச்சலை ஏற்படுத்தி இருக்கக்கூடும்.விடுதலையான பாரதி, தம் படைப்புக்களை நூலாக வெளியிடும் பணியே இனி செய்ய வேண்டிய முக்கிய எதிர்க்காலத்திட்டம் என்று தீர்மானித்தார். இவ்வெளியீட்டு முயற்சிக்கு முதலில் உதவி கேட்க, தம் இளமைக்கால நண்பரான எட்டையபுரம் மன்னரைச் சந்திக்க 1919மே மாதம் தன் பிறந்த ஊரான எட்டையபுரம் சென்றார். தம் நோக்கை விளக்கும் பொருட்டு, சீட்டுக்கவிகளும் பணிந்தெழுதினார். ஆனால் அவரைப் பார்க்கவோ, உதவவோ மன்னர் முன் வராது புறக்கணித்தார்.அடுத்து பாரதி, தன் மீது அன்பு காட்டிய நாட்டுக்கோட்டை செட்டிமார் சிலரின் ஆதரவை நாடினார். 15.11.1919ல் வை.க.சண்முகம் செட்டியாருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதினார்.ஆனால் விருந்தோம்பல் செய்து அவர் சொற்பொழிவுகளையும், பாடல்களையும் புகழ்ந்துரைத்த அவரும், மற்றும் பலரும், ஏனோ வெளியீட்டு முயற்சிக்குப் பொருள் உதவி செய்ய முன்வரவில்லை.தொடர்ந்து விரட்டிய வறுமையும், பொய்யாகப்போன எதிர்பார்ப்புகளும் கொடுத்த மனச்சோர்விலிருந்து தப்ப, அவர் பயன்படுத்திய கஞ்சாவும், அபினும் பாரதியின் உடலை நாளுக்கு நாள் பாதித்தன. அவர் எலும்பிச்சையளவு அபினை உருட்டிச் சாப்பிடுவதைக் கண்ட வ.உ.சியே ஒருமுறை வருந்தியிருக்கிறார்.1921,செப்டம்பர் தொடக்கத்தில் போதைப்பொருட்களின் விளைவால் வயிற்றுக் கடுப்பு நோய் அவரை வாட்டி வதைத்தது. நோய் எதிர்ப்பு சக்தி, நலிவுற்ற அவர் உடலில் குறைந்தது.உரிய நேரத்தில் சாப்பிட மறுத்தார். மருந்தை உட்கொள்ள மறுதலித்தார். குடும்பத்தார், நண்பர்கள் வற்புறுத்தியும் செவிமடுக்காமல் பிடிவாதமாக இருந்தார்.தொடர்ந்து ஏமாற்றங்களையும் இயலாமையையும் தாங்கி இந்தப் பூதவுடலில் வாழ்வதைவிட, மரணமில்லாப் புகழ் உடம்பை பெறுவதென அவர் முடிவு செய்திருக்கக் கூடும். தாம் மறைந்தாலன்றி தம் வெளியீடுகள் வெளிச்சத்திற்கு வராது என்ற உண்மையை உணர்ந்திருக்கக் கூடும். தம் நோயுற்ற உடலை அதன் போக்கில் சாக விட்டார்.செப்டம்பர் 11ம் தேதி வ.வே.சு அய்யர் கைது செய்யப்பட்டார். பாரதியின் பிடிவாத போக்கை கேள்வியுற்று, காவல்துறையின் அனுமதியுடன், கைதான சூழலிலும் பாரதியைச் சந்தித்து, உணவு உண்ணுமாறும், ஒழுங்காக மருந்து உட்கொள்ளுமாறும் அறிவுரைகளை கூறிச் சென்றார். ஆனால் பயனில்லை.பாரதி மகள் சகுந்தலா அன்றிறவு கொடுத்த கஞ்சியைக்கூட குடிக்க பிடிவாதமாக மறுத்துவிட்டார்.பாரதியின் நெருங்கிய நண்பரான நெல்லையப்பர், திருவல்லைக்கேணி மாடவீதியில் இருந்த ஜானகிராம் என்ற ஹோமியோபதி டாக்டரை அழைத்து வந்து காட்டினார். பாரதியை பரிசோதித்த டாக்டர் மருந்துகொடுக்க விரும்பினார். "எனக்கு எந்த மருந்தும் வேண்டாம்" என்று கண்டிப்புடன் கூறி, டாக்டரை திருப்பி அனுப்பினார் பாரதி.11-ம் தேதி பின்னிரவின் இரண்டு மணியளவில்(12-ம் தேதி அதிகாலை) பாரதியின் உடலைவிட்டு உயிர் பிரிந்தது. அவர் அமரரானார்.

பாரதி தற்கொலை செய்து கொண்டாரா?

டாக்டர். இ.ஜே.சுந்தர்.

நன்றி:- மலேசியன் இதயம்;
இதயம் பேசுகிறது 19.2.99.

Tuesday 5 June, 2007

கழிப்பறையில் பாரதியார் படம்

ர்நாடகத்தில் 'தேசிய கவி'க்கு அவமரியாதை

திம்பூர் (கர்நாடகா): கர்நாடக மாநிலம் திம்பூர் அருகே உள்ள ஒரு ஹோட்டலின் ஆண்கள் கழிப்பறையில் மகாகவி பாரதியாரின் படத்தைப் போட்டு அவரை அவமரியாதை செய்துள்ளனர். சுதந்திர வேட்கையைத் தூண்டும் எண்ணற்றப் பாடல்களைப் புனைந்தவர் மகாகவி பாரதி. தமிழகத்தில் அவரது பாடல்களைக் கேட்டு ஆயிரக்கணக்கானோர் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். வெள்ளையர் கண்களில் விரலை விட்டு ஆட்டியவை மகாகவியின் தேச பக்திப் பாடல்கள். தேச ஒற்றுமைக்காக அவர் எழுதிய பாடல்கள் இன்றளவும் நாட்டுக்கு உபயோகரமாக உள்ளன. அவரை கர்நாடக மாநிலம் திம்பூர் அருகே உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டல்காரர்கள் அவமானப்படுத்தியுள்ளனர். திம்பூர் அருகே உள்ள கிப்னஹள்ளி கிராஸ் என்ற இடத்தில் மயூரா என்ற ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலின் ஆண்கள் கழிப்பறையின் முகப்பில் மகாகவி பாரதியாரின் கம்பீரப் படத்தைப் போட்டு அவரைக் கேவலப்படுத்தியுள்ளனர். மகாகவியை அறிந்தவர்கள் இதைப் பார்த்து மனம் கொதித்துப் போயுள்ளனர். இதுகுறித்து ஹோட்டலின் கழிப்பறையை காண்டிராக்டுக்கு எடுத்திருப்பவர்களிடம் கேட்டால், இவர் யார் என்று எங்களுக்குத் தெரியாது. ஆண்கள் கழிப்பறை என்பதை குறிப்பிடும் வகையில் இந்தப் படத்தை இங்கே வைத்துள்ளோம் என்கின்றனர் படு கூலாக. பாரதியாருக்கு நேர்ந்துள்ள இந்த அவமரியாதையை அந்த ஹோட்டலுக்கு வந்த அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தட்டிக் கேட்காதது ஏன், தடுத்து நிறுத்தாது ஏன் என்று புரியவில்லை. தமிழர்களுக்கு மட்டும் இது அவமானமல்ல, ஒரு மாபெரும் கவியை கேவப்படுத்தியதன் மூலம் இந்தத் தேசத்தையும் அவமானப்படுத்தியுள்ளனர் அந்த ஹோட்டல்காரர்கள். உரியவர்கள் கவனித்து மகாகவிக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லைவர்கள், தமிழறிஞர்கள் கண்டனம் ஜூன் 05, 2007 சென்னை: மகாகவி பாரதியாரின் படத்தை கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹோட்டல் கழிப்பறையில் வைத்த செயலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், கவிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் திம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலின் ஆண்கள் கழிப்பறையின் முகப்பில் பாரதியாரின் படம் வைக்கப்பட்டுள்ளது. இந்த செயல் உலகெங்கும் உள்ள தமிழர்களை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதைக் கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெட்ட மனிதர்களை நினைந்து விட்டால் என்றுதான் ஆத்திரமும், கவலையும் வருகிறது. முன்பு திருவள்ளுவர் சிலையை கோணி போட்டு மூடி வைத்து அவமானப்படுத்தினர். இன்று பாரதியை அவமானப்படுத்தியுள்ளனர். இதுபோல கன்னடக் கவி குவெம்புவுக்கு அவமானம் நடந்தால் கர்நாடகத்தார் பொறுத்திருப்பார்களா. பாரதியை சிறுமைப்படுத்தும் இந்த அநாகரீகச் செயல், திட்டமிட்டு செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார். தமிழ்நாடு பனை வாரியத் தலைவர் குமரி அனந்தன் விடுத்துள்ள அறிக்கையில், ஆண்கள் கழிப்பறையை அடையாளம் காட்ட பாரதி படம்தான் கிடைத்ததா. தேச பக்தர்களாகவும், பாரதமாதாவின் வீரப் புதல்வர்களாகவும் கன்னடர்களையும் சேர்த்தே பாடியவர் மகாகவி பாரதி. கர்நாடக சட்டமன்றத்தில் பாரதியின் படத்தை வைத்திருக்க வேண்டும். ஆனால் கழிப்பறையில் படத்தை வைத்து அவமானப்படுத்தியுள்ளனர். உடனடியாக அந்தப் படத்தை அங்கிருந்து எடுப்பதோடு, இந்த செயலுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள அறிக்கையில், இது சமூகப் பிழையோடு சரித்திரப் பிழையுமாகும். வேறெங்கு நிகழ்ந்திருந்தாலும், அறியாதார் தவறென்று கொள்ளலாம். கர்நாடக மாநிலத்தில் இது நிகழ்ந்திருப்பது உள்நோக்கம் உள்ளதோ என்று கவலை கொள்ளச் செய்கிறது. இந்திய ஏவுகணையில் பொறிக்கப்பட வேண்டிய மகாகவியின் உருவம் கழிப்பறையிலா அந்த மீசை சூரியனை தமிழின் தேசிய அடையாளத்தை இவ்வளவு இழிவு செய்வதா இது உடனே அழிக்கப்பட வேண்டும். கர்நாடக அரசு தலையிட வேண்டும். இல்லாவிட்டால், கவிஞர்கள் திரண்டு தலையிட வேண்டியிருக்கும். இதை இதயக் குமுறலாக எடுத்துக் கொண்டாலும் சரி, எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டாலும் சரி என்று கூறியுள்ளார் வைரமுத்து.

Friday 1 June, 2007

சில கவனிக்கதக்க பின்னூட்டங்கள் - 1

இந்த இரெண்டு நாட்களில் எனக்கு வந்த இருவகையான பின்னூட்டுகள் இவை. இப்பின்னூட்டுகள் கவனிக்கப் படாமல் சென்று விடக்கூடாது என்பதற்காக தனிப்பதிவிட்டுள்ளேன். வேறொன்றுமில்லை.
முதலாவது பின்னூட்டு(feedback)
திரு.பெஞ்சமின் லெபோ
தங்கள் தளத்தை ஆர்வமுடன் படித்து வருகிறேன். இப்படி ஒரு தளம் தேவைதான். தமிழுக்கு இச்சங்கங்கள் ஆற்றி வரும் 'அளப்பரிய சேவையை' மக்களுக்குத் துகில் உரித்துக் காட்டிவரும் பணி சிறக்க வாழ்த்துகிறேன். வாய்மையே வெல்லும்! வெல்லட்டும்! பாரதி 125 ஆம் ஆண்டு விழாக் குழவில் (3 -ஆம் அமாவில்) பார்வையாளனாகக் கலந்துகொள்ள அடியேன் வந்ததும் உண்மை, அங்கே அனைவரும் அடித்த கூத்தைக் கண்டு வருத்தம் அடைந்ததும் உண்மை! பேராசிரியர் சக்திப்புயல் எழுப்பிய நியாயமான கேள்விக்கு (பாரதி விழாவில் தமிறிந்தவர்களுக்கு, தமிழ் அறிஞர்களுக்கு ஏன் இடம் தரவில்லை...?) பதில் இல்லை. விவாதங்களும் ஆக்க பூர்வமானதாகத் தோன்றவில்லை. பொன்னான நேரத்தை இது போன்ற புண்ணாக்கு கூட்டங்களுக்கு விரயமாக்க விரும்பாமலும் மனம் வெதும்பியும்தான் 'முத்தமிழையும் மொத்தமாகக் குத்தகை எடுத்திருக்கும் இத்தனை தமிழ் அறிஞர்கள் இங்கே இருக்கையில் தமிழறியாத் தறுதலை எனக்கு இங்கென்ன வேலை " என்று பொங்கி உரைத்து வெளியேறினேன்.
என் சொற்களின் முழப்பொருளையும் உணர்ந்து கொண்டவர்கள் ஒரு சிலரே (அவர்களுள் பேராசிரியர் சக்திவேல், திரு பொன்னரசு முதலியவர்களுடன் தாங்களும் அடக்கம். பிறர்க்கு 1 விழுக்காடு கூட விளங்கவில்லை, விளங்காது என்பதை நானறிவேன்!).
பின்னொரு நாள் தசரதன், பார்த்தசாரதி இருவரும் வேறோரு விழாவில் சந்தித்த போது எனக்குச் சில சப்பைக் கட்டு விளக்கங்கள் அளித்து இனி எல்லாக் கூட்டங்களுக்கும் அடியேன் வரலாமென்றும் அவர்களோடு சேர்ந்து விழாவில் பணியாற்றலாம் என்றும் வெகு தாராளமாகக் கூறினார்கள். பாரதிக்குக் கடைசியில் காக்கைகள்தாம் விழா எடுக்கும் என்பதை அறிந்துதான 'காக்கை குருவி எங்கள் ஜாதி' எனப் பாடினார் போலும் மகாகவி!
அன்புடன்
பெஞ்சமின் லெபோ
30 May, 2007 8:51 PM
----------------------------------------------------
இரெண்டாவது பின்னூட்டு(feedback)

Anonymous said...

பார் புகழும் பாரதிக்கு விழா எடுப்பதில் இவ்வளவு பிரைச்சினைகளா. கடல் கடந்து சென்றாலும் தமிழன் மடல் மூலம் போர் புரிவது நம் இனத்துக்கு மட்டுமேசாத்தியம். ஆசையை அழி என்று சொன்னான் புத்தன். அந்த ஆசையால்தான் அனைத்துப் பிரைச்சினைகலுமே. விழா எடுப்பது என்பது அனைவரும்ஒன்று சேர்ந்து ஒவ்வொருவரும் பங்குகொண்டு சிறப்பாக நடந்தேற வழிவகுக்க வேண்டும். பணத்தாசைகொண்டவர் விழா நடத்தினால் பிரச்சினை வருவது இயல்பு. அவரே ஒழுங்கான ஒரு குழு அமைத்து அனைவருக்கும் தகுதியான பொறுப்புக்கள் கொடுத்து விழா முடிவில் வரவு செலவு கணக்கை உறுப்பினர் மற்றும் மக்கள்முன் வைக்க தயங்காமல் இருப்பாரென்றால் பிரச்சினை வரவாய்ப்பில்லை.அதுவே இலக்கிய விழாவாக இருப்பின் அவருக்கு இலக்கியத்தில் ஈடுபாடும்,இலக்கியசிந்தனையும் இருக்க வேண்டியது இன்றியமையாதது. அப்படியில்லாதபட்சத்தில் அதை புரிந்துகொண்டு தான் விலகி மற்றவர்க்கு இடம் கொடுக்கவேண்டும். அப்படி செய்யாதிருப்பாரேயானால் கண்டிப்பாகஎதையோ, எந்த பலனையோ எதிர்பார்த்து தன் சொந்த சுயநலத்திற்காக செய்கிறார் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல் உணர்தல் வேண்டும். பதவி மோகம் மற்றும்பந்தா பேர்வழிகளும் இதில் அடங்கும்.எனவே அது போன்றவர்களை வெளிச்சம் போட்டுக்காட்டி, ஆர்வமிக்க அறிஞர்களை அவர்கள் இளைஞர்களாய் இருந்தாலும் விழா எடுக்கச் செய்யவேண்டும். கடந்த சில தினங்களாக தங்கள் கருத்த்க்களைபடித்த நான் தாங்கள் அந்த முயற்சியில்தான் ஈடுபட்டுள்ளீர்கள் என்பதாக என்னுகிறேன். எனவே விழாநடந்தேற வழி செய்து பாரதி பெயரையும் பாரிசு பெயரையும் காப்பீராக.

Thursday 31 May, 2007

மஹாகவி பாரதி பக்திமானா பகுத்தறிவாதியா?

திரும்பத் திரும்ப தமிழ்க்குள்ளேயே , அதாவது குண்ட சட்டிக் குள்ளயே குதிரை ஓட்டிக்கிட்டு இருப்பதை விட கொஞ்சம் மற்ற விஷ்யங்களையும் பார்ப்போங்களா? ஏன்னா அப்புறம் நம்ம ஜெயகாந்தன் வந்து திடீர்ன்னு, பிரான்ஸ்ல இருக்கற தமிழனும், தன்னைத் தானே நக்கிக்கொள்ற "பிரெஞ்சி நாயிங்க" சொல்லிட போறாரு. என்ன நான் சொன்றது? அது எப்பங்க அப்படி சொன்னாருன்னு? விவரம் தெறிஞ்சவங்க கேட்கமாட்டீங்கன்னு தெரியும். ஆனா இங்க இருக்கிற சில ஜாம்பாவான்களுக்கு அவரைத் தெரியுமாங்கறது கொஞ்சம் சந்தேகம் தான். அதுலேயும் அவருக்கு ஞானபீட விருது கொடுத்ததெல்லாம் தெரியுமாங்கிரதெல்லாம் சந்தேகமே. சரி அது போகட்டும். வீண் வம்பு நமக்கதெக்கு.
நம்ம மஹாகவி பாரதியார் தமிழ்ல பாண்டியத்தையம் பெறுவதற்கு முன்னாலேயே சம்ஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றவர் என்பது அனேகம் பேருக்கு தெரியும். அதிலும் பகவத்கீதையை பக்குவமாய் பருகியவன். ஆனால் அதே நேரத்தில் பகுத்தறிவாதத்தினையும் அவன் விடவில்லை என்பதற்கு கீழ்காணும் வரிகளே சாட்சி.

"செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்

சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பார்

பித்தமனிதர் அவர்சொலுஞ்சாத்திரம்

பேயுரை யாமென்றிங்கூதேடாசங்கம்"

சரி அத்வைதியான பாரதி பகவத்கீதைக்கு தான் எழுதிய முன்னுரையிலேயே எப்படியெல்லாம் முரண் பட்டிருக்கின்றான் என்பதை அலசிய கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களின் சுவாரசியமான விவாதங்களை பார்ப்போம் :

பாரதி அடிப்படையில் ஓர் அத்துவைதி; ஒருமைக் கொள்கையாளன். ஆனால் அத்துவைதத்தின் கொடுமுடியான மாயைக் கொள்கையை அவன் மறுதலிக்கிறான். மாயையைப் பாரதி மறுதலிப்பது அவனுடைய புற உலக நாட்டத்தை, வேத நெறியில் திளைக்கிற அவன்மேல் அவனை உருவாக்கிய தமிழ் நெறி செலுத்திய ஆளுமையை, அவனது மெய்யான பற்றுறுதிகளை, அவற்றை வெளிப்படையாக முன்வைக்கிற அவனுடைய நேர்மையைக் காட்டுகிறது. ஒரு சார்பில் வைதிகனாகவும் மறு சார்பில் அவைதிகனாகவும், ஒரு சார்பில் அகநிலையாளனாகவும் மறு சார்பில் புறநிலையாளனாகவும் இருக்க விரும்புகிறான் பாரதி. இந்த ஈரொட்டு நிலைதான் அவனுடைய வழக்குரைகளில் முரண்களை உண்டாக்குகிறது. அத்துவைதம் பேச விருப்பமென்றால் அதை மாயையோடுதான் பேசியாக வேண்டும். மாயையைப் பேச விருப்பமில்லை என்றால் அத்துவைதம் பேசக் கூடாது. பிரம்மம் முகமென்றால் மாயை முதுகு. 'முகத்தை மட்டும் கொள்கிறேன், முதுகு வேண்டாம்' என்று தள்ளுபடி செய்ய அத்துவைதம் இடம் கொடுக்காது. அத்துவைதம் கலப்படக் கொள்கைகள் செய்வதற்கு ஒத்துவராத விலாங்கு மீன்.
பகவத் கீதைக்கு எழுதிய முன்னுரையில் கீதை போதிக்கிற விடயங்கள் என்று சிலவற்றைப் பாரதி வெளிச்சமிட்டுக் காட்டுகிறான். அவற்றில் ஒன்று புத்தியிலே சார்புடையவனாக இருக்கச் சொல்கிறது கீதை என்பது.
"புத்தியிலே சார்பு எய்தியவன் இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறந்துவிடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக. யோகம் செயல்களிலே திறமையாவது. (கீதை, 2:50)
இஃதே கீதையில் பகவான் செய்யும் உபதேசத்துக்கெல்லாம் அடிப்படையாம்." (ப. 3)
அப்படித்தான் சொல்கிறது கீதை.
"தன்னிலே தான் இன்புறுவான் தன்னிலே தான் திருப்தியடைவான். தன்னிலே தான் மகிழ்ந்திருப்பான். அவனுக்குத் தொழிலில்லை.
"அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை. செயலின்றியிருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை. எவ்விதப் பயனையும் கருதி அவன் எந்த உயிரையும் சார்ந்து நிற்பதில்லை." (கீதை, 3:17-18).
கீதை இப்படியும் சொல்கிறது:
"சாஸ்திர விதியை மீறி, விருப்பத்தால் தொழில் புரிவோன் ஸித்தி பெறான்; அவன் இன்பமெய்தான்; பரகதியடையான்.
"ஆதலால், எது செய்யத் தக்கது, எது செய்யத் தகாதது என்று நிச்சயிப்பதில் நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள். அதையறிந்து சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலைச் செய்யக் கடவாய்." (கீதை, 16:23-24)
மேலும் சொல்கிறது:
"உன் மனத்தை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்வி செய்க. என்னையே வணங்குக. என்னை யெய்துவாய். உண்மை இஃதே; உனக்கிது சபதமுரைக்கிறேன். நீ எனக்கினியை.
"எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண்புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன், துயரப்படாதே." (கீதை, 18:65-66)
கீதையின் இந்த முரண்பாடு பாரதியின் முன்னுரையில் எதிரொலிக்கிறது. புத்தியிலே சார்பு கொள்ளுதலை யோகமென எடுத்துச் சொன்ன பாரதி மற்றோரிடத்தில் பேசுகிறான்:
"கடவுளிடம் தீராத நம்பிக்கையைச் செலுத்த வேண்டும். கடவுள் நம்மை உலகமாகச் சூழ்ந்து நிற்கிறான். நாமாகவும் அவனே விளங்குகிறான். வாயிலாலேனும் புறவாயிலாலேனும் நமக்கு எவ்வகைத் துயரமும் விளைக்க மாட்டான். ஏன்? நாம் எல்லா வாயில்களாலும் அவனைச் சரண்புகுந்துவிட்டோ மாதலின்.
"அவனன்றி யோரணுவு மசையாது. அவன் நமக்குத் தீங்கு செய்ய மாட்டான்... ஏன்? நாம் அவனை முழுதும் நம்பிவிட்டோ மாதலின். ...
"அவனை நம்பினார் செய்யத் தக்கது யாது? ... எதனிலும் ஐயுறவு பூணாதிருத்தல்.
" 'ஸம்சயாத்மா விநச்யதி' - ஐயமுடையோன் அழிவான். நம்பினவன் மோக்ஷமடைவான்." (பக். 15-16)
இப்போது நமக்கெழுகிற ஐயம்: புத்தியிலே சார்பு கொள்வதா? "சாஸ்திர"த்தில் சார்பு கொள்வதா? கடவுளிடத்தில் சார்பு கொள்வதா? மூன்றில் எதன் ஒன்றின் மீதும் சார்பு கொள்ளச் சொல்வதும் வழக்குரைக்குப் பிழையில்லை. ஆனால் ஒவ்வோரிடத்திலும் ஒவ்வொன்றின் மீது சார்பு கொள்ளச் சொல்வது?
ஐயமுடையோன் அழிவான் என்பது சரி. 'ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து' என்பது உள்ளதுதான். ஆனால் எதன்மேல் ஐயமுடையவன் அழிவான்? புத்தியின் மேலா? சாஸ்திரத்தின் மேலா? கடவுளின் மேலா? ஐயம் என்பதே அறிவின் தொடக்கமன்றோ! ஐயத்தில் தொடங்குகிறவனை முதலிலேயே அச்சுறுத்திவிட்டால் அவன் தொடர்வானோ! ஐயத்தில் தொடங்குவதும் பிறகு அது நீங்கித் தெளிவதும் தானே முறை! மேலும் செய்கையினாலும் செயலின்மையினாலும் எந்தப் பயனுமில்லாதவன் எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்தான் என்ன? சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொண்டு சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலைச் செய்யக் கடவாய் என்று அவனை கடப்படுத்துவது ஏன்?
ஓரிடத்தில் அனைத்திறைக் கொள்கை (pantheism) பேசுகிறான் பாரதி. அதுவே வேதத்தின் கொள்கை என்றும் அதை விளக்கும் பொருட்டே பகவத் கீதை செய்யப்பட்டது என்றும் பேசுகிறான்.
" 'ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்' என்பது ஸநாதன தர்மத்தின் ஸித்தாந்தம். எல்லாம் கடவுள்மயம். ... [ஆதலால், எல்லாம் ஒன்றுக்கொன்று ஸமானம்.] ...
"நக்ஷத்ரங்களெல்லாம் கடவுள் வலியால் சுழல்கின்றன. திரிலோகங்களும் அவனுடைய சக்ரத்தில் ஆடுகின்றன. நீ அவன்; உன் மனம் உன் மனத்தின் நினைப்புகள் எல்லாம் அவனே. ... அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பையெல்லாம் தொப்பென்று கீழே போட்டுவிட்டு ஸந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்துகொண்டிரு. எது எப்படியானால் உனக்கென்ன? ... உலகத்தை, மானுடா, நீயா படைத்தாய்? நீயா நடத்துகிறாய்? உன்னைக் கேட்டா நக்ஷத்ரங்கள் நடக்கின்றன? உன்னைக் கேட்டா நீ பிறந்தாய்? எந்த விஷயத்துக்கும் நீ ஏன் பொறுப்பை வஹித்துக்கொள்கிறாய்?
" ... எல்லாச் செயல்களையும் கடவுளுக்கென்று ஸமர்ப்பித்துவிட்டுப் பற்றுதல் நீக்கி எவன் தொழில் செய்கிறானோ அவனைப் பாவம் தீண்டுவதில்லை. தாமரையிலைமீது நீர் போலே (கீதை, 5:10).
"சால நல்ல செய்தி யன்றோ, மானுடர்காள், இஃது உங்களுக்கு? பாவத்தைச் செய்யாமலிருக்க வழி தெரியாமல் தவிக்கும் மானுடரே, உங்களுக்கு இந்த சுலோகத்தில் நல்வழி காட்டியிருக்கிறான் கடவுள். ஈசனைக் கருதி, அவன் செயலென்றும், அவன் பொருட்டாகச் செய்யப்படுவதென்றும் நன்கு தெளிவெய்தி, நீங்கள் எத்தொழிலைச் செய்யப் புகுந்தாலும், அதில் பாவம் ஒட்டாது." (பக். 6-9)
எல்லாமே கடவுள் மயம் என்று பாரதி அனைத்திறைக் கொள்கை பேசுவதில் ஒரு நியாயம் உண்டு. எல்லாமே கடவுள்மயம் என்றால் பின் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவேது! பார்ப்பான் என்றும் பறையன் என்றும் வேறுபாடு ஏது! பாரதியின் உள்மன விருப்பம் அதுதான். அது நல்லது. ஆனால் பகவத் கீதை அத்தகைய நிலைபாட்டுக்கு உகந்த நூல்தானா? அருச்சுனன் தன்னுடைய துயரப்பாட்டை வெளிப்படுத்தத் தொடங்கும்போதே, "இந்தப் போரினால் வருண தருமம் குலைந்து போய்விடுமே" என்ற வருத்தத்துடன்தான் தொடங்குகிறான். அதற்கு விடை சொல்ல முனைகிற வாசுதேவ கிருட்டிணன், "சாத்திரத்தில் உனக்கு விதிக்கப்பட்டிருக்கும் தொழிலை நீ செய்ய வேண்டுவது உன் கடன். நீ சத்திரியன்; போர்த் தொழில் செய்யவே விதிக்கப்பட்டிருக்கிறாய். எழுந்து நில். போர் செய்" என்று வருண தருமத்தைக் காப்பாற்றவே போர் செய்யச் சொல்கிறான்.
மேலும் கிருட்டிணக் கடவுள் அவனே சொல்வதுபோலத் தனக்கு இனியவர்களுக்கும் தன்னைச் சரண் புகுந்தவர்களுக்குமே இனியவன். இது பத்தி இயக்கத்தின் பொதுத் தன்மை. சிவன்கூட நச்சினார்க்குத்தான் இனியவன். மற்றையோர்க்கு இவர்கள் வெய்யவர்கள். அப்படியானால் எல்லாமே கடவுள்மயம் என்பதும் எல்லாரும் சமானமானவர்கள் என்பதும் எப்படிச் சரி?
அது ஒருபுறம் கிடக்கட்டும். "சால நல்ல செய்தியன்றோ, மானுடர்காள், இஃது உங்களுக்கு?" என்று பாரதி விதந்தோதும் அளவுக்கு இதில் பேசப்படுகிற நல்ல செய்தி என்ன? "என் செயலாவதொன்றிலை, இனித் தெய்வமே உன் செயலே என்று உணரப் பெற்றேன்" என்று கருதிக்கொண்டு எதைச் செய்தாலும் அதன் நன்மையோ தீமையோ நம்மை ஒட்டாது என்பது நல்ல செய்திதானா? இது நல்ல செய்திதான் என்றால் இதைத் தற்கால வாழ்விற்கும் பொருத்திப் பார்க்க வேண்டாமா!
தேர்தல் நடக்கிறது. தன் கட்சியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு கட்சியைச் சார்ந்த தொண்டனுக்கும் தருமம். "சாஸ்திர விரோதமான செயலை ஒருவன் செய்யக் கூடாது" என்பதைப் போலக் கட்சி விரோதமான செயலைத் தொண்டன் செய்யக் கூடாது. தன் கட்சியை மக்கள் வெல்லச் செய்வார்களா என்பதைக் கட்சியின் நடத்தையைப் பொறுத்துக் கணிக்க முடியாத சூழலில், தன் கட்சி வென்றேயாக வேண்டும் என்ற கட்டாய நிலையில், அவன் தான் போற்றுகிற தன் தலைவனின் மேல் பொறுப்பைப் போட்டுவிட்டுக் குடிபடையுடன் உட்புகுந்து கள்ள ஓட்டுப் போடுவதும் சால நல்ல செய்தியோ?
செயலுக்குச் செய்தவனைப் பொறுப்பாக்குவது என்பது அற நூல்களின் அடிப்படை. "நன்றே செய்வாய் பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே" என்பது ஆவியிலே தாழ்மையைக் குறிப்பது என்ற அளவில் நல்லதே தவிர அதையே விதியாகக் கொள்கிற அளவுக்கு நல்லதா?
எல்லாவற்றையும் இறைவனின் பொறுப்பில் வைத்துவிட்டுத் தான் பொறுப்பின்றி இருத்தல் என்பது புறச் சமயங்களான பௌத்தத்தையும் சமணத்தையும் வென்று அகச் சமயங்களான சைவத்தையும் வைணவத்தையும் நிலைநாட்டுவதற்காகச் செய்யப்பட்ட உத்தி. இது பாதை மாறிய ஆடுகளைப் பட்டிக்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்காகக் கொடுக்கப்பட்ட கையூட்டு.
"வினையே நமது கருக்குழி; உறற்பால ஊட்டா கழியா" என்று கெடுபிடியாகப் பேசியது பௌத்தம். "வினை உன்னுடையது அல்ல; கடவுளுடையது. உன் வழியாகக் கடவுளே அதைச் செய்கிறார். ஆகையால் ஆக வேண்டியவற்றை அவர் பார்த்துக் கொள்வார். உன்னுடைய செயல்களுக்கு உன்னைப் பொறுப்பாக்கும் பௌத்தத்திலிருந்து, உன்னுடைய செயல்களுக்குக் கடவுளே பொறுப்பேற்றுக்கொள்ளும் சமயத்திற்கு (சைவத்துக்கு அல்லது வைணவத்துக்கு; பகவத் கீதையின் விடயத்தில் சைவமோ வைணவமோ அல்லாமல் வேத மதத்துக்கு) மீட்சி பெறு" என்று நீக்குப்போக்காகப் பேசியது பத்தி இயக்கம். அவ்வளவுதான் வேறுபாடு. கையூட்டாக முன்வைக்கப்பட்ட ஒரு சூழ்ச்சிக் கொள்கையைப் பாரதி பரிந்துரைப்பதைப் போலப் பொதுக் கொள்கையாக, சால நல்ல செய்தியாக ஏற்றமைய முடியுமா? ஏற்றால் சமூக ஒழுங்கு நிலைபெறுமா? அறிவின் அடிப்படையில் பார்த்தாலும் இது உயிருக்கோ இறைவனுக்கோ பெருமை தருவதாக அமையுமா?
பகவத் கீதையை 'அமிர்த சாஸ்த்ரம்' என்கிறான் பாரதி.
"சாகாதிருத்தல்; மண்மீது மாளாமல் மார்க்கண்டேயன்போல் வாழ்தல்; இதுவே கீதையின் ரஸம். அமரத்தன்மை; இஃதே வேத ரஹஸ்யம்.
"இந்த வழியைக் காட்டுவது பற்றியே வேதங்கள் இத்தனை மதிக்கப்படுகின்றன.
"இறந்துபோன ஜீவன் முக்தர்கள் யாவரும் ஜீவன் முக்தியை எய்திய பின் அந்த நிலையினின்றும் வழுவியவர்களாகவே கருதப்படுதல் வேண்டும். நித்திய ஜீவிகளாய் மண்மேல் அமரரைப்போல் வாழ்வாரே ஜீவன்முக்தராவர். அத்தகைய நிலையை இந்த உலகில் அடைதல் ஸாத்யமென்று ... இரண்டு சுலோகங்களிலே கடவுள் போதித்திருக்கிறார். இஃது ஸ்ரீகிருஷ்ணருடைய கொள்கை. இதுவே அவருடைய உபதேசத்தின் ஸாராம்சம். பகவத் கீதையின் நூற்பயன். எனவே பகவத் கீதை அமிர்த சாஸ்த்ரம்." (பக். 16-17)
சாகாதிருக்கும் மார்க்கண்டேயன் இப்போது எந்த ஊரில் இருக்கிறார் என்று தெரியவில்லை. சாகாதிருக்கத் தகும் தீரனாகக் கிருட்டிணனும் இல்லை. ஒரு கல்லா வேடனின் அம்பில் அடிபட்டுக் காலமானான்.
சாகாமையைப் போதிப்பதாகப் பாரதி மேற்கோள் காட்டும் இரண்டு சுலோகங்களை (கீதை, 2:14-15) அடுத்து அதே அத்தியாயத்தில் கீழ்வரும் சுலோகங்களும் இடம்பெறுகின்றன:
"ஆத்மா நித்யன்; அழிவற்றான்; அளவிடத் தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ..." (கீதை, 2:18).
"பிறந்தவன் சாவ துறுதியெனில், செத்தவன் பிறப்பதுறுதியெனில், இந்த விலக்கொணாச் செயலுக்கு நீ அழுங்குதல் தகுதியன்று" (கீதை, 2:17).
பகவத் கீதை பேசுகிற சாகாமையைப் பாரதி விளங்கிக்கொண்ட விதம் சரிதானா? "நித்திய ஜீவிகளாய் மண்மேல் அமரரைப்போல் வாழ்வாரே ஜீவன் முக்தராவர்" என்பது பாரதியின் கொள்கையேயன்றிப் பகவத் கீதையின் கொள்கையன்று. பாரதி இந்த "மரணமிலாப் பெருவாழ்வுக் கொள்கையில்" ஊக்குவிக்கப்பட்டதற்குக் காரணம் தமிழ்ச் சித்தர்களும் வள்ளலாருமேயன்றிச் சிறீகிருட்டிணன் அல்லன்.
பாரதி தொடர்ந்து பேசுகிறான்:
"... சாகாமலிருக்க வழி கற்றுக்கொடுக்கும் சாஸ்த்ரமாகிய பகவத் கீதையைச் சிலர் கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள். துர்யோதனாதிகளைக் கொல்லும்படி அருச்சுனனைத் தூண்டுவதற்காகவே இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டனவாதலால், இது கொலைக்குத் தூண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூலென்று சிலர் பேசுகிறார்கள். கொலை செய்யச் சொல்ல வந்தவிடத்தே, இத்தனை வேதாந்தமும், இத்தனை ஸத்வ குணமும், இத்தனை துக்க நிவிர்த்தியும், இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவதென்னே என்பதை அச் சில மூடர் கருதுகின்றிலர்.
"துரியோதனாதியர் காமக் குரோதங்கள். அருச்சுனன் ஜீவாத்மா; ஸ்ரீகிருஷ்ணன் பரமாத்மா.
"இந்த ரஹஸ்யம் அறியாதவருக்குப் பகவத் கீதை ஒருபோதும் அர்த்தமாகாது." (ப. 17).
இங்கே இப்படிப் பேசுகிற பாரதி பின்னோரிடத்தில் பகவத் கீதை துறவு நூலன்று என்று வலியுறுத்தும் வகையில் ஒரு விளக்கம் சொல்கிறான்:
"...கீதையைக் கேட்டவனும் ஸந்நியாசியல்லன்; சொன்னவனும் ஸந்நியாசியல்லன். இருவரும் பூமியாளும் மன்னர்; குடும்ப வாழ்விலிருந்தோர். 'ஆஹா! அஃதெப்படிச் சொல்லலாம்? அருச்சுனன் ஜீவாத்மா வென்றும் கண்ணன் பரமாத்மா வென்றும் மேலே கூறிவிட்டு, இங்கு அவர்களை உலகத்து மன்னர்களாக விவரிப்பதற்கு நியாயமென்னே?' எனில்-வேண்டா; அதனை விட்டுவிடுக." (பக். 25-26).
அதனை விட்டுவிடுவோம். கீதை கொலை நூலன்று என்பதற்குப் பாரதி மற்றொரு வழக்குரையையும் முன்வைக்கிறான்:
"ஹிந்துக்களாலே ஹிந்து தர்மத்தின் மூன்று ஆதார நிதிகளாகக் கருதப்படும் ப்ரஸ்தானத் த்ரயங்களாகிய உபநிஷத், பகவத் கீதை, வேதாந்த ஸூத்ரம்-என்பவற்றுள் கீதை இரண்டாவதென்பதை இந்தச் சில மூடர் மறந்துவிடுகின்றனர். இதற்கு-அதாவது, பகவத் கீதைக்கு-சங்கரர், ராமானுஜாசார்யர், மத்வாசார்யர் என்ற மூன்று மத ஸ்தாபகாசார்யரும் வ்யாக்யானமெழுதி, இதனை ஹிந்து தர்மத்தின் ஆதாரக் கற்களில் ஒன்றாக நாட்டியிருக்கிறார்கள் என்பதை இந்த மூடர் அறிகிலர். கொலைக்குத் தூண்டும் நூலொன்றுக்குச் சங்கராசார்யர் பாஷ்யம் எழுதுவதென்றால், அஃது எத்தனை விநோதமாக இருக்குமென்பதைக் கருதி தம்மைத் தாமே நகைக்குந் திறமையிலர்.
"கொலை எவ்வளவு தூரம்! பகவத்பாத சங்கராசார்யார் எவ்வளவு தூரம்!" (ப. 20)
பாரதியின் இந்த வழக்குரை மிகவும் பொக்கையாக இருக்கிறது. சங்கராச்சாரியாருக்கும் கொலைக்கும் எவ்வளவு தூரம் என்பது ஒருபக்கமிருக்கட்டும். கொலையை நியாயப்படுத்துகிற ஒரு நூலைப் பகவான் சிறீகிருட்டிணன் உபதேசிப்பான் என்றால், அந்த நூல் காலங்காலமாக நியாயப்படுத்தப்பட்டு, இந்து தருமத்தின் மூன்று ஆதார நூல்களில் ஒன்றாக வைக்கப்படும் என்றால், அதற்குச் சங்கராச்சாரியார் உரை எழுதுவதில் என்ன தடை? சங்கராச்சாரியார் உரை எழுதியதனாலேயே இது கொலை நூலாகாமற் போய்விடும் என்று எப்படிச் சொல்வது?
இந்து தருமத்தின் மூன்று ஆதார நூல்களில் இரண்டாவது கீதை; ஆகையினால் அது கொலை நூலாக இருக்க முடியாது என்ற வழக்குரையிலும் உள்ளீடில்லை. அளவையியலில் 'வட்டத்திற்குள் வழக்குரைத்தல்' என்றொரு குறைபாட்டைச் சுட்டிக் காட்டுகிறார்கள். கடவுள் இருக்கிறாரா என்றால், இருக்கிறார். எவ்வாறென்றால், வேதத்தில் கடவுள் இருப்பதாகச் சொல்லப்பட்டிருப்பதால். வேதம் உண்மையா என்றால், உண்மைதான். எவ்வாறென்றால், அது கடவுளின் வாக்கு என்பதால். கடவுளால் சொல்லப்பட்டதால் வேதம் உண்மை. வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதால் கடவுள் உண்மை. அதைப் போன்றதுதான் 'இந்து தருமத்தின் மூன்று ஆதார நூல்களில் இரண்டாவதாகக் கீதை இருப்பதால் அது கொலை நூலாக இருக்க முடியாது' என்பதும்.
கொல்லாமை, கொல்லாமை என்று ஒரு பக்கத்தில் பேசுகிற கீதை அருச்சுனனைப் போருக்குத் தூண்டியதன் மூலம் கொலையையே நியாயப்படுத்தியது.
"எந்த ஜந்துவுக்கும் ஹிம்ஸை செய்வோர் உண்மையான பக்தராக மாட்டார். எந்த ஜீவனையும் பகைப்போர் கடவுளின் மெய்த் தொண்டர் ஆகார். ... மூட்டுப் பூச்சிகளையும் பேன்களையும் கொல்வோர் தெய்வவதை செய்வோரேயாவர்" என்று பாரதி தன் முன்னுரையில் சொல்கிறான் (ப. 24).
பகவத் கீதையும் இதைப் பேசுகிறது. ஆனாலும் அது போகிற போக்குக்குப் பேசிய துணைப் பேச்சுத்தானேயன்றி அதுவே நூலின் மையமன்று.
"அர்ச்சுனா, நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி வருந்துகின்றாயா? அல்லது அவர்களின் உடலைப் பற்றி வருந்துகின்றாயா? இரண்டும் சரியல்ல. ஆன்மா என்றும் அழிவற்றது. அதைக் கத்தியால் வெட்டவும் தீயினால் எரிக்கவும் முடியாது. உடலோ அழியும் இயல்பு வாய்ந்தது. நீ அழிக்காவிடினும் அது தானே அழியவேண்டியதுதான். ஆன்மாவுக்கு ஓருடல் அழிந்ததும், மற்றோருடல் தானே வந்து சேரும். ஆத்மாவின் இயற்கையை எண்ணி உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீர வேண்டும். அச்செயல்களைச் செய்யுங்கால் நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறோம், அதுவும் ஈச்வரப் பிரீதிக்காகவே என்று எண்ணிச் செய். இதனால் ஆத்மஞானம் பெருகி அதில் நிலைபெற்று நற்கதியடைவாய். ..." என்று கண்ணன் அருச்சுனனுக்குச் சொன்னதாக இரண்டாம் அத்தியாயமான "ஸாங்க்ய யோகத்துக்கு" பாரதி முன்னுரை எழுதுகிறான் (ப. 46). 'உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீர வேண்டும்' என்று கொலைக்கு ஊற்றமாகிற போர்த் தொழிலையே கிருட்டிணன் சுட்டுகிறான்.
உடற் கழுதனையோ உயிர்க் கழுதனையோஉடற் கழுதனையேல் உன்மகன் றன்னைஎடுத்துப் புறங்காட்டிட்டனர் யாரேஉயிர்க் கழுதனையேல் உயிர்புகும் புக்கில்செயப்பாட்டு வினையால் தெரிந்துணர் வரியதுஅவ்வுயிர்க் கன்பினை யாயின் ஆய்தொடிஎவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும்
என்று மணிமேகலை, மகன் உதயகுமரனை இழந்து வருந்திய அரசமாதேவிக்குப் பேசியபோதும் உடலின் நிலையாமையும் உயிரின் நிலைமையும்தான் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்தக் கருதுகோள் மணிமேகலையில் அன்பிற்குத் தூண்டலாகிறது. பகவத் கீதையில் கொலைக்குத் தூண்டலாகிறது.
ஆன்மாவுக்குச் சாவில்லை. உடல் என்பது ஆன்மாவுக்குச் சட்டை. ஒரு சட்டை கிழிந்துபோனால் வேறொரு சட்டை அதற்குக் கிடைக்கும். ஆகையினால் இந்தச் சட்டையைக் கிழிப்பதைப் பற்றி நீ வருத்தப்பட வேண்டாம். எல்லாம் சரி. ஆனால் ஆன்மாவுக்கு வாய்த்திருக்கிற சட்டையைக் கிழித்தெறிந்து அது வேறொரு சட்டையைப் பெறும் வலுக்கட்டாயத்தை அதன்மேல் திணிப்பானேன்? ஒரு சட்டை கிழிந்துபோனால் வேறு சட்டை கிடைத்தே தீரும் என்ற நிலையில் இருக்கிற சட்டையை அழிப்பதில் பொருள் என்ன? அது எந்த நோக்கத்தை நிறைவேற்றப்போகிறது? வேறொரு சட்டையைத் தைத்துக்கொடுக்கிற பொறுப்பும் கடவுளுடையதேயல்லவா? அது வெட்டி வேலையேயல்லவா? இந்த வெட்டிவேலைக்குப் பகவான் கிருட்டிணன் அருச்சுனனைத் தூண்டுவது ஏன்? அவனுக்கு இதில் என்ன அக்கறை? கொலை "ஈச்வரனுக்கு" அத்தனை பிரீதியானதா? இவையெல்லாம் கடவுளின் இலீலைகள் என்றால் கடவுளுக்கு வேறு வேலையே இல்லையா?
கொல்வதால் பிழைகள் நேர்படுமா? இருத்துவதால் அல்லவோ நேர்படும்! இருந்துணரலாம்; இறந்துணர முடியுமோ?
"... ஆதலால் பார்த்தா, போர் செய்.
"இவன் கொல்வானென்று நினைப்போனும், கொல்லப்படு வானென்று நினைப்போனும்-இருவரும் அறியாதார். இவன் கொல்வதுமில்லை, கொலையுண்பதுமில்லை.
"இவன் பிறப்பதுமில்லை; எக்காலத்திலும் இறப்பதுமில்லை. ... இவன் பிறப்பற்றான்; அனவரதன், இவன் சாசுவதன்; பழையோன்; உடம்பு கொல்லப் படுகையில் இவன் கொல்லப்படான்." (கீதை, 2:18-20).
இந்த நியாயப்பாட்டின் அடிப்படையில் கொலை பாவமன்று என்ற முடிவுக்கே நாம் வந்துசேர வேண்டியிருக்கிறது. கீதையைக் கொலை நூல் என்று சொன்னால் அதில் பிழையென்ன?
"... நீ இந்தத் தர்ம யுத்தத்தை நடத்தாமல் விடுவாயானால், அதனால் ஸ்வதர்மத்தையும் கீர்த்தியையும் கொன்று பாவத்தை யடைவாய்.
"உலகத்தார் உனக்கு மாறாத வசையுமுரைப்பார்கள். புகழ் கொண்டோ ன் பின்னரெய்தும் அபகீர்த்தி மரணத்திலும் கொடிதன்றோ?" (கீதை, 2:33-34).
"யாரொடும் பகை கொள்ளலன் என்றபின் போரொடுங்கும் புகழொடுங்காது" என்பதை அறியாதவனல்லன் பாரதி.
பாரதியின் முன்னிருந்த தேவை போருக்கு முடுக்குவதேயன்றிப் போரை ஒடுக்குவதன்று. ஆகையால் அவன் பகவத் கீதையைச் சரணடைந்தான். பாரதியைக் குற்றம் சொல்ல முடியாது.

Monday 28 May, 2007

தமிழ்ப் பணி? 2

மாங்க பின்ன எப்படி தாங்க தமிழ்ப் பணி செய்வது? நம்ம இசை ஞானி இளையராஜா செய்வது போல் தமிழ்ப் பணி செய்யவேண்டும். இன்னாங்க அது அவர் திரைப்படத்திற்கு இசை தானே போடுறதா சொன்னாங்க, தமிழ்ப் பணியெல்லாம் எப்படின்னு? தானே பார்க்கின்றீர்கள். சொல்லிட்டாப் போச்சி.
சுத்தி சுத்தி தமிழ், தமிழன் என்றாலே அடுத்து வருவது பெரியார் அவர்கள் தான் இல்லையா? அதையும் விட தமிழ் எழுத்துச்சீர்மை என்று சொல்லே 1935 ஆம் ஆண்டு பெரியார் மும்மொழிந்ததிலிருந்து துவங்குகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதாவது "லை" என்பதை முன்பு "ல" என்ற எழுத்துடன் ஒரு கொம்பை சேர்த்து எழுதும் வழக்கத்தை மாற்றி இப்போதுள்ள "லை"யை நமக்களித்தவர் பெரியார். ஆனால் பிராமண்ய ஆதிக்க சக்திகள் அதை ஏற்காமல் இருந்ததற்கு நிறையவே எடுத்துக்காட்டுகள் உள்ளன. உதாரணத்திற்கு கெ.பாலச்சந்தர் எடுத்த வானமே எல்லை படத்தின் பெயரை அவர் பழைய கொம்பு போட்ட "லை" யுடன் எழுதி தன்னுடைய பெரியாரிய எதிர்ப்பை தெரிவித்திருப்பார். பாலச்சந்தர் அவருடைய இன ஒற்றுமையை எப்படி காண்பிக்கிறார் என்று பாசிட்டிவ்வாக எடுத்துக்க கொள்ளலாம். துக்ளக்கும் அப்படியே.
ம்முடைய இளயராஜாவோ தன் தமிழின உணர்வை காண்பிக்க என்ன செய்திருக்கவேண்டும். மாபெரும் பாக்கியமாக கருதி பெரியாரின் திரைப்படத்திற்கு இசையமைத்து இருக்கவேண்டும். அனால் அப்படி சேய்யாதது மட்டுமல்லாமல் அதற்கு அவர் சொன்ன காரணம் "என் ஆன்மீகக் கொள்கைகளுக்கு முரணானது பெரியாரின் நாத்திகவாதம். எனவே என்னால் இசையமைக்க முடியாது" என்று திருவாய் மொழிந்தார். அதாவது இளையராஜவுக்கு, பெரியார் என்றால் ஒரு நாத்திகவாதி, ஒரு கடவுள் மறுப்பாளர் என்று மட்டுமெ தெரிந்திக்கிறது என்றால் இளையராஜவின் சமூகப் பார்வையில் உள்ள ஊனத்தின் அளவை நீங்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம்.
ளையராஜாவின் மகள் தமிழ் சினிமா பாடலகள் பாடும் போது அப்பாடல் வரிகளை ஆங்கிலத்தில் எழுதிவைத்து தான் பாடுவார் என்று தெரிந்தும் அதைப்பற்றி யாராவது கேட்டோமா? அல்லது இளையராஜாவின் பால்ய நண்பர் , "என் இனிய தமிழ் மக்களே"ன்னு வழிவாரே, அவரது ஒரே மகன், தமிழகத்தில் நடந்த ஒரு மாபெரும் மேடை நிகழ்ச்சியின் போது கலைஞருக்கு முன்னாலேயே தன்னால் தமிழில் பேச முடியாது என்று சொல்லி, அதே இனிய தமிழ் மக்களின் மூகத்தில் கரியை பூசியதைப் பற்றி இப்பொது பேசப் போவதுமில்லை.
னால் வைகைக் கரை மணலில் உட்கார்ந்து பாடப்பட்ட மாணிக்க வாசகரின் திருவாசாகத்தை இசைவடிவம் கொடுத்த இளையராஜாவுக்கு ஏன் தமிழ்நாட்டில் ஒரு இசைக் கலஞன் கூட கிடைக்கவில்லை. இத்துணை ஆண்டுகளுக்கு கழிந்த பிறகும் ஒரு தமிழன் பாடிய பாட்டிற்கான இவரின் சிம்பொனி இசையை வாசிக்க தமிழ் வாத்தியக் கலஞர்கள் கிடைக்காத போன ரகசியம் என்னவோ?
ன்றைக்கு தமிழன் தலைநிமிர்ந்து நிற்பதற்கு காரணமான சிலரில், மிக மிக்கியமான தலைவராகிய பெரியாரின் படத்திற்கு இளையராஜாவால் இசையமைக்க முடியாவிட்டால், பின் எப்போது தமிழுக்கு தொண்டு செய்யப் போகிறார். எவ்வளவு முறை முயன்றும் அவரது சாதியின் காரணத்தால் சங்கரமடத்தின் உள்ளே விடாமலும், தமிழை "நீச பாஷை" என்று கூறி, ஒவ்வோரு முறையும் தமிழ் பேசிய பின்பும் , நீரில் குளித்து தீட்டை போக்கிக் கொள்ளும் சங்கராச்சாரி பேசும் ஸ்ம்கிருதம் தான் இளையராஜாவின் தாய்மொழியோ ?
நாலு காசு சேர்ந்து விட்டாலோ, நாலு எழுத்து படித்து விட்டாலோ தமிழர்காளாகிய நாம், முதலில் செய்வது நம்மை தமிழர்களாக இனம் காட்டிக் கொள்ளாமல் இருப்பது. தமிழில் பேசுவதையே கேவலமாக எண்ணுவது. அதுவும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் எதோ தாங்கள் வெள்ளைக் காரனுக்கே பிறந்தது போல் நினைத்துக் கொண்டு நடப்பது. சரி அது போகட்டும்.
மஸ்கிருத வல்லுனராகவும் சென்னை மாகாண முதல்வாராகவும் இருந்த பனகல் அரசர் என்ன செய்தார் என்று நம்ம இளையராஜாவுக்கு சொல்வோமா? சுமார் எண்பது வருடத்திற்கு முன்னால் சென்னை மாகாணத்தில் நிலவிய ஒரு சட்டத்தை திருத்தம் செய்ததாலேயே அவரது பெயர் காலத்தை வென்று நிற்கிறது. அப்படி என்னாங்க ஒரு சட்டம்? ஆமாங்க அப்படி ஒரு சட்டம் அது. அதாவது எண்பது வருடத்திற்கு முன்னால் மருத்துவக் கல்லூரியில் நீங்கள் சேரவேண்டும் என்றால், இப்பொது போலவே நுழைவுத்தேற்வு எழுதித்தான் சேரவேண்டும் . யோவ் அதுல உனக்கு இன்னாய்யா பிரெச்சனை தானே கேட்குறீங்க ? அதுல தாங்க பிரெச்சனையே. நுழைவுத்தேர்வுல ஒரு பாடம் சம்ஸ்கிருதம். அதுலேயும் பாஸ் பண்ணாத்தான் மருத்துவம் படிக்கலாம். அப்ப எவனெவன் மருத்துவம் படிச்சிருப்பான்னு யோசிக்க முடியுதுங்களா ?
தை கவனிச்ச பனகல் அரசர், ஒரு சின்ன சட்ட திருத்தம் கொண்டுவந்தார். வச்சாரு பாருங்க சம்ஸ்கிருதத்திற்கு ஒரு ஆப்பு. நுழைவுத் தேர்வுலேர்ந்து சம்ஸ்கிருதத்தை நீக்கினார். அப்போதிலிருந்து தான் தமிழகத்தில் தமிழன் கல்லூரியில் மருத்துவம் படிக்க ஆரம்பித்தான். பனகல் அரசர் அன்னறைக்கு யோசிக்காமல் காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடத்தின் எச்சிலையை இளையராஜாவைப் போல் நக்கிக்கொண்டு இருந்திருந்தால் என்னவாகியிருக்கும் தமிழனின் நிலை? அதோகதிதான். அர்ச்சனை தட்டு வாங்கினாத்தான் ஆப்ரேஷன்னு சொல்லியிருப்பானுங்க. இல்லன்னா காயாத்ரி மந்திரத்தை கண்ணைமூடிகிட்டு சொன்னால் தான் கண்ணாப்பிரேஷன்னு சொன்னாலும் சொல்லியிருப்பானுங்க.
தொண்டுன்னா, இப்படி செய்யுனும் தமிழுக்கு தொண்டு, தமிழன் தலைநிமிர்ந்து நிக்கிற மாதிரி. வேடந்தாங்கலுக்கு தண்ணியைத் தேடிவரும் வெளிநாட்டுப் பறைவகள் போல வெளிநாடுகளுக்கு தண்ணி தேடி வரும் அரசியல்வாதிகளுக்கும் விஐபிக்களுக்கும் வேடந்தாங்கலாக இருப்பது இல்லை தமிழ்த்தொண்டு.
ன்றைக்காவது ஒரு நாள் இளையராஜா தமிழுக்கு திரும்பக் கிடைப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
ஞ்சாவூர்ல பார்பனர்களின் பூநூலை அறுத்ததிற்கே மூக்கை சிந்தின எங்க "பட்டிமன்ற நட்டுவாங்க மேதை"க்கு இந்த பனகல் அரசர் போட்ட சட்டம் தெரிஞ்சவுடனே பார்பனர்களின் பொழப்பிலேயே மண்ணைப் போட்டுடாங்களேன்னு, ஓஓன்னு அழப்போறாரு பாருங்க...ஹி ஹி
டுபாகூர் தமிழ்ப் பணி தொடரும்...