இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Thursday 31 May, 2007

மஹாகவி பாரதி பக்திமானா பகுத்தறிவாதியா?

திரும்பத் திரும்ப தமிழ்க்குள்ளேயே , அதாவது குண்ட சட்டிக் குள்ளயே குதிரை ஓட்டிக்கிட்டு இருப்பதை விட கொஞ்சம் மற்ற விஷ்யங்களையும் பார்ப்போங்களா? ஏன்னா அப்புறம் நம்ம ஜெயகாந்தன் வந்து திடீர்ன்னு, பிரான்ஸ்ல இருக்கற தமிழனும், தன்னைத் தானே நக்கிக்கொள்ற "பிரெஞ்சி நாயிங்க" சொல்லிட போறாரு. என்ன நான் சொன்றது? அது எப்பங்க அப்படி சொன்னாருன்னு? விவரம் தெறிஞ்சவங்க கேட்கமாட்டீங்கன்னு தெரியும். ஆனா இங்க இருக்கிற சில ஜாம்பாவான்களுக்கு அவரைத் தெரியுமாங்கறது கொஞ்சம் சந்தேகம் தான். அதுலேயும் அவருக்கு ஞானபீட விருது கொடுத்ததெல்லாம் தெரியுமாங்கிரதெல்லாம் சந்தேகமே. சரி அது போகட்டும். வீண் வம்பு நமக்கதெக்கு.
நம்ம மஹாகவி பாரதியார் தமிழ்ல பாண்டியத்தையம் பெறுவதற்கு முன்னாலேயே சம்ஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றவர் என்பது அனேகம் பேருக்கு தெரியும். அதிலும் பகவத்கீதையை பக்குவமாய் பருகியவன். ஆனால் அதே நேரத்தில் பகுத்தறிவாதத்தினையும் அவன் விடவில்லை என்பதற்கு கீழ்காணும் வரிகளே சாட்சி.

"செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்

சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பார்

பித்தமனிதர் அவர்சொலுஞ்சாத்திரம்

பேயுரை யாமென்றிங்கூதேடாசங்கம்"

சரி அத்வைதியான பாரதி பகவத்கீதைக்கு தான் எழுதிய முன்னுரையிலேயே எப்படியெல்லாம் முரண் பட்டிருக்கின்றான் என்பதை அலசிய கரு. ஆறுமுகத்தமிழன் அவர்களின் சுவாரசியமான விவாதங்களை பார்ப்போம் :

பாரதி அடிப்படையில் ஓர் அத்துவைதி; ஒருமைக் கொள்கையாளன். ஆனால் அத்துவைதத்தின் கொடுமுடியான மாயைக் கொள்கையை அவன் மறுதலிக்கிறான். மாயையைப் பாரதி மறுதலிப்பது அவனுடைய புற உலக நாட்டத்தை, வேத நெறியில் திளைக்கிற அவன்மேல் அவனை உருவாக்கிய தமிழ் நெறி செலுத்திய ஆளுமையை, அவனது மெய்யான பற்றுறுதிகளை, அவற்றை வெளிப்படையாக முன்வைக்கிற அவனுடைய நேர்மையைக் காட்டுகிறது. ஒரு சார்பில் வைதிகனாகவும் மறு சார்பில் அவைதிகனாகவும், ஒரு சார்பில் அகநிலையாளனாகவும் மறு சார்பில் புறநிலையாளனாகவும் இருக்க விரும்புகிறான் பாரதி. இந்த ஈரொட்டு நிலைதான் அவனுடைய வழக்குரைகளில் முரண்களை உண்டாக்குகிறது. அத்துவைதம் பேச விருப்பமென்றால் அதை மாயையோடுதான் பேசியாக வேண்டும். மாயையைப் பேச விருப்பமில்லை என்றால் அத்துவைதம் பேசக் கூடாது. பிரம்மம் முகமென்றால் மாயை முதுகு. 'முகத்தை மட்டும் கொள்கிறேன், முதுகு வேண்டாம்' என்று தள்ளுபடி செய்ய அத்துவைதம் இடம் கொடுக்காது. அத்துவைதம் கலப்படக் கொள்கைகள் செய்வதற்கு ஒத்துவராத விலாங்கு மீன்.
பகவத் கீதைக்கு எழுதிய முன்னுரையில் கீதை போதிக்கிற விடயங்கள் என்று சிலவற்றைப் பாரதி வெளிச்சமிட்டுக் காட்டுகிறான். அவற்றில் ஒன்று புத்தியிலே சார்புடையவனாக இருக்கச் சொல்கிறது கீதை என்பது.
"புத்தியிலே சார்பு எய்தியவன் இங்கு நற்செய்கை, தீச்செய்கை இரண்டையுந் துறந்துவிடுகின்றான். ஆதலால் யோக நெறியிலே பொருந்துக. யோகம் செயல்களிலே திறமையாவது. (கீதை, 2:50)
இஃதே கீதையில் பகவான் செய்யும் உபதேசத்துக்கெல்லாம் அடிப்படையாம்." (ப. 3)
அப்படித்தான் சொல்கிறது கீதை.
"தன்னிலே தான் இன்புறுவான் தன்னிலே தான் திருப்தியடைவான். தன்னிலே தான் மகிழ்ந்திருப்பான். அவனுக்குத் தொழிலில்லை.
"அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை. செயலின்றியிருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை. எவ்விதப் பயனையும் கருதி அவன் எந்த உயிரையும் சார்ந்து நிற்பதில்லை." (கீதை, 3:17-18).
கீதை இப்படியும் சொல்கிறது:
"சாஸ்திர விதியை மீறி, விருப்பத்தால் தொழில் புரிவோன் ஸித்தி பெறான்; அவன் இன்பமெய்தான்; பரகதியடையான்.
"ஆதலால், எது செய்யத் தக்கது, எது செய்யத் தகாதது என்று நிச்சயிப்பதில் நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள். அதையறிந்து சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலைச் செய்யக் கடவாய்." (கீதை, 16:23-24)
மேலும் சொல்கிறது:
"உன் மனத்தை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்வி செய்க. என்னையே வணங்குக. என்னை யெய்துவாய். உண்மை இஃதே; உனக்கிது சபதமுரைக்கிறேன். நீ எனக்கினியை.
"எல்லா அறங்களையும் விட்டுவிட்டு என்னையே சரண்புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன், துயரப்படாதே." (கீதை, 18:65-66)
கீதையின் இந்த முரண்பாடு பாரதியின் முன்னுரையில் எதிரொலிக்கிறது. புத்தியிலே சார்பு கொள்ளுதலை யோகமென எடுத்துச் சொன்ன பாரதி மற்றோரிடத்தில் பேசுகிறான்:
"கடவுளிடம் தீராத நம்பிக்கையைச் செலுத்த வேண்டும். கடவுள் நம்மை உலகமாகச் சூழ்ந்து நிற்கிறான். நாமாகவும் அவனே விளங்குகிறான். வாயிலாலேனும் புறவாயிலாலேனும் நமக்கு எவ்வகைத் துயரமும் விளைக்க மாட்டான். ஏன்? நாம் எல்லா வாயில்களாலும் அவனைச் சரண்புகுந்துவிட்டோ மாதலின்.
"அவனன்றி யோரணுவு மசையாது. அவன் நமக்குத் தீங்கு செய்ய மாட்டான்... ஏன்? நாம் அவனை முழுதும் நம்பிவிட்டோ மாதலின். ...
"அவனை நம்பினார் செய்யத் தக்கது யாது? ... எதனிலும் ஐயுறவு பூணாதிருத்தல்.
" 'ஸம்சயாத்மா விநச்யதி' - ஐயமுடையோன் அழிவான். நம்பினவன் மோக்ஷமடைவான்." (பக். 15-16)
இப்போது நமக்கெழுகிற ஐயம்: புத்தியிலே சார்பு கொள்வதா? "சாஸ்திர"த்தில் சார்பு கொள்வதா? கடவுளிடத்தில் சார்பு கொள்வதா? மூன்றில் எதன் ஒன்றின் மீதும் சார்பு கொள்ளச் சொல்வதும் வழக்குரைக்குப் பிழையில்லை. ஆனால் ஒவ்வோரிடத்திலும் ஒவ்வொன்றின் மீது சார்பு கொள்ளச் சொல்வது?
ஐயமுடையோன் அழிவான் என்பது சரி. 'ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் வானம் நணிய துடைத்து' என்பது உள்ளதுதான். ஆனால் எதன்மேல் ஐயமுடையவன் அழிவான்? புத்தியின் மேலா? சாஸ்திரத்தின் மேலா? கடவுளின் மேலா? ஐயம் என்பதே அறிவின் தொடக்கமன்றோ! ஐயத்தில் தொடங்குகிறவனை முதலிலேயே அச்சுறுத்திவிட்டால் அவன் தொடர்வானோ! ஐயத்தில் தொடங்குவதும் பிறகு அது நீங்கித் தெளிவதும் தானே முறை! மேலும் செய்கையினாலும் செயலின்மையினாலும் எந்தப் பயனுமில்லாதவன் எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்தான் என்ன? சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொண்டு சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலைச் செய்யக் கடவாய் என்று அவனை கடப்படுத்துவது ஏன்?
ஓரிடத்தில் அனைத்திறைக் கொள்கை (pantheism) பேசுகிறான் பாரதி. அதுவே வேதத்தின் கொள்கை என்றும் அதை விளக்கும் பொருட்டே பகவத் கீதை செய்யப்பட்டது என்றும் பேசுகிறான்.
" 'ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்' என்பது ஸநாதன தர்மத்தின் ஸித்தாந்தம். எல்லாம் கடவுள்மயம். ... [ஆதலால், எல்லாம் ஒன்றுக்கொன்று ஸமானம்.] ...
"நக்ஷத்ரங்களெல்லாம் கடவுள் வலியால் சுழல்கின்றன. திரிலோகங்களும் அவனுடைய சக்ரத்தில் ஆடுகின்றன. நீ அவன்; உன் மனம் உன் மனத்தின் நினைப்புகள் எல்லாம் அவனே. ... அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பையெல்லாம் தொப்பென்று கீழே போட்டுவிட்டு ஸந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்துகொண்டிரு. எது எப்படியானால் உனக்கென்ன? ... உலகத்தை, மானுடா, நீயா படைத்தாய்? நீயா நடத்துகிறாய்? உன்னைக் கேட்டா நக்ஷத்ரங்கள் நடக்கின்றன? உன்னைக் கேட்டா நீ பிறந்தாய்? எந்த விஷயத்துக்கும் நீ ஏன் பொறுப்பை வஹித்துக்கொள்கிறாய்?
" ... எல்லாச் செயல்களையும் கடவுளுக்கென்று ஸமர்ப்பித்துவிட்டுப் பற்றுதல் நீக்கி எவன் தொழில் செய்கிறானோ அவனைப் பாவம் தீண்டுவதில்லை. தாமரையிலைமீது நீர் போலே (கீதை, 5:10).
"சால நல்ல செய்தி யன்றோ, மானுடர்காள், இஃது உங்களுக்கு? பாவத்தைச் செய்யாமலிருக்க வழி தெரியாமல் தவிக்கும் மானுடரே, உங்களுக்கு இந்த சுலோகத்தில் நல்வழி காட்டியிருக்கிறான் கடவுள். ஈசனைக் கருதி, அவன் செயலென்றும், அவன் பொருட்டாகச் செய்யப்படுவதென்றும் நன்கு தெளிவெய்தி, நீங்கள் எத்தொழிலைச் செய்யப் புகுந்தாலும், அதில் பாவம் ஒட்டாது." (பக். 6-9)
எல்லாமே கடவுள் மயம் என்று பாரதி அனைத்திறைக் கொள்கை பேசுவதில் ஒரு நியாயம் உண்டு. எல்லாமே கடவுள்மயம் என்றால் பின் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவேது! பார்ப்பான் என்றும் பறையன் என்றும் வேறுபாடு ஏது! பாரதியின் உள்மன விருப்பம் அதுதான். அது நல்லது. ஆனால் பகவத் கீதை அத்தகைய நிலைபாட்டுக்கு உகந்த நூல்தானா? அருச்சுனன் தன்னுடைய துயரப்பாட்டை வெளிப்படுத்தத் தொடங்கும்போதே, "இந்தப் போரினால் வருண தருமம் குலைந்து போய்விடுமே" என்ற வருத்தத்துடன்தான் தொடங்குகிறான். அதற்கு விடை சொல்ல முனைகிற வாசுதேவ கிருட்டிணன், "சாத்திரத்தில் உனக்கு விதிக்கப்பட்டிருக்கும் தொழிலை நீ செய்ய வேண்டுவது உன் கடன். நீ சத்திரியன்; போர்த் தொழில் செய்யவே விதிக்கப்பட்டிருக்கிறாய். எழுந்து நில். போர் செய்" என்று வருண தருமத்தைக் காப்பாற்றவே போர் செய்யச் சொல்கிறான்.
மேலும் கிருட்டிணக் கடவுள் அவனே சொல்வதுபோலத் தனக்கு இனியவர்களுக்கும் தன்னைச் சரண் புகுந்தவர்களுக்குமே இனியவன். இது பத்தி இயக்கத்தின் பொதுத் தன்மை. சிவன்கூட நச்சினார்க்குத்தான் இனியவன். மற்றையோர்க்கு இவர்கள் வெய்யவர்கள். அப்படியானால் எல்லாமே கடவுள்மயம் என்பதும் எல்லாரும் சமானமானவர்கள் என்பதும் எப்படிச் சரி?
அது ஒருபுறம் கிடக்கட்டும். "சால நல்ல செய்தியன்றோ, மானுடர்காள், இஃது உங்களுக்கு?" என்று பாரதி விதந்தோதும் அளவுக்கு இதில் பேசப்படுகிற நல்ல செய்தி என்ன? "என் செயலாவதொன்றிலை, இனித் தெய்வமே உன் செயலே என்று உணரப் பெற்றேன்" என்று கருதிக்கொண்டு எதைச் செய்தாலும் அதன் நன்மையோ தீமையோ நம்மை ஒட்டாது என்பது நல்ல செய்திதானா? இது நல்ல செய்திதான் என்றால் இதைத் தற்கால வாழ்விற்கும் பொருத்திப் பார்க்க வேண்டாமா!
தேர்தல் நடக்கிறது. தன் கட்சியை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்பது ஒவ்வொரு கட்சியைச் சார்ந்த தொண்டனுக்கும் தருமம். "சாஸ்திர விரோதமான செயலை ஒருவன் செய்யக் கூடாது" என்பதைப் போலக் கட்சி விரோதமான செயலைத் தொண்டன் செய்யக் கூடாது. தன் கட்சியை மக்கள் வெல்லச் செய்வார்களா என்பதைக் கட்சியின் நடத்தையைப் பொறுத்துக் கணிக்க முடியாத சூழலில், தன் கட்சி வென்றேயாக வேண்டும் என்ற கட்டாய நிலையில், அவன் தான் போற்றுகிற தன் தலைவனின் மேல் பொறுப்பைப் போட்டுவிட்டுக் குடிபடையுடன் உட்புகுந்து கள்ள ஓட்டுப் போடுவதும் சால நல்ல செய்தியோ?
செயலுக்குச் செய்தவனைப் பொறுப்பாக்குவது என்பது அற நூல்களின் அடிப்படை. "நன்றே செய்வாய் பிழை செய்வாய், நானோ இதற்கு நாயகமே" என்பது ஆவியிலே தாழ்மையைக் குறிப்பது என்ற அளவில் நல்லதே தவிர அதையே விதியாகக் கொள்கிற அளவுக்கு நல்லதா?
எல்லாவற்றையும் இறைவனின் பொறுப்பில் வைத்துவிட்டுத் தான் பொறுப்பின்றி இருத்தல் என்பது புறச் சமயங்களான பௌத்தத்தையும் சமணத்தையும் வென்று அகச் சமயங்களான சைவத்தையும் வைணவத்தையும் நிலைநாட்டுவதற்காகச் செய்யப்பட்ட உத்தி. இது பாதை மாறிய ஆடுகளைப் பட்டிக்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்காகக் கொடுக்கப்பட்ட கையூட்டு.
"வினையே நமது கருக்குழி; உறற்பால ஊட்டா கழியா" என்று கெடுபிடியாகப் பேசியது பௌத்தம். "வினை உன்னுடையது அல்ல; கடவுளுடையது. உன் வழியாகக் கடவுளே அதைச் செய்கிறார். ஆகையால் ஆக வேண்டியவற்றை அவர் பார்த்துக் கொள்வார். உன்னுடைய செயல்களுக்கு உன்னைப் பொறுப்பாக்கும் பௌத்தத்திலிருந்து, உன்னுடைய செயல்களுக்குக் கடவுளே பொறுப்பேற்றுக்கொள்ளும் சமயத்திற்கு (சைவத்துக்கு அல்லது வைணவத்துக்கு; பகவத் கீதையின் விடயத்தில் சைவமோ வைணவமோ அல்லாமல் வேத மதத்துக்கு) மீட்சி பெறு" என்று நீக்குப்போக்காகப் பேசியது பத்தி இயக்கம். அவ்வளவுதான் வேறுபாடு. கையூட்டாக முன்வைக்கப்பட்ட ஒரு சூழ்ச்சிக் கொள்கையைப் பாரதி பரிந்துரைப்பதைப் போலப் பொதுக் கொள்கையாக, சால நல்ல செய்தியாக ஏற்றமைய முடியுமா? ஏற்றால் சமூக ஒழுங்கு நிலைபெறுமா? அறிவின் அடிப்படையில் பார்த்தாலும் இது உயிருக்கோ இறைவனுக்கோ பெருமை தருவதாக அமையுமா?
பகவத் கீதையை 'அமிர்த சாஸ்த்ரம்' என்கிறான் பாரதி.
"சாகாதிருத்தல்; மண்மீது மாளாமல் மார்க்கண்டேயன்போல் வாழ்தல்; இதுவே கீதையின் ரஸம். அமரத்தன்மை; இஃதே வேத ரஹஸ்யம்.
"இந்த வழியைக் காட்டுவது பற்றியே வேதங்கள் இத்தனை மதிக்கப்படுகின்றன.
"இறந்துபோன ஜீவன் முக்தர்கள் யாவரும் ஜீவன் முக்தியை எய்திய பின் அந்த நிலையினின்றும் வழுவியவர்களாகவே கருதப்படுதல் வேண்டும். நித்திய ஜீவிகளாய் மண்மேல் அமரரைப்போல் வாழ்வாரே ஜீவன்முக்தராவர். அத்தகைய நிலையை இந்த உலகில் அடைதல் ஸாத்யமென்று ... இரண்டு சுலோகங்களிலே கடவுள் போதித்திருக்கிறார். இஃது ஸ்ரீகிருஷ்ணருடைய கொள்கை. இதுவே அவருடைய உபதேசத்தின் ஸாராம்சம். பகவத் கீதையின் நூற்பயன். எனவே பகவத் கீதை அமிர்த சாஸ்த்ரம்." (பக். 16-17)
சாகாதிருக்கும் மார்க்கண்டேயன் இப்போது எந்த ஊரில் இருக்கிறார் என்று தெரியவில்லை. சாகாதிருக்கத் தகும் தீரனாகக் கிருட்டிணனும் இல்லை. ஒரு கல்லா வேடனின் அம்பில் அடிபட்டுக் காலமானான்.
சாகாமையைப் போதிப்பதாகப் பாரதி மேற்கோள் காட்டும் இரண்டு சுலோகங்களை (கீதை, 2:14-15) அடுத்து அதே அத்தியாயத்தில் கீழ்வரும் சுலோகங்களும் இடம்பெறுகின்றன:
"ஆத்மா நித்யன்; அழிவற்றான்; அளவிடத் தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ..." (கீதை, 2:18).
"பிறந்தவன் சாவ துறுதியெனில், செத்தவன் பிறப்பதுறுதியெனில், இந்த விலக்கொணாச் செயலுக்கு நீ அழுங்குதல் தகுதியன்று" (கீதை, 2:17).
பகவத் கீதை பேசுகிற சாகாமையைப் பாரதி விளங்கிக்கொண்ட விதம் சரிதானா? "நித்திய ஜீவிகளாய் மண்மேல் அமரரைப்போல் வாழ்வாரே ஜீவன் முக்தராவர்" என்பது பாரதியின் கொள்கையேயன்றிப் பகவத் கீதையின் கொள்கையன்று. பாரதி இந்த "மரணமிலாப் பெருவாழ்வுக் கொள்கையில்" ஊக்குவிக்கப்பட்டதற்குக் காரணம் தமிழ்ச் சித்தர்களும் வள்ளலாருமேயன்றிச் சிறீகிருட்டிணன் அல்லன்.
பாரதி தொடர்ந்து பேசுகிறான்:
"... சாகாமலிருக்க வழி கற்றுக்கொடுக்கும் சாஸ்த்ரமாகிய பகவத் கீதையைச் சிலர் கொலை நூலாகப் பாவனை செய்கிறார்கள். துர்யோதனாதிகளைக் கொல்லும்படி அருச்சுனனைத் தூண்டுவதற்காகவே இந்தப் பதினெட்டு அத்தியாயமும் கண்ணபிரானால் கூறப்பட்டனவாதலால், இது கொலைக்குத் தூண்டுவதையே தனி நோக்கமாகவுடைய நூலென்று சிலர் பேசுகிறார்கள். கொலை செய்யச் சொல்ல வந்தவிடத்தே, இத்தனை வேதாந்தமும், இத்தனை ஸத்வ குணமும், இத்தனை துக்க நிவிர்த்தியும், இத்தனை சாகாதிருக்க வழியும் பேசப்படுவதென்னே என்பதை அச் சில மூடர் கருதுகின்றிலர்.
"துரியோதனாதியர் காமக் குரோதங்கள். அருச்சுனன் ஜீவாத்மா; ஸ்ரீகிருஷ்ணன் பரமாத்மா.
"இந்த ரஹஸ்யம் அறியாதவருக்குப் பகவத் கீதை ஒருபோதும் அர்த்தமாகாது." (ப. 17).
இங்கே இப்படிப் பேசுகிற பாரதி பின்னோரிடத்தில் பகவத் கீதை துறவு நூலன்று என்று வலியுறுத்தும் வகையில் ஒரு விளக்கம் சொல்கிறான்:
"...கீதையைக் கேட்டவனும் ஸந்நியாசியல்லன்; சொன்னவனும் ஸந்நியாசியல்லன். இருவரும் பூமியாளும் மன்னர்; குடும்ப வாழ்விலிருந்தோர். 'ஆஹா! அஃதெப்படிச் சொல்லலாம்? அருச்சுனன் ஜீவாத்மா வென்றும் கண்ணன் பரமாத்மா வென்றும் மேலே கூறிவிட்டு, இங்கு அவர்களை உலகத்து மன்னர்களாக விவரிப்பதற்கு நியாயமென்னே?' எனில்-வேண்டா; அதனை விட்டுவிடுக." (பக். 25-26).
அதனை விட்டுவிடுவோம். கீதை கொலை நூலன்று என்பதற்குப் பாரதி மற்றொரு வழக்குரையையும் முன்வைக்கிறான்:
"ஹிந்துக்களாலே ஹிந்து தர்மத்தின் மூன்று ஆதார நிதிகளாகக் கருதப்படும் ப்ரஸ்தானத் த்ரயங்களாகிய உபநிஷத், பகவத் கீதை, வேதாந்த ஸூத்ரம்-என்பவற்றுள் கீதை இரண்டாவதென்பதை இந்தச் சில மூடர் மறந்துவிடுகின்றனர். இதற்கு-அதாவது, பகவத் கீதைக்கு-சங்கரர், ராமானுஜாசார்யர், மத்வாசார்யர் என்ற மூன்று மத ஸ்தாபகாசார்யரும் வ்யாக்யானமெழுதி, இதனை ஹிந்து தர்மத்தின் ஆதாரக் கற்களில் ஒன்றாக நாட்டியிருக்கிறார்கள் என்பதை இந்த மூடர் அறிகிலர். கொலைக்குத் தூண்டும் நூலொன்றுக்குச் சங்கராசார்யர் பாஷ்யம் எழுதுவதென்றால், அஃது எத்தனை விநோதமாக இருக்குமென்பதைக் கருதி தம்மைத் தாமே நகைக்குந் திறமையிலர்.
"கொலை எவ்வளவு தூரம்! பகவத்பாத சங்கராசார்யார் எவ்வளவு தூரம்!" (ப. 20)
பாரதியின் இந்த வழக்குரை மிகவும் பொக்கையாக இருக்கிறது. சங்கராச்சாரியாருக்கும் கொலைக்கும் எவ்வளவு தூரம் என்பது ஒருபக்கமிருக்கட்டும். கொலையை நியாயப்படுத்துகிற ஒரு நூலைப் பகவான் சிறீகிருட்டிணன் உபதேசிப்பான் என்றால், அந்த நூல் காலங்காலமாக நியாயப்படுத்தப்பட்டு, இந்து தருமத்தின் மூன்று ஆதார நூல்களில் ஒன்றாக வைக்கப்படும் என்றால், அதற்குச் சங்கராச்சாரியார் உரை எழுதுவதில் என்ன தடை? சங்கராச்சாரியார் உரை எழுதியதனாலேயே இது கொலை நூலாகாமற் போய்விடும் என்று எப்படிச் சொல்வது?
இந்து தருமத்தின் மூன்று ஆதார நூல்களில் இரண்டாவது கீதை; ஆகையினால் அது கொலை நூலாக இருக்க முடியாது என்ற வழக்குரையிலும் உள்ளீடில்லை. அளவையியலில் 'வட்டத்திற்குள் வழக்குரைத்தல்' என்றொரு குறைபாட்டைச் சுட்டிக் காட்டுகிறார்கள். கடவுள் இருக்கிறாரா என்றால், இருக்கிறார். எவ்வாறென்றால், வேதத்தில் கடவுள் இருப்பதாகச் சொல்லப்பட்டிருப்பதால். வேதம் உண்மையா என்றால், உண்மைதான். எவ்வாறென்றால், அது கடவுளின் வாக்கு என்பதால். கடவுளால் சொல்லப்பட்டதால் வேதம் உண்மை. வேதத்தில் சொல்லப்பட்டிருப்பதால் கடவுள் உண்மை. அதைப் போன்றதுதான் 'இந்து தருமத்தின் மூன்று ஆதார நூல்களில் இரண்டாவதாகக் கீதை இருப்பதால் அது கொலை நூலாக இருக்க முடியாது' என்பதும்.
கொல்லாமை, கொல்லாமை என்று ஒரு பக்கத்தில் பேசுகிற கீதை அருச்சுனனைப் போருக்குத் தூண்டியதன் மூலம் கொலையையே நியாயப்படுத்தியது.
"எந்த ஜந்துவுக்கும் ஹிம்ஸை செய்வோர் உண்மையான பக்தராக மாட்டார். எந்த ஜீவனையும் பகைப்போர் கடவுளின் மெய்த் தொண்டர் ஆகார். ... மூட்டுப் பூச்சிகளையும் பேன்களையும் கொல்வோர் தெய்வவதை செய்வோரேயாவர்" என்று பாரதி தன் முன்னுரையில் சொல்கிறான் (ப. 24).
பகவத் கீதையும் இதைப் பேசுகிறது. ஆனாலும் அது போகிற போக்குக்குப் பேசிய துணைப் பேச்சுத்தானேயன்றி அதுவே நூலின் மையமன்று.
"அர்ச்சுனா, நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி வருந்துகின்றாயா? அல்லது அவர்களின் உடலைப் பற்றி வருந்துகின்றாயா? இரண்டும் சரியல்ல. ஆன்மா என்றும் அழிவற்றது. அதைக் கத்தியால் வெட்டவும் தீயினால் எரிக்கவும் முடியாது. உடலோ அழியும் இயல்பு வாய்ந்தது. நீ அழிக்காவிடினும் அது தானே அழியவேண்டியதுதான். ஆன்மாவுக்கு ஓருடல் அழிந்ததும், மற்றோருடல் தானே வந்து சேரும். ஆத்மாவின் இயற்கையை எண்ணி உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீர வேண்டும். அச்செயல்களைச் செய்யுங்கால் நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறோம், அதுவும் ஈச்வரப் பிரீதிக்காகவே என்று எண்ணிச் செய். இதனால் ஆத்மஞானம் பெருகி அதில் நிலைபெற்று நற்கதியடைவாய். ..." என்று கண்ணன் அருச்சுனனுக்குச் சொன்னதாக இரண்டாம் அத்தியாயமான "ஸாங்க்ய யோகத்துக்கு" பாரதி முன்னுரை எழுதுகிறான் (ப. 46). 'உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீர வேண்டும்' என்று கொலைக்கு ஊற்றமாகிற போர்த் தொழிலையே கிருட்டிணன் சுட்டுகிறான்.
உடற் கழுதனையோ உயிர்க் கழுதனையோஉடற் கழுதனையேல் உன்மகன் றன்னைஎடுத்துப் புறங்காட்டிட்டனர் யாரேஉயிர்க் கழுதனையேல் உயிர்புகும் புக்கில்செயப்பாட்டு வினையால் தெரிந்துணர் வரியதுஅவ்வுயிர்க் கன்பினை யாயின் ஆய்தொடிஎவ்வுயிர்க் காயினும் இரங்கல் வேண்டும்
என்று மணிமேகலை, மகன் உதயகுமரனை இழந்து வருந்திய அரசமாதேவிக்குப் பேசியபோதும் உடலின் நிலையாமையும் உயிரின் நிலைமையும்தான் வெளிப்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்தக் கருதுகோள் மணிமேகலையில் அன்பிற்குத் தூண்டலாகிறது. பகவத் கீதையில் கொலைக்குத் தூண்டலாகிறது.
ஆன்மாவுக்குச் சாவில்லை. உடல் என்பது ஆன்மாவுக்குச் சட்டை. ஒரு சட்டை கிழிந்துபோனால் வேறொரு சட்டை அதற்குக் கிடைக்கும். ஆகையினால் இந்தச் சட்டையைக் கிழிப்பதைப் பற்றி நீ வருத்தப்பட வேண்டாம். எல்லாம் சரி. ஆனால் ஆன்மாவுக்கு வாய்த்திருக்கிற சட்டையைக் கிழித்தெறிந்து அது வேறொரு சட்டையைப் பெறும் வலுக்கட்டாயத்தை அதன்மேல் திணிப்பானேன்? ஒரு சட்டை கிழிந்துபோனால் வேறு சட்டை கிடைத்தே தீரும் என்ற நிலையில் இருக்கிற சட்டையை அழிப்பதில் பொருள் என்ன? அது எந்த நோக்கத்தை நிறைவேற்றப்போகிறது? வேறொரு சட்டையைத் தைத்துக்கொடுக்கிற பொறுப்பும் கடவுளுடையதேயல்லவா? அது வெட்டி வேலையேயல்லவா? இந்த வெட்டிவேலைக்குப் பகவான் கிருட்டிணன் அருச்சுனனைத் தூண்டுவது ஏன்? அவனுக்கு இதில் என்ன அக்கறை? கொலை "ஈச்வரனுக்கு" அத்தனை பிரீதியானதா? இவையெல்லாம் கடவுளின் இலீலைகள் என்றால் கடவுளுக்கு வேறு வேலையே இல்லையா?
கொல்வதால் பிழைகள் நேர்படுமா? இருத்துவதால் அல்லவோ நேர்படும்! இருந்துணரலாம்; இறந்துணர முடியுமோ?
"... ஆதலால் பார்த்தா, போர் செய்.
"இவன் கொல்வானென்று நினைப்போனும், கொல்லப்படு வானென்று நினைப்போனும்-இருவரும் அறியாதார். இவன் கொல்வதுமில்லை, கொலையுண்பதுமில்லை.
"இவன் பிறப்பதுமில்லை; எக்காலத்திலும் இறப்பதுமில்லை. ... இவன் பிறப்பற்றான்; அனவரதன், இவன் சாசுவதன்; பழையோன்; உடம்பு கொல்லப் படுகையில் இவன் கொல்லப்படான்." (கீதை, 2:18-20).
இந்த நியாயப்பாட்டின் அடிப்படையில் கொலை பாவமன்று என்ற முடிவுக்கே நாம் வந்துசேர வேண்டியிருக்கிறது. கீதையைக் கொலை நூல் என்று சொன்னால் அதில் பிழையென்ன?
"... நீ இந்தத் தர்ம யுத்தத்தை நடத்தாமல் விடுவாயானால், அதனால் ஸ்வதர்மத்தையும் கீர்த்தியையும் கொன்று பாவத்தை யடைவாய்.
"உலகத்தார் உனக்கு மாறாத வசையுமுரைப்பார்கள். புகழ் கொண்டோ ன் பின்னரெய்தும் அபகீர்த்தி மரணத்திலும் கொடிதன்றோ?" (கீதை, 2:33-34).
"யாரொடும் பகை கொள்ளலன் என்றபின் போரொடுங்கும் புகழொடுங்காது" என்பதை அறியாதவனல்லன் பாரதி.
பாரதியின் முன்னிருந்த தேவை போருக்கு முடுக்குவதேயன்றிப் போரை ஒடுக்குவதன்று. ஆகையால் அவன் பகவத் கீதையைச் சரணடைந்தான். பாரதியைக் குற்றம் சொல்ல முடியாது.