இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Wednesday, 2 May 2007

என் கணவர் - செல்லம்மாள் பாரதி

(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்"என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)

"..வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.."
ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்... விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கம் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிýருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிýருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிýருக்க முடியுமா?கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸøரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸøரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸøரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.
அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை. சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.புதுவை þþ எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை þþ இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறு களுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்து விட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!"" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

எத்தனை கோடி ஜன்மம் வேண்டுமானாலும். . . .செல்லம்மாள் பாரதி

தமிழ்நாட்டு மக்களே!
நான் படித்தவள்ளல்ல. இந்த நூலுக்கு முகவுரை எழுத நான் முன் வரவில்லை. அதற்கு எனக்கு சக்தியுமில்லை. என்னைப் போல இந்தத் தமிழ் நாட்டில் லக்ஷ்க்கணக்காக ஆணும் பெண்ணும் இருக்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன் என் புருஷன் ஸ்ரீமான் சுப்பிரமனிய பாரதி இந்த நாட்டில் பிறந்தார்; வளர்ந்தார்; வாழ்ந்தார்; இறந்தார். அவருடைய ஸ்தூல தேகத்திற்கு முடிவு நேரிட்டு ஆத்மா விண்ணுலகம் சென்றுவிட்டது. கடவுளின் திருவிளையாடலில் இப்படி ஒரு ஆத்மா இவ்வுலகில் ஜனித்து சொற்ப காலந் தங்கி, சிற்சில காரியங்களை செய்துவிட்டு, திரும்பப் போய்விட வேண்டுமென்ற கட்டளையின்படி என் புருஷனும் ஜனித்து, செய்ய வேண்டிய காரியங்களை அவசர அவசரமாக செய்து விட்டு காலம் சமீபத்தவுடன் இறப்பதுவும் ஓர் அவசரமான கடமையாகக் கொண்டு அதனையும் செய்து மடிந்தார்.1904ம் வருஷத்தில் சுதேசமித்திரன் உப பத்திராதிபராக அமரு முன்பே நம் நாட்டைப் பற்றிய கவலை அவருக்கு அதிகம் ஏற்பட்டு விட்டது. எட்டையபுரம் சமஸ்தானாதிபதியின் கீழ் தான் ஏற்றுக் கொண்ட வேலையைத் திரணமாக நினைத்துத் தள்ளினார்; மதுரை சேதுபதி வித்யாசாலையில் தமிழப் பண்டிதர் வேலையையும் அற்பமாக எண்ணித் தள்ளினார். சுதேசமித்திரன் பத்திரிகைக்கு உழைக்க ஆரம்பித்ததும் அவரது உள்ளம் மலர்ச்சியடைய ஆரம்பித்தது. சுமார் இரண்டு வருஷம் கழிந்த பின் 'இந்தியா' என்னும் வாரப் பத்திரிகையை ஆரம்பித்தார்.
உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச கைங்கரியத்திற்கு முழுமனதுடன் அர்ப்பணம் செய்தார்.ஸரஸ்வதி தேவி அவர் வாக்கில் நிர்த்தனஞ் செய்ய ஆரம்பித்தாள். " வந்தேமாதரம்" என்ற சப்தம் அவரது ஹிருதயத்திலிருந்து முழுத் தொனியுடன் கிளம்பிற்று; தமிழ்நாடெங்கும் பரவிற்று.வீடு வாசல் மனைவி, பிள்ளை, குட்டி, ஜாதி வித்தியாசம், அகந்தை முதலியவை முற்றும் மனதின்று விட்டு அகன்றன.தேசப் பிரஷ்டமானார். புதுவையில் தேசபக்தி விரதத்தை பலவிதமாக அநுஷ்டித்தார். திரும்ப வந்து தந்நாட்டை ஒரு முறை பார்க்க வேண்டுமென்ற அவா அதிகரித்தது. அதற்காகச் சில நிபந்தனைகளை ஒப்புக் கொண்டார்.மறுபடியும் சுதேசமித்திரனில் ஒரு வருஷம் உழைத்தார். தான் வந்த காரியம் முடிவடையவே விண்ணுலகம் சென்ற தேசபக்தர் கூட்டத்தில் தானும் போய்ச் சேர்ந்து கொண்டார்.நமது நாடு இன்னது; நமது ஜனங்கள் யாவர்; நமது பூர்வோத்திரம் எத்தகையது; இன்று நமது நிலையென்ன; நமது சக்தி எம்மட்டு; நமது உணர்ச்சி எத்தன்மையது - இவைகளைப் பற்றிய விவகாரங்களும் சண்டைகளும், தீர்மானங்களும் அவருடைய ஜீவனுக்கு ஆதாரமாயிருந்தன. எதுவும் யோசித்தாக வேண்டியதில்லை. திடீர் திடீர் என்று எண்ணங்கள், புதிய புதிய கொள்கைகள், புதிய புதிய பாட்டுக்கள், அப் பாட்டுக்களுக்குப் புதிய புதிய மெட்டுக்கள் - எனது இரு காதுகளும், மனமும், ஹிருதயமும் நிரம்பித் ததும்பும் இந்த ஒரு பாக்கியம் நான் பெற்றேன். இம்மாதிரி பாக்கியம் பெற எத்தனை கோடி ஜென்மம் வேண்டுமானாலும் திரும்பத் திரும்பப் பெறத் தயாராக இருக்கிறேன்.
அவரது தேகத்தின் ஜீவன் போய்விட்டது. அவரது ஜீவனுக்காதரமாக இருந்த பாரதமாதாவின் ஜீவசக்தி என்றென்றும் அழியாதது. தமிழ்நாடு உள்ளளவும், தமிழ் நாட்டில் ஒரு மனிதனோ அல்லது ஒரு சிறு குழந்தையோ தமிழ் பேசிக் கொண்டிருக்குமளவும் பாரதியின் மூலமாக நம்க்குக் கிடைத்த ஜீவசக்தி நிலைத்திருக்குமென்று என் ஹிருதயம் சொல்கிறது. இதனை நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள்.இஃதொன்ருதான் நான் உங்களுக்கு சொல்ல முன் வந்தேன். நீங்கள் நீடுழி வாழ்க!பாரதியாரின் நூல்கள் முழுமையும் அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை என் ஜீவன் இருக்கும் வரை நான் வகித்து பிற்பாடு தமிழ்நாட்டிற்குத் தத்தம் செய்து விட்டுப் போகத் தீர்மானித்திருக்கிறேன்.
வந்தே மாதரம்
பாரதி ஆச்ரமம்
திருவல்லிக்கேணி, சென்னை

பாரதியார் - பாரதி யார்?

செப்டெம்பர் 11 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினமாகும். 11 டிசம்பர் 1882ம் ஆண்டு பிறந்து 11 செப்ரெம்பர் 1921ம் ஆண்டு மறைந்த இந்த உண்மையான உணர்வு பூர்வமான கவிஞன் தன் வாழ்வில் சந்தித்த சோதனைகள் தாம் எத்தனை? வேதனைகள் தாம் எத்தனை? தான் வாழ்ந்த நாட்களில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறாமல் பசியில் பட்டினியில் வாழ்ந்தவன் தான் பாரதி என்கின்ற மகாகவி! பசியாலும், பிணியாலும் வாடி இறந்தவனை 'யானை அடித்து கொன்றது" என்ற கட்டுக்கதையைக் கட்டி தன் அவமானத்திற்கு தமிழ்நாடு திரைபோட்டுள்ளது. யானையால் பாரதி தள்ளுண்ட நிகழ்வு ஒரு யூன் மாதத்தில் நிகழ்ந்தது. அச் சம்பவத்தின் பின்பு அவர் வழக்கம் போல 'சுதேச மித்திரன்" பத்திரிகை அலுவலகம் சென்று தனது வேலைகளைச் செய்து வந்துள்ளார். மேலும் சென்னை நகரக் கடற்கரைப் பொதுக்கூட்டங்களில் தொடர்ந்தும் கலந்து கொண்டு வந்துள்ளார். யூலை 31ம் திகதி கருங்கற்பாளைய வாசகசாலையின் 5வது வருடக் கொண்டாட்டக் கூட்டத்தில் பாரதியார் பேசிய உரையின் தலைப்பு 'மனிதனுக்கு மரணமில்லை." 'காலா என் கண்முன்னே வாடா, உன்னைக் காலால் உதைக்கின்றேன்" என்று பாடிய பாரதி காலத்தை வென்ற போது அவருக்கு 39 வயது கூட நிறையவில்லை.! பாரதியாரின் கடைசி நாளைக் குறித்து நெல்லையப்பர் எழுதும் போது அன்று தீக்கிரையான பாரதியாரின் உடலின் எடை அறுபது இறாத்தல் தான் என்றும், அன்றைய தினம் மயானத்திற்கு சென்றவர்கள் தொகை இருபது இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.!பாரதியார் - பாரதி யார்? அவரது சில சிந்தனைகளையும், கருத்துக்களையும் உங்கள் முன் வைக்க விரும்புகின்றோம்.ஒளவையாரின் ஆத்திசூடிக்கு புரட்சிகரமான புதுமாற்றங்களைத் தந்தவர் பாரதியார்!'தையல் சொல் கேளேல்" என்று பாட்டி சொல்லி வைத்தாள்.'தையலை உயர்வு செய்" என்று எதிர் பாட்டு பாடி வைத்தார் பாரதியார்.'ஆறுவது சினம்" என்றாள் ஒளவை. இவரோ 'ரௌத்திரம் பழகு" என்றார். 'நுப் போல் வளை" என்றாள் ஒளவை. இவரோ 'கிளை பல தாங்கேல்" என்றார். 'தொன்மை மறவேல்" என்றாள் ஒளவை. 'தொன்மைக்கு அஞ்சேல்" என்றார் பாரதி.'போர்த் தொழில் புரியேல்" என்றாள் ஒளவை. 'போர்த்தொழில் பழகு" என்றார் இவர்.'மீதூண் விரும்பேல்" என்றாள் அவள். 'ஊண் மிக விரும்பு" என்றார் இவர்.'போர்த் தொழில் புரியேல்" என்று ஒளவையை பேச வைத்தன அவள் காலத்தில் தமிழ் மன்னர்களுக்குள் நடைபெற்ற போர்கள். பாரதி காலத்தில் அவன் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிரான வீரர்களை திரட்டுகின்ற வேலை அவனுக்கிருந்தது. ஆகவே தான் 'போர்த் தொழில் பழகு" என்று சொல்லி வைத்தான்.இருந்தும் 'ஈவது விலக்கேல்" 'ஈகைத்திறன்" என்று அவளோடு ஒத்துப்போன இடங்களுமுண்டு.ஆகவே பெரும்பாலும் அவளிடமிருந்து கருத்தால் முரண்பட்ட நமது முண்டாசுப் புலவன் அந்த மூதாட்டியை வாழ்த்தி வரவேற்று அவளது கருத்துக்களின் செறிவான தாக்கத்தை எழுதி உணர்த்துகிறான் என்பதைப் பார்க்கிறோம்.இவன் தான் பாரதி.கருத்தால் முரண்பாடு இருந்தாலும் அவள் தமிழ்ப்பாட்டி-அவள் சொன்னது அமிழ்தம் என்பதற்காகப் பாராட்டுகிறான். இக்காலத்தில் இப்படி ஆட்களைப் பகுத்து பார்த்துப் பாராட்ட வேண்டிய அம்சங்களிருந்தால் பாராட்ட வேண்டுவது மிகவே அவசியமாகிறது.மூடத்தனமான பக்தியை நம்பிக்கையைப் பாரதியார் மிக்க கடுமையாகச் சாடியிருக்கின்றார். அவரது கட்டுரையில் இருந்து இதோ ஒரு பகுதி:-'நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிடம் வரை நடைபெறும் மூட பக்திகளுக்கு கணக்கு வழக்கே கிடையாது. இதனால் நம்மவர்களின் காரியங்களுக்கும், விவகாரங்களுக்கும் ஏற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை.இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்கைகளுக்கும் நாள் நட்சத்திரம் - லக்னம் - முதலியன பார்த்தல்.சவரம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்றால், அதற்குக் கூட மாஸப்பொருத்தம், பஷப்பொருத்தம், திதிப் பொருத்தம், நாட்பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது.சவரத்திற்குக் கூட இப்படியென்றால் இனி கல்யாணங்கள், சடங்குகள், வியாபாரங்கள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய காரியங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிற்கும், கால விரயத்திற்கும் வரம்பே கிடையாது. சகுனம் பார்க்கும் வழக்கமும் காரியங்களுக்குப் பெருந் தடையாக வந்து மூண்டிருக்கிறது.'காலம் பணவிலை உடையது" என்ற குறிப்புடைய இங்கிலீஷ் பழமொழி ஒன்று இருக்கிறது. இந்த சமாசாரம் நம்மவருக்குத் தெரிவதே கிடையாது. பொழுது வீணே கழிக்கப்படுமாயின் அதனால் பணலாபம் கிடையாமல் போகும். இன்று செய்யக்கூடிய காரியத்தை நாளைக்குச் செய்யலாமென்று தாமதப்படுத்தி வைப்பதனால் அந்தகாரியம் பலமான சேதமடைந்து போகும்.'இத்தகைய மூட பக்திகளெல்லாம் படிப்பில்லாமையால் ஏற்கப்பட்டிருக்கின்றன" என்றும், 'ஜனங்களுக்குப் படிப்பு கற்றுக்கொடுப்பதனால் இவை அழிந்து போய்விடும்" என்றும் இங்கிலீஷ் படிப்பாளிகள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றென்.ஆனால் பி.ஏ, எம்.ஏ பாPட்சைகள் தேறி, வக்கீல்களாகவும், உபாத்தியாராகவும், என்ஜினீயர்களாகவும், பிற உத்தியோகத்தராகவும் வாழும் கணக்கில்லாத ஐயர், ஐயங்கார், பிள்ளை முதலியவர்கள் எவராவது ஒருவர் தம் வீட்டுக் கல்யாணத்துக்கு லக்னம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நிறுத்தியிருப்பாரா?'பெண்பிள்ளைகளின் உபத்திரவத்தால் இவ்விதமான மூடபக்திகளுக்கு கட்டுப்பட்டு வாழும்படி நேரிடுகிறது" என்றும் சிலர் முறையிடுகிறார்கள். பெண்பிள்ளைகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க வேண்டும். மூடத்தனமான புத்திமான்கள் கண்டு நகைக்கும் படியான செய்கைகள் செய்ய வேண்டுமென்று ஸ்திhPகள் பலனின்றிப் பிதற்றும் இடத்தே, அவர்களுடைய சொற்படி நடப்பது முற்றிலும் தவறு - ஆனால் உண்மையில் பாரதியின் தத்துவ தரிசனம் என்ன? வாழ்க்கைக் கண்ணோட்டம் என்ன?பாரதி கடவுள் உண்டென்ற கொள்கையுடையவன்தான். ஆயினும் அவன் 'ஒருவனே தேவன்" என்பதையோ, கடவுள் இப்படியன், இவ்வண்ணத்தன், இந் நிறத்தன்" என்பதையோ நிலைநாட்டுவதை முதற்பெருங் கொள்கையாகக் கொள்ளவில்லை.பாரதியின் இலக்கியம் முழுவதையும் துருவி ஆராய்ந்தால், தேசியப் பாடல்களையோ, தோத்திரப் பாடல்களையோ வேதாந்த பாடல்களையோ, இதர பாடல்களையோ எதை ஆராய்ந்து பார்த்தாலும் இந்த வாழ்வையும் இதில் மனித வர்க்கம் முழுவதும் உயர்நிலை எய்தி வாழ்வதையும் அதற்கான கால மாறுதலையும் பெருநோக்காகக் கொண்டு நிற்கின்றான் என்பதைத் தெளிவாக காணமுடியும்.'செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலா மென்றேஎண்ணி யிருப்பர் பித்தமனிதர் அவர்சொல்லும் சாத்திரம் பேயுரையாமென்று ஊதடா சங்கம்" (வேதாந்த-சங்கு)இந்தப்பாட்டில், செத்தபிறகு வாழ்வு உண்டென்றோ, சிவலோகம், வைகுந்தம் உண்டென்றோ நினைக்கும் கருத்தை மண்டையிலடித்து நசுக்கி விடுகின்றான்.'மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்படவேண்டும்" இவ்வாறு 'வேண்டும்" என்ற பாட்டில் சொர்க்கம் வேறு எங்கேயும் இல்லை அது இங்கேயே தோன்ற வேண்டும் என்கிறான்.'வீடு(மோட்சம்) வேறு எங்கேயும் இல்லை. அது இங்கேயே இருக்கிறது" 'கவலை துறந்து இங்கு வாழ்வதே வீடு" என்று 'அறிவே தெய்வம்" என்ற பாட்டில் பாடுகின்றான்.'ஜயமுண்டு பயமில்லை மனமே-இந்த ஜன்மத்தில் விடுதலையுண்டு, நிலையுண்டு"என்று 'ஜீவன் முத்தி" என்ற பாட்டில் இந்த பிறப்பிலேயே விடுதலை உண்டு என்கிறான்.பாரதி தமிழ்-தமிழ் என்றே மூச்சு விட்டான் இதோ தமிழைப்பற்றியும், தமிழ் இனப்பற்றினைக் குறித்தும் அவன் எழுதியவற்றில் ஒரு சில துளிகள்.'தமிழ், தமிழ், தமிழ் என்றும், எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய-புதிய செய்தி, புதிய-புதிய யோசனை, புதிய-புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக்கொண்டே போகவேண்டும். தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் பொழுது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனைவிட மற்றொரு ஜாதியான் அறிவிலும், வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு சம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாக இருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகின்றது.ஆனால் அதேவேளை தமிழனைக் கண்டிக்கவும் தயங்கவில்லை பாரதி. தமிழனக்கு அவர் கூறி அறிவுரை இதோ!"தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதீக நடை-எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை தூக்கி ஆட இடங் கொடுத்து விட்டாய்.இவற்றை நீக்கி விடு. வீட்டிலும், வெளியிலும், தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும். உண்மையாயிருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது. பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர் பிறரை வஞ்சிப்பதையும் நீ இயன்றவரை தடுக்க வேண்டும். எல்லாப்பேறுகளையும் காட்டிலும் உண்மைப்பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர் உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர் உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால் தமிழா, எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும் படி செய்."அதே வேளை தமிழ் மொழி குறித்துச் சற்று வித்தியாசமான கருத்துக்களையும், ஏன் கடுமையான கருத்துக்களையும் கூட அவர் வெளியிட்டுள்ளார். 'தமிழில் எழுத்துக் குறை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையையும் 'தமிழ்ப்பாஷைக்கு உள்ள குறைகள்" என்ற தலைப்பில் ஓர் உரையாடல் கட்டுரையையும் அவர் எழுதியுள்ளார். தமிழ்க்குரல் அன்பர்களின் தமிழ்ப்பசிக்கு அவை தீனி போடுவதாகவே அமையும் என்பது எமது கருத்து! அவற்றில் இருந்து சில வசனங்கள்:'பிரெஞ்சு, இங்கிலீஷ் முதலிய ஐரோப்பிய பாஷைகளிலும், ஹிந்தி முதலிய நமது நாட்டுப் பாஷைகளிலே வளர்வனவெல்லாவற்றிலும் - உயிருள்ள பாஷைகளிலே வளர்வனவெல்லாவற்றிலும்-உச்சரிப்புத் திருத்தத்தைக் கருதிப் பழைய எழுத்துக்களில் சில அடையாளங்கள் சேர்த்து சௌகர்யப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் எழுத்தின் வடிவத்தில் யாருக்கும் சந்தேகம் நேரிடாது. இந்த எளிய வழியை அனுசரித்த நமது தமிழ் மொழி விசாலமடைய வேண்டுமென்பதே என்னுடைய விருப்பம்."'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்-கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்"என்று தான் பாடியதின் உட்கருத்தை இவ்வாறு இன்னுமொரு பாடலிலும் தருகின்றார்.பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணங்கச் செய்தல் வேண்டும்.அது மட்டுமல்ல தனது கட்டுரை ஒன்றில் கீழ்வருமாறும் எழுதியிருக்கின்றார்.'தமிழா பயப்படாதே ஊர்தோறும் தமிழ்ப்பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்" தமிழன் உயரவேண்டும். தமிழ் மொழி சிறப்புற வேண்டும் என்று பாரதி விரும்பினார். அதையே உரக்கவும் சொன்னார். ஆனால் பாரதியின் வசன நடையிலும், பாடல்களிலும் அநேக சமஸ்கிருத சொற்கள் கலந்து வந்ததை மறுப்பதற்கில்லை. அதேபோல் சாதிகள் இல்லை என்று சொன்ன பாரதி, அந்த சாதிப்பேயை அழிப்பதாக நினைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பிராமணராக்கும் முயற்சியிலும் ஈடுபட்டவர்தான்.ஆனால் இதனைப் பாரதியின் குறைகள் என்று கருதுவதை விட அந்தக் குறைகளில் இருந்து வெளிப்பட முனைந்த போது ஏற்பட்ட தவறுகள் என்றுதான் கொள்ள வேண்டும்.! பாரதி வாழ்ந்த காலம் அப்படி! சீரழிந்து போன சமுதாயச் சேற்றில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு புரட்சிகரமான சிந்தனைகளுடன் வெளியே வந்தவன் இந்த மகாகவி!அவன் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் காலத்தின் பிடியால் தன்மீது ஒட்டியிருந்த மற்றத் தூசுகளையும் தூக்கி எறிந்து தமிழ் இனத்தை, தமிழ் மொழியை மேலும் மிளிர வைத்து உலக மகாகவியாகத் திகழ்ந்திருப்பான்.! நல்லதொரு வீணையாக விளங்கியவனின் அருமை தெரியாமல் காலமும், மக்களும் அவனை புழுதியில் தள்ளினர். அவர் தன்னைப்பற்றி பாடிய பாடலை இந்த தினத்தில் அவருக்கு காணிக்கையாக்குகின்றோம்.இந்த ஆய்வுக்குப் பாரதி பற்றிய பல நூல்கள் பயன்பட்டன. பல சொல்லாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.இவ் ஆய்வு 13.09.04 அன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் தமிழ்க்குரல் வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது
நன்றி TAMILNATION

பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரம்

பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரம் ( 'மகாகவி பாரதி வரலாறு ' நூலின் முன்னுரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள்
சீனி. விசுவநாதன்
(டிசம்பர் 11 அன்று வரும் மஹாகவி பாரதி பிறந்தநாளையொட்டி இக்கட்டுரை பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
பாரதி அன்பரும், பாரதி குறித்த ஆய்வுகளில் தன் வாழ்க்கையைச் செலவழிப்பதை ஒரு பாக்கியமாகக் கருதுபவருமான சீனி. விசுவநாதன் 'மகாகவி பாரதி வரலாறு ' என்ற நூலை 1996ல் வெளியிட்டார். அந்த நூலுக்கு அவர் எழுதியுள்ள முன்னுரை ஓர் அரிய ஆய்வுக் களஞ்சியமாகும். அம்முன்னுரையில் 'பாரதிக்கு வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரத்தை ' விவரமாகவும், காலவரிசையிலும் கொடுக்கிறார். பாரதியின் பதாகையை உயர்த்திப் பிடித்த பாரதி அன்பர்களைப் பற்றியும் அவர்கள் எழுத்துகள் பற்றியும் நல்ல அறிமுகம் செய்கிற விதமாக அத்தகவல்கள் அமைந்துள்ளன. இத்தகவல்களைத் திரட்டுவதே ஒரு பெரிய ஆய்வாக சீனி. விசுவநாதனுக்கு இருந்திருக்கும். இந்நூல் வெளிவந்தபோது, தமிழக அரசின் முதல் பரிசைப் பெற்றது. சீனி. விசுவநாதனின் பாரதி பணிகளுக்காகத் தமிழக அரசு சமீபத்தில் அவருக்குப் பாரதியார் விருது வழங்கி கெளரவித்திருக்கிறது. இவ்விருது பாராட்டுப் பத்திரமும், ஒரு லட்ச ரூபாய் பரிசும் அடங்கியது என்று நினைக்கிறேன்.
அவர் நூல்களில் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் நான் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்கிற அனுமதியைப் பெருந்தன்மையுடனும் அன்புடனும் எனக்கு வழங்கியுள்ள, என் நண்பர் என்று சொல்லிக் கொள்வதில் நான் பெருமைப்படுகிற சீனி. விசுவநாதனுக்கு நன்றிகள் சொல்லி அவர் நூலிலிருந்து எடுத்த 'பாரதி வரலாற்று நூல்கள் உருவெடுத்த சரித்திரத்தை ' உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இதை மறுபிரசுரம் செய்ய விரும்புவோர் சீனி. விசுவநாதனிடம் அனுமதி பெற்றுச் செய்யுமாறு வேண்டுகிறேன். இதிலுள்ள தட்டச்சுப் பிழைகள் என்னுடையவை. - அன்புடன், பி.கே. சிவகுமார்)
பாரதிக்குப் பற்பலரும் வரலாறுகள் எழுதியுள்ளனர்.
பாரதி வாழ்ந்த காலத்தில், அவருக்கு உற்றுழி உதவி, உறுபொருள் கொடுத்த உத்தமர்களில் பலரும் தங்கள் சொந்தப் பாங்கான அனுபவங்களைப் பின்னொரு காலப்பகுதியில் கட்டுரைகளாக வடித்தனர்; நேர் உரைகளாகப் பேட்டி கண்டவர்களிடம் சிலவற்றைப் பதிவும் செய்தனர்.
வேறு சிலர், பாரதியின் கவிதா சக்தியைப் பற்றியும், கவிதையின் அழகு, இனிமை, எளிமை ஆகியவற்றைப் பற்றி மட்டுமே வியந்து போற்றி எழுதினர்.
பாரதிக்கு மிக அணுக்கமானவர்கள் எல்லோருமே வரலாற்று நூல்கள் எழுதாமல், துண்டு துணுக்குகளாகவோ, கட்டுரைகளாகவோ, கவிதைகளாகவோ வரலாற்றுத் தொடர்பான செய்திகள் சிலவற்றை வழங்கினர்.
பாரதியை நன்கு புரிந்துகொண்டவர்களும், தெரிந்து வைத்திருந்தவர்களுங்கூட ஓரளவே வரலாற்றுக் குறிப்புக்களை வரைந்தனர்.
பாரதிக்கு அவர் வாழ்ந்த காலத்திலேயே அவருடைய புலமைக்கும் இலக்கியப் படைப்புகளுக்கும் உரிய - உயரிய புகழும், பாராட்டுதல்களும் கிடைக்கவே செய்திருக்கின்றன.
அவர் காலத்தில் மூன்று கட்டுரைகள் அவரைப் பற்றிப் பிரசும்மாயிருப்பதாக நான் அறிகிறேன். கர்மயோகி (1910), தேசபக்தன் வருஷ மலர் (சித்தார்த்தி - தை மாதம் 30 ஆம் தேதி - 1919) ஆகிய தமிழ்ப் பத்திரிகைகளிலும், New India (1919) என்னும் ஆங்கில நாளிதழிலும் பாரதி பற்றிய கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.
பாரதியின் கர்மயோகி மாதப் பத்திரிகையில் திரு.லக்ஷ்மண சங்கரன் என்பவர் தமிழ் ஸாஹித்யத்தில் நவமார்க்கம் என்கிற கட்டுரையில் பாரதியின் பாவன்மையை வியந்து பாராட்டியும், கதை நூலைப் புகழ்ந்து பேசியும் எழுதி உள்ளார்.
தமிழ்த் தென்றல் திரு. வி.க. அவர்களை ஆசிரியராகக் கொண்டிருந்த தேசபக்தன் வருஷ மலரில் திரு. எ.எஸ். நாகரத்தினம் என்பவர் தமிழ்நாடும் ஸ்ரீமான் ஸி.சுப்பிரமணிய பாரதியாரும் - ஓர் ஆராய்ச்சி என்னும் தலைப்பில் ஓர் அரிய கட்டுரையே எழுதி இருக்கின்றார்.
நியூ இண்டியா (New India) என்னும் ஆங்கில நாளிதழில் திரு. ஏ.வி. சுப்பிரமணிய ஐயர் அவர்கள் Subramania Bharati and his genius என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்றை வழங்கியுள்ளார்.
இப்படி இன்னும் பல கட்டுரைகள் அக்காலத்தில் வெளிவந்திருக்கலாம்.
நானறிந்தவரை, அக்கட்டுரைகள் பாரதியின் கவித்திறத்தையும், மேதைமையையும், அவர் கையாண்ட புதிய உத்திகளையும் சிறப்பித்துப் பேசும் தன்மையனவாகவே அமைந்துவிட்டன என்பேன்.
ஆம்; அவை வாழ்க்கைச் சரிதக் குறிப்புகளாகவோ வாழ்க்கைச் செய்திகளை இனங்காட்டுவனவாகவோ அமையவில்லை.
பாரதி தன் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களைத் தனியே எழுதாவிட்டாலுங்கூட கனவு என்ற காதற்கவிதையிலும், பாரதி அறுபத்தாறு என்னும் முற்றுப் பெறாத பாடல் தொகுதியிலும், சின்னச் சங்கரன் கதை என்னும் முற்றுப் பெறாத கதைப்பகுதியிலும், சித்தக் கடல் என்ற வசனப் பகுதியிலும், கவிதா தேவி அருள்வேண்டல் போன்ற சில பாக்களிலும் தம் வாழ்வுத் தொடர்பான சில பயனுள்ள செய்திகளை ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார் என்பதும் நம் கவனத்துக்குரியது.
பாரதி 1921 செப்டம்பர் 12இல் (செப்டம்பர் 12, 1921 அதிகாலை 1 மணிக்கு பாரதி உயிர் நீத்தார். - பி.கே. சிவகுமார்) மரணம் அடைந்த பின்னரே சரிதச் சுருக்கங்களும், வாழ்க்கைக் குறிப்புக்களும், வரலாற்று நூல்களும் வெளிவரலாயின.
பாரதி 'விண்ணவருக்கு விருந்தானார் ' என்ற செய்தியை 13-9-1921ஆம் தேதிய இதழில் வெளியிட்ட சுதேச மித்திரன் பத்திரிகையானது பாரதியைப் பற்றிய விவரங்களைத் தந்ததுடன் 'அவரது சரித்திரச் சுருக்கம் வேறிடத்தில் பிரசுரம் செய்யப்படுகிறது ' என்றும் குறிப்பிட்டிருந்தது.
ஆனால், அப்படியொரு சரித்திரச் சுருக்கம் சுதேச மித்திரன் இதழில் நான் பரிசோதித்துப் பார்த்த அளவில் கண்ணில் படவில்லை.
சுதேச மித்திரனில் தனியே பாரதியின் சரித்திரச் சுருக்கம் பிரசுரமானதை அறிந்துகொள்ள முடியாத காரணத்தால், அவரது சரித்திரம் எந்தமாதிரியான செய்திகளைக் கொண்டு இருந்தது என்பதை அறிய முடியாமலே போய்விட்டது.
பாரதி அமரரானவுடனேயே முதன்முதலாகத் திரு.எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு அவர்கள் ஸ்ரீமான் சுப்பிரமணிய பாரதி - சில குறிப்புகள் என்ற தலைப்பில் சுதேச மித்திரன் 17-9-1921ஆம் தேதியிட்ட இதழின் வழியாக அரிய கருத்துச் செல்வங்களை வழங்கினார்.
இப்பெருமகனாரைத் தொடர்ந்து பாரதி பற்றிய வரலாற்றுச் செய்திகளை வழங்கியவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதியார், சக்கரைச் செட்டியார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.
1922 ஜனவரியில் பாரதி ஆச்ரமத்தார் பாரதியின் கவிதைச் செல்வங்களைத் தொகுத்து, சுதேச கீதங்கள் என்னும் தலைப்பெயருடன் இரு பகுதிகளாக வெளியிட்டனர். முதல் பகுதியில், நாவலர் சோமசுந்தர பாரதியார் ஸ்ரீ சி. சுப்பிரமணிய பாரதியார் - சரித்திரச் சுருக்கம் என்றும், இரண்டாம் பகுதியில் திரு.சக்கரை செட்டியார் The Political Life of Sri Subramania Bharathi என்றும் தம் நினைவுக் குறிப்புக்களை ஒழுங்குபடுத்திக் கோவையாக எழுத்தில் வடித்துக் கொடுத்தனர்.
நாவலர் சோமசுந்தர பாரதியார் தம் கட்டுரையில் பாரதியின் வாழ்க்கைக் குறிப்புக்களையும் நிகழ்ச்சிகளையும் சுருக்கமாகத் தந்ததுடன், பாரதியின் புலமை, ஒருசில கவிகள் எழுந்த சூழல், குணநலன்கள், தமக்கிருந்த நட்புமுறை ஆகியவை பற்றியும் விரித்துரைத்தார்.
திரு. சக்கரை செட்டியாரோ மிக விரிவாகப் பாரதியின் அரசியல் பிரவேசம், அரசியல் ஈடுபாடு ஆகியன குறித்து எழுதியதோடும் நில்லாமல், தமிழ்மக்கள் அமர கவி பாரதிக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.
ஆக, நமக்கு 1921 செப்டம்பரிலிருந்து 1922 ஜனவரிக்கும் உள்ளாகப் பாரதி வாழ்க்கை பற்றிய குறிப்புகளும், சரித்திரச் சுருக்கங்களும், அரசியல் ஈடுபாடு பற்றிய செய்திகளும் ஓரளவு கிடைக்கத் தொடங்கி விட்டன.
இந்த வகையில் திருவாளர்கள் ராமாநுஜலு நாயுடு, சோமசுந்தர பாரதியார், சக்கரை செட்டியார் ஆகியோரை முன்னோடிகள் என்றே கொள்ளல் வேண்டும்.
இச் சான்றோர்களுக்குப் பின்னர்தான் மண்டயம் சீனிவாஸாச்சாரியார், குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார், சுந்தரேச ஐயர், சாம்பசிவ ஐயர், நீலகண்ட பிரமச்சாரி, நாராயண ஐயங்கார், நாகசாமி, பாவேந்தர் பாரதிதாசன், பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரும் இன்ன பிறரும் பாரதியைப் பற்றிப் பத்திரிகைகளில் எழுதினர்; தம் நண்பர்களிடமும் பாரதி பற்றிய பசுமை நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
மேற்குறித்த பெருமக்களின் கருத்துரைகள் எல்லாம் பாரதி வரலாற்றுக்குப் பேருதவியாய் அமைந்தன என்று சொல்லும் போழ்தில், அவை தனி நபர்களின் இளமைக்காலப் பசுமை நினைவுகள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
துரதிருஷ்டவசமாகப் பாரதியின் கவிதா மண்டலத்தைச் சார்ந்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களும் பாரதியைப் பற்றிய செய்திகளைப் பின்னிட்டுத்தான் பதிவு செய்திருக்கிறார்; அதே போல, பாரதியின் முதற் பதிப்பாளராகிய பரலி நெல்லையப்பரும் தம் நினைவுக் குறிப்புக்களைப் பிற்காலத்தில்தான் பத்திரிகைகளில் எழுதி வெளியிட்டார்.
பாரதியிடம் நெருங்கிய உறவு கொண்டு பாரதிக்குத் தாசனாக வாய்த்தவரும், பாரதியாலே மிக்க அன்புடன் 'தம்பி ' என்று அழைக்கப்பட்ட பேறு பெற்றவரும் சுருங்கிய முறையில்கூட வரலாற்று நூல் வரையாமல் போனது நம்முடைய பாக்கியக் குறைவே.
1928ஆம் ஆண்டில் பாரதி பாடல்களில் ராஜத் துரோகக் கருத்துக்கள் இருப்பதாகச் சொல்லி, பிரிட்டிஷ் அரசு சுதேச கீதங்கள் என்னும் கவிதை நூல் தொகுதிகளைப் பறிமுதல் செய்தது. இதனால் நாட்டில் கிளர்ச்சிகள் எழுந்தன.
அச்சமயம் மீண்டும் திரு. எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு அவர்கள் தாம் அப்போது ஆசிரியர் பொறுப்பு வகித்த அமிர்த குண போதினி மாத இதழில் சென்றுபோன நாட்கள் என்ற பொதுத் தலைப்பில் ஸ்ரீமான் ஸி. சுப்பிரமணிய பாரதி என்று குறுந்தலைப்பு அமைத்துத் தொடர் கட்டுரைகள் எழுதி வெளியிடலானார்.
இத்தொடர் கட்டுரைகளில் முன்னர் - அதாவது, பாரதி மரணமடைந்தபோது, தாம் எழுதிய குறிப்புக்களுடன், அந்த நாள் வரை எவரும் சொல்லாத - எழுத்துருவில் வடிக்காத பற்பல புதிய செய்திகளை எழுதி, பாரதி வாழ்க்கை வரலாற்று ஆய்வுப் பரப்பை ராமானுஜலு நாயுடு விரிவாக்கினார்.
திரு.நாயுடு அவர்கள் எழுதியளித்த அரிய செய்திக் குறிப்புகளில் பலவும் 1928 தொடக்கம் 1947 வரையிலான கால எல்லையில் பிரசுரமான பாரதி வரலாற்று நூல்களில் போதிய அளவு இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதியின் மூத்த மகள் தங்கம்மாளும், இளைய மகள் சகுந்தலாவும் மற்றும் பலரும் அவ்வப்போது பத்திரிகைகளில் பாரதி பற்றி எழுதவே செய்தனர். என்றாலும், இவையெல்லாம் சற்று காலங்கடந்த நிலையில் வெளிப்பட்டனவாகும். தமிழ்ப் பத்திரிகைகளும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாரதி தொடர்புடைய செய்திகளை வெளியிடவே செய்தன.
காலப்போக்கில், கட்டுரை வடிவில் வெளிவந்த செய்திகளையும், நினைவுக் குறிப்புக்களையும், சொந்தப்பாங்கான அனுபவங்களையும் கொண்டு பற்பலர் நூல்களை எழுத முனைந்தனர்.
1928இல் பாரதி பிரசுராலயத்தார் பாரதியார் சரித்திரம் என்ற பெயரால் சிறிய நூல் ஒன்றை வெளியிட்டனர். இது புதிய நூல் அன்று; என்றாலும் பாரதியார் சரித்திரம் என்ற தலைப்பில் வெளியான முதல் தொகுப்பு நூல் இதுவேயாகும்.
1922இல் பாரதி ஆச்ரமத்தார் பிரசுரித்திருந்த சுதேச கீதங்கள் கவிதைத் தொகுதிகளில் இடம் பெற்றிருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதிய பாரதியாரின் சரித்திரச் சுருக்கமும், சக்கரை செட்டியார் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கமான 'ராஜீய வாழ்வும் ', பரலி நெல்லையப்பர் எழுதிய 'பாரதியாரின் தமிழ்ப் புலமை ' என்னும் கட்டுரை ஒன்று சேர்க்கப்பட்டு இந்தப் பிரசுரம் வெளியானது.
1929ஆம் ஆண்டிலே பாரதியின் இளைய சகோதரர் திரு. சி. விசுவநாதன் ஆங்கிலத்தில் Bharati and his works என்றொரு நூலைப் பாரதியின் வாழ்க்கைக் குறிப்புக்களும், பாரதி நூல்களின் மதிப்பீடும் சேர்ந்திருந்த முறையில் எழுதி வெளியிட்டார். இந்த நூலானது, பெரும்பகுதி பாரதி படைப்பு இலக்கியங்களுக்கான கருவி நூலாகவே அமைந்துவிட்டது.
1936இல் ஆக்கூர் அனந்தாச்சாரி என்ற தேசபக்தர் கவிச்சக்கரவர்த்தி சுப்ரமணிய பாரதி சரிதம் என்ற நூலை வெளிப்படுத்தினார்.
இதனிடையில் வ.ரா. என்று சுருக்கப் பெயரால் அழைக்கப்பெறும் வ. ராமஸ்வாமி அவர்கள் காந்தி இதழில் 1935-1936 இல் பாரதி வாழ்க்கைத் தொடர்பான தொடர் கட்டுரைகளை எழுதினார். அக்கட்டுரைகளே 1944இல் மகாகவி பாரதியார் என்ற பெயருடன் நூலாக உருப்பெற்றன.
1937இல் கவியோகி சுத்தானந்த பாரதியார் அவர்கள் பாரதி விளக்கம் என்ற நூலை ஆக்கி அளித்தார்.
இந்த நூலின் முற்பகுதியில் பாரதி வாழ்வும், பிற்பகுதியில் பாரதி பாடல்களின் அருமை பெருமைகளும் விளக்கப்பட்டன.
1938இல் சக்திதாசன் சுப்பிரமணியன் அவர்கள் பாரதி லீலை என்றவொரு நூலை எழுதி வெளியிட்டார். (இந்த நூல் 1950இல் மறு அச்சாக வெளியானபோது, பாரதியார் என்று தலைப்புப் பெயர் மாற்றங் கண்டது.) இந்த நூலில் பாரதி சரித்திரச் சுருக்கத்துடன், அவருடைய வாழ்வில் நிகழ்ந்தனவாகக் கருதப்பட்ட நிகழ்ச்சிகளும் சொல்லப்பட்டன.
1940இல் தி.ஜ.ர. அவர்களின் புதுமைக்கவி பாரதியார் என்னும் நூல் வெளிவந்தது. (இந்த நூல் 1946இல் மறுபதிப்பான நிலையில், அதில் சில தகவல்கள் சேர்க்கப்பட்டன.)
1941இல் பாரதியின் மூத்த மகள் தங்கம்மாள் அவர்கள் பாரதியின் மனைவி செல்லம்மாள் அவர்கள் கூறுகிற மாதிரியில் தவப்புதல்வர் பாரதியார் சரித்திரம் என்னும் பெயரில் அமரகவியின் வரலாற்றைச் சமைத்தளித்தார். (இந்த நூலின் இரண்டாம் பதிப்பு 1945இல் வெளிவந்த சமயத்தில் பாரதியார் சரித்திரம் என்றே நூல் தலைப்பு மாற்றங் கண்டது; சில புதிய செய்திகளும் கொண்டமைந்தது.)
1942இல் நாரண துரைக்கண்ணன் அவர்கள் எழுதிய தமிழ்நாட்டுத் தேசிய கவிஞர் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதியார் என்ற சிறுநூல் வெளிவந்தது.
1946இல் கவியோகி சுத்தானந்த பாரதியார் எழுதிய கவிக்குயில் பாரதியார் என்ற நூல் வெளிவந்தது.
இதே 1946இல் கப்பலோட்டிய தமிழர் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பெறும் வ.உ. சிதம்பரனார் அவர்கள் எழுதி வைத்திருந்த குறிப்புக்களைக் கொண்டு வி.ஓ.சி. கண்ட பாரதி என்ற தலைப்பில் சிறுநூல் ஒன்றை திரு. வ.உ.சி. சுப்பிரமணியம் பதிப்பித்து வெளியிட்டார்.
தங்கம்மாள் எழுதிய அமரன் கதை (1946), பாரதியும் கவிதையும் (1947), பிள்ளைப் பிராயத்திலே (1947) ஆகிய நூல்களும், திரு. ரா. கனகலிங்கம் அவர்கள் எழுதிய என் குருநாதர் பாரதியார் (1947) என்ற நூலும் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக அமைக்கத் துணைபுரிவனவாகும். இந்த நூல்கள் யாவும் பாரதியின் குணச்சித்திரத்தையும், கவிதை பிறந்த கதையையும் தெரிவிக்கின்றன.
ஆக, உண்மையில் 1928-1947க்கும் உட்பட்ட காலப்பகுதியில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய நூல்களே வெளிவந்தன.
இது பாரதிக்கு வரலாறு எழுந்த பின்னணிச் சரித்திரமாகும்.
பாரதி அமரரான 1921ஆம் ஆண்டிலிருந்து 1947ஆம் ஆண்டு முடிய வெளியிடப்பட்ட பாரதி வரலாற்று நூல்களிலும், வரலாற்றுத் தொடர்பான நூல்களிலும் காணப்பெறும் செய்திகள், குறிப்புக்கள் ஆகியன சற்றே குழப்பத்தை உண்டுபண்ணக் கூடிய அளவில் சிக்கல்கள் நிறைந்தனவாக உள்ளன; முன்னுக்குப் பின் முரண்பட்டனவாகவும் உள்ளன. நூலுக்கு நூல் மாறுபாடு கொண்டனவாகவும் உள்ளன. இன்னும் சொல்லப்போனால், காலப்பிழைகளும், கருத்துக் குழப்பங்களும் மேற்குறித்த நூல்களிலே இடம் பெற்றுள்ளன.
பாரதிக்கு வரலாற்றை எழுதிய ஆசிரியர்களில் பெரும்பாலோர், தெரிந்த செய்திகளுடன் சில நண்பர்கள் வழியாக அறிந்து கொண்டவற்றையும், பாரதி குடும்பத்தவர் தெரிவித்த சம்பவங்களையும், நினைவுக் குறிப்புக்களை வைத்துக் கொண்டும், பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைச் செய்திகளை ஆதாரமாகக் கொண்டும், சொந்தப்பாங்கான அனுபவங்களைக் கொண்டும், சிற்சில நூல்களில் இடம் பெற்றிருந்த செய்திக் குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டும் நூல்களை எழுதினர்.
வெளிவந்த நூல்களில் சந்தேக நிவர்த்தி செய்து கொள்ள நினைத்தும், சந்தேகத்துக்கான விளக்கம் கிடைக்காத நிலையில், வருடக்கணக்கைத் தெரிவிக்கும் செய்திகளில் தவறுகள் நேர்ந்துவிட்டன. குறிப்பிட்ட நிகழ்ச்சிகளையோ, நிகழ்ச்சி ஆண்டுகளையோ உறுதி செய்து தெரிவிக்கக்கூடிய நிலையில் பலரும் அந்த நாளில் இல்லை என்பதும் வேதனை தரக்கூடிய செய்தியாகும்.
இத்துணைக்கும் மேலாக அந்தக் காலத்திலேயே - பாரதிக்கு மிக நெருக்கமானவர்களும், உள்ளன்புடன் பழகியவர்களும், உறவினர்களும் வாழ்ந்த காலத்திலேயே - பாரதியைப் புகழ வேண்டும் என்ற நோக்கத்தில் பற்பல கற்பனைக் கதைகள், கட்டுக்கதைகள், தவறான செய்திகள், வருஷப் புள்ளிகளில் தவறுகள் ஆகியன எல்லாம் பத்திரிகைகளிலும், நூல்களிலும் இழைய முற்பட்டுவிட்டன என்கிற பேருண்மையையும் முன்கூறிய நூல்களின் முகவுரை - பதிப்புரைகளால் அறிந்து கொள்கிறோம்.
பாரதியையே அறியாதவர்கள், அவரைப் பார்ப்பதற்கே பயந்தவர்கள் உட்படப் பற்பலரும் 'புரளிக் கதை 'களைக் கடைவிரிக்க ஆரம்பித்துவிட்ட கொடுமையையும் உணர்ந்துகொள்ள முடிகின்றது.
ஆக, ஆரம்ப நாளில் பாரதிக்கு வரலாறு கண்ட யாவரும் சான்றுகளின் துணைகொண்டோ, பாரதி ஆசிரியராய் இருந்த - தொடர்பு கொண்டிருந்த - நடத்திய பத்திரிகைகளின் துணைக்கொண்டோ, பாரதியே அவ்வப்போது பலருக்கு எழுதிய கடிதங்களின் உதவி கொண்டோ, ஆவணச் செய்திகளின் தன்மையை உறுதி செய்துகொண்டோ நூல்கள் எழுத முற்படவில்லை என்பது வெளிப்படை.
ஒவ்வொரு நூலாசிரியரும், ஒவ்வொரு கோணத்தில் பாரதியைக் கண்டு, தெளிந்து, தத்தம் படைப்புகளைப் படைத்தளித்தனர். இதன் காரணமாக, அந்நூல்களில் வரலாற்றுச் செய்திக் குழப்பங்களும், காலக்குறிப்புப் பிழைகளும் நேர்ந்தன.
மற்றும், காலந்தாழ்ந்து சம்பவங்களை நினைவுபடுத்தி எழுதுவதில் ஏற்படும் தவறுகளும் வரலாற்று நூல்களில் இடம்பெற்று விட்டன.
பாரதிக்கு வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புக்களோ, வரலாற்றுச் சுருக்க நூல்களோ இல்லாத நிலையிலும், இன்றுள்ள நவீன வசதிகள் எவையும் வாய்க்கப் பெறாத சூழ்நிலையிலும், தத்தமக்குக் கிடைத்த செய்திகளையும், குறிப்புக்களையும் திரட்டி, நினைவுகூர்ந்து பாரதிக்கு வரலாறு உருவாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் ஈடுபட்ட பெருமக்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்; மதிப்பும் மரியாதையும் செலுத்த வேண்டுவது நமது நன்றிக் கடன் ஆகும். 'நன்றி மறப்பது நன்றன்று '.
ஆகவே, பாரதிக்கு வரலாறு கண்ட முன்னோர்களின் பணிகளுக்கு நாம் தலைவணங்குவோமாக!
முன்னாளில் உருவான நூல்களில் கண்டுள்ள மாறுபட்டனவும், முரண்பட்டனவுமான செய்திகளைக் களைந்தும், காலக்கணக்கீட்டுப் பிழைகளை நீக்கியும், 'புரளிக்கதை 'களைப் புகவிடாமலும், கற்பனை வளத்திற்கு இடங்கொடாமலும் இயன்றவரை ஆதாரபூர்வமான நூலைப் பாரதிக்கு ஆக்கி அளிக்க வேண்டும் என்று சி.விசுவநாத ஐயர் துடியாய்த் துடித்தார்.
அவ்வப்போது பாரதி வரலாற்று நூலுக்குத் துணைசெய்யும் வகையில் ஆதாரபூர்வமான - நம்பகமான - பல பயனுள்ள செய்திகளைத் தாங்கி ஒருசில நூல்கள் வெளிவரத்தான் செய்தன.
'உலகம் சுற்றிய தமிழர் ' என்ற பெயரால் அழைக்கப்படும் திரு.ஏ.கே. செட்டியார் தமது குமரிமலர் இதழ் வழியாகச் செய்த பாரதிசேவையை யாரும் மறக்க முடியாது.
குறிப்பாகவும், சிறப்பாகவும், பாரதி வாழ்க்கை வரலாற்றுக்குத் துணைசெய்யும் நூல்கள் எழுதிய திருவாளர்கள் ரா.அ. பத்மநாபன், பெ. தூரன், தொ.மு.சி. ரகுநாதன், பெ.சு. மணி, கோ. கேசவன் ஆகியோர் பாரதீய உலகின் நன்றிக்குரியவர்கள் ஆவர்.
ஆனாலுங்கூட, திருத்தமான வரலாறு என்று கூறும்படி நூல் ஒன்று வரவில்லை என்ற குறை இருந்து வந்தது.
என் அளவில் நான் பாரதிக்கு முழுமையான ஆதாரங்களோடு கூடிய வரலாற்றை எழுதி முடிக்கும் பணியைப் புனிதமான தேசியத் திருப்பணி என்பதாக உணர்ந்தேன்.
பாரதியின் வரலாற்றை எழுதி முடிக்கும் பணியை நான் தேசியத் திருப்பணியாக எண்ணிய காலத்தில், நானே வரலாற்றை எழுதி முடிப்பேன் என்று கனவிலும் கருதவில்லை.
நன்றி: மகாகவி பாரதி வரலாறு - சீனி. விசுவநாதன் - 2, மாடல் ஹவுஸ் லேன், சி.ஐ.டி. நகர், சென்னை - 600 035.
பின்குறிப்பு: சீனி. விசுவநாதனை தொடர்புகொள்ள விரும்புபவர்கள் மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி Thinnai.com