இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Sunday 6 May, 2007

பாரதி ஒரு மார்க்ஸியவாதியா?

பாரதியார் ருஷ்யப் புரட்சியினைப் பாராட்டி வரவேற்று 'புதிய ருஷ்யா' என்னும் கவிதையில் பின்வருமாறு பாடுகின்றார். "குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு/மேன்மையுறக் குடிமை நீதி/கடியன்றெழுந்தது பார் குடியரசென்று/உலகறியக் கூறிவிட்டார் அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது/அடிமையில்லை அறிக என்றார்/இடிபட்ட சுவர் போலே கலி விழுந்தான்/ கிருதயுகம் எழுக மாதோ". இதன் மூலம் ருஷ்யப் புரட்சியினை இனங்கண்டுகொண்டு முதன்முதலாகப் பாடிய இந்தியக் கவிஞனென்ற பெருமையினையும் பாரதியாரே தட்டிக் கொள்கின்றார். பாரதியின் 'மாதர் விடுதலை' பற்றிய கவிதைகள், கட்டுரைகள், 'கியூசின்' என்னும் வீரமாதினைப் பற்றிய கட்டுரைகள், அம்மாதின் கவிதை மொழிபெயர்ப்புகள், புதிய ருஷ்யாவைப் பற்றிய கவிதை, 'செல்வம்', 'தொழிலாளர்' என்னும் தலைப்பிலான கட்டுரைகள், மற்றுமவர் தத்துவப் பாடல்கள் இவையாவுமே நமக்குக் கூறி நிற்பவை தானென்ன? பாரதி ஒவ்வொரு விடயத்தினைப் பற்றியும் பல்வேறுவகைப்பட்ட கருத்துகளையும் வெகு நுணுக்கமாகப் பரிசீலித்துள்ளாரென்பது மட்டுமல்ல, சமகாலத்து நடப்புகளையும் அறிந்துள்ளாரென்பதையும்தான்.
இன்றைய உலகில், முரணான பல்போக்குச் சிந்தனையாளர்கள் ஒவ்வொருவரும் தத்தமது பார்வைகளில் பாரதியினைக் கண்டு புளகாங்கிதமடைந்து கொள்கின்றார்கள். இந்நிலையில் பாரதியின் உண்மையான நிலைப்பாட்டினை அறிந்து கொள்ள முயல்வது மிகவும் அவசியம். இது பற்றிய அவனது முரண்பட்ட போக்குகளை, தேடலை அவனது எழுத்துகளினூடே அறிந்து கொள்ள முயலவதே சாலச் சிறந்தது.
'பாரத சமுதாயம்' என்னும் கவிதையில் அவன் பின்வருமாறு பாடுகின்றான்: "முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடமை./ஒப்பில்லாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை/ மனிதருணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ?/மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?/பலனில் வாழ்க்கை இனியுண்டோ?" இவ்விதம் பாரதியின் கவிதைகள் 'பொதுவுடமை'யினையும் 'சமத்துவத்தையும்' வரவேற்றுப் பாடுகின்றன. இவ்விதம் பொதுவுடமைக் கருத்தினை வரவேற்றும், ஆயுதம் தாங்கி நிகழ்த்தப்பட்ட ருஷ்யப் புரட்சியினையும் வரவேற்றுப் பாடிய பாரதியை மார்க்ஸியவாதிகள் புரட்சியினை , ஆயுதப் புரட்சியினை வரவேற்றிடும் ஒரு கவிஞனாக எண்ணி விடுகின்றார்கள். ஆனால் உண்மை இதுவா? பாரதியாரின் ஆவேசத்தினையூட்டிடும் சுதந்திரப்பாடல்களையும், பாப்பாப் பாட்டில் "பாதகஞ் செய்பவரைக் கண்டால் நாம்/பயங்கொள்ளலாகாது பாப்பா!/மோதி மிதித்து விடு பாப்பா! /அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா!" என்று பாடுவதையும் பார்த்துவிட்டு அவர் வன்முறையின் மூலம் தீர்வு காண்பதனையே விரும்புவதாக ஒரு சாரார் கருதிவிடுகின்றார்கள். ஆனால் இவை எல்லாவற்றையுமே தவிடு பொடியாக்கி விடுகின்றது பாரதியின் 'செல்வம்' என்ற கட்டுரை. அதில் அவர் பின்வருமாறு கூறுகின்றார்:
"ஏற்கனவே ருஷ்யாவில் ஸ்ரீமான் லெனின் ஸ்ரீமான் மிந்த்ரோஸ்கி முதலியவர்களின் அதிகாரத்தின் கீழ் ஏற்பட்டிருக்கும் குடியரசில் தேசத்து விளைநிலமும் பிற செல்வங்களும் தேசத்தில் பிறந்த அத்தனை ஜனங்களுக்கும் பொதுவுடமையாகி விட்டது. இக்கொள்கை ஜெர்மனியிலும்ஆஸ்த்திரேலியாவிலும்துருக்கியிலும் அளவற்ற வன்மை கொண்டு வருகின்றது. ருஷ்யாவிலிருந்து இது ஆசியாவிலும் தாண்டிவிட்டது. வட ஆசியாவில் பிரமாண்டமான பகுதியாக நிற்கும் சைபீரியா தேசம் ருஷ்யாவின் ஆதிக்கத்தைச் சேர்ந்ததால் அங்கும் இந்த முறைமை அனுஷ்டானத்திற்கு வந்து விட்டது. அங்கிருந்து இந்தக் கொள்கை மத்திய ஆசியாவிலும் பரவி வருகின்றது. ஐரோப்பாவிலுள்ள பிராண்ஸ் இங்கிலாந்து முதலிய வல்லரசுகள் இந்த முறைமை தம் நாடுகளுக்குள்ளும் பிரவேசித்து வரக்கூடும் என்று பயந்து அதன் பரவுதலைத் தடுக்குமாறு பலவிதங்களில் பிரயத்தனங்கள் புரிந்து வருகின்றார்கள். ஆனால் இந்த முறைமை போர் கொலை பலாத்காரங்களின் மூலமாக உலகத்தில் பரவிவருவது எனக்குச் சம்மதம் இல்லை. எந்தக் காரணத்தைக் குறித்தும் மனிதருக்குள்ளே சண்டைகளும் கொலைகளும் நடக்கக் கூடாதென்பது என்னுடைய கருத்து. அப்படியிருக்க ஸமத்வம், ஸகோதரத்துவம் என்ற தெய்வீக தர்மங்களைக் கொண்டோர் அவற்றைக் குத்துவெட்டு பீரங்கி துப்பாக்கிகளினால் பரவச் செய்யும்படி முயற்சி செய்தல் மிகவும் பொருந்தாத செய்கையென்று நான் நினைக்கின்றேன்.."இதே கட்டுரையில் இன்னுமோரிடத்தில் பாரதியார் பின்வருமாறு கூறுகின்றார்:" ..'கொலையாளிகளை அழிக்க கொலையைத் தானே கைக்கொள்ளும்படி நேருகின்றது. நியாயம் செய்வோரை அநியாயத்தாலேதான் அடக்கும்படி நேருகிறது' என்று ஸ்ரீமான் லெனின் சொல்லுகிறார். இது முற்றிலும் தவறான கொள்கை. கொலை கொலையை வளர்க்குமே ஒழிய அதை நீக்க வல்லதாகாது. அநியாயம் அநியாயத்தை விருத்தி பண்ணுமேயழிய குறைக்காது. பாபத்தை புண்ணியத்தாலே தான் வெல்ல வேண்டும். பாபத்தை பாபத்தால் வெல்லுவோம் என்பது அறியாதவர் கொள்கை..." இவ்விதமாகக் கூறுமவர் இன்னுமோரிடத்தில் பின்வருமாறு கூறுகின்றார்:"மேலும் ருஷ்யாவிலுங்கூட இப்போது ஏற்பட்டிருக்கும் 'ஸோஷலிஸ்ட்' ராஜ்யம் எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையதென்று கருத வழியில்லை. சமீபத்தில் நடந்த மஹாயுத்தத்தால் ஐரோப்பிய வல்லரசுகள் ஆள்பலமும் பணபலமும் ஆயுதபலமும் ஒரேயடியாகக் குறைந்து போய் மஹாபலஹீனமான நிலையில் நிற்பதை ஒட்டி மிஸ்டர் லெனின் முதலியோர் ஏற்படுத்தியிருக்கும் 'கூட்டு வாழ்க்கை' குடியரசை அழிக்க மனமிருந்தும் வலிமையற்றோராகி நிற்கின்றனர். நாளை இந்த வல்லரசுகள் கொஞ்சம் சக்தியேறிய மாத்திரத்தில் ருஷ்யாவின் மீது பாய்வார்கள். அங்கு உடமை இழந்த முதலாளிகளும் நிலஸ்வான்களும் இந்த வல்லரசுகளுக்குத் துணையாக நிற்பர். இதனின்றும் இன்னும் கோரமான யுத்தங்களும் கொலைகளும் கொள்ளைகளும் ரத்தப் பிரவாகங்களும் ஏற்பட இடமுண்டு...".இவை எவற்றை எமக்கு உணர்த்தி நிற்கின்றன. ஒன்றினை மட்டும் அவை எமக்கு வெகுதெளிவாகவே உணர்த்தி நிற்கின்றன. அதாவது பாரதியார் பொதுவுடமைச் சமுதாயத்தினை ருஷ்ய அமைப்பு முறையினை வரவேற்றிடுகின்றார். ஆனால் ருஷ்யப் புரட்சி நிகழ்ந்த முறையினைத் தான் வரவேற்றிடவில்லை. அதே சமயம் ருஷ்ய நாட்டினைக் கொடுங்கோலன் ஜார் வருத்தி வந்திட்ட முறையினைக் கண்டு மனம் வெதிர்த்திட்ட பாரதியார் அக்கொடுங்கோலனின்றும் ருஷ்ய மக்களை விடுவித்த புரட்சி என்பதற்காக ருஷ்யப் புரட்சியினைப் பாராட்டிய போதும் வன்முறைப் புரட்சியினை அவர் மனம் ஒப்பவில்லை. அதே சமயம் 'ருஷ்யாவின் விவாக விதிகள்' என்னும் கட்டுரையில் அவர் பின்வருமாறு எழுதுகின்றார்:
"..போல்ஷிவிக் ஆட்சி ஏற்பட்ட காலத்திலே அதற்குப் பலவகைகளிலும் தோஷங்கள் கற்பிப்பதையே தம் கடமையாகக் கருதியவ்ர்களிலே சிலர் அதன் மீது ராஹரீக நெறிகளிலே குற்றங்கள் சுமத்தியது போதாதென்று, போல்ஷிவிஸ்ட் கட்சியார் ஸ்திரீகளையும் பொதுவாகக் கொண்டு ஒருத்தியைப் பலர் அனுபவிக்கிறார்களென்ற அபாண்டமான பழி சுமத்தப்பட்டது. ஆனால் 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு'. ஒன்பதாம் நாள் உண்மை எப்படியேனும் வெளிப்பட்டுவிடும். ஒரு பெரிய ராஜ்ஜியத்தைக் குறித்து எத்தனை காலம் பொய் பரப்பிக் கொண்டிருக்க முடியும்? சில தினங்களின் முன்பு இங்கிலாந்து தேசத்தில் மாஞ்செஸ்டர் நகரத்தில் பிரசுரஞ் செய்யப்படும் 'மாஞ்செஸ்டர் கார்டியன்' என்ற பத்திரிகை நவீன ருஷ்யாவின் விவாக விதிகளைப் பற்றிய உண்மையான விபரங்களைப் பிரசுரஞ் செய்துள்ளது. அவற்றைப் பார்க்கும்போது நவீன ஐரோப்பிய நாகரிகம் என்று புகழப்படும் வஸ்த்துவின் நியாயமான, உயர்ந்த பக்குவநிலைமை மேற்படி போல்ஷிவிஸ்ட் விவாக சம்பிரதாயங்களில் எய்தப்பட்டிருக்கின்றதென்று தெளிவாக விளங்குகின்றது. ஆன்பெண் இருபாலாரும் பரிபூர்ண ஸமானம் என்ற கொள்கைக்கு பங்கம் நேரிடாதபடி விவாகக் கட்டை சமைக்க வேண்டும் என்பதே ஐரோப்பிய நாகரிகத்தின் உண்மையான நோக்கம். ..அந்த வகையில் பார்த்தால் ஐரோப்பாவின் இதரபகுதிகளைக் காட்டிலும் நவீன ருஷ்யா உயர்ந்த நாகரிகம் பெற்றுள்ளதென்பது ப்ரத்யஷமாகத் தெரிகிறது..."இவையெல்லாம் நமக்குக் காட்டி நிற்பவைதான் யாதோ? பாரதியார் புதிய ருஷ்ய சமுதாய அமைப்பினை வரவேற்றிடுகின்றார் என்பதையல்லவா?..சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை ஆவேசத்துடன் கண்டித்த பாரதியை நவீன ருஷ்ய அமைப்பு முறை கவர்ந்திட்ட போதிலும் அது ஏற்பட்ட வழியினை அவனால் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டிட முடியவில்லை. அதனால் தான் இவ்விடயம் பற்றிய அவனது கேள்விகள் தேடல் ஆகியன அவனது பல்வேறு கட்டுரைகளில் வெளிப்பட்டு நிற்கின்றன. அதே சமயம் மேற்படி கட்டுரைகள் அவன் தன் மனதுக்கேற்ற வழியில் இவற்றிற்கான தீர்வுகள் பற்றிச் சிந்தித்திருப்பதையும் புலப்படுத்தி நிற்கின்றன. உதாரணமாக அவனது 'செல்வம்; என்ற கட்டுரையில் பின்வருமாறு அவன் கூறுவான்: "..முதலாவது இந்தியாவிலுள்ள நிலச்சுவான்களும் முதலாளிகளும் ஐரோப்பிய முதலாளிகள் நிலச்சுவான்களைப் போல் ஏழைகளின் விஷயத்தில் அத்தனை அவமதிப்பும் குரூர சித்தமும் பூண்டோரல்லர். இவர்களுடைய உடமைகளைப் பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. அதற்கு நம் தேசத்திலுள்ள ஏழைகள் அதிகம் விரும்பவும் மாட்டார்கள். எனவே கொள்ளைகளும், கொலைகளும், சண்டைகளும் பலாத்காரங்களுமில்லாமல் ஏழைகளுடைய பசி தீர்ப்பதற்குரிய வழியைத் தான் நாம் தேடிக் கண்டு பிடித்து அனுஷ்டிக்க முயல வேண்டும். செல்வர்களுடைய உடமைகளைப் பலாத்காரமாகப் பறித்துக் கொள்ள முயலுதல் இந்நாட்டிலே நான் மேற்கூறியபடி பொருந்தவும் செய்யாது. ஸாத்தியமும் இல்லை.."மேலுள்ள பாரதியாரின் கூற்றினை வாசிப்பவர் பாரதியாரின் முரண்பட்ட போக்கினை வெகு இயல்பாகவே விளங்கிக் கொண்டிட முடியும். பொதுவுடமையினைப் போற்றிப் பாடிடும் பாரதியார், நவீன் ருஷ்யாவினை, அதன் அமைப்பு முறையினை, அங்குள்ள பெண்களின் நிலையினை வரவேற்ற பாரதியார் "இவர்களுடைய உடமைகளைப் பிடுங்க வேண்டுமென்றால் நியாயமாகாது. .."என்று கூறுவது 'தனியுடமை'யை ஆதரிப்பதாகுமன்றோ எனக் கேட்கலாம். ஆனால் இன்னுமோரிடத்தில் "செல்வர்களுடைய உடமைகளைப் பலாத்காரமாகப் பறித்துக் கொள்ள முயலுதல் இந்நாட்டிலே நான் மேற்கூறியபடி பொருந்தவும் பொருந்தாது.." என்று கூறுவது மறைமுகமாகக் கூறி நிற்பது தானெது? செல்வர்களுடைய உடமைகளைப் பலாத்காரமாகப் பறித்துக் கொள்ள முயலுதல் கூடாது. ஆனால் அமைதியானதொரு வழியில் இதற்கான தீர்வு காணப்படலாம் என்பதைத்தானே. ருஷ்யப் புரட்சியினை வரவேற்கும் பாரதி, அங்குள்ள பெண்கள் நிலையினை வரவேற்கும் பாரதி ஆயுதப் புரட்சி விடயத்தில் மிகவும் தடுமாற்றத்துடன் காணப்படுவதை மேற்படி கூற்றுகளால் அவதானிக்க முடிகிறது. இத்தகையதொரு தடுமாற்றத்தின் விளைவினை அவனது 'தொழிலாளர்' என்னும் கட்டுரையிலும் காணக்கூடியதாகவிருக்கிறது. அதிலோரிடத்தில் அவன் பின்வருமாறு கூறுவான்: "..எனவே இந்தியாவில் முதன் முதலாக தொழிலாளர் கிளர்ச்சி தோன்றியிருக்கும் இந்தச் சமயத்தில் நம்முடைய ஜனத் தலைவர்கள் முதலாளிகள் தொழிலாளிகள் என்று இருதிறத்தாரையும் ஆதரவுடன் கலந்து புத்தி சொல்லி மனஸ்தாபங்களை ஏறவொட்டாதபடி முளையிலே கிள்ளிவிட முயற்சி செய்யவேண்டும். தொழிலாளரை முதலாளிகள் இகழ்ச்சியுடன் கருதி நடத்துவதை உடனே நிறுத்துவதற்குரிய உபாயங்கள் செய்ய வேண்டும்...ஆரம்பத்திலேயே நாம் இதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்யாவிடின் நாளடைவில் ருஷ்யாவிலுள்ள குழப்பங்களெல்லாம் இங்கு வந்து சேர ஹேது உண்டாய்விடும்... ருஷ்யாவில் சமீபத்திலே அடுக்கடுக்காக நிகழ்ந்து வரும் புரட்சிகளின் காரணத்தால் அவ்விடத்து சைனியங்களில் பெரும்பகுதியார் தொழிற்கட்சியையும் அபேதக் கொள்கைகளையும் சார்ந்தோராய் விட்டனர். இதனின்றும் அங்கு ராஜ்யாதிகாரம் தொழிற்கட்சிக்குக் கிடைத்து விட்டது. தேசத்து நிதியனைத்தையும் சகல் ஜனங்களுக்கும் பொதுவாகச் செய்து எல்லோரும் தொழில் செய்து ஜீவிக்கும்படி விதித்திருக்கின்றார்கள். தேசத்துப் பிறந்த ஸர்வஜனங்களுக்கும் தேசத்து செல்வம் பொது என்பது உண்மையாய் விடில், ஏழைகள் செல்வர் என்ற வேற்றுமையினால் உண்டாகும் தீமைகள் இல்லாமல் போகும்படி ஸகலரும் தொழில் செய்துதான் ஜீவிக்க வேண்டும் என்ற விதி வழங்குமானால் தேசத்துத் தொழில் மிகவும் அபிவிருத்தியடைந்து ஜனங்களின் சேஷமமும் சுகங்களும் மேன்மேலும் மிகுதியுறும். எனவே ருஷ்யாவிலுள்ள அபேவாதிகளுடைய கொள்கைகள் அவ்வளவு தீங்குடையனவல்ல. ஆனால் அவற்றை வழக்கப்படுத்தும் பொருட்டு அவர்கள் நாட்டில் ஏற்படுத்தியிருக்கும் தீராச்சண்டையும் அல்லலுமே தீங்கு தருவனவாம். ருச்க்யக் கொள்கைகள் இப்பொழுது அனுஷ்டிக்கப்படும் ருஷ்யமுறைகளின்படி உலகத்தில் ஸ்தாபனம் பெற்று வெற்றி பெற வேண்டுமானால் அதற்குள்ளே முக்காற்பங்கு ஜனம் கொலையுண்டு மடிந்து போவார்கள். வெளிநாட்டுப் போர் அத்தனை பெரிய விபத்தன்று. நாட்டுக்குள்ளேயே செல்வர்களும், ஏழைகளும், ஒருவரையருவர் வெடிகுண்டுகளாலும், துப்பாக்கிகளாலும், பீரங்கிகளாலும், தூக்குமரங்களாலும் கொல்லத் தொடங்குவார்களாயின் அது தீராத தொல்லையாய் விடுமன்றோ?"
இவையெல்லாம் வெளிப்படுத்தி நிற்பவைதான் யாதோ? இவற்றில் காணப்படும் பாரதியின் தடுமாற்றம் நமக்கு உணர்த்துவதுதானெதுவோ? சமுதாயப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ருஷ்யாவின் கோட்பாடுகளை ஓரளவுக்கு பாரதியார் ஏற்றுக் கொள்கின்றார். ஆனால் அதனை அடைவதற்கு ருஷ்யா கைக்கொள்ளும் ஆயுதப் புரட்சியினையும், பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரத்தினையும் தான் அவரால் ஏற்றுக் கொண்டிட முடியவில்லை. இந்த எதிர்ப்பின் விளைவே அவரது கற்பனாவாத சோஸலிசமான 'ஏழை', 'பணக்காரன்', 'தொழிலாளி', 'முதலாளி' ஆகியோருக்கிடையிலான இணக்கம் பற்றிய கோட்பாடுகள். இதன் காரணமாகவே செ.கணேசலிங்கன் 'பாரதி கண்ட கனவுப் பெண்' என்னும் கட்டுரையில் கூறுவதைப் போல் ('மேகம்', நவம்பர்-டிஸம்பர் 1982) பாரதியின் போக்கு இந்திய தேசிய முதலாளிகளின் புரட்சியோடு ஒன்றி நிற்பது போல் படுகிறது. ஆனால் உண்மையில் பாரதி முதாளித்துவப் புரட்சியன்றினை எதிர்பார்த்திடவில்லை என்பதைத் தான் அவரது 'சுதந்திரப்பள்ளு' , 'விடுதலை', 'பாரத சமுதாயம்' போன்ற கவிதைகள் புலப்படுத்தி நிற்கின்றன. [ அதே சமயம் மானுடத்தின் முழுவிடுதலை பற்றியும் பாரதி பெரிதும் சிந்தித்திருக்கின்றானென்பதையும் அவனது படைப்புகள் நமக்குப் புலப்படுத்தி நிற்கின்றன. மானுடத்தின் முழுவிடுதலை அகவிடுதலயினைப் பெறுவதன் மூலம், மனிதர் இயற்கையுடன் இணக்கமாக வாழ்வதன் மூலம் மட்டுமே பெற முடியும் என்று அவன் கருதுவதையே அவனது 'சர்வமத ஸ்மரஸம்' , 'தாய்மாண்பு', 'அன்பு செய்தல்' முதலான கவிதைகள் உணர்த்தி நிற்கின்றன. ஆனால் பாரதியின் இந்த நிலைப்பாடு விரிவாக ஆராயப்படவேண்டியதொன்று]. அதே சமயம் மேற்படி கட்டுரையில் செ.கணேசலிங்கன் பாரதியின் இந்தப் போக்குக்குக் காரணம் பற்றிக் குறிப்பிடும் பொழுது "..விஞ்ஞான பூர்வமான சோஸலிசத்தைப் பாரதி அறிந்திருக்கவில்லை. சோஸலிச அமைப்பில் சாதி, சமய, பெண்ணடிமைத்தனப் பேதங்கள் எப்படி முழுமையாக நீக்கப்படும் என்பதை அவன் தெரிந்திருக்கவில்லை.." என்றும் கூறுவார். இவ்விதமாக 'மார்க்ஸியக்' கோட்பாடுகளைப் பற்றிய பூரண அறிவினை பாரதியார் அடையமுடியாமலிருந்ததற்கு அன்றைய சூழ்நிலை காரணமாகவிருக்கலாம். மார்க்ஸியக் கோட்பாடுகள் சம்பந்தமான போதிய நூல்கள் அவரது கைகளுக்குக் கிடைக்காமல் போயிருந்திருக்கலாம். கிடைத்திருந்தால் அவர் மான்செஸ்டர் கார்டியன் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளை விரிவாக ஆராய்ந்ததைப் போல் நிச்சயம் அக்குவேறு ஆணிவேறாக ஆராய்ந்திட முயன்றிருப்பார். 'வரலாற்றுப் பொருள்முதல்வாதம்' பற்றியெல்லாம் விரிவாக ஆராய முயன்றிருப்பார். அவ்விதமெல்லாம் அவர் செய்யாததற்கு செ.க. கூறுவது போல் பாரதியாருக்கு அவ்விடயங்களில் பூரண விளக்கமில்லாமல் இருந்திருப்பதே காரணமாக இருந்திருக்கக் கூடும். இந்நிலையில் அவர் தன் அறிவுக்கெட்டிய வகையில் முதலாளி தொழிலாளிகளுக்கிடையிலான இணக்கத்தைத் தீர்வாகக் கொண்ட கற்பனாவாத சோசலிச அமைப்பென்ற தீர்வுக்கு வந்திருக்கலாம். அதற்கு மாறாக அவர் மார்க்ஸியத் தத்துவஙக்ளையெல்லாம் விரிவாக அறிந்துள்ள நிலையில் மேற்படி முடிவுக்கு வந்திருந்தால் செ.க.கூறுவதைப் போல் அவரை இந்திய முதலாளிகளின் புரட்சியுடன் ஒன்றியிருந்த ஒருவராகக் கருத முடியும். மாறாக மார்க்ஸியத் தத்துவம் பற்றிய பூரணமான விளக்கமற்ற நிலையில், அவர் வாழ்ந்த இந்தியச் சூழ்நிலைகளின் விளைவாக அவர் வந்தடைந்த தீர்வே அவரது ஏழை/பணக்காரன், முதலாளி/தொழிலாளி ஆகியோருக்கிடையிலான இணக்கம் பற்றிய கற்பனாவாத சோஸலிசத் தீர்வு [ ஏனென்றால் பொதுவுடமையினை, ருஷ்ய அமைப்பு முறையினை அவர் வரவேற்கின்றார்]. இந்நிலையில் பாரதி ஒரு மார்க்ஸியவாதியா என்னும் கேள்வியே அர்த்தமற்றதொரு கேள்வி. ஆனால் பாரதியின் மேதமை அவரது காலகட்டச் சூழலுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில்தான் எத்தனை மகத்தானதென்று புலப்படும். அதனை விட்டுவிட்டு இன்றைய சூழலிலிருந்து கொண்டு, தான் வாழ்ந்த சூழலை மீறிச் சிந்தித்த, வாழ்ந்த பாரதியை செ.க. முதலியோர் அலசுவது போல் அலசுவது பயனற்றது. உண்மையில் பாரதியார் அன்றையச் சூழலில் 'ருஷ்யா'வை பற்றித் தனது நோக்கினத் திருப்பியதும், பெண்களின் நிலை பற்றிய பிரச்சினையில் ரஷ்ய, ஐரோப்பிய முறைகள் பற்றிய ஆய்வினை நடத்தியதும், இந்திய தத்துவ நூல்களை விரிவாக ஆராய்ந்ததும், 'நிற்பதுவே நடப்பதுவே' என்னுங் கவிதையில் பொருள்முதல்வாத/கருத்து முதல்வாதத் தத்துவங்களையிட்டு ஆராய விளைந்ததும், தீண்டாமை/பெண் விடுதலை பற்றிச் சூழலை மீறிச் சிந்தித்ததும்..இவை யாவுமே மகத்தான விடயங்களாகும். அவர் வாழ்ந்த சூழலில் அந்த அளவுக்குச் சூழலை மீறிச் சிந்தித்ததே மாபெரும் அற்புதமெனலாம். இதுவே சரியான நிலைப்பாடாகப் படுகிறது.
-வ.ந.கிரிதரன்-

[பாரதியார் நினைவாக இக்கட்டுரை பிரசுரமாகின்றது. முதன் முதலில் இக்கட்டுரை 4/2/1983 இல் எழுதப்பட்டது. இதனைத் தழுவிய இன்னுமொரு கட்டுரை 'தேடல்' இதழில் பிரசுரமானது.]

பாரதியும், ஐரோப்பிய பெண்களும், கட்டுப்பாடற்ற காதலும்

ஒரு சில ஆய்வாளர்கள் பாரதி ஐரோப்பியப் பெண்களை விடுதலை பெற்ற பெண்களாகக் கருதியதாகவும் அதன் மூலம் அவனால் பால் கவர்ச்சியையே விற்பனைப் பண்டமாகப் பயன்படுத்தும் முதலாளித்துவத்தை அறிய முடியவில்லையென்றும் கருதுகின்றார்கள். இது மிகவும் தவறான கூற்று. உண்மையில் பாரதி அப்படித்தான் கருதியிருந்தானாவென்றால் அதுதானில்லை. அவனது 'மாதர்' தொகுதியிலுள்ள 'நவீன ருஷ்யாவில் விவாக விதிகள்' என்ற கட்டுரை இதனைத்தான் விளக்கி நிற்கின்றது. "ஆண்,பெண் இருபாலாரும் பரிபூர்ண சமத்துவ நிலைமையுடையோர். இங்ஙனம் இரு பாலாரும் முற்றிலும் சமானம் என்ற கொள்கைக்குப் பங்கம் நேரிடாதபடி விவாகக் கட்டைச் சமைக்க வேண்டுமென்பதே ஐரோப்பிய நாகரீகத்தின் உண்மையான நோக்கம்" என மேற்படி கட்டுரையில் ஓரிடத்தில் ஐரோப்பிய நாகரீகத்தின் சமவுரிமை பற்றிய நோக்கு பற்றிக் குறிப்பிடும் பாரதி மேற்படி கட்டுரையில் இன்னுமோரிடத்தில் பின்வருமாறு கூறுகின்றான்.
"...அவற்றைப் பார்க்கும் போது நவீன ஐரோப்பிய நாகரீகம் என்று புகழப்படும் வஸ்துவின் நியாயமான, உயர்ந்த பக்குவ நிலமை மேற்படி போல்?¢வி?ட் விவாக சம்பிரதாயங்களீல் எய்தப்பட்டிருகிறதென்று தெளிவாக விளங்குகின்றது... பெண்களிற்கு விடுதலை தாங்கள் வேறுபல ?¡தியர்களைக் காட்டிலும் அதிகமாகக் கொடுத்திருப்பதே தாம் நாகரீகத்தில் உயர்ந்தவர்களென்பதற்கு முக்கியமான அடையாளங்களில் ஒன்றாமென்று ஐரோப்பியர்கள் சொல்லுகிறார்கள். அந்த வகையில் பார்த்தால், ஐரோப்பாவின் இதர பகுதிகளைக் காட்டிலும் நவீன ரஷ்யா உயர்ந்த நாகரீகம் பெற்றுள்ளதென்பது ப்ரத்யட்மாகத் தெரிகின்றது..."இவையெல்லாம் விளக்கி நிற்பவை தானென்ன? 'ஆணிற்குப் பெண்நிகர்' என்னும் கருத்தை வலியுறுத்தும் ஐரோப்பிய நாகரீகத்தின் நோக்கினை வரவேற்றாலும், உண்மையிலேயே ஐரோப்பாவின் ஒருபகுதியான நவீன ரஷ்யாவிலேயே பெண்களின் நிலமை சிறப்பாகவிருப்பதாக அவன் கருதுகின்றான். இதனையே மேற்படி கட்டுரையின் இறுதிப் பகுதியில் வரும் பின்வரும் பகுதி உறுதிப்படுத்துகின்றது. "..இப்படிப்பட்ட நம்முடைய ஸ்திரிகளின் நிலைமையை நவீன ருஷ்யாவில் ஸ்திரிகளின் விடயமாக ஏற்பட்டிருக்கும் சட்டங்களூடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அப்போதுதான் நம்மை ஐரோப்பிய நாகரீகம் எந்தச் சக்தியினாலே கீழே வீழ்த்திறென்பதும், எந்த அம்சங்களில் நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் வழியைப் பின்பற்றத் தகும் என்பதும் தெளிவுறப் புலப்படுத்தும். நாம் ஐரோப்பியர் காட்டும் நெறிகளை முற்றிலுமே கைப்பற்றிக் கொள்ளுதல் அவசியமில்லை... 'ஆண்களிற்கும் பெண்களிற்கும் எவ்விதத்திலும் வேற்றுமை கிடையாது. இருபாலாரும் சமானமாகவே கருதப்படுவார்கள்' என்று ரு?யச் சட்டம் கூறுமிடத்திலே நாம் ஐரோப்பிய நாகரீகத்தின் கருத்தை அனுசரித்தல் மிக, மிக,மிக அவசரம்."இவற்றிலிருந்து இறுதியாக நாம் வந்தடையக் கூடிய முடிவுகள் இவைதான்: ஆண்-பெண் சமவுரிமை பற்றிய ஐரோப்பிய நாகரீகத்தின் நோக்கினை வரவேற்ற போதிலும் பாரதி ஐரோப்பாவின் இன்னுமொரு பகுதியான நவீன ருஷ்யாவிலேயே மேற்படி நோக்கம் நிறைவேற்றப் பட்டுள்ளதாகக் கருதுகின்றானே தவிர ஒரு சில ஆய்வாளர்கள் கருதுவது போல் ஐரோப்பாவின் முதலாளித்துவ நாடுகளைச் சேர்ந்த பெண்களை நிச்சயமாக பாரதி விடுதலை பெற்ற பெண்களாகக் கருதவில்லையென்பதே. மேற்படி ஆய்வாளர்கள் விட்ட பிழைக்குக் காரணம் நவீன ரு?யாவை ஐரோப்பாவின் ஒருபகுதியாகக் கருதாமல் முதலாளித்துவ ஐரோப்பாவையே ஐரோப்பாவாகக் கருதியது தான். பாரதி ரு?யாவில் நிலவிய ஆண்-பெண் சமவுரிமை சம்பந்தமான சட்டங்களைப் புகழும்போது அதனை ஐரோப்பிய நாகரீகத்தின் உயர்ந்த வடிவமாகக் கொள்வதை மேற்படி ஆய்வாளர்கள் தவறாக விளங்கி விட்டனர் போலும். அதே சமயம் பாரதி ஐரோப்பிய நாடுகளில் வாழும் பெண்களிடையே நிலவிய 'கட்டுபாடற்ற காதல்' போன்ற கோட்பாடுகளைப் பலமாக எதிர்க்கவும் தவறவில்லை. 'விடுதலைக் காத'லென்ற அவனது 'சுயசரிதை'க் கவிதையில் வரும் பின்வரும் பகுதி கூறுவதென்ன?
"காதலிலே விடுதலையென்றாங்கோர் கொள்கை கடுகி வளர்ந்திடுமென்பார் யூரோப்பாவில். மாதரெல்லாம் தம்முடைய விருப்பின் வண்ணம் மனிதருடன் வாழ்ந்திடலாம் என்பார் அன்னார். பேதமின்றி மிருகங்கள் கலத்தல் போலே பிரியம்வந்தால் கலந்தன்பு பிரிந்துவிட்டால் வேதனையன்றில்லாதே பிரிந்து¢ சென்று வேறொருவன் தனைக் கூட வேண்டும் என்பார். 'வீரமிலா மனிதர் சொலும் வார்த்தை கண்டீர். விடுதலையாம் காதலெனில் பொய்மைக்காதல்'.பாரதி உண்மையிலேயே ஒரு அபூர்வமான மனிதன். மனித சமுதாயத்தைப் பாதிக்கும் சகல விடயங்களைப் பற்றியும் அவன் தன் கவனத்தைத் திருப்பியிருக்கின்றான். இயற்கை,சமுதாயம்,அரசியல்,தத்துவம்,பெண்விடுத¨லை,வறுமை,மக்கள் விடுதலையென்று அவன் பாடாத துறையென்று எதுவுமேயில்லை. பெண்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த பாரதியால் 'கட்டுப் பாடற்ற காதல்' போன்ற கருத்துக்களை ஏற்க முடியவில்லை. சமுதாயத்தில் அடிமைகளாக வாழும் பெண்கள் ஆண்களைப் போல் சமவுரிமை பெற்றவர்களாக வாழ வேண்டுமென்பதில் பாரதி தீவிரமாகயிருக்கின்றான். அவனது கவிதைகள் பால்ய விவாகம் போன்ற கொடுமைகளை எதிர்க்கின்றன. பெண்களின் கல்விக்காக அவனது கவிதைகள் குரல் கொடுக்கின்றன. விதவைகளின் மறுமணத்தை அவை வரவேற்கின்றன.அதே சமயம் 'கற்பை'ப் பற்றி வலியுறுத்தும் போது அதனை ஆண்-பெண் இருவரிற்குமே பொதுவாக வைக்கும் பாரதி , ஒருவனிற்கு ஒருத்தியென்ற ஒருதார மணமுறையையே பலமாக ஆதரிக்கின்றான்.இதனால் தான் அவனால்
"காதலொருவனைக் கைப்பிடித்தே, அவன் காரியம் யாவினும் கைகொடுத்து, மாதரறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழ்வமடி."என்று 'பெண்கள் விடுதலைக் கும்மி'யில் கும்மியாட முடிகின்றது.

-வ.ந.கிரிதரன்-

பாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு! -வ.ந.கிரிதரன்-

தத்துவஞானிகள் மண்டைகளைப் போட்டுக் குடைந்துகொண்டிருக்கும் தத்துவ மோதல்களிற்கு இன்றுவரை சரியானதொரு தீர்வில்லை. 'இவ்வுலகம், இங்கு வாழும் ஜீவராசிகள், இப்பிரபஞ்சம் எல்லாமே அவன் விளையாட்டு. அவனின்றி அவனியில் எதுவுமேயில்லை' என்று சமயம் கூறும். இதனைக் கருத்துமுதல் வாதம் என்போம். நம்புபவர்கள் 'கருத்து முதல்வாதிகள்'. இவர்கள் 'சிந்தனை, புலனுணர்வு என்பவை ஆன்மாவின் செயலென்றும், இவ்வான்மாவானது அழியாதது, நிரந்தரமானது' என்றும், 'இவ்வுலகு, இயற்கை யாவுமே சக்தியின் விளைவு' என்றும் கூறுவார்கள். அதுமட்டுமல்ல 'இவ்வுலகமென்பது (காண்பவை, செயல்கள் எல்லாமே) சிந்தனையின் அதாவது உணர்வின் விளைபொருளே' என்றும் கூறுவார்கள். ஆனால் இதற்கு மாறான கருத்துள்ள தத்துவஞானம் 'பொருள் முதல்வாதம்' எனப்படுகின்றது. இதனை நம்புபவர்கள் 'பொருள்முதல்வாதிகள்' எனப்படுவர். இவர்கள் கருத்துப்படி 'ஆன்மா நிலையானது, அழிவற்றது' என்பதெல்லாம் வெறும் அபத்தம். கட்டுக்கதை. சிந்தனை என்பது பொருள் வகை வஸ்த்துவான மூளையின் செயற்பாடே. நிலையாக இருப்பது இந்த இயற்கை (பொருள்) ஒன்றே'. இவ்வுலகினின்றும் வேறாகத் தனித்து ஒரு சக்தி இருக்கின்றது என்பதை எதிர்க்கும் இவர்கள் 'அப்படி எதுவுமில்லை' என்கின்றார்கள். 'இவ்வியற்கையில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களே உயிரினங்கள் உருவாகக் காரணம்' என்கின்றார்கள். நவீன இயற்கை விஞ்ஞானத்தை இவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள்.
இந்நிலையில் பாரதியை ஆராய்வோமாகில் அவனும் இந்தப் பிரச்சினையை அசட்டை செய்து விடவில்லை என்பதைக் கண்டு கொள்ளலாம். பாரதியின் கீழுள்ள கவிதை வரிகள் அவனை ஒரு கருத்து முதல்வாதியாகக் காட்டுகின்றன.
'அல்லா' என்ற கவிதையில் பாரதி பின்வருமாறு பாடுகின்றான்.

"..பல்லாயிரம் பல்லாயிரம் கோடியண்டங்கள் எல்லாத்திசையிலுமோரெல்லையில்லா வெளிவானிலே நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்..'

'மகாசக்தி வாழ்த்து' என்னும் கவிதையில் அவன் கூறுவதோ?

"..விண்டுரைக்க அரிய அரியதாய் விரிந்த வானவெளியென நின்றனை. அண்ட கோடிகள் வானிலமைத்தனை அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை. மண்டலத்தை அணு அணுவாக்கினால் வருவதெத்தனை யோசனை கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை கோலமே! நினைக் காளியென்றேத்துவேன்.."

மேலுள்ள பாடல் வரிகள், மற்றும் பாரதியின் அனேக தெய்வப் பாடல்கள் கூறுவதென்ன? இந்த உலகம், இந்தப் பிரபஞ்சம் யாவற்றையும் ஆக்கியது ஒரு சக்தி , அதுவே கடவுள் என்பதையல்லவா? ஆனால் இவ்விதம் இயற்கைக்கு வேறாக ஒரு கடவுளைப் படைக்கும் கருத்து முதல்வாதியாக விளங்கும் பாரதியால் , கண்ணெதிரே தெரியும் காட்சிகளை, அவற்றின் உண்மையினைக் கருத்து முதல்வாதிகளைப் போல் மாயை என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியவில்லை. பொருள் உண்மையென்ற பொருள்முதல்வாதத்தினையும் மறுத்து விட முடியவில்லை. பாரதியின் 'உலகத்தை நோக்கி வினவுதல்' என்ற கவிதையினைப் பார்த்தால்....

"..நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனம் தானோ? பலதோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ? உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே! இளவெயிலே! மரச்செறிவே! நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறுங் காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப் போல் புதைந்தழிந்தே போனதினால் நானுமோர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?
காலமென்ற ஒரு நினைவும் காட்சியென்ற பல நினைவும் கோலமும் பொய்களோ? அங்கு குணங்களும் பொய்களோ?.."
இவ்விதமாகக் 'காண்பவை , கருதுபவை ' யாவுமே பொய்யோ எனக் கருத்து முதல்வாதிகளைப் போல் வினவும் பாரதியார் மேழுள்ள கவிதையின் இறுதியில் பின்வருமாறு முடிக்கின்றார்.
"..சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால், சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பீரோ?
காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதி கண்டோம். காண்பதல்லால் உறுதியில்லை. காண்பது சக்தியாம். இந்தக் காட்சி நித்தியமாம்..."


ஆரம்பத்தில் கருத்து முதல்வாதிகளைப் போல் வினவிய பாரதி , இறுதியில் பொருள் முதல்வாதியாக முடிக்கின்றான். அதனால் தான் கருத்து முதல்வாதிகளைப் போல் 'காண்பதெல்லாம் மாயை'யென்று முடிக்காமல் 'காண்பது சக்தியாம். இந்தக் காட்சி நித்தியமாம்' என்று முடிக்கின்றான்.
இவ்விதமாக பாரதி தனிக் கருத்து முதல்வாதியாகவும் இல்லாமல், தனிப் பொருள்முதல்வாதியாகவுமில்லாமல் , கருத்து முதல்வாதத்திற்கும் பொருள் முதல்வாதத்திற்குமிடையில் ஒருவித இணக்கமான போக்கினை, சமரசப் போக்கினைக் கைக்கொள்பவனாகக் காணப்படுகின்றான். உண்மையில் பாரதி 'அல்லா', 'மகாசக்தி வாழ்த்து' மற்றும் பல பக்திப் பாடல்களின் அடிப்ப்டையில் கருத்துமுதல்வாதியாகத் தென்பட்டாலும், 'உலகத்தை வினவுதல்' என்ற கவிதையினூடாக நோக்கும் போது மேலே கூறப்பட்டதைப் போல் இருவிதமான தத்துவவியற் போக்குகளுக்குமிடையில் ஒரு சமரசம் செய்பவனாகவே தென்படுகின்றான்.
உண்மையில் பாரதியிடம் காணப்படும் இத்தகைய முரண்பாடுகளெல்லாம் அவனது ஆர்வமிக்க, உலகை அறியும் நோக்கு மிக்க மனப் போக்குகளின் வளர்ச்சியின் வெளிப்பாடுகளே. இத்தகைய போக்கினையே அவனது 'சுயசரிதை' என்ற கவிதையின் பின்வரும் வரிகளும் புலப்படுத்துகின்றன.

"..மாயை பொய்யென முற்றிலும் கண்டனன். மற்றுமிந்த பிரமத்தினியல்பினை ஆய நல்லருள் பெற்றிலன். தன்னுடை அறிவினுக்கு புலப்படலின்றியே தேய மீதெவரோ சொலுஞ் சொல்லினைச் செம்மையென்று மனத்திடை கொள்வதாம் தீய பக்தியியற்கை வாய்ந்திலேன். சிறுது காலம் பொறுத்தினுங் காண்பமே.."

மாயை பொய்யெனக் கூறும் பாரதி, 'பிரமத்தின் இயல்பினை அறிய இன்னும் அருள் பெறவில்லை' என்று கூறும் பாரதி, 'அறிவிற்கு புலப்படாத எவற்றையும் நம்பும் தன்மையில்லாத பாரதி, அத்தகைய அறிவு நிலையினை அடையும் வரை பொறுப்பேன் என்கின்றான். இவ்விதமாக பாரதியின் அறிவுத் தாகமெடுத்து அலையும் மனதில் ஏற்பட்ட தர்க்கப் போராட்டத்தின் விளைவுகளே அவனது மேற்கூறப்பட்ட முரண்பாடுகளே தவிர வேறல்ல. இத்தகைய முரண்பாடுகள் அவனது மாபெரும் மேதைமையின் வளர்ச்சிப் படிக்கட்டுக்களே.

-வ.ந.கிரிதரன்-

பாரதியும் இஸ்லாமும் - மாலன்

" மாரியம்மனிலிருந்து மகாவிஷ்ணு வரை எல்லாக் கடவுள்கள் மீதும் பாடல்கள் எழுதுகிறார். வேதத்தைப் புகழ்கிறார். உபநிஷதங்களின் அடிப்படையில் புதுக் கவிதை படைக்கிறார். கீதையை மொழி பெயர்க்கிறார். ஒருவேளை பாரதியார் என்னைப் போல இந்துத்வா ஆளோ? இஸ்லாம் பற்றி என்ன சொல்கிறார் 'உங்க' பாரதியார்?" என்று வம்பளக்க வந்தார் என் பக்கத்து வீட்டுக்காரர். ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் நேரம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போரடிக்கத் துவங்கியிருக்க வேண்டும். வம்புக்கு அலையும் அவர் என் வாயைக் கிளற வந்திருந்தார். "சொல்கிறேன், சொல்கிறேன். ஆனால் சொன்னால், அதை உம்மால் தாங்க முடியுமா என்றுதான் எனக்குக் கவலை" "அப்படி என்ன ஐயா அதிர்ச்சி கொடுக்கப்போகிறீர்?" "சொல்லட்டுமா? சொல்வதைக் கேட்டுவிட்டு, என்னைத் திட்டினால் கூட பரவாயில்லை. பாரதியைத் திட்டினால் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டேன்" "சும்மா பூச்சி காட்டாதீரும். சொல்லும் அதையும்தான் கேட்போம்" "நீங்கள் தினமும் பூஜை செய்து, விழுந்து கும்பிடுகிறீர்களே, அந்தக் கடவுள், அல்லாதான் என்கிறார்" என்றேன். என் இந்து நண்பர் முகத்தை சுருக்கினார்.கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், " என்ன சொன்னீர் மறுபடி சொல்லும்" என்றார். "பிரம்மம், பிரம்மம் என்று நீங்கள், அதாவது இந்துக்கள், சொல்கிறீர்களே அந்த பிரம்மம் அல்லா என்கிறார் பாரதியார்." "நிஜமாவா? இல்லை நீர் கயிறு திரிக்கிறீரா?" நான் என் மேஜை மீதிருந்த தராசு என்ற புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அது பாரதியார் எழுதிய நூல்களில் ஒன்று: நேற்று பட்டணத்திலிருந்து ஒரு சாமியார் நம்ம கடைக்கு வந்திருந்தார்.அவர் சொன்னார்: ஹிந்துக்களுடைய வேதம் மிகவும் பழமையானது. அதிலும் நம்ம குரானைப் போல அல்லாவைத்தான் புகழ்ந்து பேசுகிறது. ஆனால் அல்லா என்கிறதற்கு அவர்களுடைய பாஷையிலே ப்ரஹ்ம என்கிறார்கள். அதில் ரிஷிகள் என்று பாடினவர்கள் அல்லாவினுடைய உண்மையை அறிந்தவர்கள்" பக்கத்து வீட்டுக்காரர் புத்தகத்தை வாங்கிப்பார்த்தார்." இது பாரதியாரின் ஒரு பாத்திரத்தின் கூற்று. இதை எப்படி பாரதியின் கூற்றாக எடுத்துக் கொள்ள முடியும்?" என்று கேள்வி போட்டார். என்னை மடக்கி விட்டதாக அவருக்கு ஒரு பூரிப்பு. "சரி, உமது திருப்திக்கு அப்படியே வைத்துக் கொள்ளும். ஆனால், அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய முகம்மதிய ஸ்திரீகளின் நிலமை என்ற கட்டுரையில், ' பரமாத்மாவான அல்லா ஹீத்த ஆலா அருள் புரிவாராக' என்று எழுதியிருக்கிறார். அது மட்டுமல்ல, இன்னொரு இடத்தில் இந்தியாவில் உள்ள இந்துக்கள் அக்பரை பூஜிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறாரே அதற்கு என்ன சொல்கிறீர்?" "இது என்ன புதுக் கதை?" "இது கதை அல்ல. கதை போன்ற நடையில் எழுதப்பட்ட கட்டுரைகளில் சொல்லப்படுவதையே பாத்திரத்தின் கூற்று என்று தள்ளிவிடுகிற ஆள் நீங்கள்.அதனால் பாரதியாரின் கட்டுரை ஒன்றிலிருந்து வாசித்துக் காட்டுகிறேன். அதை நீர் அவருடைய கூற்று அல்ல என்று மறுக்க முடியாது." "படியுமேன். கேட்போம்" "நமது நாட்டில் தோன்றி நமது நன்மைக்குப் பாடுபட்ட மகான்களை எல்லோரும் ஒன்று சேர்ந்து பூஜிப்பதே நமது கடமை. இதை நாமெல்லோரும் நமது முகமதிய சகோதரர்களுக்குக் காரியத்தில் காட்ட, அக்பர் போன்ற மகமதிய மகான்களின் உற்சவத்தைக் கொண்டாட வேண்டும்" "மதங்களிடையே சமரசம் நிலவ வேண்டும் என்ற கருத்தில் இதை சொல்லியிருப்பார். அக்பரை அவர் குறிப்பிட்டிருப்பதே அதற்குச் சான்று. அவர் இந்துக்களோடு நட்புப் பாரட்டியவர் அல்லவா?" " 'மகமதிய சாஸ்திரங்களைப் படித்தால் இந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்' என்கிறார் பாரதியார். அதையாவது நம்புவீரா?" "நீர் சொல்வதைப் பார்த்தால் கைவசம் ஆதாரம் வைத்திருக்கிறீர் என்று நினைக்கிறேன். எங்கே எடுத்து விடும் பார்ப்போம்" நான் படித்துக் காட்டினேன்:" எல்லா வித்தைகளும் கலந்தால்தான் தேசத்தினுடைய ஞானம் பரிமளிக்கும். கலந்தால் பொது இன்பம். ஒன்றை ஒன்று கடித்தால் இரண்டுக்கும் நாசம். முகமதிய சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்டால் ஹிந்துக்களுக்கு அறிவு விசாலப்படும்." "அதையெல்லாம் பாரதியார் படித்திருக்கிறாரா?" "படித்திருக்கிறார் என்பது மட்டுமல்ல. அவற்றைப் பற்றி சரளமாக, தெளிவாகப் பேசுகிறார். மதங்கள் பற்றிய கட்டுரைகளில் மட்டும் அல்ல, அரசியல் பேசும் போதல்ல, பொது விஷயங்கள் பேசும் போது கூட அவற்றைக் குறிபிடுகிறார். நம்பிக்கையே காமதேனு என்ற தலைப்பில் அவர் எழுதியிருப்பதைப் படியுங்கள். முகமது நபியின் வாழ்க்கை சரித்திரத்தை இத்தனை சுருக்கமாக தெளிவாக இஸ்லாமியர் அல்லாத இன்னொருவர் எழுத முடியுமா என்று வியந்து போவீர்: "பழைய பொய்ச் சிலைகளின் வணக்கத்தை ஒழித்து எங்கும் வியாபித்து நிற்கும் பிரம்மத்தையே தொழ வேண்டும் என்று முகமது நபி அலகிவஸ்லாம் அவர்கள் ஒரு புதிய மதம் உண்டாக்கினார் என்ற கோபத்தால், குராயிஷ் கூட்டத்தார் அவருடைய சிஷ்யர்களைப் பயமுறுத்தியும், கொலை செய்தும் அடக்கிவிட்டு நபியையும் கொல்ல வேண்டுமென்ற சதி செய்து கொண்டிருக்கையிலே அந்த மகான் மெக்கா நகரத்திலிருந்து தப்பி மெடீனா நகரத்திற்குச் செல்லும் போது, பின்னே அவரைப் பிடிக்கும் பொருட்டாகக் குராயிஷ் குதிரைப்படைத் துரத்திக் கொண்டு வந்தது. நபியானவர் தம்மோடு வந்த ஒரே சிஷ்யருடன், அங்கு ஒரு புதரில் ஒளிந்திருந்தார். துரத்தி வரும் குதிரைகளின் காலடி சமீபமாகக் கேட்டது. சிஷ்யன் பயந்து போய், "இனி என்ன செய்வது?" என்று தயங்கினான். அப்போது நபி, " அப்பா, நான் அல்லாவின் தர்மத்தை நிலை நிறுத்தும் பொருட்டாக வந்திருக்கிறேன். என் காரியம் நிறைவேறும் வரை எனக்கு மரணம் இல்லை." என்று சொல்லி அபயதானம் செய்தார். ஆபத்து வரவில்லை. குதிரைப்படையோர் இடம் தெரியாமல், ஏமாறித் திரும்பினார்கள். முகமது நபி பின்னிட்டுக் காலானுகூலம் பெற்று அந்த ராஜ்யத்துக்கெல்லாம் தானே ராஜேஸ்வரராய், தமது தரிசனத்தை என்றும் அழியாமல் நிலை நிறுத்திச் சென்றார். நம்பிக்கையே காமதேனு. அது கேட்டவரமெல்லாம் தரும்" "கட்டுரைகளில் ஆங்காங்கே இஸ்லாம் பற்றிக் குறிப்பிட்டுள்ள பாரதி, கவிதைகளிலோ, கதைகளிலோ இஸ்லாமியர்கள் பற்றி எழுதியிருக்கிறாரா?" பாரதியினுடைய முதல் சிறுகதையும், கடைசி சிறுகதையும் இஸ்லாமியர்களைப் பற்றியதாகவே அமைந்தது ஒரு தற்செயலான ஒற்றுமை. அவர் ஆசிரியராக இருந்த சக்ரவர்த்தினி என்ற பெண்கள் முன்னேற்றத்திற்கான இதழில், 1905ம் ஆண்டு நவம்பர் மாதம் அவரது முதல் கதை வெளியாயிற்று. துளசிபாயீ என்ற அந்தக் கதை உடன் கட்டை ஏற நிர்பந்திக்கப்பட்ட ஒரு ராஜபுத்திரப் பெண்ணை அப்சல்கான் என்ற முகமதிய இளைஞன் காப்பாற்றிக் காதலித்து மணம் செய்து கொள்வதைச் சொல்லும் கதை. இந்தக் கதை பிரசுரமாகிய காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் ஒரே மதத்திற்குள், ஒரே ஜாதிக்குள் காதல் என்பதே ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பாரதியாரோ, முரண்பட்டதாகக் கருதப்பட்ட இரு மதத்தைச் சேர்ந்தவர்கள் காதலிப்பது, ஒரு இந்து விதவையை இஸ்லாமிய இளைஞன் ஏற்று வாழ்வளிப்பது, உடன்கட்டை என்ற வழக்கத்தைக் கண்டிப்பது, ராஜபுத்ர வீரர்களோடு நடக்கும் சிறு சண்டையில் இந்து இளைஞன் ஒருவனின் தலை கொய்யப்படுவது என்று கதையை எழுதிக் கொண்டு போகிறார். அந்தக் காலகட்டத்தில் அது ஒரு புரட்சிகரமான கதையாகத்தான் இருந்திருக்க முடியும். இஸ்லாமியர்கள் மீதுள்ள அன்பினாலும், உடன்கட்டை போன்ற பெண்ணடிமை வழக்கங்கள் மீதிருந்த வெறுப்பினாலும் இந்தக் கதையை அவர் எழுதியிருக்க வேண்டும். அவரது கடைசிக் கதை இரயில்வே ஸ்தானம். அவர் காலமாவதற்கு சில மாதங்களுக்கு முன் எழுதிய கதை. சொத்துக்காக முன்று பெண்களை மணந்த இஸ்லாமியர் ஒருவர் படும்பாட்டைக் கதை விவரிக்கிறது. அந்தக் கதையும் ஒரு சர்ச்சைக்குள்ளானது. அந்தக் கதையில் இஸ்லாமியர் ஒருவர், சகோதரிகள் மூவரை மணந்து கொள்வதாக பாரதி எழுதியிருப்பார். கதை பிரசுரமான பிறகு ஒரு இஸ்லாமிய நண்பர், மனைவி உயிருடன் இருக்கும் போது, அவளுடன் பிறந்த மற்றொருத்தியைத் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது இஸ்லாமிய சாஸ்திரங்களின் கொள்கை என்பதை பாரதிக்கு சுட்டிக் காட்டுகிறார். தனது தவறை பகிரங்கமாக ஒப்புக் கொள்ளும் பாரதி, இந்துக்களிடையே இருக்கும் வழக்கம் இஸ்லாமியர்களிடமும் இருக்கும் என்றெண்ணி எழுதிவிட்டதாக ஒப்புக் கொள்கிறார்." "அவருக்கு இஸ்லமிய நண்பர்கள் அதிகம் இருந்தார்களோ?" "அவர் பிறந்து வளர்ந்த எட்டையபுரம், சீறாப்புராணம் பாடிய கவிஞர் உமறுப் புலவர் வாழ்ந்த ஊர். அவர் எட்டையபுரத்தின் அரசவைக் கவிஞராகவும் விளங்கியவர். அவரது கல்லறை இன்றும் அங்கு இருக்கிறது. எட்டையபுரத்தில் கணிசமான அளவில் இஸ்லாமியர்கள் வாழ்ந்திருக்கிறர்கள். எனவே இளம் வயதிலேயே அவருக்கு இஸ்லாமியருடன் பழக்கம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. புதுவையில் வாழ்ந்த காலத்தில், இஸ்லாமியர் ஒருவரது தேநீர்க் கடையில் 'தாடி ஐயர்' (பாரதிக்கு இப்படியும் ஒரு பட்டப் பெயர் உண்டு) தேநீர் பருகிய காட்சியைக் கண்டு அங்கிருந்தவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அன்று இந்துக்களும் இஸ்லாமியரும் பொது இடங்களில் ஒன்றாக அமர்ந்து உண்ணும் வழக்கமில்லை.' ஹிந்து-முகமதியர் கூட்டு விருந்து' என்று 1906 செப்டெம்பரில் சுதேசமித்ரன் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. இரண்டு சமயத்தாரும் ஒன்று சேர்ந்து உண்பது அத்தனை அபூர்வமாக இருந்தது. அதனால் பாரதி முகமதியரின் தேநீர் கடைக்குச் சென்று தேநீர் அருந்துவது அதிர்ச்சியோடு பார்க்கப்பட்டது. புதுவையிலிருந்து வெளியேறி தனது மனைவியின் ஊரான கடையத்தில் வாழ்ந்த போது இஸ்லாமியர்களோடு நட்புப் பாராட்டிய காரணத்தால் அவர் அக்கிரகாரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். ஆனால் அதற்குப் பின்னும், 1918ம் ஆண்டு ராவண சமுத்திரம், பொட்டல் புதூர் ஆகிய ஊர்களில் இஸ்லாம் மார்க்கத்திஒன் மகிமை என்ற தலைப்பில் உரையாற்றி இருக்கிறார்." "இஸ்லாம் மார்கத்தின் பெருமைகளைத்தான் பாரதி பேசுவாரா? அதன் மீது ஏதும் விமர்சனங்கள் ஏதும் கிடையாதா?" "இஸ்லாமியர்களிடையே உள்ள இரண்டு வழக்கங்கள் மீது பாரதிக்கு உடன்பாடில்லை. ஒன்று அவர்களிடையே உள்ள, கோஷா என்னும் பர்தா அணியும் வழக்கம். அது அவர்களுக்குப் பாதுகாப்பு என்ற வாதத்தை பாரதி ஏற்பதில்லை.' கனி கண்டவன் தோலுரிக்கக் காத்திருப்பேனோ?' ' வன்ன முகத்திரையைக் களைந்திடென்றேன், நிந்தன் மதங் கண்டு துகிலினை வலிதுரிந்தேன்' என்றெல்லாம் எழுதி மூலம் ஒரு பெண்ணை அடைய நினைப்பவருக்கு இந்தத் துணித்திரை பெரும் அரண் அல்ல என்று சுட்டிக்காட்டுக்கிறார். பலதார மணத்தை இகழ்ந்துரைப்பதற்காகவே ரயில்வே ஸ்தானம் கதை எழுதப்படுகிறது. பலதார மணம் செய்து கொள்பவர்கள் ஒரு மனைவியைத் தவிர மற்றவர்களுக்கு மணவிலக்குக் கொடுத்து, அவர்கள் மற்றவர்களை மணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற யோசனை அந்தக் கதையில் வைக்கப்படுகிறது. இந்த யோசனையை முகமது நபியே தனது கனவில் தோன்றிச் சொன்னதாக பாரதி எழுதுகிறார்." "ரொம்பத் துணிச்சல்தான்.அந்த துணிச்சலை இஸ்லாமியர்கள் இந்துக் கோயில்களை இடித்ததை விமர்சிக்கப் பயன்படுத்தியிருக்கலாமே?" "அதைக் குறித்தும் அவருக்கு ஒரு கருத்து இருந்தது: " நாமும் அவர்கள் பேரில் பூர்வீகக் குற்றங்களை எடுத்துரைத்தல் தப்பிதம். அவர்களும் நம்மை உடன் பிறந்தவர்களெனெ பாவித்து நடக்க வேண்டும்" என்று ஓரிடத்தில் எழுதுகிறார்". வம்பு கிடைக்காத ஏமாற்றத்தோடு எழுந்து கொண்டார் நண்பர். "ஓ! அப்படியா!அப்ப நான் வர்ரேன். உங்க 'பாய்' பாரதியாரிடமும் சொல்லுங்க!' என்றார் நண்பர் கிண்டலாக. நான் புன்னகைத்தேன்.
நன்றி மாலன்

புதுவையில் சங்கமித்த சுதந்திர நதிகள்

பாரதியார், ஸ்ரீ அரவிந்தரிடத்தில் ரிக் வேதம் கற்றுக் கொண்டார். அவர், சக்தி உபாஸனை பற்றியும் அரவிந்தரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். வேதரிஷிகளின் தோத்திரப் பாடல்களிலும் மற்ற சமஸ்கிருத இலக்கியங்களிலும் மகாகவி பாரதியார் திளைப்பதற்கு, ஸ்ரீ அரவிந்தர் வழிகாட்டினார்.
1908-ல் புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்த முதல் இந்தியர் பாரதியார். மகாகவியைத் தொடர்ந்து, மண்டயம் சீனிவாஸாச்சாரியார், சுப்பிரமணிய சிவா, வ.வே.சு.ஐயர் போன்றவர்கள் புகலிடம் தேடி புதுவை வந்து சேர்ந்தார்கள்.
புதுவையில் பாரதியை ஆசிரியராகக் கொண்டு 'இந்தியா' வாரப் பத்திரிகை வெளிவர ஆரம்பித்தது. புதுவையிலிருந்த தேசபக்தர்கள் 'இந்தியா' இதழின் பிரதிகளை தமிழ்நாட்டின் மூலை முடுக்குக்கெல்லாம் அனுப்பினார்கள். பத்திரிகையின் செல்வாக்கு அதிகரித்தது. இதைக்கண்ட பிரிட்டிஷ் அரசாங்கம், இந்தியாவில் நுழையாதபடி 'இந்தியா' பத்திரிகைக்குத் தடைவிதித்தது.
1910-ல் மார்ச் 12-ம் தேதியிட்ட இதழோடு பாரதி ஆசிரியராக இருந்த இந்தியா பத்திரிகையும், மற்ற பத்திரிகைகளும் மூடும்படியாக ஆயிற்று.
பாரதி மனச்சோர்வு அடைந்திருந்த சமயத்தில் அவரை அடியோடு மனங்குலைந்து விடாதபடி காத்தது, ஸ்ரீ அரவிந்தரின் வருகை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அலிப்பூர் வெடிகுண்டு வழக்கிலிருந்து, அரவிந்தர் கௌரவமாக விடுதலை செய்யப்பட்டார். அரசியலிலிருந்து விலகி, யோக வாழ்க்கையைத் தொடங்க அவர் புதுவையைத் தேர்ந்தெடுத்தார்.
1910-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நான்காம் தேதி எஸ்.எஸ்.துயூப்ளெக்ஸ் என்ற கப்பலில், விஜயகாந்தன் என்பவரோடு, அரவிந்தர் புதுவைக்கு வந்து சேர்ந்தார். புதுவைக்கு வந்த அரவிந்தரை, பாரதியாரும் சீனிவாஸாச்சாரியாரும் வரவேற்றார்கள். அரவிந்தரை கோமுட்டித் தெரு சங்கர செட்டியார் வீட்டில் தங்க வைத்தார்கள். அரவிந்தர், சங்கர செட்டியார் வீட்டில் ஆறுமாத காலம் அஞ்ஞாத வாசம் செய்தார். அதன் பிறகே, அரவிந்தர் புதுவையிலிருந்தது கொஞ்சம் கொஞ்சமாக பொது மக்களுக்குத் தெரிய வந்தது.
ஸ்ரீ அரவிந்தர் புதுவைக்கு வந்திருப்பதை அறிந்த கே.வி.ஆர்.ஐயங்கார் தமிழ் இலக்கிய உலகில் பிற்காலத்தில் 'வ.ரா.' என்றழைக்கப்பட்ட வ.ராமஸ்வாமி ஐயங்காருடன் அவரைக் காண புதுவைக்கு வந்தார். வ.ரா. வரும் முன்பே அரவிந்தர் வ.ராவை தம் அகக் காட்சியில் கண்டார். அரவிந்தரை தரிசித்தபின், வ.ராமஸ்வாமி ஐயங்கார், அவருடனேயே தங்கி அவரது சிஷ்யராக மாறிவிட்டார்.
செட்டியார் வீட்டிலிருந்து 1912-ல், மாதா கோவில் தெருவிலிருந்த ஒரு ஓட்டு வீட்டிற்கு அரவிந்தர் குடிபுகுந்தார். வ.ரா.வும் அதே வீட்டில் வாசம் செய்தார்.
ஸ்ரீ அரவிந்தர் வெகுவெகு சிலருக்கே தன்னை வந்து பார்க்க அனுமதி தந்தார். பாரதியாரும், சீனிவாஸாச்சாரியாரும் மட்டுமே அவரை தினமும் பார்க்கக் கூடியவர்கள்.
பாரதியார் யோகி அரவிந்தரைப் பார்க்க, தினமும் ஏழு மணிக்குப் பிறகு தவறாமல் செல்வார். பாரதி அரவிந்தர் இல்லம் போகும்போது, முதலில் சீனிவாஸாச்சாரியார் வீட்டிற்குச் சென்று அவரை அழைத்துக் கொண்டு கடற்கரைக்குப் போய் ஏழு மணிவரை இருந்துவிட்டு, கொஞ்சம் இருட்டிய பிறகே அரவிந்தர் இல்லம் செல்வது வழக்கம்.
இருட்டுவதற்காக பாரதியார் காத்திருந்தது, தான் அரவிந்தர் இல்லத்திற்குச் செல்வதை யாரும் பார்க்கக் கூடாது என்பதற்காக அல்ல. அரவிந்தர் இரவு சுமார் ஏழு மணிக்குப் பிறகே, தனது அறையை விட்டு வெளியே வந்து நண்பர்களை சந்திப்பது வழக்கம் என்ற காரணத்தால்.
தினமும் மாலை ஏழு மணியிலிருந்து எட்டரை ஒன்பது மணிவரை, பாரதி, வ.வே.சு.ஐயர், அரவிந்தர் மூவரும் இந்திய மேற்கத்திய இலக்கியம், தத்துவம், துறவு நிலை மற்றும் இந்திய அரசியல் குறித்து சுவாரஸ்யமாக விவாதிப்பார்கள். மண்டபம் ஸ்ரீனிவாஸாச்சாரியார் சிரத்தையுடன் இவர்களது உரையாடல்களை கேட்டுக் கொண்டிருப்பார்.
பாரதியார், ஸ்ரீ அரவிந்தரிடத்தில் ரிக் வேதம் கற்றுக் கொண்டார். அவர், சக்தி உபாஸனை பற்றியும் அரவிந்தரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். வேதரிஷிகளின் தோத்திரப் பாடல்களிலும் மற்ற சமஸ்கிருத இலக்கியங்களிலும் மகாகவி பாரதியார் திளைப்பதற்கு, ஸ்ரீ அரவிந்தர் வழிகாட்டினார். வேத ரிஷிகளின் கவிதை என்பது அவரது முதல் மொழிபெயர்ப்பு. இதனையடுத்து, பதஞ்சலியின் யோக சூத்திரத்தையும், பகவத் கீதையையும் பாரதியார் மொழி பெயர்த்தார். இன்றைக்கும் பாரதியின் கீதை மொழிபெயர்ப்பு ஒரு இணையற்ற படைப்பாகவே விளங்குகிறது. அரவிந்தரே, "பதஞ்சலியின் சமாதி பாதை என்ற நூலுக்கு பாரதி செய்த மொழிபெயர்ப்பு அருமையானது" என்று கூறியிருக்கிறார்.
ஸ்ரீ அரவிந்தரும், வ.வே.சு.ஐயரும் அளித்த ஊக்கத்தாலும், அறிவுரையாடல்களாலும், அபின் அருந்துவதை உதறியதாலும், பாரதியார் தீவிரமாக எழுதத் தொடங்கினார். 1910 முதல் 1913 வரையான காலத்தில் பாரதியார் தனது சிறப்புமிக்க படைப்புகளான, கனவு என்ற சுயசரிதை, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவற்றைப் படைத்தார். கீதையை மொழி பெயர்த்தார்.
அரவிந்தர் தனது ஆப்த நண்பர்களான சீனிவாஸாச்சாரியார், வ.ரா., கே.வி.ஐயங்கார், பாரதியாருடன் இரவில் இருக்கும்போது 'ஆட்டோமெடிக் ரைட்டிங்' என்னும் ஆவி கொண்டெழுதும் வேலை சில நாட்களில் நடக்கும்.
இரவில் மங்கிய விளக்கு வெளிச்சத்தில் தகுதியுள்ள ஒருவர் பென்சிலும் காகிதமுமாக மேஜைக்கு முன் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அமைதியில் ஆழ்ந்து இறந்து போனவர்களின் ஆவியை வரவழைப்பார்கள். அழைத்த ஆவியானது நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர் மீது ஆவாகனமாகி அவர் கைகொண்டு, கூட இருப்பவர்களின் கேள்விகளுக்கு பதிலையோ, அல்லது விரும்பிய விஷயங்களையோ எழுதிச் செல்லும். யோச சாதனம் என்ற அரவிந்தரின் நூல் இவ்வகையில் எழுதப்பட்ட நூலாகும்.
ஸ்ரீ அரவிந்தர் மாதா கோவில் தெருவிலிருந்து பிரான்சுவா மர்த்தேன் வீதியிலுள்ள வீட்டிற்கு குடிபெயர்ந்தார்.
மர்த்தேன் வீட்டு மேல்மாடியில் அரவிந்தரின் அறையிருந்தது. அன்னையின் வருகைக்காக மேல்மாடி கொஞ்சம் அலங்கரிக்கப்பட்டது. அதாவது இரவல் என்றாலும் திருப்பித் தரவேண்டும் என்ற நிர்பந்தம் கிடையாது. ஒரு பழைய ஓட்டை மேஜை, இரண்டு கைப்பிடி வைத்த நாற்காலிகள், நாலைந்து கைப்பிடி இல்லாத மடிப்பு நாற்காலிகள் இவை ஏற்பாடாயின.
அரவிந்தரின் பணியும், சாதனையும் அன்னையின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தது. 1910-ம் ஆண்டில் அரவிந்தர் பால் ரிச்சர்டிடம் சொல்லியனுப்பியபடி 1914-ம் ஆண்டு மார்ச் மாதம் 'ஸ்ரீ அன்னை' என்று அனைவராலும் அறியப்படும் மி ரா ரிச்சர்டு என்ற இளம் பிரெஞ்சு பெண்மணி புதுவை வந்து சேர்ந்தார்.
பிரான்சுவா மர்த்தேன் வீதியிலுள்ள வீட்டில் வ.ரா. கீழ்தளத்தில் உள்ள அறையில் தங்கி இருந்தார்.
இந்தப் புது வீட்டில்தான் வ.ரா. சமஸ்கிருதம் படிக்க ஆரம்பித்தார். ஸ்ரீ நளினி காந்த குப்தா என்பவர்தான் இவருக்கு ஆசிரியர். அவரிடமே வங்க மொழியையும் வ.ரா. கற்றுக் கொண்டார். வங்காள மொழியில் எழுதப்பட்ட நாவல்களைப் படிக்கத் தொடங்கினார்.
பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய 'ஜோடி மோதிரங்களை'ப் படித்து மகிழ்ந்தார் வ.ரா. ஒரு நோட்டுப் புத்தகத்தில் பக்கம் பக்கமாக, அதைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார். இப்படி வ.ரா. எழுதிக் கொண்டிருக்கையில் ஒருநாள் பாரதி வந்துவிட்டார். வ.ரா.வின் நோட்டைப் பிடுங்கிக் கொண்டு படிக்கத் தொடங்கினார். அரவிந்தரை அழைத்தார். "பாபுஜி இந்த நோட்டுப் புத்தகத்தில் பங்கிம் பாபுவின் ஜோடி மோதிரங்களை நம்ம ராமஸ்வாமி ஐயங்கார் அற்புதமான தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். வசனத்தில் இனி எனக்குக் கவலையில்லை. கவிதை எழுதினால் போதும். வசனத்திற்கு நம் ஐயங்கார் இருக்கிறார்" என்று அவரிடம் குதூகலித்தார்.
ஆனால், பாரதி பாராட்டிய வ.ரா.வின் ஜோடி மோதிரங்கள் மொழிபெயர்ப்பு பூர்த்தி ஆகவும் இல்லை. அந்த நோட்டுப் புத்தகமும் எங்கோ தொலைந்துவிட்டது. வ.ரா. தம் மொழி பெயர்ப்புகளை பாரதியாரிடம் காண்பித்த பிறகே அச்சுக்கு அனுப்புவார்.
வ.ரா. இந்தப் புதுவீட்டில் நீண்ட காலம் தங்கவில்லை. வ.ரா.விற்கு தன் தாயாரிடத்தில் அளவு கடந்த பிரியம். அவர் தன் தாயை விட்டுப் பிரிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது. தன் தாயாரைப் பார்க்கப் போக வேண்டும் என்று அரவிந்தரிடம் அனுமதி கேட்டார். அரவிந்தர் இதற்கு எளிதில் இணங்கவில்லை. சொந்த ஊர் திரும்ப வேண்டாமென்று வ.ரா.வை எவ்வளவோ கேட்டுக் கொண்டார். வ.ரா. அதற்கு சம்மதிக்கவில்லை. ஒரே பிடிவாதமாய் 1914 மே மாதம், தனது சொந்த ஊரான திருப்பழனத்திற்கு வ.ரா. கிளம்பி விட்டார்.
பாரதியார் புதுவை வாசத்தின் கடைசி ஆண்டுகளில், தாங்க முடியாத வறுமையின் பிடியில் சிக்கித் தவித்தார். புதுவை வாசம் சலித்துப் போய், 1918-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாரதியார் இந்தியா திரும்பினார். 1919-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை வந்து ராஜாஜி வீட்டில் காந்திஜியை சந்தித்தார்.
அந்த சந்திப்புப் பற்றி, வ.ரா.விற்கு நண்பனாகவும், பாரதிக்கும் அரவிந்தருக்கும் சிஷ்யராகவும் விளங்கிய அமிர்தா, இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"1919-ம் ஆண்டு மார்ச் மாதம் பாரதியார், மகாத்மா காந்தியைத் தான் பார்க்கப் போவதாகவும் என்னைத் தன்னுடன் வரும்படியும் அழைத்தார். அப்போது காந்தி ராஜாஜி இல்லத்தில் தங்கி இருந்தார். மகாத்மா காந்தியைக் காண மக்கள் திரள் திரளாய் வந்து கொண்டிருந்தார்கள். சுப்பிரமணிய பாரதியாருடன் நானும் அங்கு வந்து சேர்ந்தேன்.
வேலியால் சூழப்பட்ட ஒரு பெரிய தோட்டத்தின் நடுவிலிருந்து அழகான பங்களாவில் ஒருவர் "ஷூ-பாலிஷ்" போட்டுக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவரை அணுகி பாரதியார் வந்திருக்கும் விஷயத்தைத் தெரிவித்தேன்.
அவர் தலை நிமிர்ந்ததும் எனது உள்ளம் பூரித்தது. வ.ரா.வை அங்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு கண்டேன். கையிலிருந்த ஷ¨ஸ் முதலியவற்றைப் போட்டு விட்டு, வ.ரா. என்னை வாரி அணைத்துக் கொண்டார். சிறிது தொலைவில் பாரதியார் நான் கொண்டு வரும் பதிலுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.
வ.ரா. "ஏதடா தர்மசங்கடத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டாய். காந்திஜியைப் பார்ப்பது அவ்வளவு சுலபமல்ல. முதலில் ராஜாஜியிடம் தெரிவிக்க வேண்டும். பிறகு அவர் காந்திஜியைக் கேட்டு நாள் குறிப்பிடுவார். இது உடனே நடக்கக் கூடிய காரியமல்ல" என்றார்.
இந்த பதிலை பாரதியாரிடம் தெரிவிக்க எனக்குத் தைரியமில்லை. பிறகு பாரதியை வணங்கிவிட்டு வ.ரா., "உள்ளே கூடத்தில் வந்து அமருங்கள். நீங்களே ராஜாஜியிடம் வந்து காரியத்தை நேரில் சொல்லலாம்" என்றார்.
பாரதியாரோ, "நான் தெய்வ ஆக்ஞை பெற்று காந்திஜியைக் காண வந்திருக்கிறேன். அவரை உடனே பார்க்க வேண்டும்" என்றார். பாரதியார் சொன்னதை ராஜாஜி கேட்டு பிரமித்து சிறிது தயங்கி, "பிறகு இதோ பதில் கொண்டு வருகிறேன்" என்று சொல்லிக் கொண்டே காந்தியைக் காண சென்றார்.
பாரதி காந்திஜியைப் பார்த்து திரும்பியது இரண்டு நிமிடங்கூட இருக்காது. பங்களாவில் அரைக் கணம் கூடத் தங்காது வ.ரா.விடம் விடையும் பெறாது என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே பங்களாவை விட்டு வெளியே பறந்து விட்டார் பாரதியார், வில்லை விட்டுக் கிளம்பிய அம்பைப் போல.
காந்திஜியுடன் என்ன நடந்தது என்று எனக்குச் சொல்ல யாருமே இல்லை. என்னன்னவோ வதந்தியெல்லாம் கிளம்பிற்று அவ்வளவுதான்!"
பாரதியார், வ.வே.சு.ஐயர், மற்றும் வ.ராமஸ்வாமி ஐயங்கார் புதுவையிலிருந்து புறப்பட்டு வெவ்வேறு சமயங்களில் பிரிட்டிஷ் இந்தியாவிற்கு மறுபடியும் வந்தார்கள்.
புதுவையில் ஒன்றாக சங்கமித்த நதிகள் மீண்டும் கிளை நதிகளாகப் பிரிந்து தங்களது வாழ்க்கைப் பயணத்தை தனித்தனியே தொடங்கின.
ஆனால் ஸ்ரீ அரவிந்தர் மட்டும் பாண்டிச்சேரியை விட்டு ஒரு அங்குலம் கூட எங்கும் நகரவில்லை.


பாரதி vs பாரதிதாசன்

பாவேந்தர் பாரதிதாசனைப் பாவேந்தர் என்றழைப்பதைவிட, புரட்சிக் கவிஞர் என்று அழைப்பதையே நான் பெரிதும் விரும்புகிறேன். மூவேந்தர் காலம் முதல் எத்தனையோ பாவேந்தர்கள் தோன்றியிருக்கிறார்கள். இளங்கோ ஒரு பாவேந்தன்; கம்பன் ஒரு பாவேந்தன்; ஒட்டக்கூத்தன் பாவேந்தன்; புகழேந்தி ஒரு பாவேந்தன்; வடலூரார் ஒரு பாவேந்தர் இவர்களுக்கெல்லாம் தலைமைப் பாவலராயிருந்த வள்ளுவரே முதற் பாவேந்தர்.அந்த வரிசையில் பாரதிதாசனும் ஒரு பாவேந்தராக அவர் காலத்தில் போற்றப் பட்டமை பொருத்தமே. ஆனால் பாரதிதாசனின் வரலாற்றுப் பங்களிப்பை முழுமையாக வெளிப்படுத்தும் சொல்லாகப் `பாவேந்தர்’ என்ற அடைமொழி அமையவில்லை என்பது என் கருத்து. புரட்சிக் கவிஞர் என்பது தான் தமிழக வரலாற்றில் அவர் வகித்த மிகப்பெரிய பாத்திரம். உலக இலக்கியங்களில் புரட்சிக் கவிஞர்கள் மிக அரிதாகவே தோன்றி யிருக்கிறார்கள். வங்க மொழியில் தாகூர் மகாகவி எனப் போற்றப்படுகிறார். ஆனாலும் அவர் புரட்சிக் கவிஞர் அல்லர். நஸ்ரூல் இஸ்லாம்தான் வங்கத்தின் புரட்சிக்கவி என்று பதிவு செய்தது வரலாறு.மாய கோவ்ஸ்கியைப் புரட்சிக் கவிஞர் எனப் போற்றியது சோவியத் ரஷ்யா. ஷெல்லியை மட்டுமே புரட்சிக்கவி என்கிறது. ஆங்கிலக் கவிதை இலக்கியம். லத்தின் அமெரிக்க நாடுகள் ஏராளமான கவிஞர்களைப் பிரசவித்துள்ளன. அவர்களுள் பாப்லோ நெருதா மட்டுமே புரட்சிக்கவி என்று ஏற்கப்பட்டுள்ளான். மறுமலர்ச்சிக் கவிஞர், சீர்திருத்தக் கவிஞர், மானுடம் பாடும் கவிஞர் என்று தமிழில் நிறையபேர் கால் பதித்திருக்கிறார்கள். ஆனால் புரட்சிக் கவிஞர் என்று ஒரே ஒருவர்தான் போற்றப்படுகிறார். அவர் தான் பாரதிதாசன்.புரட்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் வேறுபாடு உண்டா? ஆம்! ஆழமான வேறுபாடு உண்டு. மறுமலர்ச்சி என்பது மீண்டும் மலர்வது என்று பொருள்படும். காலையில் மலர்ந்து மாலையில் இதழ்கள் குவிந்து மூடி மொட்டு வடிவம் பெற்ற தாமரை, மறுநாள் காலையில் கதிரவன் உதித்ததும் மீண்டும் இதழ் விரிப்பதுதான் மறுமலர்ச்சி. மறுமலர்ச்சி என்பது புதுமலர்ச்சி அன்று பழைய மலர்ச்சி புதுப்பிக்கப்படுகிறது என்று பொருள்.18ஆம் நூற்றாண்டிலும் 19ஆம் நூற்றாண்டிலும் நிகழ்ந்த ஐரோப்பாவின் இலக்கிய வளர்ச்சியை மறுமலர்ச்சிக் காலம் (Renaisance) என்கிறது வர லாறு. அப்படியானால் புரட்சி என்பது என்ன?நூறாண்டு வயதாகி விட்ட ஒரு கட்டடத்தின் அடித்தளத்தை முற்றாகத் தகர்த்து புதுத்தளத்தை அமைப்பதுதான் புரட்சி.அடித்தளத்தின் மீது கை வைக்காமலே கட்டடத்தின் கூரையை மட்டும் மாற்றிக் கொண்டிருப்பது மறுமலர்ச்சி அல்லது சீர்திருத்தம்.புரட்சி என்பதற்குச் சரியான பொருள். சமூக மாற்றம் என்பதுதான். காட்டுச் சமூகம் வேட்டைச் சமூகமாக மாறுவது ஒரு சமூக மாற்றம். வேட்டைச் சமூகம் வேளாண் சமூகமாக மாறுவதும். நிலவுடைமைச் சமூகம் தொழிலுடைமைச் சமூகமாக மாறுவதும், நிலவுடைமை தொழிலுடைமை ஆகிய தனிஉடைமைச் சமூகம் சமஉரிமைச் சமூகமாக மாறுவதும் அதன்வழியாக அது பொதுவுடைமைச் சமூகமாக மாற்றம் பெறுவதும் புரட்சியின் பல்வேறு படிநிலைகளே ஆகும்.முப்பரிமாணப் புரட்சிஇந்தியாவைப் பொறுத்தவரை இந்தியத்துக்குள் விலங்கிடப்பட்டுள்ள பல்வேறு தேசங்களும், தேசிய இனங்களும் இந்தியப் பேராதிக்கத்திலிருந்தும் இந்திமொழிப் பேரின ஆதிக்கத்திலிருந்தும் இந்துத்துவப் பார்ப்பன ஆதிக்கத்திலிருந்தும் பெறுகிற விடுதலை தான் - அதாவது தேசியப் புரட்சிதான். மேலே குறிப் பிட்ட சமூக மாற்றங்களுக்கான முன்தேவையாகி விட்டது.எனவே இந்தியத்தை முறியடிக்கும் தமிழ்த் தேசி யப் புரட்சி - முதலாளியத்தை முறியடிக்கும் வர்க்கப் புரட்சி - பார்ப்பனியத்தை முறியடிக்கும் சமூகப் புரட்சி - ஆகிய மூன்று பரிமாணங்கள் அடங்கிய முப்பரிமாணப் புரட்சியை முன்மொழியும் கவிஞனே புரட்சிக்கவி எனப்படுவான்.பாரதிதாசன் மேற் சொன்ன மூன்று தளங்களிலும் தன் இலக்கியப் பங்களிப்பை முழுமையாகச் செய்த ஒரு முன்னோடியாவார்.தேசியப் புரட்சிபாரதிதாசனின் ஆசான் என்று பாரதி கருதப்பட்டாலும், பாரதியின் கருத்துகள் மறுமலர்ச்சியைச் சார்ந்தனவாயிருந்தன. தமிழ் வாழ வேண்டும்; தமிழர்கள் வாழ வேண்டும்; தமிழ்நாடு வாழ வேண்டும்.அத்துடன் இந்தியாவும் வாழவேண்டும் என்ற மனிதநேய நோக்கு அவனுக்கிருந்தது.`வாழிய செந்தமிழ்; வாழ்கநற்றமிழர்வாழிய பாரத மணித்திருநாடு’என்பதுதான் பாரதியின் கோட்பாடு. இந்தச் சிந்தனையில் நன்மை விழையும் நோக்கு இருந்ததே ஒழிய, புரட்சிக்கான நோக்கு காணப்படவில்லை. புரட்சி நோக்கு என்பது எப்படி இருக்கும்?தமிழ் வாழ்க என்பது பொதுநோக்கு;தமிழ் விடுதலை பெறவேண்டும் என்பது புரட்சிநோக்கு.தமிழ்நாடு வாழ்க என்பது பொதுநோக்கு;தமிழ்நாடு இந்தியச் சிறையிலிருந்து விடுபட வேண்டும் என்பது புரட்சி நோக்கு. தமிழையும், தமிழ்நாட்டையும் பாரதிதாசன் அணுகும் பார்வையைப் பாருங்கள்."செந்தமிழை; செந்தமிழர்நாட்டைச் சிறை மீட்கநந்தமிழர் உள்ளத்தில் வையம்நடுங்கும்வெந்தணல் ஒன்று விரைந்துவளர்ந்ததென்றுகுந்திக் குரலெடுத்துக் கூவாய்கருங்குயிலே’’இதுதான் பாரதிதாசன் பார்வை. இதன் பொருள் என்ன?"செந்தமிழைச் சிறை மீட்க வேண்டும்; செந்தமிழ் நாட்டைச் சிறை மீட்க வேண்டும்; அதற்காக உலகமே நடுங்குமாறு தமிழர் தம் உள்ளத்தில் வெந்தணல் - புரட்சித் தீ - ஒன்று விரைவாக வளர்க்கவேண்டும்’’- இதுதான் பாரதிதாசன் நோக்கு."இந்தி - வடமொழி -ஆங்கிலம் ஆகிய ஆதிக்க மொழிகளின் சிறையிலிருந்து அன்னைத் தமிழ் விடுதலை பெறவேண்டும்; இந்தியச் சிறையிலிருந்தும், பார்ப்பனியத் தளையிலிருந்தும் தமிழ்நாடு விடுதலை பெறவேண்டும். அதற்கான புரட்சித் தீ ஒன்று தமிழர் உள்ளங்களில் பூத்துச் சுடர வேண்டும்’’ - என்பதன்றோ அவரது செல்நெறி என்று தெளிவாகிறது இக்கவிதையில் தமிழ் விடுதலை, தமிழர் விடுதலை, தமிழ்நாடுவிடுதலை என்ற சிந்தனைதான் தமிழ்ச்சூழலில் புரட்சிச் சிந்தனை என்ற முத்திரையைப் பெறும். தமிழ்க் கவிதை இலக்கியத்தில் இந்த முத்திரையைப் பதித்த முதற்பெரும் பாவலன் பாரதிதாசனே.பொதுவுடைமைப் புரட்சிபாரதிதாசன் தன்னை முழுமையாக ஆட்படுத்திக் கொண்ட புரட்சிக் கோட்பாடு, பொதுவுடைமை.`முப்பதுகோடி மக்களின் சங்கம்,முழுமைக்கும் பொதுவுடைமை’என்று பாரதி முதன்முதலில் பயன்படுத்திய சொல் அது. பொதுவுடைமை, புரட்சி என்ற இரண்டு சொற்களைத் தமிழுக்கு வழங்கியவன் பாரதிதான். ஆனால் பொது வுடைமை என்ற சொல்லைக் `கம்யூனிசம்’ என்ற சித்தாந்தத்தைக் குறிக்கும் சொல்லாக அவன் பயன்படுத்தவில்லை. `இந்திய நாடு முப்பது கோடி மக்களுக்கும் பொதுச் சொத்து’ என்ற பொருளில்தான் பொதுவு டைமை என்ற சொல்லைப் பயன்படுத்தினான். கம்யூனிசத்தைக் குறிக்கும் நல்ல தமிழ்ச் சொல்லாக அது இருந்ததால், பொதுவுடைமைவாதிகள் அதைத் தம் கருத்தியலுக்கும், கட்சிப் பெயருக்கும் பயன்படுத்தினார்கள். எனவே அந்தச் சொல்லின் இன்றைய பொருளில் பாரதி அதை அன்று எழுதவில்லை.ஆனால் பாரதிதாசன் பொதுவுடைமையை ஒரு சொல்லாக அன்று, ஒரு கோட்பாடாகவே கற்றவன்; அவ்வாறே அதை ஏற்றவன். புதுவை அதற்கேற்ற தளமாக அவனுக்கிருந்தது."பொதுவுடைமைக் கொள்கைதிசை எட்டும் சேர்ப்போம்புனித மோடதை எங்கள்உயிரென்று காப்போம்’’என்கிறான் பாரதிதாசன் பொதுவுடைமை அவனுக்கு வெறும் சொல் அன்று; சித்தாந்தமே. அதைத்தன் உயிர் என்கிறான். இவ்வளவு வலிவோடும் தெளிவோடும் பொதுவுடைமைத் தத்துவத்தை உயர்த்திப்பிடித்த தமிழ்க் கவிஞனாக முதலில் வெளிப்பட்டவன் பாரதிதாசனே. `பொதுவுடைமை என் உயிர்’ என்ற பிரகடனம் வெறும் உணர்ச்சிப்பூர்வமானதன்று; அறிவியல் பூர்வமானது என்பதை அவனது `புரட்சிக்கவி’ என்ற குறுங்காவியம் கூறும்.உழைப்பே தொழிலாளியின் படைப்புஎனவே ஒவ்வொரு படைப்பும் தொழிலாளியின் உரிமைப்பொருளாகிறது - என்ற மார்க்சியப் பொருளாதாரத்தைத் தன் கவிதையில் சொன்னவன் பாரதிதாசன். உதாரணத்துக்கு உழைப்பாளியின் வேர்வை பற்றிய பார்வையை எடுத்துக் கொள் வோம்.வேர்வை பற்றி பாரதியும் பாடியிருக்கிறான்.
“அரும்பும் வேர்வை உதிர்த்துப்புவிமேல்ஆயிரம்
தொழில் செய்திடுவீரேபெரும்புகழ் உமக்கே
இசைக்கின்றேன்பிரம்ம தேவன் கலை இங்கு நீரே’
என்பன பாரதியின் வரிகள்.'
படைப்புக் கடவுளான பிரம்மாவுக்குச் சமமானவர்கள்
தொழிலாளர்கள். அவர்கள் வியர்வை உதிர்த்துப்
புரியும் ஆயிரம் தொழில்களின் அற்புதத்தைப் புகழ்ந்து பாடுவேன்”
என்பது வேர்வை பற்றிய பாரதியின் பார்வை.
உழைப்பாளி சிந்தும் வேர்வையைப் புகழ்வதோடு பாரதியின் பணி முடிந்து விடுகிறது.பாரதிதாசனின் பார்வை பாரதியைத் தாண்டி வேர்வையின் எல்லைக்கே போகிறது. உழைப்பைப் புகழ்வதால் உழைப்பாளியின் வயிற்றுக் குச் சோறு கிடைக்குமா?வேர்வை என்பது என்ன? உழைப்பு? உழைப்பு என்பது அவனது படைப்பு. எனவே உழைப்புக்குரிய விலை அவன் படைப்பேயாகும். என்ற மார்க்சியத்தைப் பாரதிதாசன் பாடும் வரிகள் இவை:
“உடலைக் கசக்கி உதிர்த்தவேர்வையின்
ஒவ்வொரு துளியிலும் கண்டேன்
இவ்வுலகு உழைப்பவர்க்குஉரியதென்பதையே’’
வேர்வை பற்றிய பாரதி தாசன் பார்வை இது.
உழைப்பின் வேர்வை புகழுக்குரியது என்றான் பாரதி இல்லை; இந்த புவியே அதற்குரியது என்றான் பாரதிதாசன். இருவருக்குமிடையில் உள்ளது பார்வை முரண் மட்டுமன்று. சித்தாந்த முரண்! இந்தப் புவியே உழைப்பின் படைப்பு; எனவே இந்த புவியே அவனுக்குரியது என்பதுபொதுவுடைமைப் பார்வை. மார்க்சிய நோக்கு. பாரதிக்கு அந்த முதிர்ச்சி இல்லை. எனவே அந்தப் பார்வையுமில்லை.சுருக்கமாகச் சொன்னால், வேர்வையில் பாரதி காண்பது அழகியல்; பாரதி தாசனுக்கோ அது அறிவியல் - அறிவியல் சார்ந்த பொருளியல்.'கஞ்சி குடிப்பதற்கில்லார் - அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமில்லார்’ என்பது பாரதியின் மிகச் சிறந்த வரி.ஏழைகளுக்கு இல்லாமை என்பது இரண்டு.ஒன்று - கஞ்சி இல்லாமை;இரண்டு - கஞ்சி கிடைக்காத காரணத்தைக் காணும் அறிவில்லாமை.இந்த எல்லைவரை சிந்தித்த பாரதி, கஞ்சி பறிக்கப்படும் காரணத்தைக் காட்டியிருந்தால், அவன் சமூகச் சிந்தனை முழுமை பெற்றிருக்கும். ஆனால், கஞ்சியில்லாக் காரணத்தை அறிய முடியாத அறிவிலிகளாக உழைக்கும் மக்கள் இருப்பதாகக் கவலைப்படுகிற பாரதி, கடைசிவரை அந்தக் காரணத்தை நமக்குக் காட்டாமலே கவிதையை முடித்துவிட்டான்.வள்ளுவர் காலத்திலிருந்து பாரதி காலம் வரை ஏழையின் கண்ணீரைப் பாடிய கவிஞர்கள் ஏழ்மைக்குக் காரணம் என்ன என்பதைத் தெளிவுபடுத்த இயலாமற் போனார்கள். நிலக்கிழாரியம் ஆட்சி செலுத்திய வள்ளுவர் காலத்தில், மன்னராதிக்கத்தின் நிலவுடைமைச் சுரண்டல்தான் மக்களின் வறுமைக்குக் காரணம். இதைப் பகுத்துப் பார்க்கும் இருபதாம் நூற்றாண்டின் பொருளியல் சித்தாந்தம். இரண்டாம் நூற்றாண்டில் எழவில்லையே என்று வள்ளுவனை விமர்சிப்பது அறிவீனம். ஆனால் வறுமைக்கான காரணத்தை நவீன நூற்றாண்டில் வாழ்ந்த மெத்தப்படித்த பாரதியே அறிந்திருக்கவில்லை என்பதுதான் நமக்கு வியப்பளிக்கிறது.'தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’என்று பாரதி ஆவேசப்பட்டது என்னவோ உண்மை. ஆனால் உணவின்றிப் பசியால் வாடுவதற்கான காரணத்தைக் கண்டுபிடித்து அந்தக் காரணத்தை அழிப்பதற்குப் பதிலாக ஜெகத்தினை அழித்திடுவது என்ற ஆவேசத்தில் அறவியல் இருக்கலாம்; அதில் அறிவியல் இல்லை.இந்த அறச்சீற்றம் வள்ளுவனுக்கே இருந்தது. "பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை ஒரு வனுக்கு நேருமானால், அந்த இழிநிலைமைக்குக் காரணமான இறைவன் அழிந்து போகட்டும்" என்று சபித்தான்.வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம், வாடிய வடலூர் அடிகளிடம் மனித நேயத்தையும் தாண்டிய உயிர் நேயம் - பயிர் நேயமாகப் பயிர்களின் பசிக்காகவும் வருந்துகிற உயிர் நேயமாகத் தளும்பியது.வறுமைக்குக் காரணம் எது என்று அறிவியல் ரீதியாக அறியமுடியாத காலங்களில் வள்ளுவரும், வள்ளலாரும் அறநெறியில் நின்று வறியவர்களுக்காக வருந்தினார்கள் என்ற செய்தியே தமிழுக்கும் தமிழனுக்கும் நிறைவுதருவதாகும்.பாரதியின் காலம் இருபதாம் நூற்றாண்டு என்பது மட்டுமன்று; உழைப்புச் சுரண்டலே வறுமைக்குக் காரணம் என்ற புரட்சிகரப் பொருளியல் தத்துவம் பாரெங்கும் பரவியிருந்த காலம். வறுமையின் காரணம் எது என்பது பற்றி பாரதி அறிந்தே இருந்தார். `அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமில்லார்’ என்ற வரியிலேயே அந்த அறிவு அவருக்கிருந்தது என்பது வெளிப்பட்டு விடுகிறது.கஞ்சியின்மைக்கான காரணம் தெரிந்தும், அதைக் கவிதையாக்க முடியாதபடி பாரதியைத் தடுத்தது எதுவென்று தெரியவில்லை.இங்கேதான் பாரதியைத் தாண்டி விசுவரூபமெடுக்கிறான் பாரதிதாசன். பொதுவுடைமைச் சிந்தனை பொறி பறக்கிறது அவன் பாட்டில்.கைத்திறனும் வாய்த்திறனும்கொண்ட பேர்கள்கண்மூடி மக்களது நிலத்தையெல்லாம்கொத்திக் கொண்டு ஏப்பம்விட்டு வந்ததாலேகூலி மக்கள் அதிகரித்தார்,என்ன செய்வேன்பொத்தல் இலைக் கலமானார்ஏழை மக்கள்புனல் நிறைந்த தொட்டியைப்போல் ஆனார் செல்வர்.என்று பொருளாதார விளக்கம் தருகிறார் பாரதிதாசன் உலகப்பன் பாட்டில்.கையளவு நிலத்தில் பாடுபடுகிற உழவன் இருக்கிறான். அதுவும் கண்ணை உறுத்துகிறது நிலக்கிழாருக்கு. வறுமையில் அவனுக்குக் கடன் கொடுத்து, கடனுக்காக நிலத்தையே கொத்திப் பிடுங்கிக் கொள்கிறார். எனவே குறுநில உழவன் கூலி உழவனாகிறான். ஏற்கெனவே உள்ள கூலி உழவர்கள் பட்டாளத்தில் இவனும் சேர்கிறான்.கூலிமக்கள் எவ்வாறு அதிகரித்தார்கள் என்ற சமூகச் சித்திரத்தைப் பொருளியல் நோக்கில் துல்லியமாகத் தீட்டிக் காட்டுவதோடு நிற்கவில்லை பாரதிதாசன். பொத்தல் கலத்தில் ஊற்றும் நீர் வடிந்துவிடும். அதுபோல் பொருளாதார ஓட்டைகளால் உழைப்பவன் உழைப்பு வடிந்துவிடுகிறது. அதுபோய்ச் சேர்கிற இடம் முதலாளிகள் என்கிற நீர்த் தொட்டி. இவ்வாறு உழைப்பு ஒரு பக்கம் உறிஞ்சப்படுவதும், இன்னொரு பக்கம் அது முதலாளிகளி டம் மூலதனமாகச் சேர்ந்து புனல் நிறைந்த தொட்டியாவதும்தான் மார்க்சிய மொழியில் வர்க்கச் சுரண்டல் என்றழைக்கப்படுகிறது. வர்க்க முரண்தான் வர்க்க மோதலை உருவாக்குகிறது. வர்க்க மோதல்கள் வர்க்கப் போராக முதிர்ந்தபின் புரட்சி வெடிக்கிறது. புரட்சியின் முடிவில் முதலாளியம் ஒழிக்கப்பட்டு பாட்டாளிகளின் அரசு பிறக்கிறது. உழைப்பு விடுதலை பெறுகிறது; தொழில்கள் மக்களின் பொதுவுடைமையாகின்றன. இதுதான் பொதுவுடைமைப் புரட்சி.இதை உள்வாங்கிக் கொண்டுதான் பாரதிதாசன் தன் கவிதையில் சிவப்புச் சிந்தனையைத் திறந்து காட்டுகிறார்."இந்த நிலை இருப்பதனால்உலகப்பா நீபுதுக்கணக்குப் போட்டுவிடு;பொருளையெல்லாம்பொதுவாக எல்லார்க்கும்குத்தகை செய்.’’`குத்தகை செய்’ என்ற தொடர் `உரிமையாக்கு’ என்ற பொருளில்தான் ஆளப்பட்டிருக்கிறது."பொருளைப் பொதுவாக்கு... தனி உடைமைதான் வறுமைக்குக் காரணம். வறுமைப் பிணிக்கு மருந்து பொதுவுடைமைதான்’’ - என்று தனக்கு ஏற்பட்ட நம்பிக்கையை, தமிழனுக்கான நம்பிக்கையாக மாற்ற முனையும் தத்துவப் போராளியாக நிமிர்ந்து நின்று தமிழ்த் தளத்தில் ஒரு அரசியல் தளத்தை நிறுவி விடுகிறார் பாரதிதாசன்.இந்தப் பின்னணியில் மீண்டும் பாரதியிடம் வருவோம். பஞ்சத்தாலும் பட்டினியாலும் மடிகிற மக்களைப் பார்த்துப் பதறுகிற பாரதியை இங்கே நாம் பார்க்கிறோம்.“பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்பரிதவித்தே உயிர் துடிதுடித்தேதுஞ்சி மடிகின்றாரே - இவர்துயர்களைத் தீர்க்க ஓர்வழியில்லையே - அந்தோநெஞ்சு பொறுக்குதில்லையே’’படிப்பவனையும் கண்ணீர்விடச் செய்யும் பாரதியின் கண்ணீர் வரிகள் இவை.`இந்தப் பட்டினிக் கொடுமையைத் தீர்க்க ஒரு வழி தெரியவில்லையே’ - என்று தன் கையறு நிலையைக் கண்டு நெஞ்சு நெக்குருகுகிறான் பாரதி.இதே நிலையைப் பாரதிதாசனும் பார்க்கிறான். இந்த வறுமைக் கொடுமைக்கு ஒரு வழியில்லையே என்று அவன் ஒப்பாரி வைக்க வில்லை. மாறாக, ``இதற்கெல்லாம் தீர்வாக ஒரு வழி இருக்கிறது’’ - என்று நமக்கெல்லாம் அந்த வழியைத் திறந்து காட்டுகிறான். பாரதிதாசன், இதோ:ஆடுகிறாய் உலகப்பாயோசித்துப்பார்ஆர்ப்பாட்டக்காரர் இதைஒப்பாரப்பாதேடப்பா ஒரு வழியை என்றுசொன்னேன்என்று தேடிய வழியைக் கண்டடைகிறான் பாரதிதாசன் அவன் காட்டும் வழி என்ன?“ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்உதையப் பராகிவிடில் ஓர்நொடிக்குள்ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறிஒப்பப்பர் ஆகிடுவர் உணரப்பா நீ’’இதுதான் பாரதிதாசன் காட்டும் வழி. உயரப்பராயிருக்கும் முதலாளிகள்தாம் உழைப்பவர் ஓடேந்தும் நிலை அடையக்காரணம். எனவே அவர்களின் தனிவுடைமைக் கொள்ளைகளைத் தடுக்க ஒரே வழி; ஓடப்பராயிருக்கும் உழைப் போரையும் உயரத்தில் இருக்கும் உயரப்பர்களான முதலாளிகளையும் ஒரே நிலையில் சமமானவர்களாக - ஒப்பப்பர்களாக மாற்றுவதுதான் என்கிறார். எப்படி மாற்ற முடியும், அவர்கள் மனம் திருந்தி மாறுவார்களா என்றால் மாறமாட்டார்கள். பிறகு வேறுவழி?`ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்உதையப்பராக வேண்டும்’ -அடியாத மாடு படியாது - என்பதுதான் பாரதிதாசனின் தீர்வு. வன்முறை ஒரு தீர்வுக்கு வழியாகுமா - என்று கேட்கப்படலாம். இதுபோன்ற சூழலில் வள்ளுவரே வன்முறையை பரிந்துரைக்கிறார் - என்பது தெரியுமா உங்களுக்கு?பல்லை உடைக்கும் வலுமிக்க கையுடையவர்களுக்குத்தான் பணிவார்கள் எச்சில் கையையும் (காக்காவுக்கு) உதறாத கஞ்சர்கள் என்னும் கயவர்கள்’ என்பார் அய்யன் வள்ளுவர்.`ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்கூன்கையர் அல்லாதவர்க்கு’என்கிறது அந்தக் குறள்.வன்முறையை மறக்கருணை என்கின்றன பக்தி இலக்கியங்கள். கொடிய வரைக் கொன்று அடிய வரைக் காப்பது (துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலன) என்ற இறைவனின் செயல் கருணையின் பாற்பட்டது. வன்முறையில் வெளிப்படும் கருணை என்பதால் மரியாதையாக அதை மறக்கருணை என்கிறார்கள்.அரசாங்கமே ஒரு வன்முறை நிறுவனம்தான். தனது எதிரிகளை அடித்துக் கொல்வதோ அல்லது தூக்கிலிட்டுக் கொல்வதோ அல்லது என்கவுன்ட்டரில் கொல்வதோ அன்றாட நடை முறை. அரசைப் பொறுத்த வரை அவை கொலைகள் அல்ல. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என்ற பெயரில் அரசின் வன்முறை நியாயப் படுத்தப்படுகிறது.புரட்சியின் மூலம் பொதுவுடைமையைப் பெற்றெடுப்பதற்கு ஒரு மருத்துவச்சி போலிருந்து உதவி புரிவதே வன்முறையின் பங்கு என்பதே மார்க்சியம். அதன் மூலம் உழைக்கும் மக்கள் இழக்கப்போவது தங்கள் அடிமைச் சங்கிலிகளைத்தான். பெறப் போவதோ இந்தப் பேருலகம் - என்று தம் பொதுவுடைமை அறிக்கையை முடித்திருப்பார்கள் மார்க்சும் ஏங்கல்சும்.பாரதிதாசன் அந்த அறிக் கையைப் படிந்திருக்கக் கூடும். எனவேதான் பாரதி அறியாத அல்லது அறிந்தும் ஏற்காத அந்த வர்க்கதர்மத்தைத் துணிச்சலோடு வெளியிடுகிறார் பாரதிதாசன்.ஒரு புதிய சமூக மாற்றத்தை வரவேற்கும் தார்மிகத் துணிவும் தத்துவத் தெளிவும் படைத்த முதற் பெருங்கவிஞனாக வெளிப்பட்டமையால்தான் புதுவைக் கவி பாரதிதாசன் புரட்சிக்கவிஞன் என்ற இலக்கணத்துக்கு முற்றிலும் பொருத்தமானவனாகிறான்.சமூகப் புரட்சிசமூகப் புரட்சி பற்றிய சிந்தனையே ஒரு புரட்சிக் கவிஞனை முழுமைப்படுத்துகிறது. பாரதி வேதகால மகிமைகளைக் கொண்டாடியவன். எனவே சாதி ஒழிப்பு அவன் இலக்காக இல்லை. எல்லா வண்ணங்களையும் கொண்ட ஒரு தாய்ப் பூனையின் குட்டிகள் ஒன்றாக வாழ்வது போல் எல்லா வர்ணங்களின் மக்களும் ஒன்றுபட்டு வாழ முடியாதா என்பது பாரதியின் கேள்வி. வர்ண ஒழிப்பு, வர்ணாசிரம ஒழிப்பு என்பதைப் பாரதி தன் பாடு பொருளாகத் தேர்வு செய்யவில்லை. அவன் காலத்திலேயே முளைவிட்ட திராவிடச் சிந்தனையை அவன் வெறுத்தான். இந்தியாவை ஆரியநாடு என்றழைப்பதிலே அவன் மகிழ்ந்தான்.இவற்றில் பாரதிதாசன் பாரதிக்கு நேர் எதிர்முனை யில் நின்றான். வேதியக் கருத்தியலையும் சாதிய ஒடுக்கு முறைகளையும் தன் உள்ளீடாகக் கொண்ட பார்ப்பனியத்தைக் கடுமையாகச் சாடினான்; ஆரிய மொழியால் ஆரியப் பண்பாட்டால் தமிழர் அழிவுற்ற சீர்கேட்டைக் களைய ஆரியத்தை அழிப்பதொன்றே வழி எனக் கருதினான். சாதி ஒழிப்பின் எல்லை தீண்டாமை ஒழிப்பே என்றும் பாடினான்.“சதுர் வர்ணம் வேதன் பெற்றால்சாற்றும் பஞ்சமர் தம்மைஎது பெற்றுப் போட்டதடி - சகியேஎது பெற்றுப் போட்டதடி?’’என்று வினவுகிறான் பாரதி தாசன், நான்கு வர்ணங்களைப் பிரம்மன் படைத்தான் என்கிறீர்களே.அவ்வாறெனில் ஐந்தாம் வர்ணமான பஞ்சமரை (தலித்துகளை) யார் படைத்தது என்பது பாரதிதாசனின் கேள்வி. இந்த வினாவுக்கு ஆரியம் இன்றுவரை விடையளிக்க வில்லை.பார்ப்பனர் மட்டுமல்லர், பார்ப்பனரல்லாதாரும் கூடத் தம் ஊருக்குள் தாழ்த்தப்பட்டோர் நுழையக் கூடாதென்று தடை விதித்துள்ளனர். இந்த மூடத் தனத்தைப் பார்ப்பனரல்லாதார் சார்பில் சுயவிமர்சனம் செய்கிறான் பாரதிதாசன்.
கவிஞர் தணிகைச் செல்வன்
நன்றி கீற்று

பாரதியின் அடிமை சாசனம் ?