ஆவுடையக்காள் பற்றிப் பாரதியார் கூறாது மறைத்ததேன்?-ஆய்வறிஞர் சு.வேங்கடராமனின் கேள்வி
'அறியப்படாத தமிழ் இலக்கிய வரலாறு' என்ற தலைப்பில் மீனாட்சி புத்தக நிலையம் வெளியிட்டுள்ள முனைவர் சு. வேங்கடராமனின் ஆய்வு நூலை வாசித்துக் கொண்டிருந்தேன். எட்டாவது இயலான 'ஆவுடையக்காள் வேதாந்தப்பாடல் திரட்டு' எனக்குப் பல்வேறு வகைகளில் அதிர்ச்சியளித்தது. இதில் பாரதியாரின் படைப்பியல் நேர்மை குறித்து எழுப்பப் பட்டுள்ள ஐயத்துக்குப் பாரதி ஆய்வாளர்களும் அன்பர்களும் விளக்கம் கொடுத்துள்ளார்களா என்பது இதைத் தட்டெழுதிக் கொண்டிருக்கும் இக்கணம் வரை எனக்குத் தெரியவில்லை.
இந்த ஐயத்தை எழுப்பியிருப்பவர் மகாகவி பாரதியார் மேல் காழ்ப்புணர்வு கொண்டவரல்லர். பாரதியாரின் படைப்புகளையும் பாரதி ஆய்வாளர்களின் ஆய்வுகளையும் திறம்படக் கற்றவர். ஆய்வு மாணவர்களின் ஆய்வேடுகளைக் கண்டிப்பான மதிப்பீட்டுக்கு உள்ளாக்குபவர். நேர்மையான புறநிலைத் தேர்வாளர் என்றும் பெயரெடுத்தவர். மறைந்த ஞானபீட விருதாளரும் புகழ்மிக்க எழுத்தாளருமான அகிலனைக் குறித்து முதன்முதலாக ஆராய்ச்சி செய்தவர். தமிழ் வளர்த்த வைணவம் பற்றியும் அரையர் சேவை குறித்தும் முறையான ஆய்வு நிகழ்த்தி நூல்கள் வெளியிட்டவர். பழுத்த பணி - ஆய்வு அனுபவம் கொண்டவர். மதுரை காமராசர் பல்கலைக் கழகத் தமிழியல் புலத்தில் இக்கால இலக்கியத்துறையின் தலைவராகவும் பேராசிரியராகவும் உள்ளவர்.
பாரதியின் படைப்பியல் நேர்மை குறித்து அவர் எழுப்பியுள்ள வினாவை அப்படியே இங்கு திண்ணை குழாம் முன் வைக்கிறேன்.
"மகாகவி பாரதியார் கவிதைகளிலோ, உரைநடையிலோ ஆவுடையக்காளைப் பற்றி ஏன் குறிப்பிடவில்லை என்பதே அந்த வினா. ஒளவையார், சகோதரி நிவேதிதை ஆகிய பெண்களைக் கொண்டாடும் பாரதி.. எங்கோ, ஜப்பானில் ஹைக்கூ கவிதை எழுதிய கவிஞர் பெயர்களை எல்லாம் விதந்து கூறும் மகாகவி தம் மனைவி செல்லம்மாளின் ஊரான கடையத்திற்கு அருகேயுள்ள செங்கோட்டையில் வாழ்ந்தவரும் தமக்குத் தாக்கத்தை ஏற்படுத்தியவருமான ஆவுடையக்காள் பற்றி எந்தக் குறிப்பையும் ஏன் பதிவு செய்யவில்லை? என்ற வினா விசுவரூபம் எடுத்து நிற்கிறது. இளம் வயதில் விதவையாகி, ஊரின் ஏச்சையும் பேச்சையும் சாதிப்புறக்கணிப்பையும்(அந்நாளில் ஆவுடையக்காள் அந்தணர்களால்சாதிப்பிரஷ்டம்சாதிநீக்கம்செய்யப்பட்டவர்)தாண்டி,ஆத்மானுபவத்தில் தான் வளர்ந்ததோடு மற்ற பெண்களுக்கும் உபதேசம் பயிற்சி தந்து, நிஜமான பெண் விடுதலையைச் செய்துகாட்டிய செயல் வீரர் அக்காள். பெண் விடுதலை பேசும் பாரதியார், ஆவுடையக்காள் பற்றி எதுவும் கூறாமல் போனது தற்செயல் நிகழ்வா? திட்டமிட்ட இருட்டடிப்பா? அக்காள் பெண் கவிஞர் என்பதுதான் இதற்கான காரணமா? என்னதான் சரிநிகர் சமானமாய் வாழ்வோம் என்று பாடினாலும், பாரதி ஆண் என்பதால், ஆவுடையக்காளைப் பற்றிக் கூறவில்லை என்பது எஞ்சி நிற்கும் விடை. கோமதி ராஜாங்கம் அம்மையார் இத்தகவல்களைத் தராவிட்டால் தமிழ் உலகிற்கு இந்த அகச்சான்றுகள் தெரியாமலே போய் இருக்கும். (பக்.97-98)"
கோமதி ராஜாங்கம் என்பவர் (சங்கரக்ருபா - 1964 நவம்பர் -டிசம்பர்)எழுதிய ஆவுடையக்காள் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அக்காள் குறித்த விவரங்களைச் சு.வே. தந்துள்ளார். திருமதி கோமதி ராஜாங்கம், பல ஆண்டுகளாக நெல்லை, நாகர்கோவில் மாவட்டங்களில் பல ஊர்களில் (செங்கோட்டை, சுந்தர பாண்டியபுரம், சாம்பூர் வடகரை, ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி, முன்னீர்ப் பள்ளம், நாகர்கோயில் வடிவீச்சுரம்) களஆய்வு செய்து அக்காளின் பாடல்களையும் வாழ்க்கைக்குறிப்புகளையும் தேன் கூட்டும் தேனீபோலத் திரட்டியுள்ளார். ஆவுடையக்காளின் கவிப்புலமையை மிகவும் அனுபவித்து ஒளவையாருடன் அவரை ஒப்பிட்டுள்ளார். "நம் தமிழ் நாட்டுப் புலவர்களில் முன்னணியில் நிற்கும் ஸ்ரீஒளவைப் பாட்டிக்கு நிகரானவள் என்பதை மட்டும் துணிந்து கூறுவேன். இதுபோன்று எத்தனை மாணிக்கங்கள் நம்நாட்டுப் புனித மண்ணில் மறைந்து கிடக்கின்றனவோ? அவைகளை வெளிக்கொணர எத்தனை உ.வே.சாமிநாதஅய்யர்கள்அவதாரம்செய்யவேண்டுமோ?(ஆவுடையக்காள் பாடல் திரட்டு, நித்யானந்த கிரிசுவாமிகள் (ப.ஆ), ப.xx) கோமதிராஜாங்கம் அம்மையாரின் மேற்கண்ட வினா, தமிழ் ஆய்விற்கு விடப்படும் சவால். ஆனால், அவை பொன்னெழுத்துக்களால் வடித்தெடுக்கப்படத்தக்கவை என்றும் சு.வே. கருதுகிறார்.(ப.96) இனி அடுத்து வரும் பகுதியை சு.வே. அவர்கள் நடையில் தருவதுதான் அவர் கேட்டுள்ள கேள்விக்கு உதவும் என்பதால் அப்படியே தருகிறேன்.
"திருமதி கோமதி ராஜாங்கம் நெல்லை மாவட்டம் கடையத்தில் பிறந்து ஸ்ரீவைகுண்டத்தில் வாழ்க்கைப்பட்டவர். கோமதியின் தாயார் சீதாலட்சுமி, மகாகவி பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பாரதிக்கு உடன்பிறந்த மூத்த சகோதரி. பாரதியார் ஆவுடையக்காள் பாடல்களை நன்கு கேட்டுக் கேட்டு அவைகளில் நெஞ்சம் பறிகொடுத்த பாவியாவார். ஆவுடையக்காளிடமிருந்து அவர் (பாரதி) நிறையவே தாக்கம் பெற்றிருக்கிறார். வேதாந்தக் கருத்தாக்கம் மட்டுமல்லாமல், சொற்கள், பெண்ணுரிமைச் சிந்தனை என்று பல நிலகளில் மகாகவி பாரதியாருக்கு ஆவுடையக்காளே முன்னோடி. அக்காளின் பாடல்களை முதன் முதலாகப் படிப்பவருக்கு இது புலப்படும். இதனைக் கோமதி ராஜாங்கம் அம்மையார் கூறும் அகச்சான்று புலப்படுத்தும்; உறுதிசெய்யும். "ஸ்ரீசுப்பிரமணிய பாரதியாருக்கு ஸ்ரீஅக்காள் அவர்களின் பாடல்கள் என்றால் உயிர். அவரும் ஸ்ரீஅக்காள் வரலாற்றை அறிய முயற்சி செய்ததாகத் தெரிகிறது. அவளுடைய அநேகப் பாடல்களின் கருத்துக்களை ஒட்டியே அவரும் (பாரதியாரும்) அநேக வேதாந்தப் பாடல்களைப் புனைந்திருக்கிறார். அவர் (பாரதியார்) எனது தாயார் அவர்களுக்குச் சகோதரியின் கணவராகையால், (என்) சிறுவயதில் அவர் (பாரதியார்) மூலமாகவும் சில தகவல்களை அறியும் (அக்காள் பற்றிய தகவல்கள்) பாக்கியம் கிடைத்தது (ஆவுடையக்காள் பாடல் திரட்டு, பக். xix,xx). [அடைப்புக் குறிகளுக்குள் உள்ளவை சு.வே. அவர்களால் விளக்கத்திற்காகத் தரப்பட்டவை. தடித்த எழுத்துகள் இக்கட்டுரையாசிரியனால் இடப்பட்டவை.]
ஆவுடையக்காள் குறித்துச் சுருக்கமாகக் காண்போம். நெல்லை மாவட்டம் செங்கோட்டையைச் சார்ந்தவர் அக்காள். காலம் கி.பி. 17ஆம் நூற்றாண்டு. அந்நாட்களில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திலிருந்தது செங்கோட்டை. அக்காள், சிறுவயதிலேயே வயதுக்கு வருமுன்பே மணமாகிச் சில காலத்திலேயே கணவனை இழந்து விதவையானவர். அப்பொழுது தன் அம்மாவும் உறவினர்களும் ஓவென்று அழுதபொழுது, அவர்களைப் பார்த்து அக்காள் கேட்டாராம்:- "அவர்கள் வீட்டில் பையன் இறந்தால் நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?"
ஊரார் எதிர்ப்பையும் மீறி அக்காளின் தாயார் தன் வீட்டிலேயே ஆவுடைக்குக் கல்வி கற்பித்தாள். பருவமெய்தியதும் குலவழக்கப்படி கட்டாயமாக விதவைக் கோலத்துக்கு ஆவுடையக்காள் உட்படுத்தப்பட்டு வருந்திக் கொண்டிருக்கும் காலத்திலே அவ்வூருக்கு வர வாய்த்த, தஞ்சை மாவட்டத் திருவிசைநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள், அக்காளுக்கு ஆறுதல் கூறியதோடு மந்திரோபதேசமும் செய்து வைத்திருக்கிறார். ஊராரின் பேச்சும் கேலியும் குறித்துக் கவலைப்படாதே என்று அவர் உபதேசித்ததை அக்காள். தன் 'பண்டிதன் கவி' என்ற பாடலில் (ஆவுடை அக்காள் பாடல் திரட்டு, பா.23;ப.3) "துர்ஜனங்கள் வார்த்தையைச் செவியிலும் கேளாதே!" என்று குறிப்பிட்டுள்ளார். மிக விரைவிலேயே நிர்விகல்ப சமாதி கிட்டும் சுவானுபூதி நிலை கைவரப் பெற்றார். மிகக் குறைந்த கல்வியறிவு உடையவர்களும் எளிதில் புரிந்து கொள்ளுமாறு இசைப்பாடல்களாகவும்,நாட்டார்நாநவில்இலக்கியவகைப்பாடல்களாகவும் பாடியுள்ளார். ஓர் ஆடி அமாவாசையில் குற்றால மலை மீதேறிச் சிறிது நேரம் தியானம் செய்து வருவதாகச் சொல்லிப் போனவர் திரும்பவில்லை என்பதுடன் எவ்வளவு தேடியும் ஆவுடையக்காளின் சடலம் கூடக் கிடைக்கவில்லையாம்.
இனி, அக்காளின் வேதாந்தப் பாடல்களின் பகுதிகளைக் காண்போம். இவை பாடப்பெற்ற காலம் 17ஆம் நூற்றாண்டு என்பதை மனத்துள் கொண்டு பார்க்கும் பொழுதுதான் அவர் அருமை நமக்கு மிகவும் விளங்கும். இவை 'ஆவுடையக்காள் வேதாந்தப் பாடல் திரட்'டிலிருந்து சு.வே. கொடுத்துள்ளவை:-
அத்வைத விளக்கம்
"எங்கிருந்தெங்கே வந்தாண்டி அவன் எங்கும் நிறைந்தவன்தாண்டி
மாயையினால் மறைந்தாண்டி இவன் மனதுக்குள்ளே இருந்தாண்டி!"
சாதிபேதமற்ற நிலை
"கோத்திரங்கள் கல்பிதகுணங்கள் குடிகளும் போச்சே!
குணாதீதமான பரபிரம்மம் நானென்பதாச்சே!"
"மோகத்தைக் கொன்றுவிடு!" என்ற பாரதிக்கு மூலம்
"மோகத்தை வெல்லாமல் மோசம் போகாதேயென்று"
பயனென்ன?
"காசிராமேசுவரம் சென்றாய் காகம்போல் மூழ்கிநின்றாய்
உன்னாசை போச்சோ மூடா.."
வேதாந்தக் கப்பல்/கப்பல் பாட்டு
"தள்ளப்பா தள்ளு ஷண்மதவாதிகளைத் தள்ளு
தொடுத்து அடித்து முடுக்கித் தள்ளு
சோகமென்னும் சாகரத்தை அப்புறத்தில் தள்ளு
ஏலேலோ ஏகாந்த ரஸம்!
ஏலேலோ வேதாந்த ரஸம்!"
குயில் கண்ணி
"மனமும் பொய்யடியோ குயிலே
மனக்கூடும் பொய்யடியோ!
இனமும் பொய்யடியோ, குயிலே
தனமும் பொய்யடியோ!"
தீட்டு எதிர்ப்பு
"எச்சில் எச்சிலென்று புலம்புகிறார் மானிடர்கள்
எச்சில் இலாத இடம்
இல்லை பராபரமே!"
"உலகத்துப் பிள்ளையும் உன்
கக்கத்துத் தீட்டன்றோ?
உன்னுடைய வெட்கத்தை யாரொடும்
சொல்வேன் பராபரமே!"
"தீட்டென்று மூன்றுநாள் வீட்டைவிட்டு விலக்கி
நாலாம்நாள் உதயத்தில் நன்றாய் உடல் முழுகி
ஆசாரமாச்சுதென்று ஐந்தாம் நாள் முழுகி
அகத்திலுள்ள பொருள் தொடுவாய் அகத்தீட்டுபோச்சோ?"
-இங்கே முனைவர் சு.வே., பாரதியை ஆவுடையக்காளுடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பது ஆழ்ந்த சிந்தனைக்கு உரியது. பாரதிக்கு நூற்றாண்டுகள் முந்திய அக்காள் முற்போக்காய் விளங்க, காலத்தால் பிற்பட்ட பாரதி பிற்போக்குடன் விளங்குவதை, "ஆவுடையக்காளின் பாடல்கள் மூலம் பெண்சம உரிமை, சரிநிகர் சமானம் என்ற கருத்தாக்கத்தைப் பெற்ற மகாகவிகூட, இந்தத் தீட்டு என்று பெண்ணை அடிமைப்படுத்தும் கருத்தை எதிர்த்துக் குரல் எழுப்பவில்லை. மாறாக, அதை ஆதரித்தே பாடுகிறார். பாஞ்சாலி சபதத்தில் பாஞ்சாலி,
".......மாதவிலக்காதலால் ஓராடை தன்னில் இருக்கிறேன்...."
...என்று கூறுகிறாள். ஆவுடையக்காள் இதில் உச்சநிலையில், ஆணாதிக்கக் கருத்தியலை எதிர்த்துக் குரல் எழுப்பியது அறியத்தக்கது" என்று எடுத்துக் கூறியுள்ளார்.
தமிழின் முதல் பெண்ணியப் பாவலர் என்று ஏன் ஆவுடையக்காளை(கி.பி. 17ஆம் நூற்றாண்டு) நாம் குறிக்கக் கூடாது? ஏன் அத்தகைய தன் முன்னோடியை பாரதியார் தன் படைப்புகளில் எங்கும் குறிப்பிட்டுப் பதிவு செய்யத் தவறினார்?, என்ற கேள்விகளை நம் உள்ளத்துள் விதைத்துள்ளார் முனைவர் சு. வேங்கடராமன்.
பாரதி அன்பர்களுள் யாரேனும் இதற்கு விடை தர முன்வருவார்களா?

திண்ணையில் தேவமைந்தன்