இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Saturday, 23 June 2007

புதுச்சேரியின் கடைசிப் புலி - பாரதி வசந்தன்

புதுச்சேரியில் முதன் முதலாகத் தொழிலாளர் இயக்கத்தைத் தோற்றுவித்தவர், ஆசியாக் கண்டத்திலேயே 8 மணி நேர வேலை உரிமையைப் பெற்றுத் தந்தவர், புதுச்சேரியின் விடுதலைக்காகப் பாடுபட்டவர், இந்தியாவின் தலைசிறந்த விடுதலை வீரர்கள் 97 பேரில் ஒருவர் என இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டவர், தம் வாழ்நாளை பொதுமக்களின் நலனுக்கென்று அர்ப்பணித்தவர், சிறந்த மனிதாபி மானமிக்க கம்யூனிஸ்ட் தலைவர் என்று அழைக்கப் பட்டவர், அவர்தாம் 'புதுச்சேரியின் கடைசிப் புலி” என்று போற்றப்படும் மக்கள் தலைவர் வ.சுப்பையா அவர்கள்.

புதுச்சேரியில் 'பாட்டுச் சாமிஃ என்றால் அது பாரதி; 'பாட்டு வாத்தியார்” என்றால் அது பாரதிதாசன். 'பப்பாஃ என்றால் அது எதுவார் குபேர். அதேபோன்று 'மக்கள் தலைவர்” என்றால் அது வ.சுப்பையா ஒருவரையே குறிக்கும்.

இன்றைக்கு அரசியலில் நிறைய பேர் தம்மை மக்களுக்காக உழைக்கின்ற தலைவர்களென்று பெருமையோடு பிரகடனப்படுத்திக்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் மக்களுக்கு உழைத்த தலைவர் வ. சுப்பையா என்பது அவருக்குள்ள தனிச்சிறப்புகளுள் முதன்மையானது. அதனால்தான் மக்களே முன்வந்து இவரை 'மக்கள் தலைவர்” என்றழைத்து இன்றளவும் அதனைத் தங்கள் இதயங்களில் எழுதி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கவிஞர் பாரதிதாசன் 'புதுச்சேரியின் வரலாறு என்பது 'வி.எஸ்” என்கிற இரண்டு எழுத்தின் வரலாறு...” என்று பதிவு செய்துவிட்டுப் போயிருக்கிறார். அதுவே புதுச்சேரியின் எழுதப்படாத ஆவணமாக இன்றைக்கும் இருந்து வருகிறது.

அந்நாளில் புதுச்சேரியில் 'எண்: 7 வெள்ளாழர் வீதி’ என்றால் 'அது புதுச்சேரியின் முகவரி’ என்று முகம் நிமிர்த்திச் சொல்வார்கள். குறிப்பாக 50களில் எழுச்சிமிகு இளைஞர்களுக்கு, முற்போக்காளர்களுக்கு, கொள்கைப் பற்றாளர்களுக்கு இந்த வெள்ளாழர் வீதிதான் பாசறையாக விளங்கிவந்தது. அங்குபோய் வருவதென்றால் அது அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் ஓர் அணிவகுப்பில் கலந்து கொண்டு திரும்பி வருவதைப்போல. அங்குதான் 'புதுச்சேரியின் நிமிர்வு’ என்று வரலாற்றில் எழுதப்படும் வ. சுப்பையாவின் இல்லம் இருந்தது; இப்போதும் இருக்கிறது.

சுப்பையாவின் தந்தை வரதராஜுலு நாயுடு, தாயார் இராஜ பங்காரு அம்மாள். அவர்களுக்கு 07.02.1911 ஆம் நாள் மகனாகப் பிறந்தவர் அவர். சுப்பையாவின் தந்தையார் புதுவையின் புகழ் பெற்ற நவதானிய வியாபாரியாக வாழ்ந்தவர். அப்போது பிரெஞ்சிந்திய அரசில் மிகவும் செல்வாக்கோடு இருந்தவர் 'நாடு ஷண்முக வேலாயுதம் பிள்ளைஃ. அவர் பெயரில் புதுச்சேரியில் நீணடகாலமாக ஒரு தெரு இருந்தது. அதுதான் சுப்பையா இருந்த வெள்ளாழர் வீதி. சுப்பையா பிறந்த தினத்தன்று அதே தெருவில் வசித்து வந்த அந்த வேலாயுதம் பிள்ளை இறந்துவிட்டார். பெரும் புகழோடு இருந்த அவர் 'கைலாசம்” போன அன்று சுப்பையா பிறந்துவிட்டதால் அவருக்கு 'கைலாச சுப்பையா’ என்று பெயரிட்டுவிட்டார்கள். கொஞ்ச காலம் சுப்பையாவும் அந்தப் பெயரிலேயே அழைக்கப்பட்டார். பிறகு, அந்தக் கைலாசம் ஒரு வழியாய்க் 'கைலாசத்துக்குப்” போய்விட மக்கள் மன்றத்தில் அவர் 'வி.எஸ்” என்ற இரண்டு ஆங்கில எழுத்துக்களினால் உழைக்கும் மக்களின் அரிவாள் சுத்தியலைப் போன்று ஆகிப்போனார். பின்னாளில் கவியோகி சுத்தானந்த பாரதியார் தமிழிலும் தெலுங்கிலுமாக அவரைப் பற்றி எழுதிய கவிதை இது:

'கப்சுப் என்னக் கலதிகள் அடங்க

மெய்ப்பொருள் விரிக்கும் வீரச் செம்மல்

மக்கள் மதிக்கும் மாண்புறு தலைவன்

பக்குவ மன்றிலே பழுத்த சொல்லான்

சோர்வு படாத சொல்-எழுத் துரையான்

நேர்மை யுடைய நேயன்...

புதுவை அரசியல் புலி எனத் தக்கோன்

பொதுநல மேதன் பொழுதுபோக் கானோன்...


நாயுடு காரு நடதலோ மஞ்சி

சேயுடு வாரு சிரஞ் ஜீவிகா

ஜனுலந்த பொகட தனகன பாக்யமு

சனுவுகா கலிகி சக்ககா பெருக

ஆசீர் வதிஞ்சேனு அந்தரங்க முலோ...

பேச்சும் நடையும் வீச்சும் வீறும்

ஓச்சும் கையும் உறுதியும் உள்ளமும்

சோவியத் ரஷ்ஷியச் சுடர்பொது வுடைமை

மேவிய வீறுகொள் வீரனை விளக்கும்

மார்க்சும் லெனினும் மாண்புறு ட்ராஸ்கியும்

ஆக்கிய பொதுநல பாக்கிய உருவே

புதுவைத் 'தமிழ்நாயுடுஃ வின் பெரும் புகழாம்..”

வ.சுப்பையா என்னும் தனி மனிதர்- ஒரு தத்துவமாகவும், அந்தத் தத்துவத்தை நடைமுறைப் படுத்தி மக்களைத் தலைநிமிரச் செய்தவராகவும், புதுச்சேரி மண்ணை பொதுவுடைமை பூமியாக்கியவராகவும் ஒரே சமயத்தில் சர்வ வல்லமைபெற்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையும், பெரெஞ்சு ஏகாதி பத்தியத்தையும் ஒரு சேர எதிர்த்துப் போராடி, அதில் வெற்றி பெற்றவராகவும் விளங்கியவர். இத்தகையவர்கள் வெகு சிலர்தாம் தேறுவார்கள்.

சுப்பையாவின் இளம் உள்ளத்தில் பாரதியும், அரவிந்தரும், வ.வே.சு ஐயரும் புதுச்சேரியில் தோற்றுவித்த தேசியப் புரட்சியும், ஏற்படுத்திய நாட்டுப்பற்றும், விடுதலை வேட்கையும் ஆழப் பதிந்தன. 1919ஆம் ஆண்டு இந்தியாவை உலுக்கிய 'ஜாலியன் வாலாபாக் படுகொலையும்”, 1920ஆம் ஆண்டு காந்தியாடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கமும், சுப்பையாவுக்குள் சுதந்திரக் கனலை மூட்டின. புதுச்சேரியில் கலவைக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவர் சுப்பையா, 1927ஆம் ஆண்டு கடலூருக்கு வருகை தந்த காந்தியாரைத் தம் மாணவ நண்பர்களோடு சந்தித்ததோடு அதே ஆண்டில் சென்னையில் 'டாக்டர் அன்சாரி’ தலைமையில் நடந்த அகில இந்தியக் காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்திலும் கலந்துகொண்டார். அப்போது அவருக்கு வயது பதினாறு.

அதனைத் தொடர்ந்து 1929ஆம் ஆண்டு 'நடபுறவுக் கழகம்” என்கிற இலக்கிய அமைப்பினையும் ஏறக்குறைய இதே காலக் கட்டத்தில் 'பரஸ்பர சகோதரத்துவ சங்கம்” மற்றும் 'பிரெஞ்சிந்திய வாலிபர் சங்கம்”, 'இராமகிருஷ்ணா வாசக சாலைஃ போன்ற அமைப்புகளையும் உருவாக்கி அவற்றின் தலைவராய்த் திகழ்ந்த சுப்ûபாய புதுச்சேரியின் தவிர்க்க முடியாத ஒரு தனிப்பெரும் சக்தியாக வளரத் தொடங்கினார். அதே சமயம் அவருக்கு தந்தை பெரியாரின் சுய மரியாதை இயக்கக் கூட்டங்களில் கலந்துகொள்வதிலும், அந்த இயக்கத்தின் 'குடியரசுஃ இதழைப் படிப்பதிலும் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து சுயமரியாதை நூல்களை வாங்குவதும் அதுகுறித்து விவாதிப்பதுமாக வளர்ந்தார்.

அதன் விளைவாக 1930ஆம் ஆண்டில் புதுவையிலிருந்து வெளிவந்த 'புதுவை முரசுஃ என்கிற சுயமரியாதை இதழுடனும் அதன் ஆசிரியர்கள் பொன்னம்பலனார், குத்தூசி குருசாமி ஆகியோருடனும் அவருக்கு நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டது. அதனால் 1931-32ஆம் ஆண்டுகளில் நடந்த பிரெஞ்சிந்திய வாலிபர் மாநாடுகளுக்கு வரதராஜுலு நாயுடு, தெ.பொ. மீனாட்சி சந்தரனார், வை.மு. கோதை நாயகி அம்மாள், டாக்டர் சி.நடேச முதலியார் போன்ற சுயமரியாதை இயக்கத் தலைவர்களையெல்லாம் அழைத்துவந்து புதுச்சேரியில் அந்த இயக்கத்தின் கொள்கைகள் பரவும்படிச் செய்தார். அதில் அநேக இளைஞர்கள் ஈர்க்கப்பட்டார்கள்.

1933ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் காந்தியால் தொடங்கப்பட்ட 'ஹரிஜன சேவா சங்கத்தின் கிளைஃ புதுச்சேரியிலும் சுப்பையாவால் தொடங்கப்பட்டது. அவரின் வாலிபர் இயக்கத்திலிருந்து வந்தவர்களே இச்சங்கத்திலும் முக்கிய பங்கு வகித்தார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளுக்கு இச்சங்க உறுப்பினர்கள் சென்று காந்தி வகுத்த திட்டப்படி சேரிகளைத் தூய்மைப்படுத்தியதோடு அங்கிருந்த குழந்தைகளையும் பராமரித்து அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்தார்கள். தீண்டாமையை ஒழிக்கும் முயற்சியாக புதுச்சேரியின் பல இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று இரவுப் பள்ளிகள் அமைத்து அவர்கள் கல்வியறிவு மேம்படுவதற்கு முயன்றார்கள்.

எல்லாவற்றையும் சுப்பையாவே செயலாளராக இருந்து தலைமையேற்று நடத்தி வந்தார். புதுச்சேரியில் தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்கென்று முதல் இயக்கம் தொடங்கிய சுப்பையா அந்த இயக்கத்தின் ஆணிவேராக நம்பப்பட்ட காந்தியாரை புதுச்சேரிக்கு அழைத்துவர விரும்பினார். முதலில் வருவதாக ஒப்புக்கொண்டவர் பின்னர் பல்வேறு காரணங்களுக்காக வர மறுத்துவிடவே, அப்போது இளைஞராய் இருந்த சுப்பையா நீலகிரியில் உள்ள குன்னூருக்குச் சென்று அங்கே தங்கியிருந்த காந்தியாரைச் சந்தித்து இரண்டு நாட்கள் அவரோடு கூடவே இருந்து போராடி அவரைப் புதுச்சேரிக்கு அழைத்து வந்தார்.

காந்தியார் 1934ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி புதுவைக்கு வந்து திரளான மக்கள் கூட்டத்தில் பேசினார். ஒதியன்சாலைத் திடலில் அவர் பேசிய பேச்சை அன்றைய தினம் ராஜகோபா லாச்சாரிதான் தமிழில் மொழி பெயர்த்தவர். அப்போதெல்லாம் பிரெஞ்சிந்திய அரசு நிர்வாகத்தில் இப்படிப்பட்ட அரசியல் பொதுக் கூட்டங்களுக்கெல்லாம் அனுமதி வழங்குவது என்பதே இல்லாதிருந்த சூழல். சுப்பையாவுக்கு மக்களிடம் இருந்த செல்வாக்கு கண்டு, அவர் ஏற்பாடு செய்த கூட்டம் என்பதால், அப்போதைய புதுவை ஆளுநர் 'ஜார்ஜ் பொர்ரேஃ என்பவர் அனுமதி வழங்கினார். அதோடு, யாருக்கும் தெரியாமல் ஒதியன்சாலை காவல் நிலையம் அருகே நின்றபடி காந்தியடிகளின் சொற்பொழிவையும் கேட்டார் என்பது புதுச்சேரி பிரெஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த ஒரு செய்தி.

புதுச்சேரிக்கு முதன்முதலில் காந்தியை அழைத்துவந்தவர் 1934ஆம் ஆண்டு பொதுவுடைமை இயக்கத்தில் தம்மை இணைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் அந்த இயக்கத்தை நிறுவிய தலைவர்களுள் ஒருவராக உயர்ந்தது அவர் பெற்ற அரசியல் மாற்றம்.

'நாட்டின் புரட்சி இயக்கத் தலைவர்களோடு எனக்கு ஏற்பட்ட தொடர்பும், நான் படித்த அரசியல் நூல்களும், என்னுள் மார்க்சிய அரசியல் சித்தாத்தங்களை வடிவமைப்பதில் பெரிதும் துணைபுரிந்தன. இந்தக் காலகட்டம் என் வாழ்வில் முக்கியமான காலகட்டமாகும். காந்தியக் கோட்பாட்டிலிருந்து மார்க்சிய- லெனினியக் கோட்பாடுகளுக்கும், அரசியல் சித்தாந்தங்களுக்கும் திசை திருப்பிய திருப்பு முனையாகும்.

இந்த நாட்டில் தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக்கெட்டுப் பாழ்பட்டு நிற்கும் பல லட்சக்கணக்கான பாட்டாளி மக்கள் கடைத்தேற வேண்டுமென்றால் சுரண்டலையும், சமூகக் கொடுமைகளையும் எதிர்த்து நடத்தப்படும் வர்க்கப் போராட்டத்தினால் மட்டுமே அது கைகூடும் என்னும் ஆழ்ந்த உறுதியை என் மனதில் ஏற்படுத்தியது...” என்று மார்க்சிய சித்தாந்தத்தில் தம்மை இணைத்துக் கொண்டது பற்றி 'பிரெஞ்சிந்திய விடுதலை இயக்க வரலாறு’ எனும் தம் நூலில் அவரே குறிப்பிடுகிறார்.

இதே ஆண்டு ஜூன் மாதத்தில் சுப்பையா 'சுதந்திரம்” என்கிற வார இதழைத் தொடங்கினார். அதன் முதல் இதழின் அட்டைப் படம் 'சுதந்திர தேவி’ கோட்டை வாயிலின் முகப்பில் தன் கையில் 'சுதந்திரம்” என்கிற பதாகை தாங்கிய சுதந்திரக் கொடியுடன் சங்கொலி எழுப்பிக்கொண்டு எக்காளமிட்டபடி குதிரையில் வருவது போன்ற தோற்றம். பின்னணியில் சுதந்திர இந்தியாவில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும்படியாக இந்து இஸ்லாமிய கிறிஸ்துவக் கோயில்கள். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அணா விலையுள்ள அந்த முதல் இதழ்:

'பொன்னையும் வேண்டேன்

பொருளையும் வேண்டேன்

போற்றுமா மதிமுகத்தினராம்

கன்னியர் வேண்டேன்

ககனமும் வேண்டேன்

கடவுளே இவையெலாம் வேண்டேன்;

என்னிலும் இனிதாம்

எதனிலும் இனிதாம்

யாவரும் விரும்பிடும் 'சுயேட்சை’

தன்னையே வேண்டி

நின்றேன் தமியேன்

தானருள் புரிகுவாயே’

என்கிற விடுதலை உணர்வைத் தூண்டும் கவிதையோடு வெளிவந்தது. 'அன்றைய பிரெஞ்சிந்திய மக்கள், தொழிலாளர்கள், கிராமப்புற ஏழை விவசாயிகள், கிராமியப் பெருந்தனக்காரர்கள் முதல், நகரத்தில் மிகப்படித்த வழக்கறிஞர்கள், தேசபக்த வாணிபர்கள் வரை இப்பத்திரிகை வருகைக்காக ஒவ்வொரு வாரமும் ஆவலுடன் காத்திருப்பார்கள்...” என்று வரலாற்று ஆய்வாளர்களால் குறிப்பிடப்படும் 'சுதந்திரம்” பிரெஞ்சு, தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளிவந்தது. சுப்பையா ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியின் புதுவை மாநில ஏஜெண்டாகப் பணிசெய்து அதன் மூலமாய்க் கிடைத்த சில நூறு ரூபாய்களை மூலதனமாக வைத்தே 'சுதந்திரம்” பத்திரிகையை நடத்திக்கொண்டிருந்தார்.

1934ஆம் ஆண்டில் பேச்சுரிமை, எழுத்துரிமை போலும் ஜனநாயக உரிமைகள் யாவும் மறுக்கப்பட்ட புதுச்சேரியில் சுப்பையாவின் 'சுதந்திரம்” ஆளும் வர்க்கத்தினருக்கு அச்சுறுத்தலாகவே இருந்து வந்தது. ஒரே சமயத்தில் தேசிய எழுச்சியையும், பொது வுடைமைப் புரிதலையும் ஏற்படுத்திய 'சுதந்திரத்தைஃ பிரிட்டிஷ் அரசாங்கம் தடைசெய்தது. பலமுறை 'சுதந்திரம்” அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. அதனை அச்சடித்த அச்சகங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகின. விற்பனை செய்த தோழர்கள் வன்முறைக்கு ஆளாகினர். ஒரு தோழர் கொலை செய்யப்பட்டார். இத்தகைய தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில் ஒருமுறை 'சுதந்திரம்” அச்சகத்தின் இயந்திரங்கள் மற்றும் பொருட்களை பிரெஞ்சிந்திய அரசாங்கத்திற்குத் தெரியாமல் இரவோடு இரவாக லாரியில் ஏற்றி விழுப்புரத்துக்குக் கொண்டுபோய் அங்கே அச்சகத்தை நிறுவி 'சுதந்திரம்” இதழ் மக்களுக்குத் தடையில்லாமல் கிடைக்கச் செய்தவர் சுப்பையா. நெஞ்சுரமும், கொள்கைப் பிடிப்பும், விடா முயற்சியும் கொண்ட வீரம் மிகுந்த தோழராக அவர் பலரையும் வியக்க வைத்தார்.

சுப்பையாவின் 'சுதந்திரம்” இதழ் குறித்து இன்னொரு முக்கியமான செய்தி, அக்காலத்தில் நூல் வடிவம் பெற்றிராத தடை செய்யப்பட்ட பல பாரதி கதைகளையும், பாடல்களையும், கட்டுரைகளையும் புதுவையில் முதன் முதலில் அச்சமின்றி வெளியிட்டது என்பதாகும். பாரதியின் 'பஞ்ச கோணக்கோட்டைக் கதைஃ மற்றும் 'சிவாஜிஃ போன்றவை அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை. அது மட்டுமல்ல, தமிழில் முதன் முதலில் மார்க்கியப் பார்வையில் கட்டுரைகளை வெளியிட்ட முதல் இதழ் என்று சொன்னால் அது சுப்பையாவின் 'சுதந்திரம்” இதழ்தான். பொதுவுடைமை இயக்கத்தின் 'ஜனசக்திஃகூட 'சுதந்திரம்” இதழுக்குப் பிறகுதான், அதாவது 1937ஆம் ஆண்டில்தான் தொடங்கப்பட்டது. 'சுதந்திரம்” இதழ் 50 ஆண்டுகால நீண்ட வரலாறு கொண்டது. புதுச்சேரியின் கலை இலக்கியம் மற்றும் அரசியல் துறை சார்ந்த பத்திரிகைகளின் வரலாற்றில் வேறெந்தப் பத்திரிகையும் இவ்வளவு காலம் வந்ததில்லை.

தொழிலாளர்களின் நலன்களைக் காக்கவும், அவர்கள் மேம்பாட்டிற்காகவும் எதையும் செய்யத் துணிந்தவர் தோழர் சுப்பையா. அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, அச்சமற்ற தன்மை ஆகியவை அவரின் போராயுதங்களாய்த் திகழ்ந்தன. சுப்பையா என்று சொன்னால் அது 'தொழிலாளர்களின் தோழன்” என்று பொருள் சொல்லும்படியாகத்தான் அவரின் அணுகுமுறையும், வாழ்க்கை நெறியும் இருந்தன.

1935ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புதுச்சேரியில் 'சவானா மில்” தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமைச் சட்டம் கேட்டு முதல் வேலை நிறுத்தத்தை மேற்கொண் டார்கள். அதுதான் முதலாளித்துவத்தின் மீது புதுச்சேரித் தொழிலாளர்கள் வைத்த முதல் நெருப்பு. அப்போதெல்லாம் பிரெஞ்சிந்தியத் தொழிலாளர்கள் காலம் நேரம் என்று கணக்கில்லாதபடிக்கு வேலையில் பிழிந்தெடுக்கப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டார்கள்.

காலையில் வேலைக்குப் போனால் இரவுதான் திரும்ப முடியும். பிள்ளைகள், மனைவியர் முகம் பார்த்துப் பேச முடியாத பெரும் கொடுமை. கொத்தடிமைகளாய்க் கேவலப்படுத்தப்பட்ட வேதனை. எதிர்த்துக் கேள்விகள் கேட்கமுடியாத நிலைமை. அவர்களின் அடிப்படை உரிமைகள் நசுக்கப்பட்டன; பறிக்கப்பட்டன. சவானா மில் தொழிலாளர்களோடு புதுச்சேரியின் மற்ற இரண்டு மில்களான ரோடியர் மில், கெப்ளெ மில் தொழிலாளர்களும் சேர்ந்து கொண்டு ஒருமித்து நடத்திய போராட்டத்தினால் ஓரளவுக்குத்தான் நியாயம் கிடைத்தது. தொழிலாளர்களின் வேலைநேரம் 12 மணியிலிருந்து 10 மணியாகக் குறைக்கப்பட்டது. ஆயினும், தொழிலாளர் நலன்களும், தொழிற்சங்க உரிமைகளும் மறுக்கப்பட்டன. எனவே போராட்டம் மேலும் தீவிரம் பெற்றது.

1936ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் நாள் வெறி பிடித்த பிரெஞ்சு ஏகாதிபத்தியம் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை முறியடிக்கும் வகையில் தமது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டது. அந்த நேரத்தில் தலைமறைவாயிருந்து போராட்டங்களை வழி நடத்திய சுப்பையா தொழிலாளர்களோடு ஏதோ ஒரு மில்லில் இருக்கக்கூடும் என்று கருதிய பிரெஞ்சு அரசாங்கம் அவரைச் சுட்டு வீழ்த்தத் திட்டமிட்டிருந்தது. ஆயுதம் தாங்கிய பிரெஞ்சுக் காவல் படையும், அதிகாரிகளும், சுழல் பீரங்கிகளோடு அணிவகுத்து தொழிலாளர்கள் மீது படுபயங்கரமான வன்முறையை ஏவிவிட்டனர். மனித உரிமைக்கு எதிரான அந்தக் கொடூரமான பீரங்கி குண்டுகளின் தாக்குதலினால் 12 தொழிலாளத் தோழர்கள் களப் பலி ஆனார்கள். நூற்றுக் கணக்கானோர் குண்டடிபட்டு முடமானார்கள். எங்கும் இரத்தக் களறியாய் இருந்தது. தொழிலாளர் சமூகத்திற்கு எதிரான அந்தக் கொடுங்கோன்மை குறித்து சுப்பையா 'புதுவையின் விடுதலையை வென்றெடுத்த தொழிலாளர்களின் வீர வரலாறு’ எனும் சிறு நூலில்:

''1936 ஜூலை 30ஆம் நாள், பிரெஞ்சிந்திய அரசு அதன் இராணுவ பலத்தைத் திரட்டி முதலில் ரோடியர் மில்லுக்குள் புகுந்தது. அப்போது மில் முதலாளி 'மார்சலேண்டின்” கைத்துப்பாக்கிக் குண்டிற்கு ஒரு தொழிலாளி பலியானார்.

பின்பு பிரெஞ்சு இராணுவ அணி வகுப்பு சவானா மில்லுக்கு (சுதேசி மில்) எதிரில், கடலூர் நெடுஞ்சாலையில் அணிவகுத்து நின்று சுழல் பீரங்கிகளைக் கொண்டு, தொழிலாளர்கள் மீது குண்டுகளைப் பாய்த்திட்டது. மில் கட்டிடத்தின் மாடிகளில் இருந்து தொழிலாளர்கள் இயந்திரப் பற்சக்கரங்கள் போன்ற சிறு ஆயுதங்களைக் கொண்டு இராணுவ அணியை எதிர்த்துத் தாக்கினார்கள். போராடிய 12 தொழிலாளர்கள் சுழல் பீரங்கிக் குண்டுகளுக்கு இரையானார்கள். தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டம் இராணுவத்தை உடனே பின்னடையச் செய்தது. தொழிலாளர்கள் மில்லுக்கு வெளியே வந்து இராணுவத்தைத் தொடர்ந்து விரட்டியடித் தார்கள்.

பிரெஞ்சு ஏகாதிபத்திய இராணுவ அடக்குமுறையை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் நடத்திய வரலாறு கண்டிராத வீரச் சமர், புதுவை மாநிலத்தில் இருந்து அனைத்து மக்களின் உள்ளத்தில் ஒரு பேரெழுச்சியை உண்டாக்கியது. அன்னிய ஏகாதிபத்திய அடிமை ஆட்சியை எதிர்த்து மக்கள் ஒன்றுபட்டு போராடி முடியடிக்க முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்றார்கள். அத்தகைய முறையில் அரசியல் போராட்டத்தை நடத்தி நாட்டை விடுதலை செய்ய வேண்டியது மக்களின் இன்றியமையாத கடமை என்ற முடிவுக்கு அனைத்துப் பிரிவு மக்களும் வரத் தொடங்கினார்கள். அதனால் நாளுக்கு நாள், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட்டம் புதிய வடிவத்தையும், வேகத்தையும், வீச்சையும் பெறத் தொடங்கியது...
என்று எழுதியிருக்கிறார்.

புதுச்சேரியின் தனித்தன்மைமிக்க கவிஞரும், பொது வுடைமை இயக்கத்தின் மக்கள் இயக்கக் கவிஞருமான தமிழ் ஒளி 1949, ஜனவரி 2 தேதியிட்ட 'முன்னணி’ எனும் இதழில், 'புதுவைத் தொழிலாளிக்கு கோவைத் தொழிலாளியின் கடிதம்” எனும் ஒரு கவிதையை எழுதியிருந்தார். அக்கவிதை 'ஜூலை 30 ஐ நினைவு கூர்கிறது.

'தோழனே, 1936 ஜூலையில்-

கார் கடலும் வாயடங்க, காற்றும் விசை குறைய

ஊர் முழுதும் உன்னுடைய உத்வேகப் போராட்டம்

அன்று,

'சங்காரம் செய்திடுவேன்” என்றெழுந்த சர்க்காரை

சிங்கப் படைபோலே சீறி யெதிர்த்தடித்து

இரத்தப் புனல்சிந்தி நாளெல்லாம் போர் செய்தாய்

யுத்தக் கடைசியிலே உன்னுடைய வெற்றியொலி

உனது தியாகத்தால்,

பெற்ற உரிமையின்று பேடிகளின் சூழ்ச்சியினால்

குற்றுயிராய்ப் போகும் கொடிய நிலைகண்டு

நெஞ்சு கொதித்து நிலைகுலைந்து சோகித்தாய்

அஞ்சாத உள்ளம் அயர்வில் விழலாமோ
..............................................................................

புதுவைப் பாட்டாளி வர்க்கமே,

உன்னுடைய கைகளிலே எ*கின் உரமுண்டு

மன்னர்களை ஓட்டும் மகத்தான சக்தி உண்டு

சோசலிசம் பேசிச் சுரண்டலுக்குக் கால் பிடிப்போர்

வேஷங் கிழித்தெறியும் வீரமுண்டு; வன்மையுண்டு

அன்று புரிந்த சமர் ஆற்றல் உணர்ந்திடுக

இன்றைக்கே போர் முரசம் எண்டிசையும் கேட்கட்டும்

............................................................................................

ஆகையால் நீ தளர்வுறாதே,

முன்கை எடுத்திடுவாய்; முன்னேறித் தாக்கிடுவாய்

நின்பெருமை வாழ்க; நிலைபெறுக சோஷலிசம்!”

'இந்தியாவின் இரண்டாவது ஜாலியன் வாலாபாக் படுகொலை’ என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படும் இந்தத் தொழிலாளர் போராட்டத்தின் துயரம் ஜவகர்லால் நேருவின் இதயத்தை உலுக்கியது. சுப்பையா வேதனையின் விளிம்பில் இருந்தபடி நேருவுக்கு இது குறித்து விரிவாக ஒரு கடிதம் எழுதினார். அவரைப் புதுச்சேரிக்கு வரும்படி கண்ணீரோடு அழைத்தார். அழைப்பை ஏற்ற நேரு உடனடியாகப் புதுச்சேரிக்கு வந்தார்.

1936ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் நாள் வருகை தந்த நேரு, புதுவையில் பல்வேறு தொழிலாளர் கூட்டத்திலும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்திலுமாகப் பங்கேற்று மக்களிடத்திலே மாபெரும் எழுச்சி ஏற்படுவதற்குத் துணைபுரிந்தார். நேருவோடுகூட அக்கூட்டங்களில் கலந்துகொண்ட சுப்பையா, மேலும் சத்தியமூர்த்தி, காமராஜர் ஆகியோரோடும் பல இடங்களுக்குச் சுற்றுப் பயணம் செய்து தொழிலாளர்கள் நிலை குறித்து எல்லோரும் உணரும்படியாகக் களப்பணியாற்றியது சுப்பையாவின் அரசியல் அத்தியாத்தில் முக்கிய புள்ளி.

ஜூலை 30 தொழிலாளர்கள் போராட்டம் உச்சத்தில் இருந்த நேரம். புதுச்சேரி மக்களின் அரசியல் பிரச்சனையை எடுத்துப் பேசும் வகையில் பிரான்சுக்குச் சென்று அங்குள்ள பொதுவுடைமை இயக்கத்தைச் சார்ந்த 'மக்கள் முன்னணிக் கட்சிஃ அமைச்சர்களோடு சுப்பையா கலந்து பேசுவது நன்மை பயக்கும் என்று கருதினார் நெரு. அவரின் ஆலோசனையை ஏற்று நேருவின் அறிமுகக் கடிதத்தோடு பிரான்சு நாட்டுக்குப் பயணமானார் சுப்பையா. அங்கே 1937ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் நாளில் பிரெஞ்சு அரசோடு தொழிலாளர் உரிமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய சுப்பையாவுக்கு மகத்தான வெற்றி கிடைத்தது.

தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, 8 மணிநேர வேலை, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, அதிகப்படியாய் இரவு நேரங்களில் வேலை செய்யத் தடை, பெண் தொழிலாளர்களுக்குப் பேறுகால உதவியாக சம்பளத்துடன் விடுமுறை என்று பல்வேறு தொழிலாளர் நல உரிமைகள் ஒரு சேர ஒப்புக் கொள்ளப்பட்டன. இதன்மூலம் ஆசியக் கண்டத்தி லேயே 8 மணிநேர வேலை என்பது புதுச்சேரியில்தான் முதன்முதலில் அமுலாக்கப்பட்டது. இது மகத்தான சாதனை. இன்றைக்கு ஒரு தொழிலாளி 8 மணிநேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேரத் தூக்கம் என்று அடிப்படை உரிமைகளோடு அமைதியான வாழ்க்கை நடத்துகிறான் என்று சொன்னால் அதற்குக் காரணம் சுப்பையா.

காந்தியை போன்றே, நேருவையும் முதன் முதலில் புதுச்சேரிக்கு அழைத்து வந்தவர் சுப்பையா. அதேபோன்று புதுச்சேரி மாநிலத்தின் முதல் சட்டமன்றத் தேர்தலில் பாவேந்தர் பாரதிதாசனை நிறுத்தி வெற்றிபெறச் செய்தவரும் சுப்பையாதான். புதுச்சேரியின் கவிதை அடையாளமாகத் திகழ்ந்த, 'பொதுவுடைமை’ என்னும் புதிய விடியலுக்கான சொல்லைத் தமிழுக்குத் தந்த பாரதிதாசன், 'புதிய உலகின் உன்னதம்” என்று போற்றப்படும் பொதுவுடைமைச் சிந்தனைகளைத் தன்னுடைய பல படைப்புகளில் பாடியவர். தமிழகத்தில் 'ஜனசக்தி’ தொடங்கப்பட்டபோது அதன் முதல் இதழில் அவர் எழுதிய 'புதியதோர் உலகம் செய்வோம்...” என்று தொடங்கும் பாடலில் 'பொதுவுடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்/ புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம்...” என்று கவிதை முழக்கம் செய்தவர். அவரை பற்றி:

'1936ஆம் ஆண்டில் பஞ்சாலைத் தொழிலாளர்கள் நடத்திய உரிமைப் போராட்டத்தை ஒடுக்கிடப் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மேற்கொண்ட அடக்குமுறையை எதிர்த்து நடந்த தொழிலாளர் வர்க்கத்தின் பேரெழுச்சிக்குக் கவிஞர் பாரதிதாசன் பல வகைகளில் ஆதரவு காட்டினார். தொழிலாளர் இயக்கத்தைப் பாராட்டி பல தொழிற்சங்க வியாபாரிகள் சங்கங்கள் இவரை அணுகி கவிதைகள் எழுதித் தரும்படி கேட்டுப் பெற்று வெளியிட்டன...”

என்று சுப்பையா, தாம் எழுதிய 'நான் அறிந்த பாவேந்தர் பாரதிதாசன்” என்னும் கட்டுரையில் குறிப்பிடுகின்றார். அதனை மெய்ப்பிப்பது போலவே அந்நாளில் ஜூலை 30 தொழிலாளர் படுகொலை குறித்து:,

'பார்க்கப் பரிதாபமே - மில்லில்

பாடுபட்டோர் தேசமே - உளம்

வேர்க்கும் அநியாயமே - மக்கள்

வீணில் மாண்ட கோரமே...”

என்று தொடங்கும் அவரின் பாடல் அப்போதைய இயக்க மேடைகள் தோறும் எதிரொலித்தது. தலைவர் சுப்பையா மீதும், அவரின் தொண்டின் மீதும் பாரதிதாசன் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர் உரிமைகள் யாவற்றையும் பெற்று பிரான்சிலிருந்து புதுவைக் கடற்கரையில் அவர் வந்திறங்கியபோது இலட்சக் கணக்கான மக்கள் அணிதிரண்டு வந்து அவரை அன்போடு வரவேற்றார்கள். அந்த நிகழ்ச்சியில் பாரதிதாசனும் கலந்துகொண்டார். அப்போது அவர், எழுதிய வரவேற்புக் கவிதை இது:

'வருக வருக வளர்புதுவை தன்னில்

பெருகு தொழிலாளர் பெற்ற பெரும் பேரே

பொய்யை அநீதியைப் போக்கப் பணிசெய்

'சுப்பையா’ பேர்கொள் சுகிர்தரே

மக்கள் இதம்பெறுதல் வேண்டுமென

'சுதந்திரம்” ஆம் பத்திரிகையைத்

தோற்றுவித்தும் தொண்டும் செய்தும்

சிங்கமென வாலிபர்கள் தீவிரம் கொண்டேற

சங்கம் அமைத்தும் தலைமை நின் றுழைத்தும்

அழிவார்கள் என்றிருந்த அவலநிலை நீக்கி

தொழிலாளர் என்ற நிலைக்குக் கொண்டு வந்தீர்

பத்தும் புரிந்தீர் பாரீசுக்கும் சென்றீர்

இந்நாள் தொழிலாளர் நலம் காண...”

1937ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சுப்பையா தொழிலாளர் உரிமைக்காகப் பிரெஞ்சு தேசத்திற்குப் போய் போராடிய பிறகுதான் தொழிலாளர்களின் முதல் தொழிற்சங்க சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதன் நகலை புதுச்சேரிக்கு அனுப்பிவைத்தார் சுப்பையா. பிரெஞ்சு மொழியிலிருந்த அதனை அப்போது தமிழாக்கம் செய்து புதுவைத் தொழிலாளர் வர்க்கத்திற்குத் தந்தவர் பாரதிதாசன்.

இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் காண முடியாதபடிக்கு ஒரே சமயத்தில் இரண்டு பெரிய அரசியல் பொறுப்புகளை ஏற்று சுப்பையா தம் வாழ்நாள் முழுவதும் சமரசமின்றிப் போராடிக் கொண்டிருந்தார். ஒன்று: புதுச்சேரியின் விடுதலை. மற்றது சுதந்திரம் அடைந்த புதுச்சேரியை இந்திய தேசத்துடன் இணைப்பது. இரண்டிலுமே வெற்றிபெற்றார் அவர்.

1939ஆம் ஆண்டு பிரெஞ்சு அரசானது புதுவையில் எழுந்த தேசிய விடுதலை இயக்கப் போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. அதன் நடவடிக்கையாக சுப்பையாவை பிரெஞ்சு எல்லையில் கைது செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதே சமயம் சென்னையில் பிரிட்டிஷ் எல்லையில் கைது செய்யும் ஆணையும் பிறப்பிக்கப்பட்டது. 1938ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் சுப்பையா தலைமறைவானார். ஆயினும் அவர் கைது செய்யப்பட்டு 1938ஆம் ஆண்டு டிசம்பரில் மூன்று வார காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர் பிரிட்டிஷ் அரசானது சுப்பையாவை பிரெஞ்சு அரசாங்கத்திடம் ஒப்படைக, 1938ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 11 வரை புதுவைச் சிறையில் அடைக்கப் பட்டார். எனினும் அவர்மீது தொடுக்கப்பட்ட குற்றச் சாட்டுகள் அனைத்தும் பொய்யென்று ருசுவானதால் வேறுவழியின்றி பிரெஞ்சு நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.

1939ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் மூண்ட சமயம். செப்டம்பர் 1இல் பிரிட்டிஷ் அரசானது சுப்பையா எந்தப் பொதுக்கூட்டத்திலும் பேசக் கூடாது என்கிற கடுமையான ஒரு தடையை விதித்திருந்ததது. அந்தத் தடையை மீறி அரசியல் பொதுக்கூட்டங்களில் பேசியபோது 1941ஆம் ஆண்டு ஜனவரியில் பிரிட்டிஷ் அரசால் தஞ்சாவூரில் கைது செய்யப்பட்டார். 1942ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் வேலூர் மத்தியச் சிறையில் அரசியல் கைதியாக அடைக்கப்பட்டார். அங்கே அவர் சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளானார்.

புதுச்சேரியில் 1944ஆம் ஆண்டு 'போன்வேன்” என்கிற பிரெஞ்சிந்திய ஆளுநர் இருந்தார். அவருக்கு சுப்பையாவின் மக்கள் இயக்கம் பெரும் எதிர்ப்பாக வெளிப்படவே அவருடைய பொய்யான குற்றச்சாட்டுகளின் பேரில் சுப்பையா புதுச்சேரியிலிருந்து நாடு கடத்தப்பட்டார். தமிழ் நாட்டின் தென்னாற்காடு பகுதிகளிலும், தஞ்சாவூர் பகுதிகளிலும், காக்கிநாடா மற்றும் கண்ணனூர் பகுதிகளிலும் அவர் நடமாடக் கூடாது என்று தடைச் சட்டம் விதிக்கப்பட்டது. அதற்காக பிரெஞ்சு ஆளுநரைக் கண்டித்து:

'என்னாங்க உங்களைத்தாங்க

ஏனோ நாடு கடத்தினீங்க

எங்களுக்குத் தலைவருங்க

இந்த நாட்டில் பிறந்தாருங்க

துங்கமொழி சுப்பையாங்க

சுத்த தேச பக்தருங்க...”

என்றும்

'வாய்ச்சானே நமக்கு கவர்னராய் சற்றும்

வளையாத செக்கு மரமதாய் போன்வேன் - அவன்

வாய்ச்சாúனெ...”

என்றும் சுப்பையாவின் 'சுதந்திரம்” இதழில் பாடல்கள் வெளியாகி அவை புதுச்சேரி கிராமப்புற மக்களால் நாட்டுப்புறப் பாடல்களைப்போலவே வெகுவாகப் பாடப்பட்டன. பிரென்சு தேசம் ஆட்சி மாற்றம் பெற்று பாரிசில் புதியதோர் ஆட்சி நிறுவப்பட்டதும் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் நாளில் சுப்பையா மீது விதித்திருந்த தடைச்சட்டங்கள் நீக்கப்பட்டன.

'வ.சுப்பையா அவர்கள் அரசியல் சிந்தனையில் தெளிவானவர்; மார்க்சிய தத்துவங்களுக்குத் தன்னை ஒப்படைத்துக்கொண்டவர்; எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோள் உடையவர்; வாழ்க்கையையே போர்க்களம் ஆக்கிக் கொண்டவர்...” என்று குன்றக் குடி அடிகளார் குறிப்பிடுவதைப்போல புதுச்சேரி வரலாற்றிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்குப் பிணைப்புண்டவர் சுப்பையா.

அவர் புதுச்சேரியில் தம்முடைய தலைமையில் 'தேசிய ஜனநாயக முன்னணிஃ ஒன்றை அமைத்து அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான அனைத்து அரசியல் சக்திகளையும் ஒன்றிணைத்து புதுவையின் முழு அரசியல் தன்னாட்சி மாற்றத்திற்காக ஒரு பெரும் பேரியக்கத்தைத் தொடங்கினார். இந்தச் சூழலில்தான் 1946ஆம் ஆண்டின் இறுதியில் சுப்பையா பிரெஞ்சு பாராளுமன்றத்துக்கு மேலவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அதற்காக அவர் பிரான்சு சென்றிருந்த போது 'இந்தியாவிற்கு முழுச் சுதந்திரம்” வேண்டும் என்கிற முறையில் 'புதுவைக்கும் முழுச் சுதந்திரம்” வேண்டும் என்று பிரான்சிலிருந்து அறிக்கை வெளியிட்டார்.

தன் கட்சித் தொண்டர்களுக்கும், மக்களுக்கும் போராட்ட அறைகூவல் விடுத்த சுப்பையா நேருவின் ஆலோசனையை ஏற்றவராய் 'புதுவை விடுதலை இயக்கச் செயல்திட்டம்” குறித்து விவாதிக்க இந்தியா வந்து, நேருவை புது தில்லியில் சந்தித்தார். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாளில் இந்தியா சுதந்திரம் அடைந்த அதே நாளில் புதுச்சேரியின் விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்டது. இதற்கிடையில் சுப்பையா பிரான்சுக்குச் சென்று இரண்டு ஆண்டுகள் நாடாளுமன்றக் கூட்டங்களில் பங்கு பெற்றபோதும் 1948ஆம் ஆண்டு இறுதியில் பிரெஞ்சு அரசானது அவர் மீது பல தரப்பட்ட கொடிய குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கைது செய்யத் திட்டம் தீட்டியிருந்தது. அதை அறிந்த சுப்பையா கைதாகாமல் தப்பி இந்தியாவுக்குள்வந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டே புதுச்சேரி விடுதலை இயக்கத்தை வழிநடத்திக்கொண்டிருந்தார்.

1950ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் நாள் பிரெஞ்சு ஏகாதி பத்தியத்தின் கைக்கூலிகளாலும், போலீசாராலும், அரசியல் எதிரிகளாலும் புதுச்சேரி நகரத்தின் மையத்தில் இருந்த சுப்பையாவின் வீடும், அங்கே இயங்கிய பொதுவுடைமைக் கட்சி அலுவலகமும் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. வன்முறைக் கும்பல் சுப்பையாவைக் கொலை செய்யும் நோக்கத்தில் தேடியது. சுப்பையா கலங்கவில்லை. மறைவாக இருந்தே செயல்திட்டங்கள் தீட்டிக் கொண்டிருந்தார். பிரெஞ்சு அரசாங்கம் 'சுப்பையாவைப் பிடித்துத் தந்தால் ஆயிரம் ரூபாய்” பரிசு என்று அறிவித்தது:

'முன்னாள் பிரெஞ்சிந்திய மேலவை உறுப்பினரும், இந்நாள் புதுவை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருமாகிய சுப்பையாவைத் துணிந்து பிடித்துத் தருபவருக்கு ரூபாய் 1000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். அவரது இருப்பிடம் பற்றி நம்பத் தகுந்த தகவல் தருபவருக்கு ரூபாய் 500 ரொக்கப் பரிசு அளிக்கப்படும். சுப்பையா என்னும் நபர், சென்னை அரசாங்கம் வலை வீசித் தேடிவரும் நபர்களில் ஒருவர் என்பதும் இங்கு நினைவுகூரத் தக்கது...” என்று 1950ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதியிட்ட 'இந்துஃ ஆங்கிலப் பத்திரிகையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள். சுப்பையா அப்போது பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவர். தமிழ்நாட்டிலும் அப்போதிருந்த அரசியல் சூழலில் அவரைக் கைது செய்யும் நிலைமை ஏற்பட்டிருந்தது. இப்படித் தொடர்ந்து போராட்டங்கள், அடக்குமுறைகள், தலைமறைவுகள், சிறைவாசங்கள் என்று வாழ்நாள் முழுதும் தம்மை வதைத்துக்கொண்டவரை, 1954ஆம் ஆண்டு நவம்பர் 1இல் புதுச்சேரி விடுதலை பெற்றபோது புதுச்சேரி மக்கள் வாழ்த்தி வரவேற்றனர்.

'புதுவைக்கு விலங்கிட்டுச் சிறையில் தள்ளிப்

பூட்டிவைத்த பரங்கியர்தம் ஆட்சி தன்னைக்

கதிகலங்கச் செய்திடவே மக்கள் என்னும்

காட்டாற்று வெள்ளத்தைக் கிளப்பி விட்டு

விதிதன்னை அடிமுதலாய் மாற்று தற்கு

வெகுண்டெழுந்த இயக்கத்தின் தலைவ னாகி

அதிசயங்கள் செய்தவொரு தொண்ட னானான்

அவன்வாழ்வு போர்க்களத்தின் பாட லாகும்

போர்முனையில் முன்நின்ற சிப்பாய்; அந்தப்

புதுவைநில விடுதலையாம் வேள்வித் தீயில்

சீர்குலுங்கப் பூத்தஒரு சிவப்பு ரோஜா

செங்கொடியைச் சுமந்தபடி திரிந்த சிங்கம்

தேரிழுக்க வடம்பிடித்தான்; வீடு வாசல்

தீக்கிரை யானதையும் பொருளாய்க் கொள்ளான்

காரிருளை வனவாசம் சிறையை யெல்லாம்

கண்டுமிந்த சுப்பையா கண்க லங்கான்...”

என்று பொதுவுடைமைக் கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் பாடியிருப்பது சுப்பையாவின் அரசியல் பொது வாழ்வுக்கும், அவரின் போராட்டத்துக்கும் ஓர் அடையாள சாசனம்.

பொதுவாகப் பொதுவுடைமை யாளர்கள் கலை இலக்கியங் களில் நாட்டமற்றவர்கள்; அழகியலின் மீது ஆர்வம் இல்லாதவர்கள் என்கிறதான ஒரு குற்றச்சாட்டு மிகுந்ததிருந்த அந்தக் காலக்கட்டத்தில் சுப்ûயா என்கிற இலக்கிய தாகம் கொண்ட ஓர் இயங்கியல் வாதி மகாகவி பாரதியின் புதுச்சேரிக் காலத் தொடர்பான பல அரிய தகவல்களையும், பாரதியின் 'இந்தியா’ முதலான இதழ்களையும் பாதுகாத்து வைத்திருந்து பாரதி ஆய்வாளர்களுக்குக் கொடுத்து பாரதியின் புகழ் மேலும் பரவும்படிச் செய்திருக்கிறார். அதில் குறிப்பாக ஒன்று: புதுச்சேரியில் இருந்த பாரதி, வ.வே.சு ஐயர், மண்டயம் சீனிவாசாச்சாரியார் போன்ற தேச பக்தர்களின் நடவடிக்கைகளை பிரிட்டிஷ் ஆட்சியின் உளவுத்துறை போலீசார் கடுமையாக வேவு பார்த்துத் தம் டைரியில் எழுதிவைத்துக்கொள்வர். அதனைப் 'போலீஸ்காரன் டைரிஃ என்று சொல்வார்கள். சுப்பையா அத்தகைய டைரி ஒன்றைப் பத்திரமாய்ப் பாதுகாத்து வைத்திருந்து பாரதி ஆய்வாளர்களிடம் தந்தார் என்பது இதுவரை பலரும் அறிந்திராத செய்தி.

அதற்கு சாட்சியமாகப் பாரதி ஆய்வாளரும், அன்பருமான ரா.அ. பத்மநாபன் 'திரு. சுப்பையாவின் பாரதித் தொண்டு’ எனும் தலைப்பிட்ட கட்டுரையில்:

'அன்பர் திரு. வ. சுப்பையாவை நான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அறிவேன். எங்களைச் சேர்த்து வைத்ததே எங்களுடைய பாரதி பற்றேயாகும்.

பாரதி வாழ்க்கை அடிச்சுவடுகளைத் தேடிக் கண்டுபிடிப்பதில் திரு. சுப்பையா பேருதவி செய்தார். பாரதி வீட்டுப் பணிப்பெண் அம்மாக்கண்ணுவின் தொடர்பை உண்டாக்கித் தந்தார். பலரிடம் என்னைச் சிபாரிசு செய்தார். பல தகவல்கள் தந்தார். பலவற்றைத் தேடிக் கண்டு பிடிக்க யார்யாரைப் பார்க்கவேண்டும், எங்கெங்கே போகவேண்டும் என்று வழிகாட்டினார். அம்மாக்கண்ணுவின் மூத்த புதல்வர் வேணுகோபால் (புலிப்பால் வேணு நாயக்கர்) வழித்துணை ஆனார். எதிர்பார்த்ததற்கு அதிகமாகவே பல அரிய விஷயங்களைச் சேகரித்தோம். 'இடிப்பள்ளிக்கூடம்” புரொபஸர் சுப்பிரமணிய ஐயர் (பிரம்மராய ஐயர்), 'தராசுக்கடைஃ ஆறுமுகம் செட்டியார், பொன்னு முருகேசம் பிள்ளை புதல்வர் ராஜா பாதர், பாரதிதாசன் முதலிய பலரை, பல அரிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

பழைய புஷ் வண்டிக்காரர்கள் உட்பட யாவரும் பரிவு காட்டினார்கள். திரு. சுப்பையாவின் பெயரைச் சொன்னாலே போதும், புஷ் வண்டிக்காரர்கள் எவ்வளவு நேரமானாலும், தூரமானாலும் கொடுத்ததை வாங்கிக் கொள்வார்கள்...” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சுப்பையா எழுதிய இன்னொரு கட்டுரை,யான 'புதுச்சேரியில் பாரதி- சில நினைவலைகள்” என்பது, பிரான்ஸ் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட 'பாரதி நூற்றாண்டு விழா மலரில்” இடம் பெற்றது. ஆங்கிலத்தில் எழுதிய இக்கட்டுரையில் பாரதி புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் படைப்பிலக்கியம் மற்றும் அவரின் பண்புகள் பற்றிய இதுவரை வெளிவராத பல அரிய தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றுள் மிகவும் குறிப்பிடத் தக்கது கட்டுரையின் கடைசிப் பகுதி:

'ஒருமுறை, பாரதி அரவிந்தரை சந்திக்கச் சென்றபோது அவரைப்போல அங்கு வந்திருந்த பலர் அரவிந்தரின் காலில் விழுந்து அவரின் காலைத் தொட்டு வணங்கியதைக் கண்டார். பாரதியால் அவ்விடத்தில் நிற்க முடியவில்லை. அரவிந்தரிடம் பாரதி, 'இது அடிமைத்தனத்தை அகற்றுகின்ற அடையாளமல்லஃ என்றும் 'இப்படியொரு வெறுப்பூட்டுகின்ற வழக்கத்தைச் செய்கின்ற ஒரு ஆளாக உங்களை நினைத்துப் பார்க்கவே வியப்பாக இருக்கிறது...” என்றும் படபடவென்று கேட்டார்.

அதற்கு அரவிந்தர் பாரதியிடம் 'அவர்கள் என் காலில் விழவில்லை; என்னுள்ளே இருக்கின்ற கடவுளின் காலில் விழுகின்றனர்” என்று பதிலளித்தார். இந்தப் பதிலில் பாரதிக்கு உடன்பாடில்லை. அவர் வெறுப்புடன் வெளியேறிவிட்டார். இதுதான் பாரதி அரவிந்தரைக் கடைசியாகச் சந்தித்தது என்று என் நண்பர்கள் என்னிடம் தெரிவித்தனர். பாரதியின் ஒவ்வொரு செயலும், மனித அடிமைத் தனத்தை இதயப் பூர்வமாகக் கண்டிக்கும் வகையில் இருந்தது என்ற உண்மையை இந்த நிகழ்ச்சி எடுத்தியம்புகிறது...” என்று சுப்பையா எழுதுவது பாரதியை இன்னும் துல்லியப்படுத்தும் சித்திரம்.

சுப்பையா தீவிர அரசியல்வாதியாகத் திகழ்ந்தாலும் கலை, இலக்கியங்களிலும், அதன் மீதான விமர்சனங்களிலும் மிகுதியான ஈடுபாடு கொண்டவர். தமிழ்மொழி மீது ஆழ்ந்த பற்றுடையவர். தமிழ்க் கவிஞர்களையும், புலவர் பெருமக்களையும் அவர் போற்றத் தவறாதவர். தமிழ் நாடக வளர்ச்சிக்கு வித்திட்ட சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவைத் தமிழ் நாடக உலகம் என்றென்றும் மறவாமல் இருக்கச் சுப்பையாதான் காரணமாயிருந்தார்.

சங்கரதாஸ் சுவாமிகள் மறைந்த புதுச்சேரி மண்ணிலேயே அவருக்கு நினைவுச் சின்னம் அமைக்கவேண்டும்; அவருடைய நினைவு விழாவை ஆண்டுதொறும் அங்கேயே நடத்த வேண்டும்; அந்த விழா தமிழ் நாடகக் கலை வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் பயன்படக் கூடியதாய் இருக்கவேண்டும் என்று தீர்மானித்து, அதற்கென்று பெரும் முயற்சி எடுத்து, புதுச்சேரி நகரப் பிரமுகர்களைக் கொண்ட கட்சி சார்பற்ற குழு ஒன்றை அமைத்து, சுவாமிகளின் சமாதியைக் கலைஞர்கள் நினைவு மண்டபமாகக் கட்டுவதற்கு உறுதுணையாக இருந்தவர்.

அதற்காகக் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஒளவை தி.க. சண்முகம், தஞ்சை ராமையாதாஸ், டி.என். சிவதாணு போன்ற கலைஞர் களுக்கு ஊக்கம் கொடுத்து உதவிகள் செய்தவர். சுவாமிகளின் மண்டபத் திறப்பு விழாவுக்கு தமிழ் நாட்டிலிருந்த பல கலைஞர்களையும், பேரறிஞர்களையும் அழைத்து வந்து அதை நாடகக் கலைஞர்களின் விழாவாக நடத்திக் காட்டியவர். புதுச்சேரியில் பாரதி பாடிய 'குயில் தோப்புக்கு’ அருகில், சித்தானந்த சுவாமிகளின் திருக்கோயிலை ஒட்டிய கருவடிக்குப்பம் சுடுகாட்டில் அமைந்திருக்கும் சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு மணடபம் இன்றைக்கும் சுப்பையாவின் பெயரை நமக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறது.

சுப்பையா புதுச்சேரியின் மேலண்டை புல்வாரின் கடைசியில் 'வண்ணாரத் தெருஃ என்று இருந்த பெயரை மாற்றி அதற்கு 'சங்கரதாஸ் சுவாமிகள் தெரு’ என்று வைத்தவர். தியாகராஜருக்குத் திருவையாற்றில் ஆண்டுதோறும் இசைவிழா எடுப்பதுபோல புதுச்சேரியிலும் சங்கரதாஸ் சுவாமிகளுக்கென்று விழா எடுத்து அது தமிழ்நாடகக் கலை வளர்ச்சிக்கான விழாவாக இருக்கவேண்டும் என்று பெரிதும் ஆசைப்பட்டவர். இன்றைக்குப் புதுச்சேரி அரசு சங்கரதாஸ் சுவாமிகள் விழா நடத்துகிறது என்று சொன்னால் அதற்கு அடிப்படை காரணமாக இருந்தவர்; இருப்பவர் சுப்பையா.

சுப்பையாவின் பணி கலை இலக்கியம் சார்ந்த இத்தகைய முயற்சிகளோடு மட்டும் நின்றுவிடவில்லை, அந்நாளில் அவருடைய மேற்பார்வையில் 'வித்வன் மனோ ரஞ்சனி சபா’ எனும் நாடகக் குழு உருவாக்கப்பட்டது. அதில் வெள்ளாழர் வீதி, இரங்கப் பிள்ளை வீதி, பாப்பார வீதி ஆகிய மூன்று வீதிகளுக்குட்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற 'பக்த ராமதாஸ்”, 'உஷா பரிணயம்”, 'அமலாதித்யன்” (Hamlet) போன்ற நாடகங்கள் இன்று நேரு வீதி என்றழைக்கப்படும் 'துய்ப்ளேக்ஸ் வீதியில்” இருந்த 'கெப்ளே தியேட்டரில்” அன்று நடைபெற்றன. அவை புராண நாடகங்கள்தான் என்றாலும் அவற்றிலும்கூட சுப்பையா பாடலிலும், வசனங்களிலும் தேசிய விடுதலைப் போராட்ட உணர்வுகள் வெளிப்படும்படியான சூழல்களை அமைத்திருந்தது மக்களிடத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

சுப்பையா, தாம் ஆசிரியராய் இருந்த 'சுதந்திரம்” இதழில் தலையங்கங்கள் எழுதியது மட்டுமின்றி 'ஜனசக்தி போன்ற இடதுசாரி இயக்க ஏடுகளிலும் எண்ணற்ற அரசியல் சித்தாந்தக் கட்டுரைகளையும், இலக்கியக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அதோடு 'சுதந்திரம் பொன்விழா மலர்”, 'புதுவை மாநில தேசிய இயக்க வரலாறு, 'இலட்சியப் பயணம்” போன்ற சிறப்பு மலர்த் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கும் சுப்பையா 'சர்வதேச மகளிர் உரிமைகள்”, 'மக்கள் சீனம்”, 'தியாகிகளின் வாழ்க்கை வரலாறு, 'புதுவையின் விடுதலையை வென்றெடுத்த தொழிலாளர்களின் வீர வரலாறு, 'எட்டநில் கிட்ட வராதே, “Vision of Ambedkar.” “Saga of Freedom of Frenc India” போன்ற பல சிறந்த நூல்களை எழுதியிருக்கிறார்.

உலகின் எல்லா மொழிகளையும் நேசித்தவர் சுப்பையா. தமிழோடு, ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவராய் இருந்தார். அவருக்கு ரஷ்யமொழி, மலையாளம் போன்றவற்றிலும் நல்ல பரிச்சயம் இருந்தது. சுப்பையா பொதுவுடைமை இயக்கத்தவராய் இருந்தாலும் வாழ்க்கை நெறிமுறைகளில் காந்தியாரின் வழிமுறைகளையே பின்பற்றி வாழ்ந்தார். ஒருமுறை விருந்தொன்றில் கலந்து கொண்டபோது அவர் சாப்பிட்ட இலையைச் சுற்றி எதுவும் சிந்தப்படாமல் மிகவும் சுத்தமாய் இருந்திருக்கிறது. அருகில் அமர்ந்து சாப்பிட்டவர் அதைப் பார்த்து வியந்து பாராட்டியபோது 'இளமையிலிருந்தே நான் காந்தீய நெறியில் பழகி வந்தவன். அதனால் இலை எடுக்கும் தொழிலாளர்களுக்குக்கூட தொல்லை தராதபடி, சிந்தாமல் சாப்பிட்டும், அப்படியே சிந்தினாலும் சிந்தியதை கடைசியாய் இலையில் எடுத்துப்போட்டும் அந்த இடத்தை சுத்தமாக்கி வைத்துவிட்டு எழுந்திருப்பதுதான் என் வழக்கம்...” என்று சொல்லி யிருக்கின்றார். சுப்பையாவின் எளிமை நிறைந்த வாழ்க்கைக்கு இது ஓர் எடுத்துக்காட்டு.

சுப்பையா அரசியல் வாழ்வில் தூய்மையை விரும்பியவர். அந்த விதமாகவே தம் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார், தம் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி குறுகிய வழிகளில் சொத்துகள் சேர்க்காதவர். உழைக்கும் மக்களின் அன்பே அவரின் அசையாத சொத்தாக இருந்தது. புதுச்சேரியில் அந்நாளில் தனிநபர்களின் பெயர்களைத் தாங்கியே அரசியல் கட்சிகள் இயங்கின. கெப்ளே, மொம்பரேன், தாவீது, தோமாஸ், செல்லான், செல்வராஜ் செட்டியார், குபேர் போன்றவர்களின் பெயர்களில் கட்சிகள் இருந்தன. எல்லோருமே நபர்களின் பெயரைச் சொல்லித்தான் தங்கள் கட்சியைச் சொல்வார்கள்.

நானும் அந்த வண்ணமே சின்ன வயதில் யாராவது என்னிடத்தில் 'நீ எந்தக் கட்சி..? என்று’ கேட்டால் என் தந்தையாரைப் பின்பற்றி 'நான் சுப்பையா கட்சி...” என்று சொல்வதில் பெருமிதம் கொள்பவனாய் இருந்தேன். நாங்கள் வாழ்ந்த புதுச்சேரியின் நெல்லித்தோப்புப் பகுதியில் என் தந்தையார் இ. பழனியை அதுவும் 'பால்காரர் பழனி’ என்று சொன்னால் போதும், எளிதில் புரிந்துகொள்வார்கள். சாதிய அடக்குமுறைகளும், போராட்டங்களும், அவமானங்களும் நிரம்பிய வறுமை மிகுந்த எளிய வாழ்க்கை வாழ்ந்த அவர்தான் எனக்கு சுப்பையாவை பற்றியும் அவரின் கட்சியைப் பற்றியும் அடிக்கடி சொல்லிச் சொல்லி ஆழப் பதியவைத்தவர். அந்த அளவுக்கு என் தந்தையாருக்கு சுப்பையாவின் மீது அதிக ஈடுபாடு உண்டு.

அது எந்த ஆண்டு என்று நினைவில் இல்லை. நான் சிறுவனாக இருந்த சமயம். அப்போது புதுச்சேரியில் நடந்த தேர்தலில் 'மக்கள் முன்னணியைச்” சேர்ந்த சுப்பையா கட்சிக்கு 'யானை சின்னமும்’, அவரை எதிர்த்துப் போட்டியிடும் குபேர் கட்சிக்கு 'காளை மாடு’ சின்னமும் ஒதுக்கப்பட்டிருந்தன. அது நுகத்தடி பூட்டிய ரெட்டைக் காளைமாட்டுச் சின்னம். அந்தச் சமயங்களில் பெரும்பாலும் ஊர் ஊராகத், தெருத் தெருவாக ஒலி பெருக்கி கட்டிய மாட்டு வண்டிகளில்தான் தேர்தல் பிரச்சாரம் செய்துகொண்டு போவார்கள். அப்படி வரும் வண்டிகளில் அநேகமாய் சுப்பையா கட்சியை ஆதரித்துத்தான் பிரச்சாரங்கள் நடக்கும். எந்தத் திசையில் திரும்பினாலும் சுப்பையாவைப் பற்றித்தான் பாடல்கள் கேட்ட வண்ணம் இருக்கும். ஒரு ஆண், ஒரு பெண்ணிடம் இலஞ்சம் கொடுத்து ஓட்டு கேட்பது போலவும், அதற்கு அந்தப் பெண் மறுப்புச் சொல்லி அந்த ஆண் சார்ந்த கட்சியை அம்பலப்படுத்துவது போலவும் அமைக்கப் பட்டிருக்கும் பாடல்கள்:

'ஆண்: ஒத்த ரூபா தாரேன் - நான்

உப்புமா காப்பியும் தாரேன்

ஓட்டுப் போடற பெண்ணே - நீ

மாட்டப் பாத்துக் குத்து


பெண்: ஒத்த ரூபாயும் வேணாம் - உன்

உப்புமா காப்பியும் வேணாம் - நீ

ஊரைக் கெடுத்த கூட்டம் - உங்கள

ஒழிச்சிக் கட்டப் போறோம்...”

என்று பாடுவதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரு விலையை தருவதாக அந்த ஆண் சொல்லி: 'ரெண்டு ரூபா தாரேன் - நான்/ ரெட்டப் பல்லாக்கும் தாரேன்/ மூணு ரூபா தாரேன் - நான் மூக்குத்திக் கல்லும் தாரேன்/ நாலு ரூபா தாரேன் - நான்/ நைலான் சிலுக்கு தாரேன்/ அஞ்சு ரூபா தாரேன் - நான்/ அட்டியலும் செஞ்சு தாரேன்/ ஆறு ரூபா தாரேன் - நான்/ ஐம்பொன் நகையும் தாரேன் ஏழு ரூபா தாரேன் - நீ/ என்னென்ன கேட்டாலும் தாரேன்...” என்று பசப்பு வார்த்தைகள் பேசியும், அந்தப் பெண் ஏமாறத் தயாராக இல்லை என்பதை ஒவ்வொரு ரூபாய் ஏற்றத்திற்கும் பதில் சொல்வதாய்ப் பாடலை அமைத்துக் கடைசியில் 'ஏழு ரூபாயும் தாரேன்...” என்று நீட்டி முழுக்கிச் சொன்னதற்குப் பிறகு:

'பெண்: ஏழு ரூபாயும் வேணாம் - நீங்க

என்னத்த தந்தாலும் வேணாம் - நீங்க

ஏய்ச்சிப் பிழைக்கும் கூட்டம் - உங்கள

எலும்பொடிக்கப் போறோம்...”

என்று பதிலடி கொடுத்ததும் தன் அரசியல் சுயரூப அடிவருடிப் பிழைப்பு வெளிப்பட்டுப் போய்விட்டதே என்கிற பயத்திலும் நடுக்கத்திலும் கடைசியாகப் பாடுவான்:

'ஆண்: ஐயய்யோ ஐயய்யோ போச்சே

அம்புட்டும் மண்ணாப் போச்சே

காஷாயத்தக் கட்டி இப்போ - நான்

காசிக்குப் போகப் போறேன்...”

நாட்டுப்புற இசைவடிவத்தில் மிகவும் அருமையாக புனையப்பட்ட இப்பாடல்கள் அந்நாளில் புதுவை எங்கும் எதிரொலித்தது. சுப்பையாவின் கட்சிக்காக தேர்தல் பிரச்சார உத்திகளோடு தயாரிக்கப்பட்ட இப்பாடலில் 'ஆண் “'குபேர்கட்சியைச்” சேர்ந்தவனாகவும், அவனை எதிர்த்துப்பாடுகிற 'பெண்” சுப்பையா கட்சியைச் சேர்ந்தவளாகவும் உருவகப்படுத்தி, இருவரின் தேர்தல் அணுகுமுறைகளிலும் உள்ள வர்க்க முரண்பாடுகளை வெளிப்படுத்தி, முடிவில் 'சுப்பையாவின் மக்கள் முன்னணிதான்” வெற்றிபெறும் என்பதை நுட்பமாகச் சொல்வது சுப்பையாவுக்கும், புதுச்சேரி பொதுவுடைமை இயக்கத்திற்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது.

இந்த 'ஒத்த ரூபா பாட்டு, புதுச்சேரிக்குப் பிறகு தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் பொதுவுடைமை இயக்கப் பிரச்சாரங்களிலும் மேடைகளிலும் ஒலித்த தென்றால் அதற்குக் காரணமாய் இருந்தவர்கள் பாவலர் வரதராஜன் - இளையராஜா சகோதரர்கள்தாம். பின்னாளில் இளையராஜா தமிழ் சினிமாவின் அதி பிரமாண்டமான, யாரும் எளிதில் நெருங்கமுடியாத 'இசைஞானியாக மாயத் தோற்றம் பெற்றதும் அந்த 'ஒத்த ரூபா பாட்டை அவரே ஒரு சினிமாவுக்காக 'ஒத்த ரூபா தாரேன்/ ஒரு ஒணப்புத் தட்டும் தாரேன்/ ஒத்துகிட்டு வாடி/ நாம ஓடப் பக்கம் போவோம்...” என்று மக்களின் ரசனையையும் சேர்த்து மலினப்படுத்தி சுப்பையாவின் கட்சிப் பாடலைக் காட்சிப் பாடலாக மாற்றிவிட்டார்.

'சுப்பையா கட்சி என்பது புதுச்சேரியின் வரலாறுகளில் இரண்டறக் கலந்த கட்சி. அது மற்றவர்களைப் போல வெறும் தனிநபர் சார்ந்த கட்சி அல்ல. மாறாக அது மக்கள் விடுதலைக்காகப் போராடிய பொதுவுடைமைக் கட்சி. சுப்பையா அதன் ஆளுமைமிக்க அரசியல் பின்புலமாய்த் திகழ்ந்தார்.

சுப்பையாவின் வரலாறு புதுவையின் விடுதலைப் போராட்ட வரலாறு என்பதாகவே விளங்கியது.

'பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிடியில் சிக்குண்டு கிடந்த புதுச்சேரியை, மக்களைத் திரட்டி விடுவித்து, இந்தியத் தாயகத்துடன் இணைத்த சிற்பி தோழர் வ. சுப்பையாதான் என்பதை அவருக்கு நேர் எதிரான கொள்கை நிலையில் நிற்பவர்களும் ஒப்புக் கொள்வார்கள்.

ஏனெனில், அது வரலாற்று உண்மை. அது என்றோ நடந்த, ஆய்வுக்குரிய சம்பவங்கள் அல்ல. நம் வாழ்நாளில் நடந்தது. உடன் இருந்தவர்கள், பங்கேற்றவர்கள், எதிர்த்தவர்கள், பார்த்தவர்கள் பலரில், சிலர் இன்றும் உயிரோடு உள்ளனர்.

எனவே இந்த மதிப்பீட்டை விவாதத்திற்குள்ளாக்க முடியாது. காந்தியடிகளும், பண்டித ஜவகர்லால் நேருவும், லால்பகதூர் சாஸ்திரியும் உயிருடன் இருந்திருந்தால் இதனைப் பிரகடனம் செய்திருப்பார்கள்...”

என்று பொதுவுடைமை இயக்கத் தலைவர் தா. பாண்டியன், சொல்லியிருக்கிறார்.

'சுப்பையாவை விலக்கிவைத்து இன்றைய புதுவை மாநிலத்தின் வரலாற்றை யாரும் எழுதிவிட முடியாது...” என்று ம.பொ.சி.யும் தெரியப்படுத்தி வைத்திருக்கின்றார்.

1954ஆம் ஆண்டு புதுவை சரித்திரத்தில் மறக்க முடியாத ஆண்டு. புதுச்சேரியின் பிரெஞ்சிந்திய ஆட்சி அதிகாரங்கள் யாவும் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென்று இறுதி முடிவு செய்யப்பட்ட ஆண்டு. அதன் கருத்தை அறிவதற்கென்றே புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பகுதிகளிலிருந்தும் 'மக்கள் பிரதிநிதிகளைக்” கொண்ட ஒரு குழுவை அமைத்திருந்தார்கள். அவர்களைக் கொண்டு வில்லியனூருக்கு அடுத்த 'கீழூர்” பகுதியில் 1954ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் நாளன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 178 'மக்கள் பிரதிநிதிகளில்” 170 பேர் புதுச்சேரி இந்தியாவுடன் இணைய வேண்டுமென்று வாக்களித்ததின் பேரில் 'பிரெஞ்சிந்தியப் பகுதிகளின் ஆட்சி அதிகாரங்களை இந்தியாவுக்கு மாற்றிக் கொடுக்கும் ஒப்பந்தம்” 1954ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் நாள் டெல்லியில் கையொப்பம் ஆனது.

ஏற்னெவே அதே ஆண்டில் ஜீலை 16ஆம் நாள் மாஹே பகுதியும், ஜூலை முதல் நாள் ஏனாம் பகுதியும் புதுச்சேரி பிரெஞ்சு நிர்வாகத்திடம் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டிருந்தன. தொடர்ந்து 1954ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல்நாள் 'புதுச்சேரியின் விடுதலை ஒப்பந்தம்” அமலுக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தில் பிரெஞ்சு தேசத்தின் சார்பில் 'பியர் லாந்திஃயும் (Pierre Landy). இந்தியாவின் தூதர் கேவல்சிங்கும் கையொப்பமிட்டார்கள். அன்று புதுவை அரசினர் மாளிகையிலிருந்த பிரெஞ்சுக் கொடி இறக்கப்பட்டு இந்திய அரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, 1954ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாள் புதுச்சேரி விடுதலை பெற்ற அதிகாரப் பூர்வமான நாள் என்று அறிவிக்கப்பட்டது. ஏறக்குறைய 280 ஆண்டுகளாக அடிமைப்படுத்திக் கொண்டிருந்த பிரெஞ்சு ஆதிக்கம் ஒரு முடிவுக்கு வரக் காரணமாயிருந்த சுப்பையாவை புதுச்சேரி எப்போதும் நினைவு கூரும். '1954 நவம்பர் முதல் நாள் இந்திய அரசின் பிரதிநிதி திரு. ஆர். கே. நேரு தலைமையில் சுதந்திரக் கொடி ஏற்றி விழா கொண்டாடப் பட்டது. இப்போதுள்ள பாரதி பூங்காவில் இவ்விழாவிற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

"இந்திய அரசின் கமிஷனர் திரு. கேவல்சிங் அப்போது கோட்டக்குப்பத்தில் தங்கியிருந்த என்னை ஒரு சில நாட்களுக்கு முன் வந்து அழைத்தார். அதன்படி நவம்பர் 1ஆம் தேதி காலை கோட்டக்குப்பத்தில் வாழும் மக்கள் மகிழ்ச்சிப் பெருக்குடன் அங்கு எனக்கு வழியனுப்பும் விழாவை நடத்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அலங்கார வண்டியில் அமர்த்தி அனுப்பினார்கள். இயக்கத் தொண்டர்கள் பல ஆயிரக்கணக்கில் திரண்டு சுதந்திர முழக்கங்களை விண்ணதிர எழுப்பினார்கள்.

மேளவாத்தியத்துடன் ஆண்களும் பெண்களும் சேர்ந்து சுதந்திர பூமி எல்லைக்குள் நுழைந்தார்கள். இந்தியப் போலீஸ் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றது. ஆனால் காவல் துறையினரின் எண்ணிக்கை பெரியதாக இருந்தபோதிலும் மக்களின் எதிர்ப்பினைச் சமாளிக்க முடியவில்லை. ஏதோ குப்பையை ஒதுக்கித் தள்ளுவதைப்போன்று மக்கள் இந்தியக் காவலர்களை ஒதுக்கி மேலும் முன்னேறிச் சென்றனர். இந்தியக் காவலர்கள் பின்வாங்கி விட்டார்கள். அச்சுதந்திர விழாவிற்கு தலைமை தாங்கிய திரு. ஆர். கே. நேரு அவர்கள் உரையாற்றியதற்குப் பிறகு நான் உரையாற்றினேன்.

நான் உரையாற்றியபோது, 'புதுவை மாநிலம், இந்தியா 1947 ஆகஸ்ட் 15இல் சுதந்திரம் பெற்ற பின்னரும், பிரெஞ்சு ஏகாதிபத்திய காலனி ஆட்சியின் கீழ் இருந்ததால் பொருளாதாரத் துறையில் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்தியா வின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்காக வகுத்துச் செயல்படுத்தும் முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் நல்ல பயனை மக்களுக்கு அளித்து வருகின்றது. எனவே, முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தை இம் மாநிலத் திற்கும் விஸ்தரிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் தொழில்துறை, விவசாயம் இவைகளின் வளர்ச்சிக்கு விசேஷமான கவனத்தைச் செலுத்தி அதிக நிதி ஒதுக்கிச் செயலாற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன் என்று கேட்டுக்கொண்டேன்...” என்று குறிப்பிட்டிருப்பதோடு சுதந்திரம் பெற்ற புதுச்சேரியின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து இந்திய அரசின் ஆண்டுத் திட்டங்களின் பயன் கிடைக்கப் பாடுபட்டதையும், அதனால் புதுச்சேரி பலன் பெற்றதையும் தன்னுடைய 'விடுதலை இயக்கத்தில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரம்” எனும் கட்டுரையில் எளிமையான ஒரு தொண்டனைப்போல எழுதிவிட்டுப் போயிருக்கிறார்.

விடுதலையான புதுச்சேரியின் புதிய சட்டமன்றம் 1955ஆம் ஆண்டில் தொடங்கியது. முதன்முதலாகப் புதுச்சேரி மக்களால் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசியத் தலைவர் சுப்பையா அப்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டார். 1969 முதல் 1977 வரை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து மக்கள் உரிமைக்காகவும், மக்கள் ஜனநாயகத்திற்காகவும், மக்களின் முன்பாகக் குரல் கொடுத்த சுப்பையா தொடர்ந்து இருமுறை புதுவை அரசில் மந்திரி பதவி வகித்து அப்பதவிக்கு மதிப்பேற்படுத்தியவர்; அரசியலில் தம்மை நம்பிய மக்களின் நன்மைக்காக சோவியத் ரஷ்யா, பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்கும் பயணம் செய்திருந்த சுப்பையா தம்முடைய 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அரசியல் பொதுவாழ்க்கையில் காந்தி, நேரு, போஸ், லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, சத்தியமூர்த்தி, டாக்டர் இராதாகிருஷ்ணன், வினோபாஜி, சரோஜினி நாயுடு, காமராஜ், எஸ்: துரைசாமி அய்யர், திரு.வி.க., சிங்கார வேலு சஞ்சீவ் ரெட்டி போன்ற தேசிய அரசியல் தலைவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டு நாட்டுப் பணி ஆற்றி ஓர் முன்மாதிரியாய் இருந்துவிட்டுப் போயிருக்கிறார்.

சுப்பையா தேசத்தால் இந்தியனாகவும், மொழியால் தமிழனாகவும், பண்பால் மனிதனாகவும் தம்மைத் தகவமைத்துக்கொண்டவர். இனம், நிறம், மொழி, சாதி என்கிற எல்லைகளைக் கடந்து மனிதர்களை நடைபழகச் செய்தவர். ஜனநாயக மாண்புகளை கட்டிக்காத்தவர். எல்லாவற்றுக்கும் மேலாகத் தன் குடும்பம், தன்வீடு என்று வாழாத தகைமையாளர்:

'இந்த இந்தியப் பெருநாட்டில் நாட்டுப் பணிக்கு குடும்பத்தையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட குடும்பங்கள் இரண்டு. ஒன்று: நேருவின் குடும்பம். இன்னொன்று: புதுவைத் தோழர் வ. சுப்பையாவின் குடும்பம்...” என்றார் கவிஞர் கண்ணதாசன். சுப்பையா எப்போதும் வருகிற மனிதர் இல்லை; எப்போதாவது வருகிற யுகச் சிற்பி என்றால் மிகையில்லை.

நன்றி :

பாரதி வசந்தன்

கம்னியூஸ்ட் என்றால் இப்படி இருக்குனும்.

எப்படி இருக்கக் கூடாதுன்னு சொல்றவங்களுக்கு ஒரு கியூபா சுருட்டு இலவசமாக அனுப்பி வைக்கப்படும்.