இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Wednesday, 2 May 2007

என் கணவர் - செல்லம்மாள் பாரதி

(1951ஆம் ஆண்டு திருச்சி வானொலியில் "என் கணவர்"என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.)

"..வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?.."
ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார் கொண்டாட வாழவேண்டும் என்ற என் கனவு ஓரளவு பலித்ததென்னவோ உண்மைதான். இன்று என் கணவரின் புகழ் விண்முட்டிச் செல்கிறது. இன்று மகாகவியின் மனைவியாகப் போற்றப்படும் நான் அன்று பைத்தியக்காரன் மனைவியென்று பலராலும் ஏசப்பட்டேன்... விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம். உலகத்தோடொட்டி வாழ வகை அறியாத கணவருடன் அமர வாழ்வு வாழ்ந்தேன் என்றால் உங்களுக்குச் சிரிப்பாகத்தான் இருக்கும். யாருக்கு மனைவியாக வாழ்ந்தாலும் வாய்க்கலாம். ஆனால் கவிஞன் மனைவியாயிருப்பது கஷ்டம்.கவிஞர்கள் போக்கே ஒரு தனி. உண்பதிலும் உறங்குவதிலும் வட சாதாரண மனிதரைப்போல் அவர்கள் இருப்பதில்லை. கற்பனைச் சிறகு விரித்துக் கவதை வானில் வட்டமிடும் பறவை, பூலோகத்திலே இருண்ட வீட்டிலே மனைவிக்கும் மற்றவருக்கம் சம்பாத்தியம் செய்துபோட்டு, சாதாரண வாழ்க்கை வாழ முடியுமா?வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை; ஆனால் வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்?கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன்; அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால் கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் நிறைந்திருப்பது இயற்கைதானே? சுகமாக வாழுவதற்கு சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிýருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிýருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிýருக்க முடியுமா?கவிஞர்களில் பலதரப்பட்டவர்கள் இருக்கிறார்கள். கடவுளைப் பக்தி செய்யும் கவிஞன், காவியம் எழுதும் கவிஞன், இவர்களைப் புற உலகத் தொல்லைகளை சூழ இடமில்லை. எனது கணவரோ கற்பனைக் கவியாக மட்டுமல்லாமல் தேசியக் கவியாகவும் விளங்கியவர். அதனால் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். கவிதை வெள்ளைத்தை அணை போட்டுத் தடுத்தது அடக்கு முறை. குடும்பமே தொல்லைக்குள்ளாகியது. ஆனால் நுங்கும் நுரையுமாகப் பொங்கிவரும் புது வெள்ளம் போல அடக்குமுறையை உடைத்துக்கொணடு பாய்ந்து செல்லும் அவர் கவிதை.காலையில் எழுந்ததும் கண்விழித்து, மேநிலை மேல், மேலைச்சுடர் வானை நோக்கி வீற்றிருப்பார். ஸ்நானம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விதத்தில் அமையும். ஸøரிய ஸ்நானம்தான் அவருக்குப் பிடித்தமானது. வெளியிலே நின்று நிமிர்ந்து ஸøரியனைப் பார்ப்பதுதான் வெய்யற் குளியல். ஸøரியகிரணம் கண்களிலேயுள்ள மாசுகளை நீக்கும் என்பது அவர் அபிப்பிராயம். காலைக் காப்பி, தோசை பிரதானமாயிருக்க வேண்டும் அவருக்கு. தயிர், நெய், புது ஊறுகாய் இவைகளைத் தோசையின் மேல் பெய்து தின்பார்.
அவருக்குப் பிரியமான பொருளைச் சேகரித்துக் கொடுத்தால், அரவது நண்பர்களான காக்கையும் குருவியும் அதில் முக்கால் பாகத்தைப் புசித்து விடுவார்கள். எதை வேண்டுமானாலும் பொறுக்க முடியும்; ஆனால் கொடுத்த உணவைத் தாம் உண்ணாமல் பறவைகளுக்குப் போட்டுவிட்டு நிற்கும் அவருடைய தார்மிக உணர்ச்சியை மட்டும் என்னால் சகிக்கவே முடிந்ததில்லை. சிஷ்யருக்குக் குறைவு இராது. செய்திகளுக்கும் குறைச்சல் இல்லை. கானாமுதமோ காதின் வழியே புகுந்து உடல் எங்கும் நிறைந்துவிடும். களிப்பை மட்டும் பூரணமாக அனுபவிக்க முடியாமல் உள்ளிருந்து ஒன்று வாட்டும். அதுதான் கவலை!இச்சகம் பேசி வாழும் உலகத்தில் எப்பொழுதும் மெய்யே பேச வேண்டும் என்பது அவரது கட்டளை. எக்காரணத்தைக் கொண்டும் பொய் பேசக் கூடாது. இது எத்தனை சிரமமான காரியம் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்தான்.புதுவை þþ எனக்குச் சிறைச்சாலை ஆகியது. சிறைச்சாலை என்ன செய்யும்? ஞானிகளை அது ஒன்றும் செய்ய முடியாதுதான். எதையும் ஏற்றுக்கொள்ளும் மனத்திண்மை அவர்களுக்கு உண்டு. ஆனால் என்னைப்போன்ற சாதாரணப் பெண்ணுக்கு, இல்லறத்தை நல்லறமாக்க வேண்டும் என்ற ஒரே விஷயத்தை லட்சியமாகக் கொண்ட ஒருத்திக்குச் சிறைச்சாலை நவநவமான துன்பங்களை அள்ளித்தான் கொடுத்தது.புதுவையில்தான் புதுமைகள் அதிகம் தோன்றின. புது முயற்சிகள், புதிய நாகரிகம், புதுமைப் பெண் எழுச்சி, புதுக் கவிதை þþ இவை தோன்றின. இத்தனை புதுமைகளும் எழுவதற்கு நான்தான் ஆராய்ச்சிப் பொருளாக அமைந்தேன். பெண்களுக்குச் சம அந்தஸ்து வழங்க வேண்டுமா வேண்டாமா என்று வெகுகாலம் ஆராய்ந்த பின்னரே, பெண் விடுதலை அவசியம் என்ற முடிவு கண்டு, நடைமுறையில் நடத்துவதற்குத் துடிதுடித்தார் என் கணவர். இந்த முடிவை அவர் காண்பதற்குள் நான் பட்ட பாடு சொல்லுந்தரமன்று.புதுவையில் அரசியலில் கலந்துகொள்ள ஒரு வசதியும் இல்லாதிருந்த போதிலும், தமிழ் இலக்கியத் தொண்டு செய்ததனால் ஒருவாறு மன அமைதி பெற்றிருந்தார். நமது பொக்கிஷங்கள் என்று கருதத் தகும்படியான அவரது கவிதைகள் எல்லாம் அங்குதான் தோன்றின. மனிதரை அமரராக்க வேண்டும் என்று தவித்த என் கணவர், எத்தனை இடையூறு களுக்கும் எதிர்ப்புகளும் ஏற்பட்ட போதிலும், அவற்றையெல்லாம் மோதிமிதித்து விட்டுத் தம் லட்சியத்தில் முன்னேறும் துணிவு கொண்டு செயலாற்றினார்.மகாகவி நாட்டிற்காக, அதன் சுதந்திரத்திற்காக வாழ்ந்தார். தமிழ் பண்பாட்டில் சிறந்த அவர் ஈகை, அன்பு, சகிப்புத்தன்மை முதலான பண்புகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தது ஓர் அதிசயமன்று. தூங்கிக் கிடந்த தமிழரை விழிப்புறுத்தியதும் அதிசயமன்று; ஆனால் இன்று அவரது பூத உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் அவர் கலந்து நிற்பதுதான் அதிசயம் என்று எனக்குத் தோன்றுகிறது. "விண்டுரைக்க மாட்டாத விந்தையடா!"" என்று அவரது கவிதை மொழியில்தான் இந்த மகிழ்ச்சியைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது.

எத்தனை கோடி ஜன்மம் வேண்டுமானாலும். . . .செல்லம்மாள் பாரதி

தமிழ்நாட்டு மக்களே!
நான் படித்தவள்ளல்ல. இந்த நூலுக்கு முகவுரை எழுத நான் முன் வரவில்லை. அதற்கு எனக்கு சக்தியுமில்லை. என்னைப் போல இந்தத் தமிழ் நாட்டில் லக்ஷ்க்கணக்காக ஆணும் பெண்ணும் இருக்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன் என் புருஷன் ஸ்ரீமான் சுப்பிரமனிய பாரதி இந்த நாட்டில் பிறந்தார்; வளர்ந்தார்; வாழ்ந்தார்; இறந்தார். அவருடைய ஸ்தூல தேகத்திற்கு முடிவு நேரிட்டு ஆத்மா விண்ணுலகம் சென்றுவிட்டது. கடவுளின் திருவிளையாடலில் இப்படி ஒரு ஆத்மா இவ்வுலகில் ஜனித்து சொற்ப காலந் தங்கி, சிற்சில காரியங்களை செய்துவிட்டு, திரும்பப் போய்விட வேண்டுமென்ற கட்டளையின்படி என் புருஷனும் ஜனித்து, செய்ய வேண்டிய காரியங்களை அவசர அவசரமாக செய்து விட்டு காலம் சமீபத்தவுடன் இறப்பதுவும் ஓர் அவசரமான கடமையாகக் கொண்டு அதனையும் செய்து மடிந்தார்.1904ம் வருஷத்தில் சுதேசமித்திரன் உப பத்திராதிபராக அமரு முன்பே நம் நாட்டைப் பற்றிய கவலை அவருக்கு அதிகம் ஏற்பட்டு விட்டது. எட்டையபுரம் சமஸ்தானாதிபதியின் கீழ் தான் ஏற்றுக் கொண்ட வேலையைத் திரணமாக நினைத்துத் தள்ளினார்; மதுரை சேதுபதி வித்யாசாலையில் தமிழப் பண்டிதர் வேலையையும் அற்பமாக எண்ணித் தள்ளினார். சுதேசமித்திரன் பத்திரிகைக்கு உழைக்க ஆரம்பித்ததும் அவரது உள்ளம் மலர்ச்சியடைய ஆரம்பித்தது. சுமார் இரண்டு வருஷம் கழிந்த பின் 'இந்தியா' என்னும் வாரப் பத்திரிகையை ஆரம்பித்தார்.
உடல், பொருள், ஆவி மூன்றையும் தேச கைங்கரியத்திற்கு முழுமனதுடன் அர்ப்பணம் செய்தார்.ஸரஸ்வதி தேவி அவர் வாக்கில் நிர்த்தனஞ் செய்ய ஆரம்பித்தாள். " வந்தேமாதரம்" என்ற சப்தம் அவரது ஹிருதயத்திலிருந்து முழுத் தொனியுடன் கிளம்பிற்று; தமிழ்நாடெங்கும் பரவிற்று.வீடு வாசல் மனைவி, பிள்ளை, குட்டி, ஜாதி வித்தியாசம், அகந்தை முதலியவை முற்றும் மனதின்று விட்டு அகன்றன.தேசப் பிரஷ்டமானார். புதுவையில் தேசபக்தி விரதத்தை பலவிதமாக அநுஷ்டித்தார். திரும்ப வந்து தந்நாட்டை ஒரு முறை பார்க்க வேண்டுமென்ற அவா அதிகரித்தது. அதற்காகச் சில நிபந்தனைகளை ஒப்புக் கொண்டார்.மறுபடியும் சுதேசமித்திரனில் ஒரு வருஷம் உழைத்தார். தான் வந்த காரியம் முடிவடையவே விண்ணுலகம் சென்ற தேசபக்தர் கூட்டத்தில் தானும் போய்ச் சேர்ந்து கொண்டார்.நமது நாடு இன்னது; நமது ஜனங்கள் யாவர்; நமது பூர்வோத்திரம் எத்தகையது; இன்று நமது நிலையென்ன; நமது சக்தி எம்மட்டு; நமது உணர்ச்சி எத்தன்மையது - இவைகளைப் பற்றிய விவகாரங்களும் சண்டைகளும், தீர்மானங்களும் அவருடைய ஜீவனுக்கு ஆதாரமாயிருந்தன. எதுவும் யோசித்தாக வேண்டியதில்லை. திடீர் திடீர் என்று எண்ணங்கள், புதிய புதிய கொள்கைகள், புதிய புதிய பாட்டுக்கள், அப் பாட்டுக்களுக்குப் புதிய புதிய மெட்டுக்கள் - எனது இரு காதுகளும், மனமும், ஹிருதயமும் நிரம்பித் ததும்பும் இந்த ஒரு பாக்கியம் நான் பெற்றேன். இம்மாதிரி பாக்கியம் பெற எத்தனை கோடி ஜென்மம் வேண்டுமானாலும் திரும்பத் திரும்பப் பெறத் தயாராக இருக்கிறேன்.
அவரது தேகத்தின் ஜீவன் போய்விட்டது. அவரது ஜீவனுக்காதரமாக இருந்த பாரதமாதாவின் ஜீவசக்தி என்றென்றும் அழியாதது. தமிழ்நாடு உள்ளளவும், தமிழ் நாட்டில் ஒரு மனிதனோ அல்லது ஒரு சிறு குழந்தையோ தமிழ் பேசிக் கொண்டிருக்குமளவும் பாரதியின் மூலமாக நம்க்குக் கிடைத்த ஜீவசக்தி நிலைத்திருக்குமென்று என் ஹிருதயம் சொல்கிறது. இதனை நீங்களும் உணர்ந்திருக்கிறீர்கள்.இஃதொன்ருதான் நான் உங்களுக்கு சொல்ல முன் வந்தேன். நீங்கள் நீடுழி வாழ்க!பாரதியாரின் நூல்கள் முழுமையும் அச்சிட்டு வெளியிடும் பொறுப்பை என் ஜீவன் இருக்கும் வரை நான் வகித்து பிற்பாடு தமிழ்நாட்டிற்குத் தத்தம் செய்து விட்டுப் போகத் தீர்மானித்திருக்கிறேன்.
வந்தே மாதரம்
பாரதி ஆச்ரமம்
திருவல்லிக்கேணி, சென்னை

பாரதியார் - பாரதி யார்?

செப்டெம்பர் 11 மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினமாகும். 11 டிசம்பர் 1882ம் ஆண்டு பிறந்து 11 செப்ரெம்பர் 1921ம் ஆண்டு மறைந்த இந்த உண்மையான உணர்வு பூர்வமான கவிஞன் தன் வாழ்வில் சந்தித்த சோதனைகள் தாம் எத்தனை? வேதனைகள் தாம் எத்தனை? தான் வாழ்ந்த நாட்களில் எந்தவித அங்கீகாரத்தையும் பெறாமல் பசியில் பட்டினியில் வாழ்ந்தவன் தான் பாரதி என்கின்ற மகாகவி! பசியாலும், பிணியாலும் வாடி இறந்தவனை 'யானை அடித்து கொன்றது" என்ற கட்டுக்கதையைக் கட்டி தன் அவமானத்திற்கு தமிழ்நாடு திரைபோட்டுள்ளது. யானையால் பாரதி தள்ளுண்ட நிகழ்வு ஒரு யூன் மாதத்தில் நிகழ்ந்தது. அச் சம்பவத்தின் பின்பு அவர் வழக்கம் போல 'சுதேச மித்திரன்" பத்திரிகை அலுவலகம் சென்று தனது வேலைகளைச் செய்து வந்துள்ளார். மேலும் சென்னை நகரக் கடற்கரைப் பொதுக்கூட்டங்களில் தொடர்ந்தும் கலந்து கொண்டு வந்துள்ளார். யூலை 31ம் திகதி கருங்கற்பாளைய வாசகசாலையின் 5வது வருடக் கொண்டாட்டக் கூட்டத்தில் பாரதியார் பேசிய உரையின் தலைப்பு 'மனிதனுக்கு மரணமில்லை." 'காலா என் கண்முன்னே வாடா, உன்னைக் காலால் உதைக்கின்றேன்" என்று பாடிய பாரதி காலத்தை வென்ற போது அவருக்கு 39 வயது கூட நிறையவில்லை.! பாரதியாரின் கடைசி நாளைக் குறித்து நெல்லையப்பர் எழுதும் போது அன்று தீக்கிரையான பாரதியாரின் உடலின் எடை அறுபது இறாத்தல் தான் என்றும், அன்றைய தினம் மயானத்திற்கு சென்றவர்கள் தொகை இருபது இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.!பாரதியார் - பாரதி யார்? அவரது சில சிந்தனைகளையும், கருத்துக்களையும் உங்கள் முன் வைக்க விரும்புகின்றோம்.ஒளவையாரின் ஆத்திசூடிக்கு புரட்சிகரமான புதுமாற்றங்களைத் தந்தவர் பாரதியார்!'தையல் சொல் கேளேல்" என்று பாட்டி சொல்லி வைத்தாள்.'தையலை உயர்வு செய்" என்று எதிர் பாட்டு பாடி வைத்தார் பாரதியார்.'ஆறுவது சினம்" என்றாள் ஒளவை. இவரோ 'ரௌத்திரம் பழகு" என்றார். 'நுப் போல் வளை" என்றாள் ஒளவை. இவரோ 'கிளை பல தாங்கேல்" என்றார். 'தொன்மை மறவேல்" என்றாள் ஒளவை. 'தொன்மைக்கு அஞ்சேல்" என்றார் பாரதி.'போர்த் தொழில் புரியேல்" என்றாள் ஒளவை. 'போர்த்தொழில் பழகு" என்றார் இவர்.'மீதூண் விரும்பேல்" என்றாள் அவள். 'ஊண் மிக விரும்பு" என்றார் இவர்.'போர்த் தொழில் புரியேல்" என்று ஒளவையை பேச வைத்தன அவள் காலத்தில் தமிழ் மன்னர்களுக்குள் நடைபெற்ற போர்கள். பாரதி காலத்தில் அவன் வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிரான வீரர்களை திரட்டுகின்ற வேலை அவனுக்கிருந்தது. ஆகவே தான் 'போர்த் தொழில் பழகு" என்று சொல்லி வைத்தான்.இருந்தும் 'ஈவது விலக்கேல்" 'ஈகைத்திறன்" என்று அவளோடு ஒத்துப்போன இடங்களுமுண்டு.ஆகவே பெரும்பாலும் அவளிடமிருந்து கருத்தால் முரண்பட்ட நமது முண்டாசுப் புலவன் அந்த மூதாட்டியை வாழ்த்தி வரவேற்று அவளது கருத்துக்களின் செறிவான தாக்கத்தை எழுதி உணர்த்துகிறான் என்பதைப் பார்க்கிறோம்.இவன் தான் பாரதி.கருத்தால் முரண்பாடு இருந்தாலும் அவள் தமிழ்ப்பாட்டி-அவள் சொன்னது அமிழ்தம் என்பதற்காகப் பாராட்டுகிறான். இக்காலத்தில் இப்படி ஆட்களைப் பகுத்து பார்த்துப் பாராட்ட வேண்டிய அம்சங்களிருந்தால் பாராட்ட வேண்டுவது மிகவே அவசியமாகிறது.மூடத்தனமான பக்தியை நம்பிக்கையைப் பாரதியார் மிக்க கடுமையாகச் சாடியிருக்கின்றார். அவரது கட்டுரையில் இருந்து இதோ ஒரு பகுதி:-'நம்முடைய ஜனங்களுக்கிடையே இந்த நிமிடம் வரை நடைபெறும் மூட பக்திகளுக்கு கணக்கு வழக்கே கிடையாது. இதனால் நம்மவர்களின் காரியங்களுக்கும், விவகாரங்களுக்கும் ஏற்படும் விக்கினங்களுக்கு எல்லை இல்லை.இந்த மூட பக்திகளிலே மிகவும் தொல்லையான அம்சம் யாதெனில், எல்லாச் செய்கைகளுக்கும் நாள் நட்சத்திரம் - லக்னம் - முதலியன பார்த்தல்.சவரம் பண்ணிக் கொள்ள வேண்டுமென்றால், அதற்குக் கூட மாஸப்பொருத்தம், பஷப்பொருத்தம், திதிப் பொருத்தம், நாட்பொருத்தம் இத்தனையும் பார்த்தாக வேண்டியிருக்கிறது.சவரத்திற்குக் கூட இப்படியென்றால் இனி கல்யாணங்கள், சடங்குகள், வியாபாரங்கள், யாத்திரைகள், விவசாய ஆரம்பங்கள் முதலிய முக்கிய காரியங்கள் பல்லாயிரத்தின் விஷயத்திலே நம்மவர் மேற்படி பொருத்தங்கள் பார்ப்பதில் செலவிற்கும், கால விரயத்திற்கும் வரம்பே கிடையாது. சகுனம் பார்க்கும் வழக்கமும் காரியங்களுக்குப் பெருந் தடையாக வந்து மூண்டிருக்கிறது.'காலம் பணவிலை உடையது" என்ற குறிப்புடைய இங்கிலீஷ் பழமொழி ஒன்று இருக்கிறது. இந்த சமாசாரம் நம்மவருக்குத் தெரிவதே கிடையாது. பொழுது வீணே கழிக்கப்படுமாயின் அதனால் பணலாபம் கிடையாமல் போகும். இன்று செய்யக்கூடிய காரியத்தை நாளைக்குச் செய்யலாமென்று தாமதப்படுத்தி வைப்பதனால் அந்தகாரியம் பலமான சேதமடைந்து போகும்.'இத்தகைய மூட பக்திகளெல்லாம் படிப்பில்லாமையால் ஏற்கப்பட்டிருக்கின்றன" என்றும், 'ஜனங்களுக்குப் படிப்பு கற்றுக்கொடுப்பதனால் இவை அழிந்து போய்விடும்" என்றும் இங்கிலீஷ் படிப்பாளிகள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கின்றென்.ஆனால் பி.ஏ, எம்.ஏ பாPட்சைகள் தேறி, வக்கீல்களாகவும், உபாத்தியாராகவும், என்ஜினீயர்களாகவும், பிற உத்தியோகத்தராகவும் வாழும் கணக்கில்லாத ஐயர், ஐயங்கார், பிள்ளை முதலியவர்கள் எவராவது ஒருவர் தம் வீட்டுக் கல்யாணத்துக்கு லக்னம் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று நிறுத்தியிருப்பாரா?'பெண்பிள்ளைகளின் உபத்திரவத்தால் இவ்விதமான மூடபக்திகளுக்கு கட்டுப்பட்டு வாழும்படி நேரிடுகிறது" என்றும் சிலர் முறையிடுகிறார்கள். பெண்பிள்ளைகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்க வேண்டும். மூடத்தனமான புத்திமான்கள் கண்டு நகைக்கும் படியான செய்கைகள் செய்ய வேண்டுமென்று ஸ்திhPகள் பலனின்றிப் பிதற்றும் இடத்தே, அவர்களுடைய சொற்படி நடப்பது முற்றிலும் தவறு - ஆனால் உண்மையில் பாரதியின் தத்துவ தரிசனம் என்ன? வாழ்க்கைக் கண்ணோட்டம் என்ன?பாரதி கடவுள் உண்டென்ற கொள்கையுடையவன்தான். ஆயினும் அவன் 'ஒருவனே தேவன்" என்பதையோ, கடவுள் இப்படியன், இவ்வண்ணத்தன், இந் நிறத்தன்" என்பதையோ நிலைநாட்டுவதை முதற்பெருங் கொள்கையாகக் கொள்ளவில்லை.பாரதியின் இலக்கியம் முழுவதையும் துருவி ஆராய்ந்தால், தேசியப் பாடல்களையோ, தோத்திரப் பாடல்களையோ வேதாந்த பாடல்களையோ, இதர பாடல்களையோ எதை ஆராய்ந்து பார்த்தாலும் இந்த வாழ்வையும் இதில் மனித வர்க்கம் முழுவதும் உயர்நிலை எய்தி வாழ்வதையும் அதற்கான கால மாறுதலையும் பெருநோக்காகக் கொண்டு நிற்கின்றான் என்பதைத் தெளிவாக காணமுடியும்.'செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலா மென்றேஎண்ணி யிருப்பர் பித்தமனிதர் அவர்சொல்லும் சாத்திரம் பேயுரையாமென்று ஊதடா சங்கம்" (வேதாந்த-சங்கு)இந்தப்பாட்டில், செத்தபிறகு வாழ்வு உண்டென்றோ, சிவலோகம், வைகுந்தம் உண்டென்றோ நினைக்கும் கருத்தை மண்டையிலடித்து நசுக்கி விடுகின்றான்.'மண் பயனுற வேண்டும் வானகம் இங்கு தென்படவேண்டும்" இவ்வாறு 'வேண்டும்" என்ற பாட்டில் சொர்க்கம் வேறு எங்கேயும் இல்லை அது இங்கேயே தோன்ற வேண்டும் என்கிறான்.'வீடு(மோட்சம்) வேறு எங்கேயும் இல்லை. அது இங்கேயே இருக்கிறது" 'கவலை துறந்து இங்கு வாழ்வதே வீடு" என்று 'அறிவே தெய்வம்" என்ற பாட்டில் பாடுகின்றான்.'ஜயமுண்டு பயமில்லை மனமே-இந்த ஜன்மத்தில் விடுதலையுண்டு, நிலையுண்டு"என்று 'ஜீவன் முத்தி" என்ற பாட்டில் இந்த பிறப்பிலேயே விடுதலை உண்டு என்கிறான்.பாரதி தமிழ்-தமிழ் என்றே மூச்சு விட்டான் இதோ தமிழைப்பற்றியும், தமிழ் இனப்பற்றினைக் குறித்தும் அவன் எழுதியவற்றில் ஒரு சில துளிகள்.'தமிழ், தமிழ், தமிழ் என்றும், எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய-புதிய செய்தி, புதிய-புதிய யோசனை, புதிய-புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் ஏறிக்கொண்டே போகவேண்டும். தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் பொழுது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனைவிட மற்றொரு ஜாதியான் அறிவிலும், வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு சம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாக இருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகின்றது.ஆனால் அதேவேளை தமிழனைக் கண்டிக்கவும் தயங்கவில்லை பாரதி. தமிழனக்கு அவர் கூறி அறிவுரை இதோ!"தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதீக நடை-எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலை தூக்கி ஆட இடங் கொடுத்து விட்டாய்.இவற்றை நீக்கி விடு. வீட்டிலும், வெளியிலும், தனிமையிலும் கூட்டத்திலும் எதிலும் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும். உண்மையாயிருக்க வேண்டும். நீயும் பிறரை வஞ்சிக்கலாகாது. பிறரும் உன்னை வஞ்சிக்கலாகாது. பிறர் பிறரை வஞ்சிப்பதையும் நீ இயன்றவரை தடுக்க வேண்டும். எல்லாப்பேறுகளையும் காட்டிலும் உண்மைப்பேறுதான் பெருமை கொண்டது. உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர் உண்மை தவங்களுக்கெல்லாம் உயிர் உண்மை சாஸ்திரங்களுக்கெல்லாம் வேர். உண்மை இன்பத்திற்கு நல்லுறுதி. உண்மை பரமாத்மாவின் கண்ணாடி. ஆதலால் தமிழா, எல்லாச் செய்திகளிலும் உண்மை நிலவும் படி செய்."அதே வேளை தமிழ் மொழி குறித்துச் சற்று வித்தியாசமான கருத்துக்களையும், ஏன் கடுமையான கருத்துக்களையும் கூட அவர் வெளியிட்டுள்ளார். 'தமிழில் எழுத்துக் குறை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையையும் 'தமிழ்ப்பாஷைக்கு உள்ள குறைகள்" என்ற தலைப்பில் ஓர் உரையாடல் கட்டுரையையும் அவர் எழுதியுள்ளார். தமிழ்க்குரல் அன்பர்களின் தமிழ்ப்பசிக்கு அவை தீனி போடுவதாகவே அமையும் என்பது எமது கருத்து! அவற்றில் இருந்து சில வசனங்கள்:'பிரெஞ்சு, இங்கிலீஷ் முதலிய ஐரோப்பிய பாஷைகளிலும், ஹிந்தி முதலிய நமது நாட்டுப் பாஷைகளிலே வளர்வனவெல்லாவற்றிலும் - உயிருள்ள பாஷைகளிலே வளர்வனவெல்லாவற்றிலும்-உச்சரிப்புத் திருத்தத்தைக் கருதிப் பழைய எழுத்துக்களில் சில அடையாளங்கள் சேர்த்து சௌகர்யப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் எழுத்தின் வடிவத்தில் யாருக்கும் சந்தேகம் நேரிடாது. இந்த எளிய வழியை அனுசரித்த நமது தமிழ் மொழி விசாலமடைய வேண்டுமென்பதே என்னுடைய விருப்பம்."'சென்றிடுவீர் எட்டுத்திக்கும்-கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்"என்று தான் பாடியதின் உட்கருத்தை இவ்வாறு இன்னுமொரு பாடலிலும் தருகின்றார்.பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணங்கச் செய்தல் வேண்டும்.அது மட்டுமல்ல தனது கட்டுரை ஒன்றில் கீழ்வருமாறும் எழுதியிருக்கின்றார்.'தமிழா பயப்படாதே ஊர்தோறும் தமிழ்ப்பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாஸ்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்" தமிழன் உயரவேண்டும். தமிழ் மொழி சிறப்புற வேண்டும் என்று பாரதி விரும்பினார். அதையே உரக்கவும் சொன்னார். ஆனால் பாரதியின் வசன நடையிலும், பாடல்களிலும் அநேக சமஸ்கிருத சொற்கள் கலந்து வந்ததை மறுப்பதற்கில்லை. அதேபோல் சாதிகள் இல்லை என்று சொன்ன பாரதி, அந்த சாதிப்பேயை அழிப்பதாக நினைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட சாதியினரைப் பிராமணராக்கும் முயற்சியிலும் ஈடுபட்டவர்தான்.ஆனால் இதனைப் பாரதியின் குறைகள் என்று கருதுவதை விட அந்தக் குறைகளில் இருந்து வெளிப்பட முனைந்த போது ஏற்பட்ட தவறுகள் என்றுதான் கொள்ள வேண்டும்.! பாரதி வாழ்ந்த காலம் அப்படி! சீரழிந்து போன சமுதாயச் சேற்றில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு புரட்சிகரமான சிந்தனைகளுடன் வெளியே வந்தவன் இந்த மகாகவி!அவன் இன்னும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் காலத்தின் பிடியால் தன்மீது ஒட்டியிருந்த மற்றத் தூசுகளையும் தூக்கி எறிந்து தமிழ் இனத்தை, தமிழ் மொழியை மேலும் மிளிர வைத்து உலக மகாகவியாகத் திகழ்ந்திருப்பான்.! நல்லதொரு வீணையாக விளங்கியவனின் அருமை தெரியாமல் காலமும், மக்களும் அவனை புழுதியில் தள்ளினர். அவர் தன்னைப்பற்றி பாடிய பாடலை இந்த தினத்தில் அவருக்கு காணிக்கையாக்குகின்றோம்.இந்த ஆய்வுக்குப் பாரதி பற்றிய பல நூல்கள் பயன்பட்டன. பல சொல்லாடல்கள் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது பணிவான நன்றிகள்.இவ் ஆய்வு 13.09.04 அன்று அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் தமிழ்க்குரல் வானொலி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகியது
நன்றி TAMILNATION