இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Friday, 4 May 2007

சில ஆசாரத் திருத்தல்காரர்களின் தப்பெண்ணம்

இந்த சமயத்தில் ஆசாரத் திருத்தல்காரர்களின் கோட்பாடுகள் சரியா, தப்பிதமா என்ற விஷயத்தைப் பற்றி நாம் விவரிக்கப் போகிறதில்லை. பெண் கல்வி அவசியம்தானா? விதவைகளுக்கு விவாகம் செய்யலாமா? ஜாதி பேதங்களை நீக்கி விடுதல் கட்டாயமா? வேசையர் நடனம், பாட்டுக் கச்சேரி முதலியவற்றைப் பார்ப்பது தீமைதானா? என்பது போன்ற விவகாரங்களை இங்கே தீர்த்துவிட வேண்டுமென்பது நோக்கமில்லை. சென்ற எத்தனையோ வருஷங்களாக க்ஷ விவாதங்கள் ஒரு விதமான முடிவுக்கு வருமென்று நம்ப இடமில்லாமலிருக்கிறது. ஆனால், ஆசாரத்திருத்தக் கட்சியாரிலே பலர் நமது தேசத்தின் நன்மையையே கருதி பாடுபட்டு வருகிறபடியால் அவர்களிடம் நம்மவர் மிகுந்த அனுதாபம் பாராட்ட வேண்டுமென்பதில் ஆ·க்ஷபமில்லை என்ற போதிலும், இந்தக் கட்சியாரில் சிலர் ராஜாங்க விவகாரங்களிலே தலையிட்டு மிகவும் அசம்பாவிதமான சில விஷயங்கள் சொல்லுகிறார்கள். இந்தச் சிறுபான்மையோரிடம்தான் நமக்கு மிகுந்த கோபமும் வெறுப்பும் ஏற்படுகின்றன. காங்கிரஸ்கள், கான்பரன்ஸўகள் , வேறுவிதமான பொதுக்கூட்டங்கள், பத்திரிகைகள் என்பனவற்றின் மூலமாக எந்த தேசாந்திர, ராஜாங்க சீர்திருத்தங்களின் பொருட்டு பாடுபடுவதெல்லாம் இப்போது வெறும் வீண் முயற்சியென்றும், ஆசாரத் திருத்தக் கூட்டத்தாரின் முயற்சிகள் நிறைவேறியதற்கப்பாலேதான் ராஜாங்க சீர்திருத்தத்தைப் பற்றி மூச்சு விட முடியுமென்றும் வர்கள் சொல்லுகிறார்கள்.
இந்தியாவின் ஜன்ம சத்துருக்களாகிய பல ஆங்கிலேயர்களும் 'வெள்ளை'ப் பத்திரிகைத் தலைவரும் இப்பேதையர் சொல்லுவதற்கு ஒத்துப் பாடுகிறார்கள். ஆனால், நமது ஜன்ம விரோதிகள் மேற்கண்டவாறு போதனை புரிவதற்குப் போதுமான காரணங்கள் இருக்கின்றன. 'இந்தியா தேசத்தாரை உள்நாட்டுச் சச்சரவுகளில் மூட்டிவிட்டு, ஜாதி விவகாரங்களிலும், விதவா விவகாரச் சண்டைகளிலும் அவர்கள் ஒருவருக்கொருவர் மண்டைகளை உடைத்துக் கொண்டு கிடக்கட்டும். நாம் பக்கத்திலிருந்து வேடிக்கை பார்த்துச் சிரித்துக் கொண்டிருப்போம். எந்த உபாயத்தினாலும் இந்தக் கருப்பு மனிதர்கள் ராஜாங்க அநீதிகளிலே கருத்தைச் செலுத்தாமலிருந்தால் அதுவே போதுமானது' என்பது க்ஷ வெள்ளைப் போதனா மூர்த்திகளின் உத்தேசம். ஆனால், நம்மவர்க்குள்ளும் சிலரிடத்திலே மேற்கூறிய விநோதமான கொள்கையிருப்பது, அறியாமையால் ஏற்பட்டதோ அல்லது மேலே கூறிய வெள்ளை தெய்வங்களின் தயவைச் சம்பாதித்து சுகம் பெற வேண்டுமென்ற ஈன எண்ணத்தினாலோயென்பது செம்மையாக விளங்கவில்லையென்ற போதிலும், ஒரு வேளை வாலிபர்கள் அவ்வாறு கூறுவார்களானால், அது அறியாமையாலென்றும், வயதேறிய மனிதர்கள் கூறும் பக்ஷத்தில் அது அன்னியரின் தயவின் பொருட்டாக வென்றும் ஊகிக்கச் சில காரணங்கள் ருக்கின்றன. இந்தக் கட்சியாரின் அபிப்பிராயங்கள் எவ்வளவு மூத்தனமானவையென்பதை இங்கே சிறிது ஆராய்வோம்.
இந்தத் தேசத்தில் ராஜாங்க சீர்திருத்தவாதிகளின் பொருட்டு மன்றாடுவதற்கு முக்கிய கருவியாகிய காங்கிர√ஸ வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்தக் காங்கிரஸ் கூட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று ஒரே ஸர்க்கார் உத்தியோகஸ்தனிடம் நிருவாக அதிகாரமும், நீதி விசாரணையதிகாரமும் சேர்ந்திருப்பதை எடுத்து விட வேண்டுமென்பதேயாகும். ஜில்லா கலெக்டரிடம் மாஜிஸ்ட்ரேட் அதிகாரம் கொடுத்திருப்பதால் பல கெடுதிகள் உண்டாகின்றன. ஆதலால் அதை எடுத்து விட வேண்டுமென்ற விவகாரத்திற்கும் ஆசாரத் திருத்தத்திற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? வரித் திட்டத்தை ஓயாமல் மாற்றிக்கொண்டே இருக்கக் கூடாது. ஸ்திரமாக, திட்டமாகச் செய்து விட வேண்டுமென்று காங்கிரஸ் கட்சியார் வாதிடுகிறார்கள். காட்டிலாகா விதிகளில் சிலவற்றை மாற்ற வேண்டுமென்கிறார்கள். இவற்றைப் போன்ற கலப்பற்ற ராஜாங்க சீர்திருத்தங்கள் எத்தனையோ இருக்கின்றன.பிராமண கன்னிகளையெல்லாம் 10 வயதில் விவாஹம் செய்து கொடுப்பதற்குப் பதிலாக 15 வயதில் விவாஹம் செய்து கொடுக்கும் வரை உப்பு வரியைக் குறைப்பது நியாயமாக மாட்டாதென்றால் தைக் காட்டிலும் மூடத்தனமான கொள்கை வேறு யாதிருக்கின்றது? நாம் சிநேகிதர்களைப் பார்க்கப் போகும் இடத்திற்கெல்லாம் மனைவிமாரையும், பெண்களையும் அழைத்துக் கொண்டு போகவில்லையென்பதற்காகவும், கல்விப் பயிற்சியின் பொருட்டு நமது ஸ்திரீகளை லண்டனுக்கு அனுப்பவில்லை யென்பதற்காகவும், வரித் திட்டத்தை ஸ்திரமாக்காமல் வைத்துக் கொண்டிருப்போரின் மூளை எவ்விதமான மண்ணால் உண்டாக்கப்பட்டிருக்கிறதோ அறியோம். காலம் சென்ற மகானாகிய டபிள்யூ. ஸி. பானர்ஜி சாதாரண ஹிந்து அனுஷ்டானங்களை முற்றிலும் விட்டு விட்டு ஆங்கிலேய நடையுடை பாவனைகளையே கைக்கொண்டு வாழ்ந்தார் என்ற போதிலும், 1892ம் வருஷத்திலே அலாகாபாத்தில் நடந்த காங்கிரஸўக்கும் இவர் ஸபைத் தலைவராக இருந்தபோது ராஜாங்கத் திருத்தத்திற்கும், ஆசாரத் திருத்தங்களுக்கும் திவலை கூட சம்பந்தம் கிடையாதென்பதை மேற்கூறிய திரஷ்டாந்தங்களைக் காட்டி நன்கு விளக்கி இருக்கிறார். இதனால, ஆசாரத் திருத்த முயற்சிகளை எதிர்த்துப் பேச வேண்டுமென்ற நோக்கமே எமக்கில்லை. ஆசாரத் திருத்தங்கள் செய்வதோ, செய்யாமலிருப்பதோ, நமது சொந்த சௌகரியத்தைப் பொறுத்த விஷயம். அதைப் பற்றி அன்னியர்கள் அதிக சிரத்தையெடுத்துக் கொள்ள வேண்டுவதில்லை. ராஜாங்கத்தாரும் அதில் அதிகமாகத் தலையிட வேண்டுவதில்லை. ஜனங்களிடம் தீர்வை வாங்கும் கவர்ன்மெண்டார் ஜனங்களை செம்மையாகவும், கூடியவரை ஜனங்களின் இஷ்டப்படியும் ஆள வேண்டியது அவர்களின் கடமையாகும்.
அப்படியன்றி, ஆசாரத் திருத்தங்கள் நிறைவேறும்வரை ராஜ தந்திரங்களுக்கு இத் தேசத்தார் தகுதியுடையவர்களில்லை என்று சொல்லுவோர் அயோக்கியர்களாகவேனும் அல்லது மூடர்களாகவேனும் இருக்க வேண்டுமென்பதில் ஆ·க்ஷபமே கிடையாது.
நன்றி : இந்தியா பத்திரிகையில் பாரதியார் எழுதிய தலையங்கத்திலிருந்து..

பாரதி சித்தாந்தம்

அறிஞர்களான அரசர்கள் அந்தக் காலத்தில் சிறந்த கவிதை ஒன்றைக் கேட்டதும், அட்சரம் ஒன்றுக்கு லட்சம் பொன் வீதம் இந்தப் பாட்டுக்குப் பரிசு கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்துப் பொக்கிஷத்தைக் காலி செய்துவிடுவார்களென்று கேள்விப்பட்டிருக்கிறோமல்லவா? அப்படி அட்சர லட்ச வெகுமானம் செய்யலாமென்று எனக்கும் தோன்றியது - பாரதியார் அன்று டாக்டர் சஞ்சீவி என்ற ஒரு நண்பரின் மாளிகையிலே,ஐயமுண்டு பயமில்லை; மனமே!என்ற தொடங்கிக் கமாஸ், மோகனம் முதலிய இராகங்களில் அந்தப் பாட்டைப் பாடிக் காட்டிய போது. அவ்வளவு கவிப் பித்துப் பிடித்துக் கொண்டது- என்னை மட்டுமல்ல, என்னோடு இருந்தவர்களையும்தான்.ஆம், அட்சர லட்சம் கொடுக்க வேண்டியதுதான். ஆகா, வாரும் பிள்ளாய்! மந்திரி! நம்முடைய பொக்கிஷத்திலே... ஓகோ, நாம் கொடைவள்ளல் பாரி இல்லையே! என்றெல்லாம் நான் பகற்கனவு கண்டு கொண்டிருந்தபோது டாக்டர் சஞ்சீவி மடமடவென்று எழுந்து போனார். கைப்பெட்டியைத் திறந்து ஒரு பத்து ரூபாய்த்தாளை எடுத்துக்கொண்டு தடதடவென்று தொந்தி குலுங்க வந்தார். தயை செய்து சிற்றுண்டிச் சாலைக்குப் போய்க் காப்பி சாப்பிட்டு வாருங்கள் என்று சொல்லிப் பாரதியார் கையிலே அந்த நோட்டைக் கொடுக்கப் போனார். பாரதியார் முகம் பார்த்துக் குறிப்றிந்து செய்த காரியம் இது. எனினும், பாரதியார் வாங்கிக் கொள்ளவில்லை; டாக்டர் திகைத்துப் போனார். டாக்டர் சஞ்சீவிக்குத் தான் ஆயிரக்கணக்காக வருகிறதே; இவ்வளவுதானா கொடுக்கலாம்? என்று என் பக்கத்திலிருந்த நண்பர் ஒருவர் (அவரும் பணக்காரர்தாம்) மெள்ள என் காதோடு காதாய்ச் சொன்னார். ஆனால் டாக்டர் கொடுத்ததை உடனே பாரதியார் பெற்றுக்கொள்ளாததற்குக் காரணம் விரைவில் விளங்கி விட்டது.டாக்டர்! நோட்டைத் தங்கள் உள்ளங்கையிலே வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார் பாரதியார். அந்த வேண்டுகோள் ஒரு கட்டளை போல் ஒலித்தது. டாக்டர் சஞ்சீவி திகைத்துப் போய் அப்படியே இரண்டு கைகளையும் விரித்து அந்தத் தாளை வைத்துக்கொண்டு பாரதியாருக்கு எதிரே நின்றார். பிறகு கவிஞர் சிரித்துக் கொண்டே தாளை எடுத்துக்கொண்டார்.அப்பால் பாரதியார் டாக்டரை நோக்கி, தங்கள் கை என் கைக்குமேல் வந்துவிடக் கூடாதென்றுதான் நீங்கள் கொடுக்க வந்ததை நான் முதன் முதல் பெற்றுக்கொள்ளவில்லை! ஒரு கை, தனக்குக் கீழே இரண்ட தரித்திரக் கைகளைத் தாழ வைத்துக்கொடுக்கிறதே, அந்தக் கொடை எனக்குத் தேவையில்லை! இலட்சம் பொன் கோடிப் பொன் கொடுத்தாலும் அந்தக் கொடை வேண்டவே வேண்டாம். அன்போடு கவிஞனுக்குக் கொடுப்பது கவிதா தெய்வத்திற்குப் பக்தியோடு கொடுக்கும் காணிக்கை என்று கம்பீரமாய்ச் சொன்னார். அப்போது அந்த முகத்திலே பெருந்தன்மை - ஏன்? - ஒரு அரச குல மாட்சியே தாண்டவமாடியது.பாரதியார் சிற்றுண்டிச் சாலையிலிருந்து திரும்பி வரும் வரை நாங்கள் அந்த நிகழ்ச்சியைக் குறித்தும், அவர் பாடிய பாட்டைக் குறித்தும் வியந்து வியந்து பேசிக்கொண்டிருந்தோம்.ஜயமுண்டு, பயமில்லை; மனமே!என்று ஜோன்புரி இராகத்தில் எடுத்த எடுப்பே பிரமாதமாயிருந்ததது என்றார் ஒருவர். இப்படிப்பட்ட கொள்கையுடையவர் ஒரு வெற்றி வீரன் கப்பம் வாங்குவதுபோல் அந்தக் தாளை வாங்கிக்கொண்டது சரிதானே! என்றார்.அனுபல்லவியைத்தான் எவ்வளவு மோகனமாய்ப் பாடினார் மோகனத்திலே! என்றார் ஒருவர்.புயமுண்டு குன்றத்தைப் போலே என்று வீரச்சுவையுடன் பாடத் தொடங்கியதும், பாரதியார் ஒரு குன்றுபோல் நிமிர்ந்துவிட்டாரே! என்று ஆச்சரியப்பட்டார் ஒருவர்.நியம மெல்லாம் சக்திநினைவன்றிப் பிறிதில்லை;நெறியுண்டு குறியுண்டுகுலசக்தி வெற்றியுண்டு!என்று அந்தச் சரணத்தை முடித்ததும், எங்களுக்கெல்லாம் எங்கேயோ காட்டில் வழி தெரியாமல் அலைந்து கொண்டிருந்தது போலவும், திடீரென்று வழி திறந்தது போலவும் தோன்றியது!பாரதியார் அங்கே வருவதற்கு முன் நாங்கள் பொதுவாக நாட்டு நடப்பையும் சிறப்பாகத் திருநெல்வேலித் தல விவகாரங்களையும் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சு உற்சாகமாகவே யில்லை; சோர்வு கொடுக்கக் கூடியதாயிருந்தது. ஊரும் நாடும் இருந்த நிலையில் வாழ்க்கை பயனற்ற பாலைவனமாகத் தோன்றியது. அப்போதுதான் பாரதியார் வந்து சேர்ந்தார். அவர் வந்ததும் கவிதை என்றால் என்ன? அதனால் பயன் என்ன? என்று ஒரு கேள்வி போட்டார் டாக்டர் சஞ்சீவி. பாரதியார் கேள்விக்குப் பதில் சொல்லாமலே ஜயமுண்டு, பயமில்லை என்று பாடத் தொடங்கி,பயனுண்டு பக்தியினாலேஎன்று அனுபல்லவியிலேயே தமது சித்தாந்தத்தை வெளியிடத் தொடங்கிவிட்டார். இருளூடே ஒளி பரவுவது போல் ஐயம் நீங்கித் தெளிவுபட்டு வந்தது, உள்ளத்திற்குள்ளே. எங்களுக்கெல்லாம்.சரணம் பாடும்போது பக்தியின் சக்தி இன்னிசை வெள்ளத்திலே அலையலையாகப் பரவி வந்து எங்களை முழுக்காட்டுவது போலிருந்தது.மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும்; - தெய்வவலியுண்டு தீமையைப் போக்கும்விதியுண்டு, தொழிலுக்கு விளைவுண்டு குறைவில்லைவிசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கை கணையுண்டு. (ஜயமுண்டு...)என்று பாடியதும், கமாஸ் ராகமே அப்படி உருவெடுத்து வந்து உறுதி கூறிக் குதூகலம் அளிப்பது போலிருந்தது.இப்படிப் பரம்பொருளை நம்பியிருப்பவர் பொருளை மதிப்பாரா? என்றார் ஒருவர்.என்ன இன்பமான சங்கீதம்! இசையோடு தமிழும், தமிழோடு இசையும் எப்படி இயைந்துவிட்டன! என்றால் எங்கள் கூட்டத்திலிருந்த ஒரு சங்கீத வித்துவான்.சங்கீதம் இருக்கட்டும்; சாகித்தியமே உள்ளத்திலும் - ஏன்? உடம்பிலும்கூட - ஏதோ ஒரு சக்திமயமான மின்சாரத்தை ஏற்றிவிட்டதே என்றார் தமிழஞரும் வக்கீலும் பாரதியாரின் தோழருமான திரு வேதநாயம்பிள்ளை.இப்படியெல்லாம் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, பாரதியார் சிற்றுண்டிச் சாலையிலிருந்து திரும்பி வந்தார். வந்ததும், எங்கள் பேச்சை நிறுத்திவிட்டோம். டாக்டர் சஞ்சீவி கவிஞரை நோக்கி, அந்தப் பாட்டை மறுபடியும் கேட்க ஆசைப்படுகறோம்; பாடுவீர்களா? என்று வெகு வினயமாகக் கேட்டார். இந்தத் தடவையும் பாரதியார் பாட்டைக் கமாஸிலேயே பாடிக் கொண்டு வந்தார். ஆனால் ஏதோ ஓர் இராணுவ கீதம் பாடுவது போலத் தோன்றியது. இதைப் பாடிக்கொண்டே எங்கேயோ ஏதோ ஒரு போருக்குப் புறப்பட்டுப் போகலாமென்று தோன்றுகிறதே! என்றார் டாக்டர் சஞ்சீவி.ஆம்; சோர்வுடன் போர், பயத்துடன் போர்; அவநம்பிக்கையுடன் போர்; மூட நம்பிக்கையுடன் போர்; வறுமையுடன் போர்; செல்வச் செருக்குடன் போர்; தீமையுடன் போர் - இப்படி எத்தனையோ போர்களுக்குப் பட்டாளம் திரட்டி நடத்திக்கொண்டு போகவேண்டியிருக்கிறதே, அதுதான் என் தொழில்! என்றார் பாரதியார்.இப்படிச் சொல்லிவிட்டுக் கடைசிச் சரணத்தை மட்டும் ஏதோ ஒரு புதிய இராகத்திலே,அலைபட்ட கடலுக்கு மேலே, - சக்திஅருளென்னும் தோணியி னாலே,தொலையெட்டிக் கரைவுற்றுத் துயரற்றுவிடுபட்டுத்துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு (ஜயமுண்டு..)என்று பாடி முடித்தார். இந்தக் கடைசிச் சரணத்தைப் பாரதியார் ஏதோ ஒரு பிரெஞ்சு ராணுவகீத முறையைத் தழுவி பாடியதாக அவருடைய மைத்துனர் என்னிடம் சொன்னார்.எங்களுடன் இருந்த சங்கீத வித்துவான், இவர் நாவிலே கலையரசி சாந்த மூர்த்தியாக இல்லாமல் வீர மூர்த்தியாகி விடுகிறாள்! என்று சொன்னார். டாக்டர் சஞ்சீவியோ, எது எப்படியிருந்த போதிலும் பாரதியாரின் சாகித்தியமும் சங்கீதமும் அபார சக்தியோடு என்னைக் கவர்ந்துவிட்டன. இது என்ன இப்னாடிசமோ? என்று அதிசயித்த வண்ணமாயிருந்தார்.தங்களுக்குத் தெரியாத இப்னாடிச மெஸ்மெரிச வித்தையா பாரதியாருக்குத் தெரிந்துவிட்டது? என்றார் திரு. வேதநாயகம் பிள்ளை.தென்னாட்டின் வசிய சாத்திர திலகமென்று வடஇந்தியர் சிலராலும், இந்தியாவின் வசிய சாத்திரியென்று அமெரிக்கர் சிலராலும் அந்நாளில் புகழப்பெற்ற டாக்டர் சஞ்சீவி விசேஷ இலக்கிய உணர்ச்சி உள்ளவரல்லர். கவிதை என்றால் என்ன?அதன் பயன் என்ன? என்று எங்களைப் பல தடவை கேட்டிருக்கிறார். அதே கேள்வியைத்தான் அன்று பாரதியாரையும் கேட்டார்.எங்களோடு எவ்வளவுவோ வாதம் செய்து பார்த்தும் தெளியாத ஐயம் டாக்டர் சஞ்சீவிக்கு அன்று பாரதியாரின் பாட்டைக் கேட்டதும் தெளிந்துவிட்டது. தங்கள் கவிதை என்னையும் வசீகரித்து விட்டதோ! என்று அந்த வசிய சாத்திரி சொன்னதும். பாரதியார் எனக்குத் தெரிந்த வசிய வித்தையெல்லாம்உள்ளத்தில் உண்மையொளிஉண்டாயின் வாக்கினிலேஒலியுண்டாகும்என்பதுதான் என்றார்.பாரதியாரோடு சிற்றுண்டிச்சாலையில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் அச்சமயம் எங்களிடம் வந்து, பத்து ரூபாய் செலவு செய்து எங்களுக்கெல்லாம் சிற்றுண்டி வாங்கிக் கொடுத்தார். யாரோ தெரியவில்லை; புதுச்சேரியிலிருந்து வந்தவராமே! ஆகா இவர்தாம்! என்று சொன்னார்.திரு. வேதநாயகம் பிள்ளை பாரதியாரின் பொத்தானில்லாத கோட்டையும் கிழிந்த சட்டையையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கண்ணீர் ததும்ப டாக்டர் சஞ்சீவியை நோக்கி இதுதான் இவருடைய வசிய வித்தை என்று சொன்னார்.இப்படிப்பட்ட வசிய வித்தையும் நட்பும் கவிதையும் இருக்கும் போது இந்த உலகம் பாலைவனமன்று; இன்பச் சோலைதான்! நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்தாம் என்று நாங்கள் தீர்மானித்தோம்.
நன்றி: பாரதி நான் கண்டதும் கேட்டதும்

பாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்


"நான் சென்னையில் இருந்த சமயம் எப்போதாவது பேச்சுநடுவே, “இரண்டும் பெண் குழந்தைகள். கையில் வந்த பிள்ளைக் குழந்தையோ போய்விட்டது” என்று சலித்துக் கொள்வதைப் பாரதி கேட்டுவிட்டால் போதும்; “பெண் குழந்தைகளுக்குத்தான் வாத்ஸல்யம் அதிகம், யதுகிரி. புதுச்சேரியில் விளையாடின நீ என்னை இன்னும் அப்படியே காண்கிறாய். ஆனால் உன் அண்ணன் சாமிக்கு சம்சாரக் கவலை; உன்னைப்போல என்னிடம் பேச ஒழிவதில்லை” என்பார்.
நான் யுகாதிவரை சென்னைப் பட்டிணத்தில் இருந்தேன். பாரதியார் தினம் எங்கள் வீட்டுக்கு வருவார். செல்லம்மா, தங்கம்மா, சகுந்தலா அடிக்கடி வருவார்கள். நாங்களும் அடிக்கடி போவோம்.
சித்திரை மாதம் புறப்படுகிற தினம் காலையில் பாரதி வந்திருந்தார். க்ஷேமலாபங்கள் விசாரித்துவிட்டு, எங்கள் வீட்டு வாசலிலே க்ஷவரம் செய்துகொண்டார். “இன்று க்ஷவரத்துக்கு நாள் நன்றாயில்லை என்று செல்லம்மா தடுத்தாள். அதற்காக இங்கே செய்துகொண்டேன்” என்றார்.
அன்று சாயங்காலம் ஆறு மணிக்கு பாரதி மறுபடி வந்தார். நான் நமஸ்கரித்து, ” எங்கள் ஊர்பக்கம் (பங்களூருக்கு) நீங்கள் வருவதில்லையா?” என்று கேட்டேன். அவர், “எனக்கு பங்களூரில் என்ன அம்மா காரியம்? போய்வா அம்மா. நீ மறுபடி வரும்போது நான் எந்த ஊரில் இருப்பேனோ! உன்னை மறுபடி பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன்” என்றார். அதுவே அவரை நான் கண்ட கடைசித் தடவை.
நான் மைசூரில் இருந்தேன். என் தாயிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், “பாரதியார் இறந்துவிட்டார்!” என்ற செய்தி இருந்தது. முதலில் நான் நம்பவில்லை. மறுபடியும் என் தகப்பனாரே விவரமாக எழுதியிருந்தார்.
விதி முடிந்துவிட்டது! தமிழ்நாட்டின் அதிருஷ்டம் அவ்வளவுதான்!
1923-ம் வருஷம் நான் மறுபடி சென்னை வந்திருந்தேன். செல்லம்மா, தங்கம்மா, சகுந்தலா மூவரும் என்னை பார்க்க வந்திருந்தார்கள். அவர்களை காண எனக்கு வருத்தமாயிருந்தது.
செல்லம்மா, “யதுகிரி, அவர் பிராணன் போகும்முன்கூட, ‘செல்லம்மா, யதுகிரி எங்கே இருக்கிறாள்?’ என விசாரித்தார். நீ மைசூரில் இருப்பதாக சொன்னேன். ‘எவ்வளவு குழந்தைகள்?’ என்று கேட்டார். ‘நம்மைப்போல இரண்டு பெண்கள்’ என்றேன். உன்னைப் பார்க்க வேண்டும்போல இருப்பதாக சொல்லிவிட்டு, ‘அவள் இப்போது எங்கே வருவாள்? எங்காவது நன்றாக இருக்கட்டும்… காலை சமைத்து விடு, எட்டு மணிக்கெல்லாம் ஆபீசுக்கு போகவேணும்” என்றார். இதெல்லாம் சொன்ன ஒரு மணி நேரத்துக்கெல்லாம் உயிர் போய்விட்டது! என்ன செய்வேன்! அதுவும் ஒரு கூத்தாகிவிட்டது…! என்றார்"


- யதுகிரி அம்மாள் எழுதிய “பாரதி நினைவுகள்” புத்தகத்தில் இருந்து (பக் : 93)
யதுகிரி, புண்ணியம் செய்த ஆத்மா. பாரதியின் பல கவிதைகளை முதலில் கேட்ட செவி இவருடையது. பாரதியின் நண்பரான மாண்டையம் ஸ்ரீ.ஸ்ரீநிவாஸசாரியாரின் மகள் தான் யதுகிரி. பாரதியுடனான தனது அனுபவங்களை இவர் “பாரதி நினைவுகள்” என்ற புத்தகமாக எழுதினார். என் அளவில் செல்லம்மாள் எழுதிய “பாரதி சரித்திரத்தை” விட இது மிக அழகான, முக்கியமான புத்தகமாக படுகிறது. செல்லம்மாளின் புத்தகத்தின் நான் அதுவரை கண்ட கேட்ட பாரதியையே காண முடிந்தது. அதாவது, எழுத்தின் மூலமாக நமக்கு காணக்கிடைக்கும் பிம்பத்தினை சற்றும் குலைக்காத வகையில் எழுதப்பட்ட நூல் செல்லம்மாவின் “பாரதி சரித்திரம்”. ஆனால் யதுகிரியின் “பாரதி நினைவுகள்” அப்படியல்ல. பாரதியை அவனது காவிய உயரத்திலும் சாதாரணத் தளத்திலும் ஒருசேர நிற்கவைக்க முயலும் படைப்பு இது. மேலும் பாரதியின் பல பாடல்கள் உருவான கணத்தையும் பதிவு செய்த புத்தகம்.