பாரதி சித்தாந்தம்
அறிஞர்களான அரசர்கள் அந்தக் காலத்தில் சிறந்த கவிதை ஒன்றைக் கேட்டதும், அட்சரம் ஒன்றுக்கு லட்சம் பொன் வீதம் இந்தப் பாட்டுக்குப் பரிசு கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்துப் பொக்கிஷத்தைக் காலி செய்துவிடுவார்களென்று கேள்விப்பட்டிருக்கிறோமல்லவா? அப்படி அட்சர லட்ச வெகுமானம் செய்யலாமென்று எனக்கும் தோன்றியது - பாரதியார் அன்று டாக்டர் சஞ்சீவி என்ற ஒரு நண்பரின் மாளிகையிலே,ஐயமுண்டு பயமில்லை; மனமே!என்ற தொடங்கிக் கமாஸ், மோகனம் முதலிய இராகங்களில் அந்தப் பாட்டைப் பாடிக் காட்டிய போது. அவ்வளவு கவிப் பித்துப் பிடித்துக் கொண்டது- என்னை மட்டுமல்ல, என்னோடு இருந்தவர்களையும்தான்.ஆம், அட்சர லட்சம் கொடுக்க வேண்டியதுதான். ஆகா, வாரும் பிள்ளாய்! மந்திரி! நம்முடைய பொக்கிஷத்திலே... ஓகோ, நாம் கொடைவள்ளல் பாரி இல்லையே! என்றெல்லாம் நான் பகற்கனவு கண்டு கொண்டிருந்தபோது டாக்டர் சஞ்சீவி மடமடவென்று எழுந்து போனார். கைப்பெட்டியைத் திறந்து ஒரு பத்து ரூபாய்த்தாளை எடுத்துக்கொண்டு தடதடவென்று தொந்தி குலுங்க வந்தார். தயை செய்து சிற்றுண்டிச் சாலைக்குப் போய்க் காப்பி சாப்பிட்டு வாருங்கள் என்று சொல்லிப் பாரதியார் கையிலே அந்த நோட்டைக் கொடுக்கப் போனார். பாரதியார் முகம் பார்த்துக் குறிப்றிந்து செய்த காரியம் இது. எனினும், பாரதியார் வாங்கிக் கொள்ளவில்லை; டாக்டர் திகைத்துப் போனார். டாக்டர் சஞ்சீவிக்குத் தான் ஆயிரக்கணக்காக வருகிறதே; இவ்வளவுதானா கொடுக்கலாம்? என்று என் பக்கத்திலிருந்த நண்பர் ஒருவர் (அவரும் பணக்காரர்தாம்) மெள்ள என் காதோடு காதாய்ச் சொன்னார். ஆனால் டாக்டர் கொடுத்ததை உடனே பாரதியார் பெற்றுக்கொள்ளாததற்குக் காரணம் விரைவில் விளங்கி விட்டது.டாக்டர்! நோட்டைத் தங்கள் உள்ளங்கையிலே வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார் பாரதியார். அந்த வேண்டுகோள் ஒரு கட்டளை போல் ஒலித்தது. டாக்டர் சஞ்சீவி திகைத்துப் போய் அப்படியே இரண்டு கைகளையும் விரித்து அந்தத் தாளை வைத்துக்கொண்டு பாரதியாருக்கு எதிரே நின்றார். பிறகு கவிஞர் சிரித்துக் கொண்டே தாளை எடுத்துக்கொண்டார்.அப்பால் பாரதியார் டாக்டரை நோக்கி, தங்கள் கை என் கைக்குமேல் வந்துவிடக் கூடாதென்றுதான் நீங்கள் கொடுக்க வந்ததை நான் முதன் முதல் பெற்றுக்கொள்ளவில்லை! ஒரு கை, தனக்குக் கீழே இரண்ட தரித்திரக் கைகளைத் தாழ வைத்துக்கொடுக்கிறதே, அந்தக் கொடை எனக்குத் தேவையில்லை! இலட்சம் பொன் கோடிப் பொன் கொடுத்தாலும் அந்தக் கொடை வேண்டவே வேண்டாம். அன்போடு கவிஞனுக்குக் கொடுப்பது கவிதா தெய்வத்திற்குப் பக்தியோடு கொடுக்கும் காணிக்கை என்று கம்பீரமாய்ச் சொன்னார். அப்போது அந்த முகத்திலே பெருந்தன்மை - ஏன்? - ஒரு அரச குல மாட்சியே தாண்டவமாடியது.பாரதியார் சிற்றுண்டிச் சாலையிலிருந்து திரும்பி வரும் வரை நாங்கள் அந்த நிகழ்ச்சியைக் குறித்தும், அவர் பாடிய பாட்டைக் குறித்தும் வியந்து வியந்து பேசிக்கொண்டிருந்தோம்.ஜயமுண்டு, பயமில்லை; மனமே!என்று ஜோன்புரி இராகத்தில் எடுத்த எடுப்பே பிரமாதமாயிருந்ததது என்றார் ஒருவர். இப்படிப்பட்ட கொள்கையுடையவர் ஒரு வெற்றி வீரன் கப்பம் வாங்குவதுபோல் அந்தக் தாளை வாங்கிக்கொண்டது சரிதானே! என்றார்.அனுபல்லவியைத்தான் எவ்வளவு மோகனமாய்ப் பாடினார் மோகனத்திலே! என்றார் ஒருவர்.புயமுண்டு குன்றத்தைப் போலே என்று வீரச்சுவையுடன் பாடத் தொடங்கியதும், பாரதியார் ஒரு குன்றுபோல் நிமிர்ந்துவிட்டாரே! என்று ஆச்சரியப்பட்டார் ஒருவர்.நியம மெல்லாம் சக்திநினைவன்றிப் பிறிதில்லை;நெறியுண்டு குறியுண்டுகுலசக்தி வெற்றியுண்டு!என்று அந்தச் சரணத்தை முடித்ததும், எங்களுக்கெல்லாம் எங்கேயோ காட்டில் வழி தெரியாமல் அலைந்து கொண்டிருந்தது போலவும், திடீரென்று வழி திறந்தது போலவும் தோன்றியது!பாரதியார் அங்கே வருவதற்கு முன் நாங்கள் பொதுவாக நாட்டு நடப்பையும் சிறப்பாகத் திருநெல்வேலித் தல விவகாரங்களையும் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சு உற்சாகமாகவே யில்லை; சோர்வு கொடுக்கக் கூடியதாயிருந்தது. ஊரும் நாடும் இருந்த நிலையில் வாழ்க்கை பயனற்ற பாலைவனமாகத் தோன்றியது. அப்போதுதான் பாரதியார் வந்து சேர்ந்தார். அவர் வந்ததும் கவிதை என்றால் என்ன? அதனால் பயன் என்ன? என்று ஒரு கேள்வி போட்டார் டாக்டர் சஞ்சீவி. பாரதியார் கேள்விக்குப் பதில் சொல்லாமலே ஜயமுண்டு, பயமில்லை என்று பாடத் தொடங்கி,பயனுண்டு பக்தியினாலேஎன்று அனுபல்லவியிலேயே தமது சித்தாந்தத்தை வெளியிடத் தொடங்கிவிட்டார். இருளூடே ஒளி பரவுவது போல் ஐயம் நீங்கித் தெளிவுபட்டு வந்தது, உள்ளத்திற்குள்ளே. எங்களுக்கெல்லாம்.சரணம் பாடும்போது பக்தியின் சக்தி இன்னிசை வெள்ளத்திலே அலையலையாகப் பரவி வந்து எங்களை முழுக்காட்டுவது போலிருந்தது.மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும்; - தெய்வவலியுண்டு தீமையைப் போக்கும்விதியுண்டு, தொழிலுக்கு விளைவுண்டு குறைவில்லைவிசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கை கணையுண்டு. (ஜயமுண்டு...)என்று பாடியதும், கமாஸ் ராகமே அப்படி உருவெடுத்து வந்து உறுதி கூறிக் குதூகலம் அளிப்பது போலிருந்தது.இப்படிப் பரம்பொருளை நம்பியிருப்பவர் பொருளை மதிப்பாரா? என்றார் ஒருவர்.என்ன இன்பமான சங்கீதம்! இசையோடு தமிழும், தமிழோடு இசையும் எப்படி இயைந்துவிட்டன! என்றால் எங்கள் கூட்டத்திலிருந்த ஒரு சங்கீத வித்துவான்.சங்கீதம் இருக்கட்டும்; சாகித்தியமே உள்ளத்திலும் - ஏன்? உடம்பிலும்கூட - ஏதோ ஒரு சக்திமயமான மின்சாரத்தை ஏற்றிவிட்டதே என்றார் தமிழஞரும் வக்கீலும் பாரதியாரின் தோழருமான திரு வேதநாயம்பிள்ளை.இப்படியெல்லாம் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே, பாரதியார் சிற்றுண்டிச் சாலையிலிருந்து திரும்பி வந்தார். வந்ததும், எங்கள் பேச்சை நிறுத்திவிட்டோம். டாக்டர் சஞ்சீவி கவிஞரை நோக்கி, அந்தப் பாட்டை மறுபடியும் கேட்க ஆசைப்படுகறோம்; பாடுவீர்களா? என்று வெகு வினயமாகக் கேட்டார். இந்தத் தடவையும் பாரதியார் பாட்டைக் கமாஸிலேயே பாடிக் கொண்டு வந்தார். ஆனால் ஏதோ ஓர் இராணுவ கீதம் பாடுவது போலத் தோன்றியது. இதைப் பாடிக்கொண்டே எங்கேயோ ஏதோ ஒரு போருக்குப் புறப்பட்டுப் போகலாமென்று தோன்றுகிறதே! என்றார் டாக்டர் சஞ்சீவி.ஆம்; சோர்வுடன் போர், பயத்துடன் போர்; அவநம்பிக்கையுடன் போர்; மூட நம்பிக்கையுடன் போர்; வறுமையுடன் போர்; செல்வச் செருக்குடன் போர்; தீமையுடன் போர் - இப்படி எத்தனையோ போர்களுக்குப் பட்டாளம் திரட்டி நடத்திக்கொண்டு போகவேண்டியிருக்கிறதே, அதுதான் என் தொழில்! என்றார் பாரதியார்.இப்படிச் சொல்லிவிட்டுக் கடைசிச் சரணத்தை மட்டும் ஏதோ ஒரு புதிய இராகத்திலே,அலைபட்ட கடலுக்கு மேலே, - சக்திஅருளென்னும் தோணியி னாலே,தொலையெட்டிக் கரைவுற்றுத் துயரற்றுவிடுபட்டுத்துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு (ஜயமுண்டு..)என்று பாடி முடித்தார். இந்தக் கடைசிச் சரணத்தைப் பாரதியார் ஏதோ ஒரு பிரெஞ்சு ராணுவகீத முறையைத் தழுவி பாடியதாக அவருடைய மைத்துனர் என்னிடம் சொன்னார்.எங்களுடன் இருந்த சங்கீத வித்துவான், இவர் நாவிலே கலையரசி சாந்த மூர்த்தியாக இல்லாமல் வீர மூர்த்தியாகி விடுகிறாள்! என்று சொன்னார். டாக்டர் சஞ்சீவியோ, எது எப்படியிருந்த போதிலும் பாரதியாரின் சாகித்தியமும் சங்கீதமும் அபார சக்தியோடு என்னைக் கவர்ந்துவிட்டன. இது என்ன இப்னாடிசமோ? என்று அதிசயித்த வண்ணமாயிருந்தார்.தங்களுக்குத் தெரியாத இப்னாடிச மெஸ்மெரிச வித்தையா பாரதியாருக்குத் தெரிந்துவிட்டது? என்றார் திரு. வேதநாயகம் பிள்ளை.தென்னாட்டின் வசிய சாத்திர திலகமென்று வடஇந்தியர் சிலராலும், இந்தியாவின் வசிய சாத்திரியென்று அமெரிக்கர் சிலராலும் அந்நாளில் புகழப்பெற்ற டாக்டர் சஞ்சீவி விசேஷ இலக்கிய உணர்ச்சி உள்ளவரல்லர். கவிதை என்றால் என்ன?அதன் பயன் என்ன? என்று எங்களைப் பல தடவை கேட்டிருக்கிறார். அதே கேள்வியைத்தான் அன்று பாரதியாரையும் கேட்டார்.எங்களோடு எவ்வளவுவோ வாதம் செய்து பார்த்தும் தெளியாத ஐயம் டாக்டர் சஞ்சீவிக்கு அன்று பாரதியாரின் பாட்டைக் கேட்டதும் தெளிந்துவிட்டது. தங்கள் கவிதை என்னையும் வசீகரித்து விட்டதோ! என்று அந்த வசிய சாத்திரி சொன்னதும். பாரதியார் எனக்குத் தெரிந்த வசிய வித்தையெல்லாம்உள்ளத்தில் உண்மையொளிஉண்டாயின் வாக்கினிலேஒலியுண்டாகும்என்பதுதான் என்றார்.பாரதியாரோடு சிற்றுண்டிச்சாலையில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் அச்சமயம் எங்களிடம் வந்து, பத்து ரூபாய் செலவு செய்து எங்களுக்கெல்லாம் சிற்றுண்டி வாங்கிக் கொடுத்தார். யாரோ தெரியவில்லை; புதுச்சேரியிலிருந்து வந்தவராமே! ஆகா இவர்தாம்! என்று சொன்னார்.திரு. வேதநாயகம் பிள்ளை பாரதியாரின் பொத்தானில்லாத கோட்டையும் கிழிந்த சட்டையையும் ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கண்ணீர் ததும்ப டாக்டர் சஞ்சீவியை நோக்கி இதுதான் இவருடைய வசிய வித்தை என்று சொன்னார்.இப்படிப்பட்ட வசிய வித்தையும் நட்பும் கவிதையும் இருக்கும் போது இந்த உலகம் பாலைவனமன்று; இன்பச் சோலைதான்! நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர்தாம் என்று நாங்கள் தீர்மானித்தோம்.
நன்றி: பாரதி நான் கண்டதும் கேட்டதும்
No comments:
Post a Comment