பாரதி ஒரு சூப்பர்மேன்: - கல்யாணசுந்தரம்
நெல்லை மாவட்டத்தின் விக்கிரமசிங்கபுரத்து சன்னதித் தெருவில் இப்போதும் மாறாத பழைய வீடொன்றில் உள்ளே மர நாற்காலியில் அமர்ந்தபடி தன் நினைவுகளின் நதியில் நீந்திக் கொண்டிருக்கிறார் கல்யாண சுந்தரம் என்ற 92 வயது வாலிபர். வயோதிகம் பற்றிய உடல் என்றாலும் பேச்சு உடையவில்லை. ஞாபகம் சீராகப் பாய்கிறது. பாரதியாரோடு பழகிய தன் பால்ய காலத்தை நினைவுபடுத்திப் பேசிக் கொண்டேயிருக்கிறார். பேச்சு இளைஞரின் உற்சாகத்தோடும், ஈர்ப்போடும் இருக்கிறது. சமீபத்தில் வெளியான 'சுப்பிரமணிய பாரதி' விவரணப் படத்தில் தன் நினைவுகளைப் பதிவு செய்திருக்கிறார் கல்யாண சுந்தரம். அவரை நேரில் சந்தித்து 'ஆறாம்திணை' க்காகப் பிரத்தியேகமாகப் பேசிய நினைவுப் பெருக்கிலிருந்து சில துளிகள்..... * பாரதியாரை எப்போது சந்தித்தீர்கள்? ''1919 ம் வருஷம் அவர் கடையத்துக்கு வந்தாரு. அப்போ நான் சின்னப் பையன். புதுசா எது வந்தாலும் வேடிக்கை பாக்கிற மாதிரிதான் பாரதியாரையும் வேடிக்கை பார்க்கப் போனோம். அவர் மனைவி செல்லம்மா வீடு அக்ரஹாரத்தில் இருந்தது. அவர் மனைவியோட சகோதரர் அப்பாத்துரை தான் பாரதியாரை கவனிச்சுக்கிட்டு இருந்தார்.'' * அப்போ பாரதி எப்படியிருந்தார்? ' ரொம்ப மிடுக்கான ஆளு, குரல் கார்வையா இருக்கும். தெருவிலே நேரே நடந்து மிலிட்டரிக்காரர் மாதிரி போவாரு. சாயங்காலமாச்சுன்னா கல்யாணியம்மன் கோயிலுக்குப் போவாரு... அவருக்கு அக்ரஹராத்தில மதிப்பே இல்லை. யாரோடயும் சேரவும் மாட்டாரு... அவங்களும் இவரை ரொம்பத் தாழ்வாதான் நடத்தினாங்க.'' * அவரைப் பத்தின ஞாபகங்களைச் சொல்லுங்களேன்? '' ஒரு நாள் ஊருக்கு வெளியில ஒரு கழுதை குட்டியோடு படுத்துக் கிடந்தது. கழுதைக் குட்டி கிட்டே போய் பாரதி உட்கார்ந்துகிட்டு அதைத் தடவித் தடவி விட்டுக்கிட்டு அதைக் கொஞ்சிகிட்டு இருந்தாரு. சின்னப்பிள்ளைகளுக்குத் தர்ற மாதிரி முத்தமெல்லாம் குடுத்தாரு. பார்க்கிறவங்க இந்த ஆளுக்குப் புத்தி கெட்டு போச்சுன்னு சொல்லிக்கிட்டுப் போனாங்க. இவரு அதைப் பத்தியெல்லாம் கவலைப்படலை.'' * உங்களுக்கு அப்போ வயது என்ன இருக்கும்? '' பள்ளிக்கூடத்தில படிச்சுக்கிட்டு இருக்கேன். பத்து, பனிரெண்டு வயசு இருக்கும். பாரதியாரோட மக சகுந்தலா நான் படிச்ச ஸ்கூல்ல சின்ன வகுப்பிலே படிச்சுக்கிட்டு இருந்தா... நான் பாரதியாரைப் பார்க்கப் போனா வீட்டில திட்டுவாங்க.. யாருக்கும் தெரியாமதான் போயி பார்ப்போம். என் வயசு பையன்க நாலஞ்சு பேர் தினம் போயி அவரைப் பாத்து பேசுவோம். அவரு எங்களைக் கூட்டிக்கிட்டு ஊரைவிட்டு வெளியே வந்து ஏதாவது இடத்தில உட்கார்ந்துகிட்டு பேசிகிட்டு இருப்பாரு. அக்ரஹராத்தில இருந்த ஆட்கள் அவரைக் கண்டா முகத்தைத் திருப்பிகிடுவாங்க.. . அப்பாத்துரை மட்டும் தான் அத்திம்பேர்னோ, ஓய் பாரதின்னோ கூப்பிட்டுப் பேசுவார். பாரதியார் தினம் கடுதாசி எழுதுவார். அவருக்கு லஹரி வஸ்துகள் உபயோகிக்கிற பழக்கம் இருந்துச்சு. அதைப் புகைக்க ஏற்பாடு பண்றதுக்கு ஆறுமுகம்னு ஒருத்தன் இருந்தான். புகைகுழல் ஏற்பாடு பண்ண வீட்டுக் கிணற்றில இருக்க கயிற்று நுனியை வெட்டி எடுத்துக்கிடுவாரு. அது சன்னமா இருக்கும். அதை மெல்லுசாப் பொசுக்கி அதை ஈரத்துணியிலே சுத்தி ஏற்பாடு செய்வாங்க. அவர் கண்ணு அப்போ துடிச்சுக்கிட்டேயிருக்கும். எப்பவாவது அவர் கவிதைகளைப் பாடுவாரு. எழுதி வச்சதப் பாடுறாரா, இல்லை இப்போதான் புனைஞ்சு பாடுறாரான்னு தெரியாது. ஆனா எதுக்க இருக்க ஆள் அவர் குரலைவிட்டு விலக முடியாம இருக்கற மாதிரி பாடுவாரு''. * அவரோட கவிதைகளை அப்பவே வாசிச்சு இருக்கீங்களா? ''ஸ்வதந்திர கீதங்கள், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு இது போன்ற புஸ்தகங்களை எல்லாம் நாலணா, எட்டணாவிற்கு விற்பாரு. நாங்க வாங்கிப் படிப்போம். இப்போ அவர் புஸ்தகத்தை 60 ரூபா, நூறு ரூபான்னு விக்கிறாங்களே எதுலயும் அப்பிடி சுத்தமா பதிப்பிச்ச கவிதை இருக்காது.'' * தினசரி பார்ப்பீங்களா? '' ஒரு ஆறு மாசம் இருக்கும். தினம் பார்ப்போம். அவர் அக்ரஹாரத்தில இருந்தாலும் அதுக்குக் கட்டுப்பட்டு நடக்கலை. நல்ல மீச வச்சிருந்தார். அல்பெர்கா கோட்டு, விறைப்பா கையை வெச்சுக்கிட்டு நடப்பாரு. அவர் போகும்போது சில பேர் அவர் முன்னாடியே, 'பிரஷ்டன்... பிரஷ்டன்' னு சொல்லி விலகிப் போறதப் பாத்திருக்கேன். யாரும் அவருக்கு மதிப்புக் குடுக்கலை. கொஞ்சநாள் அவரை அக்ரஹாரத்துக்குள்ளவே சேத்துக்கலை. வெளியே ஒரு இடத்தில தனியா இருந்தாரு. வீட்ல இருந்து சாப்பாடு கொண்டு கொடுத்திட்டு வருவாங்க. ஒரு நாள் பாரதியார் இன்னைக்கு 'சாகாமல் இருப்பது எப்படி?' ன்னு சொற்பொழிவு செய்யப் போறாருன்னு தண்டோரா போட்டாங்க. அவர் வீட்டு முன்னால கூட்டம் நடந்தது. பாரதியார் வந்தாரு. கூட்டத்தைப் பாத்துக்கிட்டே, ' ஜெயபேரிகை கொட்டடா' பாட்டைப் பாடினாரு. கண்ணு அப்பிடி அம்பு மாதிரி கூர்மையா இருக்கு. கொட்டடா, கொட்டடான்னு அவர் சொல்ற வேகத்தைக் கேட்ட தண்டோரா போடுறவன் நம்மளைத்தான் சொல்றாரு போல இருக்குன்னு நினைச்சு நிஜமாவே தண்டோராவை அடிச்சான். அப்பிடி வீரமா பாடுவாரு. அவருக்குப் பொய் பேசினா பிடிக்காது. திட்டுவாரு. கோபப்பட்டு எதாவது செய்துட்டாலும் பிறகு மன்னிப்புக் கேட்டுக்கிடுவாரு. வயது வித்தியாசம் பாக்காம மன்னிப்புக் கேட்டுடுவாரு. அவரோட மதிப்பு அன்னைக்கு எனக்குத் தெரியிலே. வீட்டுல திட்டுவாங்கன்னு பயந்துகிட்டே பழகுவோம்.'' * அவரோட பழக்கமெல்லாம் எப்படியிருந்தது? '' யார்கிட்டயும் நிமிர்ந்து பாத்துதான் பேசுவாரு. அவரு தெய்வத்தை வேண்டுறபோது எதிரே நிக்கற மாதிரிதான் 'அம்மா... சக்தி' ந்னு உரக்க சொல்வாரு. எல்லாத்துலயும் அவருக்கு சக்தி இருக்கிற மாதிரிதான் சொல்வாரு. அவர்கிட்டே ரொம்ப நாளா யானையோட விளையாடுற பழக்கம் இருந்துச்சு. கோவில்ல இருந்த யானைகிட்டே போயி, பாகன் கிட்டே எட்டணா குடுத்துட்டு 'யானையைத் தொட்டுப் பாக்கட்டா' ன்னு கேப்பாரு. அவன் 'அதுக்கு என்ன! பாருங்க சாமி' ன்னு சொல்வான். தும்பிக்கையைச் சுத்தி கையைப் போட்டுக்கிட்டு முத்தம் குடுப்பாரு. சில சமயம் பல்லுல மெல்ல அதை கடிப்பாரு. அதுக்கு வலிக்கவா போகுது.விளையாடிகிட்டேயிருப்பார். அதுதான் பின்னாடி அவருக்கு வினையா வந்துச்சு. யானைன்னா ஆச்சரியமா பார்ப்பாரு. குழந்தை மாதிரி.'' * உங்களோட குடும்பத்தைப் பத்தி சொல்லுங்க? '' நான் 'குற்றாலக் குறவஞ்சி' எழுதின திரிகூடராசப்பக் கவிராயர் வம்சாவழியில பிறந்தவன். மண உறவுகள் வழியா அது தொடர்ந்துச்சு. நான் நாடகம், கவிதை, கதையெல்லாம் எழுதியிருக்கிறேன். பாரதியார் மேல கூட கவிதைகள் பாடியிருக்கேன். இப்போ எனக்கு 92 வயசாகுது. கல்கியில அந்தக் காலத்துல 'கண்ணா மூச்சி'ங்கற என் கதை பரிசு வாங்கிச்சு. எஸ்.எஸ்.எல்.சி. படிச்சு அரசாங்க வேலைக்குப் போயிட்டேன். பாரதியோட பழகுற சந்தர்ப்பம் கிடைச்சது என் வாழ்க்கையில பெரிய பாக்கியம். யாருக்கு அது கிடைக்கும் ?'' * புதுமைப்பித்தனைத் தெரியுமா? ''அவரு எனக்கு சொந்தக்காரர்தான். பார்த்ததில்லையே தவிர கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் கதைகளைப் படிச்சிருக்கிறேன். புதுமைப்பித்தனை விருத்தாசலம்னு சொன்னாத்தான் இங்க பலருக்கும் தெரியும். அவுங்க அப்பா பெரிய ஆராய்ச்சியாளர். புஸ்தகமெல்லாம் எழுதியிருக்கிறாரு.'' * இப்போ பாரதியைப் பற்றி என்ன நினைக்கிறீங்க? ''அவர் ஒரு சூப்பர்மேன். அவர்கூட கொஞ்ச காலம் பழகினதுக்கு எனக்கே இந்த மரியாதை கிடைக்குதுன்னா பாத்துக்கோங்க. எல்லாம் தெய்வ சித்தம்.'' சந்திப்பு : ஹரிகிருஷ்ணா நன்றி: இணையத் தமிழ் தொகுப்பு
No comments:
Post a Comment