பாரதியாரின் கடைசி நாள்
1921 செப்டம்பர் 11ம் தேதி இரவு பாரதி வீட்டில் கவலையுடன் விழித்திருந்த நண்பர்களில் ஒருவரான நீலகண்ட பிரம்மச்சாரி கூறுகிறார்...""அன்றிரவு பாரதி தமது நண்பர்களிடம், "அமானுல்லாகானைப் பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபீஸўக்கு எடுத்துக் கொண்டு போகவேண்டும்' என்று சொல்லிக் கொண்டிருந்தார். அமானுல்லா கான் அப்பொழுது ஆப்கானிஸ்தானத்து மன்னனாக இருந்தவர். 1914 ■ 18 முதல் மகாயுத்தத்தில் ஜெர்மானியருக்கு சாதகமாக இருந்தார் என்று சண்டையில் வெற்றி பெற்ற பிரிட்டிஷார் அவர் மீது கறுவிக் கொண்டிருந்தனர்.முன்னிரவில் பெரும் பாகம் மயக்கத்தில் இருந்த பாரதி, இறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னால் சொன்ன இந்த வார்த்தைகளே அவர் பேசிய கடைசி வார்த்தைகளாகும்'' என்கிறார் நீலகண்ட பிரம்மச்சாரி.இன்னொரு நண்பரான பரலி சு. நெல்லையப்பர் கூறுகிறார்...பாரதியார் பாயும் படுக்கையுமா யிருந்த செய்த சிந்தாத்திரிப் பேட்டையிலிருந்த எனக்குக் கடைசி நாளில்தான் தெரிய வந்தது. நான், லக்ஷ்மண ஐயர் என்ற எனது நண்பர் ஒருவருடன் அவரைப் பார்க்கச் சென்றேன். பாரதியார் நிலை கவலைக்கிடமாய் இருந்தது. அவர் மயக்க நிலையில் கிடந்தார். திருவல்லிக்கேணி மாட வீதியில் குடியிருந்த டாக்டர் ஜானகிராம் என்கிற வைத்தியரை அழைத்துக் கொண்டு வந்து காட்டினோம்.அவர் பாரதியார் உடம்பைப் பரிசோதனை செய்து ஏதோ மருந்து கொடுக்க விரும்பினார். ஆனால், பாரதியார் மருந்தை அருந்தப் பிடிவாதமாக மறுத்துவிட்டார். டாக்டர் அவரிடம் பேசி மருந்தை அருந்தும்படி வாதாடியபொழுது பாரதியார், "எனக்கு எந்த மருந்தும் வேண்டாம்" என்று கண்டிப்பாகக் கோபமாகச் சொல்லிவிட்டார்.எனவே, வைத்தியர் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டார். பாரதியார இரவெல்லாம் மயக்க நிலையிலேயே இருந்தார்.பாரதியார் நிலையை அறிந்த நானும் நண்பர் லக்ஷ்மண ஐயரும் அவ்விடத்திலேயே இரவில் தங்கி வந்தோம். எங்களுக்குத் தூக்கம் வரவில்லை. அடிக்கடி, எழுந்து, எமனுடன் போராடிக்கொண்டிருந்த பாரதியாரைக் கவனித்துக் கொண்டிருந்தோம்.பின்னிரவில் சுமார் இரண்டு மணிக்கு பாரதியாரின் மூச்சு அடங்கியது. உலகத்தாருக்கு "அமரத்துவம்" உபதேசம் செய்த பாரதியார் மரணம் அடைந்தார்."கரவினில் வந்து உயிர்க்குலத்தினை அழிக்கும்காலன் நடுநடுங்க விழித்தோம்"என்றும்,"காலா என் கண்முன்னே வாடா ■ உன்னைக்காலால் உதைக்கிறேன்"என்றும் பாடிய பாரதியார் காலனுக்கு இரையானார்.பாரதியாரின் மரணச் செய்தியைப் பொழுது விடிந்தவுடன் நகரத்திலுள்ள நண்பர்களுக்குச் சொல்லி யனுப்பினோம். எங்களுக்கு நண்பர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் அப்பொழுது மிகச் சிலரே. அப்பொழுது மண்ணடி ராமசாமி தெருவில் குடியிருந்த வக்கீல் சா. துரைசாமி ஐயர், இந்தி பிரசார் ஹரிஹர சர்மா, மாஜி மேயர் சக்கரை செட்டியார், அப்பொழுது புரசைவாக்கத்தில் ஒரு பங்களாவில் குடியிருந்த எதிராஜ் சுரேந்திரநாத் ஆர்யா ■ நால்வரும் குறிப்பிடத்தக்கவர்கள்.பாரதியாரின் குடும்பத்திற்கு எப்பொழுதும் ஆதரவு புரிந்து வந்த வக்கீல் துரைசாமி ஐயரே பாரதியாரின் கடைசி நாள் கிரியைக்கும் உதவி புரிந்தார்.பாரதியார் உடலை மறுநாட் காலை எட்டு மணிக்குத் திருவல்லிக்கேணி மயானத்திற்கு தூக்கிக்கொண்டு போனோம். நானும் லக்ஷ்மண ஐயரும், குவளைக் கிருஷ்ணமாச்சாரியார், ஹரஹர சர்மா, ஆர்யா முதலியவர்கள் பாரதியார் பொன்னுடலை இறுதியாகத் தூக்கிச் செல்லும் பாக்கியம் பெற்றோம். பாரதியார் உடலம் மிகச் சிறியது. அன்று தீக்கிரையான அவர் உடலம் சுமார் அறுபது பவுண்டு நிறை இருக்கலாம்.இன்று உலகம் போற்றும் கவிச் சக்கரவர்த்தியுடன் அன்று கடைசி நாளான திருவல்லிக்கேணி மயானத்திற்குச் சென்றவர்கள் சுமார் இருபது பேர் இருக்கலாம்.பிராமணர்களுக்குகென்று குறிக்கப்பட்டிருந்த பகுதியில் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.பாரதியார் பொன்னுடலை அக்னி தேவனிடம் ஒப்புவிக்கு முன்னர் நண்பர் சுரேந்திரநாத் ஆர்யா சிறியதோர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.■இவ்வாறு நெல்லையப்பர் பாரதியின் கடைசி நாளை உருக்கமாக விவரித்துள்ளார்.பாரதிக்கு பிள்ளை இல்லாததால் யார் அவருக்கு கொள்ளியிடுவது என்று பேச்சு வந்தபோது யாரோ, நீலகண்ட பிரம்மச்சாரி கொள்ளியிடலாம் என்று சொன்னார்கள். உடனே அவர், ""என்ன, நானா? இந்தச் சடங்குகளில் எல்லாம் துளி கூட நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராகவே இருந்தாலும் நான் இந்த சடங்குகளை செய்ய மாட்டேன். அப்படியிருக்க பாரதிக்காக நான் செய்வேன் என்று எப்படி நினைத்தீர்கள்'' என்று மறுத்துவிட்டார். முடிவில், பாரதியின் தூரத்து உறவினரான வி. ஹரிஹர சர்மாதான் கர்மங்களை செய்தார். தென் தமிழ்நாட்டில் சித்திரபானு கார்த்திகை 27, மூல நட்சத்திரத்தில் (1882 டிசம்பர் 11) தோன்றிய அந்த சித்த புருஷர், சென்னை திருவல்லிக்கேணியில் துன்மதி வருஷம் ஆவணி மாதம் 27ம் தேதி (1921 செப்டம்பர் 12) ஞாயிறன்று, அதிகாலை 1.30 மணிக்கு பூத உடல் நீங்கி புகழ் உடல் எய்தினார். அப்போது அவருக்கு வயது 39 கூட நிரம்பவில்லை. சரியாக 38 வயதும் 9 மாதங்களுமே ஆகியிருந்தன.
No comments:
Post a Comment