இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Friday, 4 May 2007

ஆங்கிலத்தில் பாரதியின் எழுத்துக்கள்

ஆங்கில மொழியில் பாரதி மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தார். அவர், தமது சுயசரிதையில் ஆங்கிலக் கல்வியை இகழுகிறார். தமிழுக்குப் பதிலாக ஆங்கிலம் கற்பதையே கண்டித்திருக்கிறாரே தவிர, ஆங்கிலத்துக்கு எதிரான எண்ணம் அவரிடம் இருக்கவில்லை. உண்மையில் ஆங்கில இலக்கியத்தை அவர் பெரிதும் நேசித்தார். ஷெல்லி, விக்டர் ஹ்யூகோ ஆகியோரின் அழகிய ஆங்கில, பிரஞ்சு மூல நூல்களையும் காய்தேயின் ஆங்கில மொழியெர்ப்பு நூல்களையும் தாம் படித்து ரசித்திருப்பதாக பாரதியே ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆங்கிலக் கவிஞர்களின் உயர் கற்பனைப் பாடல்கள். அவருக்கு மிகவும் பிடித்தமானவை. தமிழ் நாட்டின் ஷெல்லி என்று தம்மைக் கருத வேண்டும் என்பது, பாரதியின் தலையாய விருப்பம். பாரதியன் தம்பி சி. விசுவநாதன் எழுதுகிறார்:"பாரதி, ஷெல்லியன் கில்டு என்ற சங்கம் ஒன்றை அமைத்து, புகழ்பெற்ற அந்த ஆங்கிலக் கவியின் பாடல்களை, உறுப்பினர்களுக்கு விளக்கிக் கூறினார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்."ஆங்கில சஞ்சிகைகளான நியூ இந்தியா, காமல் வீல் ஆர்யா போன்றவற்றுக்கு அவ்வப்போது பாரதி கட்டுரைகள் எழுதி வந்தார். ஆங்கிலக் கட்டுரைகளிலும், பாரதியின் தனித்திறனும், உயிரோட்ட நடையும் காணப்படுகின்றன. தாம் எண்ணியவற்றை பாரதி எழுத்தில் வடித்தார். பாரதியின் ஆங்கில எழுத்துக்கள், "எஸ்·ஸஸ் அண்ட் அதர் புரோஸ் ஃபிராக்மண்ட்ஸ்," "அக்னி அண்ட் அதர் பொயம்ஸ் அண்ட் டிரான்ஸ்லேஷன்ஸ்" என்ற இரண்டு சிறு நூல்களாக வெளி வந்திருக்கினறன. "ரசத்வனி" தத்துவம் முதல் "சாதி எனும் குற்றம்" வரை பல விஷயங்கள் பற்றி பாரதி எழுதியிருக்கிறார். "பெண்களின் நிலை" என்பதை விவரிக்கையில் பின்வரும் உத்வேகத்தில் பாரதி எழுதுகிறார்:"தேசங்கள் என்பவை, குடும்பங்களால் ஆனவை. உங்கள் வீட்டில், நீதியையும் சமத்தவத்தையும் நீங்கள் முழு அளவில் அனுசரிக்காவிடில், பொது வாழ்வில் அவை அனுசரிக்கப்பட வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்க முடியாது. குடும் வாழ்க்கை தான் பொது வாழ்வுக்கு அடிப்படையாகும். வீட்டில் அயோக்கியனாக நடந்துகொள்ளும் ஒருவன் சட்டசபைகளிலோ, நீதி மன்றங்களிலோ சேர்ந்தவுடனே ஞானியாகிவிட முடியாது."அவருடைய எழுத்துக்களில் ஒளிவு மறைவு ஏதும் கிடையாது. அவரது சொற்கள், உள்ளத்தின்று உயிப்பவை, ஆதலால் அவை நேரடியாகப் பாய்பவை."பேச்சுரிமை என்பது, நல்லறிவு படைத்த அரசின் உண்மைத் தோழன் மாதிரி. மனிதர்களின் குரல்களை ஒடுக்கும்போது அவர்களின் உள்ளங்களிலே கசப்பை ஏற்படுத்தி, அவற்றைக் கடினமாக்குகிறோம். மனமே உலகம். எண்ணங்களே பொருள்கள்.""விவேகமுள்ள அரசன் ஒருவன், பத்து லட்சம் மூடர்களின் கண் முடித்தனமான விசுவாசத்தைவிட நூறு சிந்தனையாளர்களின் மரியாதையைப் பெரிதாக மதிக்க வேண்டும் என்று, பழைய இந்திய எழுத்தாளர் ஒருவர் கூறுகிறார். எந்த அரசையும் மதிப்பதற்கு முதல் நிபந்தனை, எல்லா விஷயங்களிலும், எல்லாக் கட்சிகளுக்கும் பேச்சுரிமையை அனுமதிப்பதாகும்."ஒரு சில ஆங்கிலக் கவிதைகளையே பாரதி புனைந்தார். ஆயினும் அவை, ஆங்கிலத்தில்அவருக்கிருந்த புலமையைக் காட்டுகின்றன. எடுத்ததற்கெல்லாம் நவீன மோகம் கொள்வதை அவை வெறுக்கின்றன. வசன கவிதைகள் அன்னியில் ஆங்கிலப் பாட்டுக்களையும் "இன் ஈச் அதர்ஸ் ஆர்ம்ஸ்" என்ற பாட்டைப் போல வேகமான நடையில் எழுதியிருக்கிறார்.
நன்றி: சுப்பிரமணிய பாரதி -SIFY TAMIL

No comments: