இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Friday, 4 May 2007

பாரதி சொல்

சொல்? மொழி என்னும் வெளியீட்டுக் கருவியின் உறுப்பா? ஆம். அர்த்தத்தைச் சுமந்து திரியும் வாகனமா? ஆம். பேச்சிலும் எழுத்திலும் புழங்கி அங்கங்கே தேய்வு கண்டு, நிறம் கலைந்து சிறு சிறு ஊனங்களுடன் கடமை செய்து கொண்டிருப்பதா? ஆம். பெயர், வினை, இடை, உரி தலைப்புக்களில் இலக்கண அறைகளில், அகராதிகளில் அடைபட்டிருப்பதா? ஆம்.
நான் சொல்ல வருவது இந்தச் சொல்லை அல்ல; இதன் மொழியை அல்ல. இது வேறு சொல் கவிதை மொழியின் சொல். வழக்கமான மொழியிலிருந்து கவிஞன் பிரித்தெடுத்துப் புத்துருவாக்கம் செய்து கொண்ட சொல். ஓவியம் சிற்பம் போன்ற மெளனக் கலைகளிலும், இசைக் கலையிலும் வெளிப்படும் அளவுக்குக் கலைஞனின் உணர்வு, கவிதையில் மொழி ஊடகத்தின் வழியே வெளிப்படுவதில்லை. கவிஞனுடைய மிகப் பெரும் ஆதங்கம் இது. ஆனால் வேறு வழியில்லை. மொழியிலிருந்து ஒரு கவிதை மொழியை அவன் உருவாக்கிக் கொள்கிறான். சொல்லை ரசாயனம் செய்து கவிதைச் சொல்லை உருவாக்கிக் கொள்கிறான்.
சொல்லில் சொல்-பொருள் எனப் பிரித்துப் பார்க்க முடியும். கவிதையின் சொல்லில் இந்தப் பிரிவினை சாத்தியமில்லை. ஏனெனில் சொல்லின் அகராதிப் பொருளைத் தாண்டிய அம்சங்களைக் கவிதைச் சொல் தாங்கி நிற்கிறது. அத்துடன் அது என்னிடம் உன்னிடம் அவனிடம் அவளிடம் வேறுவேறு அர்த்தங்களை, படிமங்களை, உணர்வுகளை உருவாக்கக்கூடும். நேற்றிலிருந்து இன்றைக்கு வரும்போது அதன் அர்த்தம், பாவம் மாறிக் காணக்கூடும். ஆக, மொழியினுடைய வேறொரு வடிவம்தான் கவிதை மொழி. கவிதைக்கென சொல் பிடிபடுவது பெரிய தவிப்பு.
''சாமீ இவள் அழுகை எற்றே தமிழில் இசைத்திடுவேன்?'' ''விழியில் மிதந்த கவிதையெலாம் சொல்லில் அகப்படுமா?'' ''வண்டுரைக்க மாட்டாத விந்தையடா''
வழக்கமான அர்த்தங்களிலிருந்து சொல்லை விலக்கி, அதன் சூழலிலிருந்து விலக்கிக் கொண்டு வரும்போது, சொல் கவிஞனின் நுட்ப உணர்வுகளைத் தாங்கிக் கொள்கிறது; வேறு சொல்லாகிறது. புழக்கத்திலிருக்கும் அற்ப வார்த்தை, கவிதை வரிகளில், கவிதையின் சுற்றுச்சூழலில் அற்புதம் என நிற்கிறது. பாரதியின் ''சொல் புதிது'' எனப் பாராட்டப்பட இதுவே காரணம். அவர் கவிதைகளில் எந்தச் சொல் புதிது? எல்லாம் வழக்கிலிருக்கும் எளிய சொற்கள்தானே! புதிது என்றால் வெளியே தெரியும் தோற்றத்திலிருந்து அதன் உள்ளமைப்பு வேறுபட்டுவிட்டது என்பது பொருள்.
''மின்னல் சுவைதான் மெலிதாய் மிக இனிதாய்வந்து பரவுதல் போல்''
''நெருப்புச் சுவை குரலில்''''பொன்போல் குரலும் புதுமின் போல் வார்த்தைகளும்''''நெஞ்சில் கனல்மணக்கும் பூக்கள்''''தீக்குள் விரலை வைத்தால்- நந்தலாலா- நின்னைத்தீண்டும் இன்பம் தோன்றுதடா''
இங்கெல்லாம் நெருப்பு, மின்னல், கனல் இவற்றுக்கு வழக்கமான பொருள்தானா? கனல்-மணம் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சொற்கள். கவிதையில் இவை அருகருகே நிறுத்தப்படும்போது வேறு பிறவி எடுத்துக் கொள்கின்றன. இவை நிற்கும் இடத்தில் கவிதையின் தளம் சட்டென உயர்ந்து விடுகிறது. அர்த்தம் என்பது தேவையில்லையாகிறது. கனலின் மணம் அனுபவத்தைச் சூழ்கிறது.
'மாயை'யைப் பொய் என வெறுக்கும் பாரதி, ''நீ... ஆச்சரிய மாயையடி'' என்பதில் அர்த்தம் என்ன வரும்? இங்கே மாயை என்னும் சொல், அர்த்தத்தைக் களைந்துவிட்டு, வேறு எவ்விதமாகவும் விளக்க முடியாத ஓர் எக்களிப்பை உணர்த்த வருகிறது.
''தீ எரிக / அறந்தீ அறிவுத்தீ உயிர்த்தீ விரதத்தீ வேள்வித்தீ சினத்தீ பகைமைத்தீ கொடுமைத்தீ இவையனைத்தையும் தொழுகின்றோம்'' -
எளிய சொல், எளிய வெளிப்பாடு. ஆனால் உணர்த்தப்படுவது எளியது அன்று. தர்க்கத்தின் அதிகாரத்திலிருந்து விடுபட்டு நிற்கிறது கவிதை. கண்ணதாசன் பாரதியை ''தீயரு பக்கமும் தேனொரு பக்கமும் தீட்டிக் கொடுத்து விட்டான்'' என்று பாராட்டினார். உண்மையில் பாரதிக்குத் தீ வேறு தேன் வேறு அல்ல.
''பாம்புப் பிடாரன் குழலூதுகின்றான். இ·தோர் பண்டிதன் தர்க்கிப்பது போலிருக்கிறது. ஒரு நாவலன் பொருள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை அடுக்கிக் கொண்டு போவது போலிருக்கிறது. இந்தப் பிடாரன் என்ன வாதாடுகிறான்?... பல வகைகளில் மாற்றி மாற்றிச் சுருள் சுருளாக வாசித்துக் கொண்டே போகிறான் - இது என்னவித உவமை? இந்த உவமை அர்த்தத் தெளிவை நோக்கியதன்று. குழலூதுவது தர்க்கம் செய்வது போலிருப்பதாக பாரதிக்கு அனுபவப்படுகிறது. சங்கீதம் சுருள் சுருளாகக் குழலிலிருந்து வெளியேறுவது ஒளி படைத்த கண்ணுக்குத் தெரிகிறது. அவரவர் அனுபவப் பாங்குக்கேற்ப அவரவர்க்குள் இந்தக் கவிதை, இயக்கம் கொள்ளும்.
அஸ்தமன அடிவானில் கணத்துக்குக் கணம் வேறு படம், வண்ண ஒளி, விசித்திரங்கள் அவற்றை நெடுக வர்ணித்தும் திருப்தியடையாத பாரதி, ''உமை கவிதை செய்கின்றான்'' என்று முடிக்கிறார். இங்கே சொல்லப்பட்ட சொற்களிலா கவிதை அடங்குகிறது?
நாம் படித்த தமிழ்க் காவியங்களைத்தான் பாரதியும் படித்திருக்கிறார். அவருக்கு அவை தந்த அனுபவம் :
''கள்ளையும் தீயையும் சேர்த்து- நல்லகாற்றையும் வான வெளியையும் சேர்த்துத்தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பலதீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்''
காவியத்தின் சேர்மானமாக இவற்றை யாராவது சொல்லியிருக்கிறார்களா? இளங்கோவிடமும் கம்பனிடமும் தீயை, காற்றை, வானவெளியைத் தேடி எடுக்கும் ரசனையை இந்தக் கவிதை நமக்குக் கற்பிக்கிறது. இது மிக நவீனமான கவித்துவ அனுபவம்.
இந்தக் கவிதைகளிலிருந்தெல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, கவிதையில், சொல் என்பது சொல்லன்று; சொல்லிக் கொடுத்ததை ஒப்பிக்கும் கிளியன்று; தனது அர்த்தத்தைக் கொடுப்பதன்று. கவிஞனின் வரம்பற்ற உணர்வு ஆழத்திலிருந்து எட்டியவரை எடுத்து, நாம் வாங்கிக் கொள்ளும் தகுதியின் அளவுக்கு நமக்குக் கொடுக்கும் பாத்திரம் அது.
பாரதி எட்டிப்பிடிக்க விரும்பும் லட்சியச் சொல் ஒன்று உண்டு. அதுதான் 'மந்திரம் போல் சொல்'. 'நெருப்பு' என்றால் வாய் வெந்து போக வேண்டும் என்பார் லா.ச.ரா. அதுதான் மந்திரச் சொல். எந்தச் சொல் தன் அர்த்த விசிறல்களை ஒருமுனைப்படுத்தி ஒரு புள்ளியில் குவித்துப் புகை எழுப்புகிறதோ, எந்தச் சொல் சொல்லுக்கும் செயலுக்கும் இடையேயுள்ள இடைவெளியைக் குறைத்து, செயலுக்குள்ளே நுழைந்து கலந்துவிட முந்துகிறதோ அதுதான் மந்திரச் சொல். சொல்லிய மாத்திரத்திலேயே சொல் மறைந்து அதன் செயல், விளைவு நம்மை ஆக்கிரமிக்கும்.
''ஐந்துறு பூதம் சிந்திப் போய் ஒன்றாகப் - பின்னர் அதுவும் சக்திக்கனியில் மூழ்கிப் போக''
''பாழாம்வெளியும் பதறிப் போய் மெய்குலையச் சலனம் பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய - அங்கே
''ஊழாம் பேய்தான் ஓஹோஹோவென்றலைய-வெறித் துறுமித்திரிவாய், செருவெங் கூத்தே புரிவாய்''''காலத்தொடு நிர்மூலம்படு மூவுலகும் - அங்கே கடவுள் மோனத்தொளியே தனியாயிலகும்''''ஓமென் றுரைத்தனர் தேவர்- ஓம் ஓமென்று சொல்லி உறுமிற்றுவானம்பூமி அதிர்ச்சியுண்டாச்சு- விண்ணைப் பூழிப் படுத்தியதாஞ் சுழற்காற்று''
பாழாம் வெளி பதறுவதையும், மெய் குலைவதையும், காலம் நிர்மூலமாவதையும் நம் வாழ்வில் நாம் அனுபவம் கொண்டதில்லை. ஆயினும் இந்தச் சொற்களின் தீவிரமும் வேகமும் வாசகன் மனத்தில், முன்னுதாரணமில்லாத ஒரு உக்கிர நிகழ்வை அனுபவப்படுத்துகின்றன என்பதை உணர முடியும்.
'மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்' என்று ஆசைப்படும் பாரதியின் கவிதைகளில் இந்த மந்திரச் சொல்லின் உயிர்ப்பு மிகச் சில இடங்களில்தான் தெரிகிறது. இந்த லட்சியத்தைத் தன் கவிதைப் பரம்பரைக்கு விட்டுப் போனார் என்று சொல்லலாம்.
II
பாரதி, மொழியை ஆயுதமாகப் பயன்படுத்திய கலகக்காரர். மரபுவழி மதிப்பீடுகளிலும் கருத்துக்களிலும் ஒவ்வாதவற்றை ஆவேசமாக எதிர்த்து மோதி மிதித்து விடத் துணிகிறவர். ஆகவே அவருடைய சொல் வெடிப்புறப் பேசும் சொல்லாக, வெப்பம் குறையாததாகயிருக்கிறது. கவிதைச் சொல்லில் உரத்த குரலும் அழுத்தங்களும் அடிக்கோடுகளுமிருப்பது பாரதி காலத்தில் குறைபாடுகள் அல்ல.
படிப்பறிவு அதிகமில்லாத சாதாரண மக்களையும் தம் கவிதை ஊடுருவ வேண்டும் எனும் அவரது நோக்கம் காரணமாக அவருடைய சொல் எளிமையானதாகவும் இருக்கிறது. பாரதியின் வாழ்வு முழுவதுமே ஓர் எதிர்க்கவிதைதான்.
பழைய ஆத்திச்சூடியின் சில சாத்வீக அறவுரைகளை பாரதியின் புதிய ஆத்திச்சூடி இடித்துத் தள்ளுகிறது. ''போர்த் தொழில் பழகு'' ''முனைமுகத்துரில்'', ''வெடிப்புறப்பேசு'', ''தையலை உயர்வு செய்'' - போன்றவை அவை.
''செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பர்பித்த மனிதர் அவர் சொல்லும் சாத்திரம் பேயுரையாமென்றிங் கூதேடா சங்கம்இத்தரை மீதினில் இந்த நாளினில் இப்பொழுதே முக்தி சேர்ந்திட நாடி''
''கற்பு நிலையென்று சொல்ல வந்தார் இரு கட்சிக்கும் அ·து பொதுவில் வைப்போம்''நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்''''கூளத்தை மலத்தினையும் வணங்க வேண்டும்....''பெண்டிரென்றும் குழந்தையென்றும் நிற்பனவும் தெய்வமன்றோ''''தனியருவனுக் குணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்''''தேடு கல்வியிலாததோர் ஊரைத் தீயினுக்கிரையாக மடுத்தல்''
கவிதைக்குள் தரித்திராமல் தெருவில் இறங்கிக் கலகத்தில் கலந்து கொள்ளத் துடிப்பவை பாரதியின் சொற்கள். அரசியல் மட்டுமின்றி ஆன்மீகம், வேதம், சமூக மரபுகள், ஒடுக்குமுறைகள், கலையிலக்கியக் கோட்பாடுகள் போன்ற எல்லாமே இந்தச் சொல்லடிக்கு இலக்காகின்றன. எதிர்ப்புணர்வே பாரதியின் கவிதைகளை வழி நடத்துகிறது.
கவிதையில் சொல்லுக்கு, வழக்கமான பொருளில்லை என்பதோடு, சிலசமயம் கவிஞனை முன்னுக்குப் பின் முரணானவன் என்று காட்டும் அதிர்ச்சியியல்பும் உண்டு. பாரதியிடம் இத்தகைய முரண்கள் உண்டு. முரண்படுவது என்பது தவறான நடவடிக்கை எனும் பொது நியதியைக் கவிதையின் மீது பாய்ச்சி, முரண்பாட்டுக்காகக் கண்டனம் செய்வதோ, அல்லது ஏதேதோ விளக்கங்கள் சொல்லி 'முரண்பாடில்லை' என்று கவிஞனைப் பாதுகாக்க முயல்வதோ வாசக, விமர்சன வழக்கமாக இருந்து வருகிறது. இது தேவையற்றது.
கருத்துக்களுக்குள் எச்சரிக்கையோடு புழங்கும் தத்துவ ஞானிகள் முடிச்சுகளை அகற்றி, மிகுந்த முயற்சிக்குப் பின், இழையின் இரு முனைகளையும் இணைத்துத் தர்க்கம், பகுத்தறிவு, முழுமை என்று தமக்கும் பிறர்க்கும் திருப்தி தேடுவார்கள்.
கவிஞனோ முன்பின் அற்றவன்; அந்தந்தக் கணத்தை அந்தந்தக் கணத்தில் வாழ்ந்து மடிபவன். ஒரு பிறவியில் அவனுக்கு ஆயிரக்கணக்கான பிறவிகள் உண்டு. ஒரு பிறவிக்கும் மற்றொரு பிறவிக்குமிடையே சில சிந்தனைகளில் முரண் தோன்றக்கூடும். இரண்டுமே அந்தந்தக் கணத்தின் உண்மைகள். பிரக்ஞையின் ஆழத்திற்கேற்ப உண்மை, வேறு வேறு தோற்றம் தருகிறது. வெவ்வேறு தளங்களில் தெரியும் முரண்படு தோற்றங்களைச் செயற்கையாக ஒன்றுபடுத்த முயலாமல், அப்படியே கவிதையில் பதிவு செய்கிற அக நேர்மையாளனை நாம் குற்றவாளியாக்கி விடக்கூடாது. கவிஞனின் இலக்கணம் தனக்குத்தான் முரண்படாதிருப்பதன்று; தனக்குத்தான் உண்மையாகயிருப்பது.
''கடமை புரிவார் இன்புறுவார் என்னும் பண்பைக் கதைபேணோம்கடமை அறியோம் தொழிலறியோம் கட்டென்பதனை வெட்டென்போம்மடமை சிறுமை துன்பம் பொய் வருத்தம் நோவு மற்றிவைபோல்கடமை நினைவும் தொலைத்திங்கு களியுங் றென்றும் வாழ்குவமே''
பெரும்பாலும் செவியதிரக் குரல் கொடுக்கும் பாரதி இங்கு ஏதோ சைகை செய்வது போல் தோன்றுகிறது. ''நமக்குத் தொழில் கவிதை. நாட்டிற்குழைத்தல் இமைப்பொழுதும் சோராதிருத்தல்'' என்று பிரகடனம் செய்தவர். ''கடமை அறியோம் தொழிலறியோம்'' என்று ஒதுங்குகிறார். வசனத்தில்
''மனிதன் வேலை செய்யப் பிறந்தான். சும்மா இருப்பது சுகம்என்றிருப்பது தவறு... ஒவ்வொரு மனிதனும் உழைப்பதற்காகவேபிறந்திருக்கிறான். காரியம் செய்யாதவனைக் காண்பதும் தீது''
என்று அழுத்தமாகப் பேசியிருக்கிறார்.
''வாழ்வு முற்றிலும் கனவு''
''கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவினும் கனவாகும்'' என்று விரக்தி கொள்ளும் பாரதி, 'உலகமே பொய் என்று சந்நியாசிகள் சொல்லிக் கொண்டிருக்கட்டும். குடும்பத்திலிருப்போர் உச்சரிக்கலாமா? அவச்சொல்லன்றோ? நிற்பது நடப்பது பறப்பது - கனவா தோற்றமா மாயையா? வானம் வெயில் மரச்செறிவு - வெறும் காட்சிப் பிழையா? நானுமோர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?'' வாழ்வு கனவு எனக் கண்டதும், வாழ்வு கனவன்று எனக் கண்டதும் வேறுவேறு மன எழுச்சிகள்.
''யார்க்கும் அன்பனாய், யார்க்கும் இனியனாய் வாழ்ந்திட விரும்பினேன்'' என்னும் கவிஞர், ''கொடுமையை எதிர்த்து நில்'', ''சீறுவோர்ச் சீறு'', ''உலுத்தரை இகழ்'' என்றும் சொல்கிறார். ''சினம் கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச் செத்திடுவார் ஒப்பாவார்'' எனத் தணிப்பவரும் ''ரெளத்திரம் பழகு'' என்று முடுக்குபவரும் ஒருவரே.
பார்வைக்கு முரண்போலத் தோன்றுகின்ற, ஆனால் தத்துவத் தளத்தில் முரண் என்று ஆகாதவற்றை வசன கவிதைகளில் நிறையக் காணலாம்.
''இளமை இனிது. முதுமை நன்று- உயிர் நன்று. சாதல் இனிது....இன்பம் துன்பம் பாட்டு.. புலவன் மூடன் - இவை ஒரு பொருள்''...
''காத்தல் இனிது. காக்கப்படுதலும் இனிதுஅழித்தல் நன்று. அழிக்கப்படுவதும் நன்றுஉண்பது நன்று. உண்ணப்படுதலும் நன்று''
''உணர்வே நீ வாழ்க.. உள்ளதும் இல்லாததும் நீ. அறிவதும் அறியாததும் நீ. நன்றும் தீதும் நீ''
IV
கவிதையின் மூலம் எது? எவ்வாறு பிறப்பெடுக்கிறது? - உலக முழுவதிலும் நிறையக் கவிஞர்களின் வாக்குமூலங்கள் பதிவாகியுள்ளன; ஆய்வுகள் பெருகியுள்ளன. பாரதியின் வாக்குமூலமும், கவிதைகளாகிய சாட்சிகளும் மிகத் தெளிவானவை. பாரதியைத் தீர்மானித்தது காலம்; அதற்கு இசைவு கொடுத்தது அநீதிகளுக்கெதிரான அவரது போர்க்குணம்; அவரது கவித்துவம் முற்றிலும் புதிய தடங்களை உருவாக்கிக் கொண்டதன் காரணம், அவர் புலவராக ஒதுங்கி வாழாமல் சாதாரண மக்களோடு நெருங்கி வாழக் கிடைத்த பத்திரிகைத் துறைத் தொடர்பு, விடுதலை இயக்கம், இயல்பாகவே கருத்துப் பரப்பலில் அவருக்கிருந்த ஆர்வம், பிற மொழி, இலக்கிய அறிவு போன்றவை. பாரதியின் பெரும்பாலான கவிதைகள் தெளிவாக உருவாகிவிட்ட கருத்துக்கள் கவித்துவக் கிளர்ச்சியின் வழியே வெளிவந்தவைதாம். சில கவிதைகள் முன்தீர்மானமற்று நிகழ்ச்சி தந்த உந்துதலால் கருத்தும் உணர்ச்சியும் ஒட்டிக்கொண்டே பிறந்தவை. மிகச் சில கவிதைகள் கருத்துரு என்று எதுவும் தெளிவாகயில்லாமலே, தீவிரத்தன்மை வாய்ந்த உணர்வுக் கொதிநிலைகளில் கவிஞனின் பிரக்ஞைப்பூர்வமான முயற்சியை அதிகம் வேண்டாமல் தாமே பிறந்து கொண்டவை.
தனது கவிதை மொழியைக் கண்டறிவது ஒன்றே கவித்துவ வாழ்வாக அமைகிறது கவிஞனுக்கு. எழுதி எழுதித்தான் அவன் தன் சொல்லைச் செதுக்கிக் கொள்கிறான். பின்வரும் சந்ததிகளுக்கு மேலும் தீட்டிக் கொள்ளக் கொடுத்துப் போகிறான். இன்று பாரதியின் சொல் என்னவாகயிருக்கிறது? பாரதிதாசனைத் தாண்டி வந்த பின் அது எங்கே போயிற்று?
''பாரதிக்குப் பின் பிறந்தார் பாடை கட்டி வச்சிவிட்டார்ஆரதட்டிச் சொல்வார் அவரிஷ்டம் நாரதனே'' என்று
புதுமைப்பித்தன் மிகைப்படுத்திச் சொல்கிறார். பாரதிக்குப் பின் அந்த அளவு வேகம், வெறி, தீவிரம் கொண்ட கவிதை இயக்கம் எதுவும் தோன்றவில்லைதான். ஆனால் குரல் உயர்த்தாத, படபடக்காத, வெளித் தெரியாத வீர்யம் கொண்ட கவிதைகள், விமர்சனமும் அங்கதமுமாய் அமைந்தவை, உள்நுழையும் தேட்டம் கொண்டவை எனப் பலவாறு கவிதைகள் வளர்ச்சி கண்டுள்ளன. எனினும் பாரதிக்குப் பின் அறுபதாண்டு கால வளர்ச்சிக்கு இவைகளைக் கொண்டு கணக்குக் காட்ட முடியாது என்பது உண்மை.
( மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - தமிழியற்புலம் - மகாகவி பாரதியார் கருத்தரங்கம் 1998 மார்ச் 5, 6 )

No comments: