இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Friday, 4 May 2007

பாரதி திருமண வைபவம்

1897ம் வருஷம் ஜ°ன் மாதம் பாரதிக்கும், செல்லம்மாளுக்கும் அதிவிமரிசையாக நாலு நாள் கல்யாணம் நடந்தது.அந்தக் கல்யாண விமரிசையைச் செல்லம்மா பாரதி பின்வருமாறு விவரிக்கிறார். ""கிருஷ்ண சிவன் (பாரதியின் அத்தை கணவர்) அவர்களின் நண்பர்களான ராமநாதபுரம் ராஜாவிடமிருந்தும், சேத்தூர், தலைவன்கோட்டை ஜமீன்தார்களிடமிருந்தும், பட்டும் பட்டாவளியுமாகச் சால்வைகள், மோதிரங்கள், முத்து மாலைகள் முதலிய வெகுமதிகள் ஏராளமாய் வந்தன. தங்க நாதஸ்வர வித்வான் ரத்னசாமியை ராமநாதபுரம் ராஜா அவர்கள் அனுப்பியிருந்தார்கள். அந்தச் சமயம் கியாதியடைந்திருந்த திருநெல்வேலி அம்மணி பரதநாட்டியம். பாரதியாருக்கு பால்ய விவாகத்தில் அவ்வளவாகப் பிரியமில்லாவிடினும், ரசிக்கத் தகுந்த கேளிக்கைகள் மிகுதியாயிருந்தமையால் விவாகத்தில் உற்சாகமாகவே காணப்பட்டார். அப்போது பாரதிக்கு வயது பதினாலரை. செல்லம்மாளுக்கு வயது ஏழு.விவாகமானவுடன் கணவன் மனைவி பேசுவது வழக்கமாக இல்லாத அந்தக் காலத்திலேயே, பாரதி தமது புதிய கருத்துக்களைக் காட்டத் தொடங்கினாராம். எல்லோருக்கும் எதிரில்,""தேடக் கிடையாத சொன்னமே ■உயிர்ச்சித்திரமே! மட அன்னமே!....கட்டியணைத் தொரு முத்தமே ■தந்தால்கை தொழுவேன் உனை நித்தமே''என்று காதல் பாட்டுகள் பாடினாராம்.""நான் நாணத்தால் உடம்பு குன்றி, எல்லாரையும் போல் சாதாரணமான ஒரு கணவன் கிடைக்காமல், நமக்கென்று இப்படி ஓர் அபூர்வமான கணவர் வந்து வாய்க்க வேண்டுமா என்று எண்ணித் துன்புறுவேன். கிராமத்தில் பழகிய, ஒன்றும் தெரியாத ஏழு வயதுச் சிறுமிக்குக் கவிஞர்களின் காதல் ரஸ அனுபவம் எப்படிப் புரியும்?'' என்று செல்லம்மாள் கூறுகிறார். மேலும்,""விவாகத்தின் நாலாம் நாள், ஊர்வலம் முடிந்து, பந்தலில் ஊஞ்சல் நடக்கிறது. ஓர் ஆசுகவி இயற்றினார். அதை இனிய ராகத்தில் பாடி, பொருளும் உரைத்துக் குட்டிப் பிரசங்கம் ஒன்றும் செய்தார். கல்யாண விமரிசையைப் புகழ்ந்து, அதை நடத்தியவர்களின் சலியா உழைப்பையும். என் தகப்பனார் கல்யாணத்திற்குக் கஞ்சத்தனமின்றி மிகத் தாராளமாகச் செலவு செய்ததையும் வியந்து, வித்வான்களின் சங்கீதத் திறமையை மெச்சி இயற்றிய பாடல் அது. அதைக் கேட்டு யாவரும் "பலே பேஷ்!' என்று ஆரவாரித்து, "மாப்பிள்ளை வாய்த்தாலும் செல்லப்பா அய்யருக்கு வாய்த்தது போல் வாய்க்க வேண்டும். மணிப்பயல், சிங்கக்குட்டி!' என்றெல்லாம் அவரவர் போக்கின்படி புகழ்ந்தார்கள். என் தகப்பனார் மாப்பிள்ளையைக் கண்டு உள்ளம் பூரித்து, உடல் பூரித்து மகிழ்ச்சியடைந்தார்.''

No comments: