இவ்விணையத்தின் மூலம் பாரதி125 விழாவினை ஒரு தமிழ் விழாவாக நடத்த வேண்டும் என்று வைத்த வேண்டுகோள் இனிதே வெற்றியடைந்தது. பெரியார் வழி வந்த பகுத்தறிவு பேச்சாளர்களாகிய திரு.பிரபஞ்சனையோ அல்லது திரு.தமிழருவி மணியனையோ அழைக்க வேண்டும் என்று முதலில் வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பட்டாலும், முடிவில் இருவரையும் அழைத்து இரு தனிப்பெறும் விழாக்காளாக நடத்தி, பிரான்ஸ் தமிழர்களுக்கு தமிழின்பால் உள்ள காதலை நிரூபித்தமைக்கு மீண்டும் ஒரு முறை எங்களுடைய நன்றிகள். திரு.பிரபஞ்சன் அவர்களை பிரான்ஸ் அழைக்கும் செலவுகளை தனி ஒரு ஆளாக பொறுப்பேற்றுக்கொண்ட எழுத்தாளர் திரு.நாகரத்தினம் கிருஷ்ணா அவர்கள், பிரான்ஸ் தமிழர்களின் வரலாற்றில் ஒரு தூணாக விளங்குவார் என்பதில் ஐயமில்லை. தனது உடல் நலம் குன்றியிருந்தும் அதனை பொருட்படுத்தாது முதல் பிரான்ஸ் பாரதி125 விழாவினை வெகு விமர்சியாக கொண்டாடிய தமிழ்வாணி இதழாசிரியர்.திரு கோவி.ஜெயராமன் அவர்கள் நம் பாராட்டுக்குறியவர் ஆகிறார். நிதி பற்றாக்குறை அலைகழித்தும் திரு.தமிழருவி மணியனை வரவழைத்து தமிழுக்கு புகழ் சேர்த்த பிரான்ஸ் தமிழ் சங்கத்தாருக்கும், திருவள்ளுவர் கலைக்கூட தலைவர் அவர்களுக்கும் எங்களுடைய உளம் கனிந்த நன்றிகள். தமிழின்பால் கொண்ட காதலினால் சற்று கடுமையாக இவ்விணையத்தில் எழுதியமைக்கு என்னுடைய தாழ்மையான வருத்தங்கள் இதோ. வாழ்க தமிழ்.

Friday 4 May, 2007

அவருக்கும் எனக்கும் நட்பு ஏற்பட்டது - வி.ஓ.சி

சுப்பிரமணிய பாரதி என்னும் பெரியார் திருநெல்வேலி ஜில்லா எட்டயபுரம் சமஸ்தானம் எட்டயபுரத்தில் பிறந்தவர். அவர் தகப்பனார் பெயர் சின்னச்சாமி அய்யர். அவர் எட்டயபுரம் சமஸ்தானத்தில் ஓர் உத்தியோகம் புரிந்து கொண்டிருந்தார். அவர் காலத்தில் என் தகப்பனாரும் அந்த சமஸ்தானத்தின் வக்கீலாயிருந்தனர். என் தகப்பனாருடன் அவர் என் சொந்த ஊராகிய ஒட்டபிடாரத்திற்கு அடிக்கடி வருவதுண்டு. அக்காலத்தில் என் ஊரில் தாலுகாக் கச்சேரியும், தாலுகா மேஜிஸ்டிரேட்டுக் கோர்ட்டும் இருந்தன. அவ்விரண்டில் ஒன்றில் ஏதேனும் ஒரு ஜோலியாக அவர் என் ஊருக்கு வருவர். என்னூருக்கு வந்த காலங்களில் அவர் என் வீட்டிலாவது, என் வீட்டிற்கு மேற்கேயுள்ள பழைய பாஞ்சாலங்குரிச்சித் தானாபதிப் பிள்ளை வீட்டுக் கூடத்தின் மாடியிலாவது தங்குவர். அப்போது எனக்கு வயது 15 அல்லது 16 இருக்கும். அவர் என்னோடும் மற்றையாரோடும் பேசிய மாதிரியிலிருந்து அவர் ஒரு பெரிய மேதாவியென்று நான் நினைத்தேன். அவரிடம் நான் சென்ற சமயங்கள் சிலவற்றில் அவருக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவன் அதிபுத்திசாலியென்றும், அவன் சிறு பிள்ளையாயிருந்தும் தமிழில் சுயமாகப் பாடுவானென்றும் என் தகப்பனார் என்னிடம் சொல்வதுண்டு. அச்சிறு பிள்ளைதான் சுப்பிரமணிய பாரதி என்று இப்போது உலகமெல்லாம் புகழப்பெற்று விளங்கும் பெரியார்.இப்பெரியாரை நான் முதல் முதலாகப் பார்க்கப் பாக்கியம் பெற்றது அவர் சென்னையில் இந்தியா என்னும் பெயர் பெற்ற தமிழ்ப் பத்திரிகையின் ஆசிரியராயிருந்து அதனை நடத்தி வந்த காலத்தில்தான். அது 1906-ம் வருஷ ஆரம்பமாக இருக்கலாமென்று நினைக்கிறேன். அப்போது நான் தூத்துக்குடியிலிருந்து சென்னை சென்றிருந்தேன். திருவல்லிக்கேணியில் சுங்குராம செட்டி தெருவில் என் நண்பன் ஒருவன் வீட்டில் தங்கியிருந்தேன். அங்கிருந்து நான் பட்டணம் போகிற வருகிற வழியில் கண்ட ஒரு பெரிய வீடு இந்தியாவின் அதிபர் திருமலாச்சாரியார் வீடு என்று தெரிந்தேன். ஒரு நாள் மாலை 4 மணிச் சுமாருக்கு நான் இந்தியாவின் அதிபரைப் பார்க்கக் கருதி அவர் வீட்டுள் புகுந்தேன். அங்கிருந்தோர் அவர் மாடியில் இருக்கிறார் என்றனர். நான் மாடிக்குச் சென்றேன். இளவயதுள்ள ஓர் அய்யங்காரைக் கண்டேன். அவர்தான் இந்தியாவின் அதிபர் என்று நினைத்து அவரை உசாவினேன். அவர் ஆம் என்றார். அவரிடம் என் ஊரும் பேரும் சொன்னேன். உடனே அவர் மாடியின் உள்ளரங்கை நோக்கி, ""பாரதி! உங்கள் ஊரார் ஒருவர் வந்திருக்கின்றனர்"" என்று கூறினர். உடனே அங்கிருந்து பாரதியும் வேறொருவரும் வந்தனர். அய்யங்கார் ""இவர்தான் இந்தியாவின் ஆசிரியர் சுப்பிரமணிய பாரதி"" என்றார். அவர் என் ஊரையும் பெயரையும் உசாவினர். ""ஓட்டப்பிடாரம் வக்கீல் உலகநாத பிள்ளை மகன் சிதம்பரம் பிள்ளை"" என்றேன்.""உங்கள் தகப்பனார் என் தகப்பனாரின் அதியந்த நண்பர். அவர்களை எனக்கு நன்றாகத் தெரியும். உங்களைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன்"" என்றார் பாரதியார். நால்வரும் பெரும்பாலும் பாரதியாரும் நானும் சிறிது நேரம் தேச காரியங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அப்பேச்சு அவரைக் கம்பராகவும் என்னைச் சோழனாகவும் நான் நினைக்கும்படி செய்தது. நால்வரும் மாலை 5 மணிக்குத் திருவல்லிக்கேணிக் கடற்கரைக்குச் சென்றோம். அங்கிருந்து வங்காளத்தின் காரியங்களையும் பெபின் சந்திரபாலர் முதலியோரின் பிரசங்கங்களையும் செயல்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். என் உள்ளத்தில் மின்மினிப் பூச்சிபோல் ஒளிர்ந்து கொண்டிருந்த தேசாபிமான நெருப்பு விளக்குப் போல ஒளிவிட்டுப் பிரகாசித்தது. அச்சமயம் கடற்கரை விளக்குகளும் ஒளிவிட்டுப் பிரகாசித்தன. நால்வரும் வீடு திரும்பினோம். பின்னர், நாள்தோறும் நான் இந்தியா அதிபர் வீட்டிற்கும், இந்தியா ஆபீஸ்க்கும், கடற்கரைக்கும் செல்லலானேன் அதிபரும் ஆசிரியரும் நானும் பேசலானோம். ஆசிரியரும் நானும் முறையே கம்பரும் சோழனுமாகி, மாமனாரும் மருமகனும் ஆயினோம்.ஒருநாள் மாலையில் நாங்கள் மூவரும் கடற்கரையில் வங்காளத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த காலையில், அங்குக் காளிதேவிக்கு வெள்ளாடு பலி கொடுப்பதைப் பற்றிப் பாலர் பேசிய பேச்சிற்கு என் மாமனார் ஓர் வியாக்கியானம் செய்தார். அவ்வியாக்கியானத்தைக் கேட்டதும் நான் கொழுத்த தேசாபிமானியாய் விட்டேன். அது முதல் அவர் என் வீட்டிற்கு வரவும், என்னோடு உண்ணவும் உறங்கவும், நான் அவர் வீட்டிற்குப் போகவும், அவரோடு உண்ணவும் உறங்கவும் ஆயிருந்தோம். பிரான்ஸ் தேசத்துச் சரித்திரமும், இத்தாலி தேசத்துச் சரித்திரமும், அவைபோன்ற பிறவும் அவர் சொல்லவும் நான் கேட்கவுமானோம். இத்தாலி தேசாபிமானி மிஸ்டர் மாஸினியின் தேசவூழிய ""யௌவன இத்தாலி"" சங்கத்தின் அங்கத்தினராகச் சேர்ந்தோர் செய்வதுவந்த பிரமாணச் செய்யுளை ஆங்கில பாஷையில் என் மாமனார் எனக்குப் படித்துக் காட்டினார். அதனைக் கேட்டதும் நான் சொக்கிப் போனேன். அச்செய்யுளைத் தமிழ்ப் பாட்டாக மொழியெர்த்துத் தரவேண்டுமென்றேன். அவர் அதனை அன்றே தமிழ்ப் பாட்டாக மொழியெர்த்துத் தந்தார். அதுதான் ""பேரருட் கடவுள் திருவடியாணை"" என்று தொடங்கும் பாட்டு. தேச ஆட்சியைச் சீக்கிரம் கைக் கொள்ளுதற்குச் செய்ய வேண்டிய முயற்சிகளைப் பற்றி பேசினோம். பிரசங்கம் செய்தோம். தேசாபிமானத்தின் ஊற்றென விளங்கும் திருவல்லிக்கேணிக் கோவிற்பக்கத்திலுள்ள மண்டையன் கூட்டத்தாராகிய திருமலாச்சாரியார், ஸ்ரீனிவாஸச்சாரியார் முதலியவர்களோடு அடிக்கடி பேசலானோம். ஆலோசிக்கலானோம். அவ்வாலோசனையின் பயனாகத் திருவல்லிக்கேணியில் சென்னை ஜன சங்கம் என்று ஒரு தேசாபிமானச் சங்கத்தை ஸ்தாபித்தோம். பின்னர், நான் தூத்துக்குடிக்குத் திரும்பினேன். தேச அரசாட்சியை மீட்டும் வேலைகளில் ஈடுபட்டேன்.

(வி.ஒ.சி கண்ட பாரதியில் இருந்து ஒரு பகுதி)

No comments: